‘இன்னின்னபடி உத்தரவு சொல்ல வேண்டுமென்று . . . அறிந்திருங்கள்’
செவிக்கொடுக்காத ஜனங்கள் மத்தியில் பிரசங்கிப்பது சவால்மிக்கது என்பதை அப்போஸ்தலன் பவுல் நன்றாகவே அறிந்திருந்தார். சுமார் பொ.ச. 56-ல் எருசலேமில் அவர் எதிர்ப்பட்ட சூழ்நிலையைச் சற்று எண்ணிப் பாருங்கள். (அப். 21:27, 28, 30, 39, 40) இந்தச் சூழலில், நற்செய்தியைப் பிரசங்கிக்கையில் தப்பெண்ணத்தைத் தவிர்ப்பதற்கும் எதிர்ப்பு தலைதூக்காதபடி பார்த்துக்கொள்வதற்கும் தன் வார்த்தைகளைக் கவனமாய்த் தேர்ந்தெடுப்பது அவசியமென அவர் உணர்ந்திருந்தார். (அப். 22:1, 2) இந்தச் சந்தர்ப்பத்தில் அவர் பேசியதைக் கேட்டவர்கள் தங்கள் மனநிலையை மாற்றிக்கொள்ளவில்லைதான். என்றாலும், அவர் பயன்படுத்திய வார்த்தைகள் நிமித்தம் அவருக்குச் செவிகொடுத்துக் கேட்டார்கள். (அப். 22:22) இந்த விஷயத்தில் பவுல் அனுபவசாலியாக இருந்ததால், உலகத்தாரிடம் ஞானமாய் நடந்துகொள்ளவும் கனிவாய்ப் பேசவும் எதிர்ப்பவர்களுக்கு ‘இன்னின்னபடி உத்தரவு சொல்ல . . . அறிந்திருக்கவும்’ வேண்டுமென கொலோசே சபையினரை அவர் உற்சாகப்படுத்தினார். (கொலோ. 4:5, 6) நாமும் ஊழியம் செய்கையில் இப்படித்தான் நடந்துகொள்ள வேண்டும்.
எந்தப் பிரச்சினையுமின்றி பிரசங்க வேலையிலும் போதிக்கும் வேலையிலும் சமாதானமாய் ஈடுபட நாம் முயற்சி செய்தாலும் நம் வேலையை எதிர்த்து சிலர் கேள்வி கேட்கலாம். நாம் சட்டவிரோதமாக மதம் மாற்றும் வேலையில் ஈடுபடுவதாகவும் நம்மீது பொய்க் குற்றச்சாட்டை சுமத்தலாம். இந்தப் பிரச்சினையை வெற்றிகரமாகச் சமாளிக்க அதைக் குறித்து நாம் முன்னமே சிந்தித்து வைத்திருக்க வேண்டும். உங்களிடம் ஒருவர் கேள்வி கேட்டாலும் சரி பலர் கேள்வி கேட்டாலும் சரி, பதட்டப்படாதிருங்கள். யெகோவா தம்முடைய பரிசுத்த ஆவியைக் கொடுத்து உங்களுக்கு உதவுவார் என்பதில் உறுதியாயிருங்கள். (மத். 10:19, 20) நீங்கள் சரியான வார்த்தைகளைப் பயன்படுத்துவது முக்கியம் என்பதை மறந்துவிடாதீர்கள். தவறாகப் புரிந்துகொள்ளப்படும் வார்த்தைகளை அல்லது மற்றவர்களுக்குத் தவறான கருத்தைக் கொடுக்கும் வார்த்தைகளைப் பயன்படுத்தாதிருக்க முயற்சி செய்யுங்கள். உதாரணத்திற்கு, நீங்கள் ‘பிரசங்கிப்பதாக’ சொல்வதற்குப் பதிலாக கடவுளுடைய வார்த்தையிலிருந்து நற்செய்தியை ‘சொல்ல வந்திருப்பதாகக்’ கூறலாம்; பிரசுரங்களைக் ‘கொடுப்பதாகச்’ சொல்லாமல் ‘நீங்களும் வாசித்துப் பார்க்க வேண்டுமென விரும்புகிறோம்’ எனச் சொல்லலாம். கிறிஸ்து இயேசுவைப் பின்பற்றுகிறவர்களாக ஊழியம் செய்வதைக் குறித்து நாம் வெட்கப்படுவதில்லை என்பது உண்மைதான்; அதேசமயம், நாம் சாதுரியமாக நடந்துகொள்ளலாம், அல்லவா?
