வெளிப்படுத்துதல் —அதன் மகத்தான உச்சக்கட்டம் சமீபித்துவிட்டது!
1 “இந்தத் தீர்க்கதரிசன வசனங்களை வாசிக்கிறவனும், கேட்கிறவர்களும், இதில் எழுதியிருக்கிறவைகளைக் கைக்கொள்ளுகிறவர்களும் பாக்கியவான்கள், காலம் சமீபமாயிருக்கிறது.” (வெளி. 1:3) இந்த வார்த்தைகள் வெளிப்படுத்துதல் புத்தகத்தின் மதிப்பை சிறப்பித்துக் காட்டுகின்றன; ஏனெனில், அதில் சொல்லப்பட்டிருக்கிற பல தீர்க்கதரிசனங்கள் நிறைவேற வேண்டிய காலப்பகுதியில் நாம் வாழ்ந்து வருகிறோம் அல்லவா? பொருத்தமாகவே, 2007-ஆம் வருடம் ஜனவரி 8-ல் துவங்கும் வாரத்தில் சபை புத்தகப்படிப்பில் வெளிப்படுத்துதல்—அதன் மகத்தான உச்சக்கட்டம் சமீபித்துவிட்டது! புத்தகத்தைப் படிக்கவிருக்கிறோம்.
2 சபை புத்தகப் படிப்பில் வெளிப்படுத்துதல் உச்சக்கட்டம் புத்தகத்தைக் கடைசியாகப் படித்ததிலிருந்து, பல வழிகளில் இந்த உலக நிலைமைகள் மாறியிருக்கின்றன. (1 கொ. 7:31) மேலுமாக, தற்போது ராஜ்யத்தின் நற்செய்தியை பிரசங்கிக்கும் அநேகர் வெளிப்படுத்துதல் புத்தகத்தை வசனம் வசனமாக ஆராய்ந்துபார்க்கும் வாய்ப்பைப் பெறவில்லை. ஆகவே, வெளிப்படுத்துதல் உச்சக்கட்டம் புத்தகத்தைப் படிப்பது, எதிர்காலத்தில் என்ன நடக்கப்போகிறது என்பதைக் குறித்து விழிப்புடன் இருக்க நம் அனைவருக்கும் நிச்சயம் உதவும்.— வெளி. 16:15.
3 ஒவ்வொரு வாரமும் தவறாமல் கலந்துகொள்வதற்குத் தீர்மானியுங்கள். இந்தத் தகவல், தொடர்ந்து விழிப்புடனிருக்க நமக்கு உதவும். அதோடு, ஏழு சபைகளுக்கு இயேசு கொடுத்த செய்திகள் நம்முடைய ஆன்மீக நலனையும் ஊழியத்தில் பங்குகொள்வதையும் பாதிக்கக்கூடிய சூழ்நிலைமைகளைத் தவிர்க்கவும் உதவும்.—வெளி. 1:11, 19.
4 நன்றாய் தயாரியுங்கள்: ஒவ்வொரு புத்தகப் படிப்புக்கு முன்னும், கலந்தாலோசிக்கப்போகும் வசனங்களை வெளிப்படுத்துதல் புத்தகத்திலிருந்து வாசியுங்கள். அந்த வசனங்களுக்கு கொடுக்கப்பட்டிருக்கும் வேதப்பூர்வ விளக்கங்களை கவனியுங்கள். இருதயத்தைத் தூண்டுவிக்கும் விதத்தில் அவற்றைப் புரிந்துகொள்ள முயற்சியெடுங்கள். (நெ. 8:8, 12) தியானிக்கவும், உங்களையே இப்படி கேட்டுக்கொள்ளவும் நேரமெடுங்கள்: ‘இந்த விஷயம் யெகோவாவைப்பற்றியும் அவருடைய நோக்கத்தைப்பற்றியும் எனக்கு என்ன சொல்கிறது? அவருடைய நோக்கத்திற்கு இசைவாகவும் மற்றவர்களுக்கு உதவுவதற்கும் நான் எப்படி நடந்துகொள்ள வேண்டும்?’
5 ‘கர்த்தருடைய நாள்’ 1914-ல் ஆரம்பித்து 92 வருடங்கள் கடந்துவிட்டன. (வெளி. 1:10) வெளிப்படுத்துதல் புத்தகத்தில் முன்னறிவிக்கப்பட்டிருக்கிற, பூமியை அதிரவைக்கும் சம்பவங்கள் நிறைவேற இன்னும் கொஞ்ச காலமே இருக்கிறது. வெளிப்படுத்துதல் உச்சக்கட்டம் புத்தகத்தைப் படிப்பது நம்முடைய இருதயத்துக்கும் மனதுக்கும் புத்துணர்ச்சியூட்டுகிறது, ‘தேவனுடைய மகாநாளில் நடக்கும் யுத்தமும்,’ புதிய உலகமும் அருகில் இருக்கின்றன என்ற நம்முடைய விசுவாசத்தையும் பலப்படுத்துகிறது.—வெளி. 16:14; 21:4, 5.