நீங்களும் ஐசுவரியவான் ஆகலாம்
1 வாழ்க்கையில் அதிக சந்தோஷத்தையும் நிறைவையும் பெற நீங்கள் முயற்சி செய்கிறீர்களா? மற்றவர்களுக்கு உதவுவதில் மகிழ்ச்சியும் திருப்தியும் அடைகிறீர்களா? யெகோவாவுக்கு இன்னும் அதிகமாகச் சேவை செய்ய ஆசைப்படுகிறீர்களா? இந்தக் கேள்விகளில் ஏதேனும் ஒன்றுக்கு உங்கள் பதில் ஆம் என்று இருந்தால் ஒழுங்கான பயனியர் சேவையைத் தேர்ந்தெடுப்பதைக் குறித்து யோசித்துப் பாருங்கள். ஆனாலும், இந்தச் சேவையைத் தேர்ந்தெடுப்பதற்கு முன் குடும்பப் பொறுப்புகள், பைபிள் குறிப்பிடும் வேறு பொறுப்புகள், ஆரோக்கியம், உடல்நல குறைபாடுகள் என எல்லாவற்றையும் சிந்திக்க வேண்டியுள்ளது.
2 பரிசுத்த ஆவியின் வழிநடத்துதலால் சாலொமோன் எழுதிய புத்தகங்களில் யெகோவாவின் ஆசீர்வாதத்தை ஐசுவரியங்களுக்கு ஒப்பிட்டார். (நீதி. 10:22) இன்று, யெகோவாவின் ஆசீர்வாதம் பொதுவாக ஆன்மீக ஐசுவரியங்களைத் தருகிறது. அத்தகைய ஐசுவரியங்களை ஒழுங்கான பயனியர்கள் நிறையவே பெறுகிறார்கள். உதாரணத்திற்கு, அவர்கள் ‘காலத்தைப் பிரயோஜனப்படுத்திக் கொள்கிறவர்களாய்,’ தங்கள் சொந்த வேலைகளிலேயே மூழ்கிவிடாமல் தங்கள் நேரத்தை மற்றவர்களுக்கு அர்ப்பணிப்பதன்மூலம் அதிக சந்தோஷத்தைப் பெறுகிறார்கள். (கொலோ. 4:5; அப். 20:35) அன்போடு அவர்கள் எடுக்கும் பிரயாசத்தை யெகோவா கவனிப்பதோடு மெச்சவும் செய்கிறார். இப்படி ‘பரலோகத்தில் சேர்த்துவைக்கப்படும் பொக்கிஷங்களின்’ மதிப்பு ஒருபோதும் குறைவதில்லை. (மத். 6:20; எபி. 6:10) தங்கள் ‘கண்களை தெளிவாய்’ வைத்துக்கொண்டு, தங்கள் தேவைகளையெல்லாம் யெகோவா கவனித்துக்கொள்வார் என்று பயனியர்கள் அவரையே நம்பி இருப்பதால் அவருடன் உள்ள உறவு தொடர்ந்து வலுப்பெறுகிறது.—மத். 6:22, 25, 32; எபி. 13:5, 6.
3 ஐசுவரியங்களைச் சேகரிக்க முயற்சி செய்வது பெரும்பாலும் ‘மதிகேடும் சேதமுமான பலவித இச்சைகளில்’ சிக்க வைக்கிறது. (1 தீ. 6:9, 10; யாக். 5:1-3) ஆனால், யெகோவா தரும் ஆசீர்வாதம் ஒருபோதும் அந்த நிலைக்குத் தள்ளாது. ஒழுங்கான பயனியர்கள் பிரசங்க வேலையில் அதிக நேரத்தை செலவிடுவதால் ஆன்மீக ரீதியில் எப்போதும் சமநிலையுடன் இருக்க அவர்களால் முடிகிறது. அதேசமயம், அதி முக்கியமான காரியங்களிடம் தங்கள் கவனத்தை ஒருமுகப்படுத்தவும் முடிகிறது. (பிலி. 1:10, NW) என்ஜினியராக வேலை செய்துவந்த ஒரு சகோதரர் பயனியர் செய்வதற்காக தன் நேரத்தையெல்லாம் உறிஞ்சிக்கொண்டிருந்த வேலையை விட்டுவிட்டார். “என் வேலையில் எனக்கு டென்ஷன் அதிகமாக இருந்தது. ஆனால், பயனியர் சேவையில் நான் அப்படி உணரவில்லை. இப்போது என்னால் ஜனங்களுக்கு சத்தியத்தை சொல்லித்தந்து அவர்களுக்கு உதவ முடிகிறது. இந்தச் சேவை அதிக திருப்தியை அளிப்பதோடு சுவாரஸ்யமாகவும் இருக்கிறது” என்று அவர் சொன்னார்.
