தைரியமாக, ஆனாலும் சமாதானமாய் . . .
1 ஊழியத்தில் நாம் சந்திக்கும் அநேகர் தாங்கள் மனதார நம்புகிறவற்றை நம்மிடம் சொல்கிறார்கள். பொதுவாக, அப்படிப்பட்ட நம்பிக்கைகள் பைபிள் சத்தியத்திற்கு முரணாக இருக்கின்றன. நாம் தைரியமாகப் பேசும் அதேசமயத்தில், ‘எல்லா மனுஷரோடும் சமாதானமாயிருக்கவும்,’ தேவையில்லாமல் புண்படுத்தாதிருக்கவும் விரும்புகிறோம். (ரோ. 12:18; அப். 4:30) தைரியமாய், ஆனாலும் சமாதானமாக எவ்வாறு நாம் ராஜ்ய செய்தியை பிரசங்கிக்கலாம்?
2 ஒத்துப்போகும் விஷயங்களைக் கண்டுபிடியுங்கள்: சமாதானமாக இருக்கிற ஒரு நபர் வாக்குவாதங்களைத் தவிர்க்கிறார். வீட்டுக்காரர் உறுதியாக நம்பிக்கொண்டிருக்கிற விஷயங்களை தவறென நிரூபிப்பதற்காக தேவையில்லாமல் வாக்குவாதத்தில் ஈடுபடுவதைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில், நாம் சொல்வதை ஏற்றுக்கொள்ளும் மனநிலையை அது உருவாக்குவதில்லை. அவர் தவறான கருத்தைச் சொல்லும்போது, இருவரும் ஒத்துப்போகும் ஒரு விஷயத்தை நாம் சாதுரியமாக சொல்லலாம். அப்படிப் பொதுவான விஷயத்தை அழுத்திச் சொல்கையில் எதிர்மறையான உணர்வுகள் ஏற்படுவதை நாம் தவிர்க்கலாம்; அதோடு, அந்தத் தகவல் அவருடைய இருதயத்தைத் தொடுவதாகவும் இருக்கும்.
3 வீட்டுக்காரர் ஒரு தவறான கருத்தைச் சொல்லுகையில், கண்டுங்காணாமல் விட்டுவிட்டால், நாம் அதை ஏற்றுக்கொள்கிறோம், சத்தியத்தின் வலிமையைக் குறைத்து விட்டோம் என்று அர்த்தமாகிவிடுமா? இல்லை. நாம் எதிர்படும் ஒவ்வொரு தவறான கருத்தையும் பொய் என நிரூபித்துக்கொண்டிருப்பது நம்முடைய வேலையில்லை; மாறாக, கிறிஸ்தவ ஊழியராக ராஜ்யத்தின் நற்செய்தியைப் பிரசங்கிப்பதே நம்முடைய வேலை. (மத். 24:14) தவறான கருத்துகள் சொல்லப்படும்போது உணர்ச்சிவசப்பட்டு ஏதாவது சொல்வதற்குப் பதிலாக, ஒரு நபருடைய எண்ணங்களை புரிந்துகொள்ள கிடைத்திருக்கும் வாய்ப்பாக அதை கருதுங்கள்.—நீதி. 16:23.
4 கண்ணியமாக நடத்துங்கள்: தவறான போதகங்களை மறுத்துப் பேசும்போது சிலசமயங்களில் தைரியமாகவும் அஞ்சாமலும் இருக்க வேண்டியிருக்கும். என்றாலும், நாம் சமாதானமுள்ளவர்களாய் இருப்பதால், தவறான நம்பிக்கைகளை நம்புகிறவர்களையும் அதை போதிப்பவர்களையும் ஏளனம் செய்வதைத் தவிர்க்கிறோம்; அவர்களைப்பற்றிச் சொல்லும்போது, மதிப்புக்குறைவான வார்த்தைகளைப் பயன்படுத்துவதையும் தவிர்க்கிறோம். நமக்குத்தான் எல்லாம் தெரியும் என்பதுபோல நடந்துகொண்டால் மக்கள் நம்மை அணுக மாட்டார்கள். ஆனால் தாழ்மையான, அன்பான அணுகுமுறை சத்தியத்தை நேசிப்பவர்களின் மனங்களைத் திறக்கிறது. நமக்குக் காதுகொடுத்துக் கேட்பவர்களுக்கும், அவர்களுடைய நம்பிக்கைகளுக்கும் மரியாதை காட்டுகையில் நாம் அவர்களை கண்ணியமாக நடத்துகிறோம். இதனால் நம்முடைய செய்தியை ஏற்றுக்கொள்வது அவர்களுக்கு சுலபமாகிறது.
5 அப்போஸ்தலன் பவுல் தான் பிரசங்கித்த மக்களுடைய நம்பிக்கைகளை கவனத்தில் கொண்டார்; அவர்களுடைய இருதயங்களைச் சென்றெட்டும்வண்ணம் நற்செய்தியைப் பிரசங்கிக்க வழிதேடினார். (அப். 17:22-31) “எப்படியாகிலும் சிலரை இரட்சிக்கும்படிக்கு” அவர் மனப்பூர்வமாக ‘எல்லாருக்கும் எல்லாமானார்.’ (1 கொரி. 9:22) நற்செய்தியை நாம் தைரியமாகப் பிரசங்கித்தாலும் சமாதானமுள்ளவர்களாக இருப்பதன் மூலம் நாமும் இவ்வாறு செய்ய முடியும்.