பற்பல மொழிகளில் துண்டுப்பிரதிகள் அடங்கிய கட்டுகள்
1 நமக்கு முன் ஒரு சவாலான வேலை இருக்கிறது. ராஜ்யத்தைப்பற்றிய நற்செய்தியை இந்தியாவிலுள்ள 28 மாநிலங்களில், 1600-க்கும் அதிகமான மொழிகளைப் பேசுபவர்களுக்கு பிரசங்கிக்க வேண்டிய வேலைதான் அது. (மத். 24:14; வெளி. 7:9) அநேக பிரஸ்தாபிகள் அதற்காக நல்ல முயற்சிகளைச் செய்துவருகிறார்கள். அவர்களுடைய சொந்த மொழியைப் பேசுகிறவர்களுக்கு மட்டுமல்ல, அந்தப் பிராந்தியத்தில் வாழும் மற்ற ‘கோத்திரத்தாருக்கும் பாஷைக்காரருக்கும்’ திறம்பட்ட விதத்தில் பிரசங்கித்துவருகிறார்கள். ஒருவேளை உங்களுக்குக்கூட பல மொழிகள் தெரிந்திருக்கலாம் அல்லது இந்தி, ஆங்கிலம் போன்ற பொதுவான மொழிகளை உபயோகித்து உங்களால் பேச முடிந்திருக்கலாம். அப்படி இல்லையென்றாலும், தேவைப்படும்போதெல்லாம் சகல தேசத்து மக்களுக்கும் நற்செய்தி என்ற சிறுபுத்தகத்தை உபயோகிப்பதில் நீங்கள் வெற்றி கண்டிருக்கலாம்.
2 இந்தியாவில் 26 மொழிகளில் பைபிள் பிரசுரங்களை அளித்து நமக்கு பக்கபலமாக இருப்பதற்காகக் காணக்கூடிய அமைப்புக்கு நாம் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம். எனினும், ஆர்வம் காட்டும் ஒருவருக்கு கொடுக்க அவர் வாசிக்கும் மொழியில் ஒரு பிரசுரம் உங்களிடத்திலோ சபையிலோ இல்லாவிட்டால் அது உங்களுக்கு ஏமாற்றத்தை அளிக்கலாம். ஆர்வம் காட்டுகிற ஒவ்வொருவருக்கும் பைபிள் சார்ந்த ஒரு பிரசுரத்தையாவது விட்டுவந்தால் திருப்தியாக இருக்கும் அல்லவா! அதுவும் அவர்கள் நன்கு படிக்க தெரிந்த மொழியில் இருந்தால் இன்னும் எவ்வளவு நன்றாக இருக்கும்.
3 இந்தத் தேவையைப் பூர்த்தி செய்ய உவாட்ச்டவர் பப்ளிகேஷன்ஸ் லிஸ்ட்-ல் இருக்கும் எல்லா மொழிகளிலும், துண்டுப்பிரதிகளைக் குறைந்த எண்ணிக்கையில் சபைகள் இனிமேல் ஆர்டர் செய்யலாம். அதோடு, சைனீஸ், பெர்ஸியன், மற்றும் பிரெஞ்சு போன்ற பொதுவாக பேசப்படுகிற அயல் மொழிகளிலும் துண்டுப்பிரதிகளை ஆர்டர் செய்யலாம். எனவே, ஒவ்வொரு பிரஸ்தாபியும் 10, 15 அல்லது 20 வித்தியாசமான மொழிகளில் துண்டுப்பிரதிகளை ஒரு கட்டாக அடுக்கிவைத்துக்கொள்ளலாம். இதன்மூலமாக, அவர்கள் ஊழியத்தில் சந்திக்க நேரிடும் வெவ்வேறு மொழி பேசுகிறவர்களுக்கும் அச்சிடப்பட்ட செய்தியைத் தரமுடியும். எந்தெந்த மொழிகளில் துண்டுப்பிரதிகள் வேண்டும் என்பதை சபையின் ஊழியக் குழு உவாட்ச்டவர் பப்ளிகேஷன்ஸ் லிஸ்ட்-ஐப் பார்த்து தேர்ந்தெடுக்கலாம். அவர்களுடைய பிராந்தியத்தில் கூடுதலாக பேசப்படுகிற மற்ற மொழிகளிலும், அந்த மொழிகளைப் பேசுகிற ஜனங்களுக்குப் பொருத்தமாக இருக்கும் தலைப்புகளையும் பார்த்து அவற்றைத் தேர்ந்தெடுக்கலாம்.
4 பிரஸ்தாபிகள், தாங்கள் வைத்திருக்கும் கட்டிலிருந்து துண்டுப்பிரதிகளை அவ்வப்போது கொடுக்க கொடுக்க சபை கையிருப்பிலுள்ள சிறிய எண்ணிக்கையிலிருந்து அவர்கள் மறுபடியும் வாங்கிக்கொள்ளலாம். இப்படிச் செய்வதால், தேவைப்படும் எல்லா மொழி துண்டுப்பிரதிகளும் அவர்களிடம் எப்போதுமே இருக்கும். அதோடுகூட, பல மொழிகளில் நாம் வைத்திருக்கும் முழு கட்டையும் ஊழியத்தில் காண்பிப்பதன் மூலம் நாம் பாரபட்சமின்றி அனைவருக்கும் பிரசங்கிக்கிறோம் என்பதை அவர்களுக்கு தெரியப்படுத்தலாம்; எல்லா கோத்திரத்தாருக்கும் பாஷைக்காரருக்கும் பிரசங்கிக்கவேண்டும் என்ற கட்டளைக்கு எந்தளவு முக்கியத்துவம் தருகிறோம் என்பதையும் அவர்களுக்கு புரியவைக்கலாம்.
5 சில துண்டுப்பிரதிகள் அப்படியே நம்மிடம் தேங்கிவிடும்போது, அவற்றை நாம் ஊழியப் பைக்குள் பத்திரமாக வைக்கவேண்டும். அப்படி அவற்றை எப்போதுமே நேர்த்தியாக வைத்துக்கொள்ளும்போது நாம் சொல்லும் செய்தியை அவை ‘அலங்கரிக்கும்.’ (தீத். 2:9) பழுப்படைந்தோ ஓரங்கள் கிழிந்தோ மடங்கியோ இருந்தால், வேறு பிரதிகளை வாங்கி வைத்துக்கொள்ள வேண்டும்.
6 ஒவ்வொரு வருடமும் இந்திய கிளை அலுவலகம் 46,00,000-க்கும் அதிகமான துண்டுப்பிரதிகளை 26 வித்தியாசமான மொழிகளில் அச்சிடுகிறது. எனவே, நாம் இவற்றை நம்மால் முடிந்த அளவிற்கு உபயோகித்து எல்லா மொழிகளைப் பேசும் ஜனங்களும் நம்மோடு சேர்ந்து யெகோவாவை வணங்க நாம் உதவுவோம்.—எசா. 2:2, 3.