4 மற்றவர்களுக்கு ஆசீர்வாதமாய் இருக்கிறார்கள்: இன்று அனைவருமே “கையாளுவதற்குக் கடினமான கொடிய காலங்களில்” வாழ்கிறார்கள். (2 தீ. 3:1, NW) உலகெங்கிலுமுள்ள மக்கள் எதிர்கால நம்பிக்கையின்றி தவிப்பதால் அத்தகைய நம்பிக்கை அவர்களுக்குத் தேவைப்படுகிறது. அப்படிப்பட்டவர்கள் நற்செய்திக்குச் செவிசாய்க்கையில் வாடிப்போயிருக்கும் அவர்களுடைய முகங்கள் மலரலாம். இதை நேரில் காணும் ராஜ்ய அறிவிப்பாளர்கள் சந்தோஷப்படுகிறார்கள். உயிர் காக்கும் இந்த வேலையில், வருடத்திற்கு 800-க்கும் அதிகமான மணிநேரத்தைச் செலவிடும் ஒழுங்கான பயனியர்களுக்கு இது எப்பேர்ப்பட்ட சந்தோஷத்தை அளிக்கிறது!—1 தீ. 4:16.
5 ஒழுங்கான பயனியர் சேவை செய்வதைக் குறித்து நீங்கள் கவனமாய் யோசித்துப் பார்க்கிறீர்களா? இந்தச் சேவையைச் செய்வதற்கு, குறைந்த முக்கியத்துவம் உடைய வேலைகளில் நேரத்தை வீணடிக்காமல் ‘காலத்தைப் பிரயோஜனப்படுத்திக்கொள்ள’ வேண்டியிருக்கலாம். (எபே. 5:15, 16) அநேகர் அவ்வாறு செய்திருக்கிறார்கள். தங்களுடைய வாழ்க்கையையும் எளிமையாக்கிக் கொண்டிருக்கிறார்கள். இதனால், தங்களுடைய வேலையில் செலவிடும் நேரத்தைக் குறைத்துக்கொண்டு ராஜ்யம் சம்பந்தப்பட்ட வேலையில் அவர்களால் அதிக நேரத்தை செலவிட முடிகிறது. நீங்களும் அவர்களோடு சேர்ந்து ஒழுங்கான பயனியர் ஊழியத்தில் ஈடுபட சில மாற்றங்களைச் செய்ய முடியுமா?
6 இதற்கு நடைமுறையான ஓர் அட்டவணை போட ஞானத்தைத் தரும்படி யெகோவாவிடம் கேளுங்கள். (யாக். 1:5) பயனியர் சேவை செய்யும்போது என்னென்ன ஆசீர்வாதங்களை நீங்கள் எதிர்பார்க்கலாம்? ஏராளமான ஆன்மீக ஐசுவரியங்களைப் பெறுவீர்கள். பொருள் சம்பந்தமாக உங்களுக்குத் தேவையானதைக் கொடுத்தும் யெகோவா உங்களை ஆசீர்வதிப்பார். (மத். 6:33) இது சம்பந்தமாக யெகோவாவைச் சோதிப்பவர்கள் ‘இடங்கொள்ளாமற்போகுமட்டும் . . . ஆசீர்வாதத்தை’ பெறுவார்கள்.—மல். 3:10.
[கேள்விகள்]
1. ஒழுங்கான பயனியர் சேவையைத் தேர்ந்தெடுப்பதைக் குறித்து நீங்கள் ஏன் யோசித்துப் பார்க்க வேண்டும்?
2. ஒழுங்கான பயனியர்கள் பெறும் சில ஆன்மீக ஐசுவரியங்களைக் குறிப்பிடுங்கள்?
3. ஆன்மீக ஐசுவரியங்களைச் சேகரிக்க முயற்சி செய்வதற்கும் பொருள் சம்பந்தப்பட்ட ஐசுவரியங்களைச் சேகரிக்க முயற்சி செய்வதற்கும் இடையே என்ன வித்தியாசம் உள்ளது?
4. மற்றவர்கள் ஆசீர்வாதத்தைப் பெற உதவுகையில் ஒழுங்கான பயனியர்கள் எப்படி ஆசீர்வதிக்கப்படுகிறார்கள்?
5, 6. ஒழுங்கான பயனியர் ஆவதற்கு எது உங்களுக்கு உதவலாம்?