“நீங்கள் மதப் பிரச்சாரம் செய்கிறீர்கள், நீங்கள் மதம் மாற்றுகிறீர்கள்” என்று யாராவது உங்களைக் குற்றம்சாட்டினால் நீங்கள் எப்படி அவர்களுக்குப் பதில் சொல்லலாம்? “மதம் மாறும்படி நாங்கள் யாரிடமும் சொல்வதில்லை, நாங்கள் உண்மையில் யாருக்கும் எதையும் கொடுத்து மதம் மாறும்படி தூண்டுவதுமில்லை” என்று நீங்கள் சொல்லலாம். நாமும் அவர்களைப் போலவே வேலை செய்கிறவர்களாகவோ குடும்பஸ்தராகவோ மாணவர்களாகவோ இருப்பதாகச் சொல்லலாம். “நானும் பக்கத்தில்தான் குடியிருக்கிறேன். ஆறுதலும் உற்சாகமும் தரும் செய்தியை உங்களுக்குச் சொல்ல விரும்புகிறேன். உங்களுக்கு விருப்பம் இருந்தால் நீங்கள் கேட்கலாம்” என்று நீங்கள் சொல்லலாம். அல்லது “நான் சொல்ல வந்திருக்கும் செய்தி, ரேடியோவிலோ டிவியிலோ வரும் அறிவிப்பு மாதிரிதான். சிலர் கேட்பார்கள், சிலர் கேட்க மாட்டார்கள். அது அவரவர் விருப்பம். ஆனால், அந்த அறிவிப்பு உங்களுடைய வாழ்வு அல்லது சாவு சம்பந்தப்பட்டதாக இருந்தால் என்ன செய்வீர்கள்? அதை நீங்கள் கேட்க விரும்புவீர்கள், அல்லவா? ஜாதிமத பேதமின்றி எல்லாரும் ஒற்றுமையாகவும் சமாதானமாகவும் வாழப்போகும் புதிய உலகத்தைப் பற்றிய செய்தியை உங்களிடம் சொல்ல வந்திருக்கிறேன். ஆனால், உங்களுக்குக் கேட்க விருப்பம் இல்லாவிட்டால் போய்விடுகிறேன்” என்றும் சொல்லலாம்.
இப்படியும் சொல்லி யாராவது உங்களை எதிர்க்கலாம்: “எங்களுடைய சிலைகளை எல்லாம் தூக்கிப்போட்டுவிட்டு, எங்கள் கடவுட்களை வணங்கக்கூடாது என்று நீங்கள் சொல்கிறீர்கள்.” முதல் நூற்றாண்டு கிறிஸ்தவர்களும் இதுபோன்ற பிரச்சினையைத்தான் எதிர்ப்பட்டார்கள். (அப். 19:23-41) அதற்கு நீங்கள் இவ்வாறு பதிலளிக்கலாம்: “மற்றவர்கள் செய்வது சரியென்றோ தவறென்றோ யெகோவாவின் சாட்சிகள் சொல்வதில்லை. இப்படித்தான் வழிபட வேண்டுமென்றும் அவர்கள் சொல்வதில்லை. இது அவரவர் தீர்மானிக்க வேண்டிய ஒன்று. இது அந்த நபருக்கும் அவருடைய படைப்பாளருக்கும் இடையே உள்ள விஷயம். தனிநபர்களுக்கும் குடும்பங்களுக்கும் பயனுள்ள சில விஷயங்களை கடவுளுடைய வார்த்தையிலிருந்து மற்றவர்களுக்குச் சொல்கிறேன். நாங்கள் சொல்வதை நீங்கள் கேட்டே தீரவேண்டுமென்ற எந்தக் கட்டாயமும் இல்லை, இந்தச் செய்தியைக் கேட்கப் பிடிக்காவிட்டால் நீங்கள் தாராளமாக வேண்டாமென்று சொல்லிவிடலாம்.” இவ்வாறு, நாம் ஊழியம் செய்வதை நிறுத்திவிடாமல், சரியான வார்த்தைகளைத் தேர்ந்தெடுத்து பேசுவதன்மூலம் இறுக்கமான சூழலையும் நல்லபடியாகச் சமாளிக்கலாம்.
சில சமயங்களில், நாம் ஊழியம் செய்வதற்கான காரணத்தை மக்கள் தவறாகப் புரிந்துகொண்டாலும் நாம் எதிர்ப்பை சந்தித்தாலும், யெகோவா நமக்குப் பக்கபலமாய் இருக்கிறார் என்ற நம்பிக்கையில் நாம் எப்போதும் சந்தோஷமாய் இருக்கலாம். (2 கொ. 2:15-17) எந்த எதிர்ப்பைச் சந்தித்தாலும் அது நம் சந்தோஷத்தைப் பறித்துவிட நாம் ஒருபோதும் இடங்கொடுக்காதிருப்போமாக. (நெ. 8:10) யாருக்கு, எப்படிப் பதில் சொல்ல வேண்டும் என்பதைக் குறித்து நாம் முன்னதாகவே யோசிக்கும்போது சாந்தம் நிலவும் விதத்தில் கனிவான வார்த்தைகளைப் பேசுவதே நம் குறிக்கோளாய் இருக்க வேண்டும்.