வெளி ஊழியக் கூட்டங்களிலிருந்து முழுமையாகப் பயனடைதல்
1 சிறந்த முறையில் நடத்தப்படும் வெளி ஊழியக் கூட்டங்கள், ஊழியத்திற்குச் செல்வதற்கு முன்பு நமக்குத் தேவையான உற்சாகத்தையும் நடைமுறை ஆலோசனையையும் அளிக்கின்றன. பரஸ்பர ஆதரவையும் பயிற்சியையும் பெறுவதற்காக மற்றவர்களுடன் சேர்ந்து வெளி ஊழியத்தில் கலந்துகொள்ள அவை நமக்கு உதவுகின்றன. (நீதி. 27:17; பிர. 4:9, 10) இக்கூட்டங்களிலிருந்து முழுமையாகப் பயனடைய நாம் என்ன செய்யலாம்?
2 நடத்துபவர்: பொதுவாக, இக்கூட்டங்களில் கலந்தாலோசிப்பதற்கென குறிப்பான தகவல் எதுவும் முன்கூட்டியே தரப்படுவதில்லை. ஆகவே நீங்கள் இக்கூட்டத்தை நடத்துவதற்கு முன்னதாகவே நன்கு தயாரித்துச் செல்லுங்கள். அன்றைய தினவசனம் ஊழியத்துடன் சம்பந்தப்பட்டதாக இருந்தால் அதையும் சேர்த்துக்கொள்ள நீங்கள் நினைக்கலாம், ஆனாலும் எப்போதுமே தினவசனத்தைக் கலந்தாலோசிக்கத் திட்டமிட வேண்டியதில்லை. அன்று சாட்சி கொடுக்கச் செல்பவர்களுக்கு எது நடைமுறையான உதவி அளிக்குமென்று சிந்தித்துப் பாருங்கள். உதாரணமாக, ஓர் அணுகுமுறையைக் கலந்தாலோசிக்கவோ, அதை நடித்துக்காட்ட ஏற்பாடு செய்யவோ நீங்கள் விரும்பலாம். நியாயங்காட்டிப் பேசுதல் புத்தகத்திலிருந்தோ, ஊழியப் பள்ளி புத்தகத்திலிருந்தோ, அல்லது சமீபத்திய ஊழியக் கூட்டப் பகுதியிலிருந்தோ மறுபார்வை செய்ய விரும்பலாம். உங்கள் பிராந்தியத்திற்குப் பொருத்தமான விதத்தில் ஒரு பிரச்சினையைச் சமாளிப்பது பற்றிக் கலந்தாலோசிக்கலாம். அநேகர் மறுசந்திப்பு செய்யும் நிலையில் இருந்தால், ஆர்வத்தைத் தூண்டி பைபிள் படிப்புகளை நடத்தும் விதத்தை நீங்கள் கலந்தாலோசிக்கலாம். எதைக் கலந்தாலோசித்தாலும் சரி, உற்சாகமும் ஊக்கமும் அளிக்கும் விதத்தில் இக்கூட்டத்தை நடத்துங்கள்.
3 ஒரு சிலர் தாமதமாக வருவார்களென்று தெரிந்தாலும், சரியான நேரத்தில் கூட்டத்தை ஆரம்பியுங்கள். யார் யார் சேர்ந்து ஊழியம் செய்வதென்று பிரித்து விடும்போது பகுத்துணர்வைப் பயன்படுத்துங்கள்; பிராந்தியம் தேவையெனக் கேட்பவர்களுக்கு பிராந்தியத்தைக் குறிப்பிடுங்கள். இந்தக் கூட்டத்தை நடத்த 10 முதல் 15 நிமிடத்திற்கு மேல் எடுத்துக்கொள்ளக்கூடாது; ஒருவேளை இதைத் தொடர்ந்து சபை கூட்டம் ஏதாவது இருந்தால், இதைவிடக் குறைந்த நேரத்தில் இக்கூட்டத்தை முடித்துவிட வேண்டும். யாருடன் செல்ல வேண்டும், எங்கு ஊழியம் செய்ய வேண்டும் என்பது கூட்டம் முடிவதற்குள் எல்லாருக்கும் தெரிந்திருக்க வேண்டும். இக்கூட்டத்தை ஜெபத்தோடு நிறைவு செய்ய வேண்டும்.
4 நீங்கள் உதவலாம்: சபை கூட்டங்களுக்கு நாம் எப்படிச் செல்கிறோமோ அப்படியே இக்கூட்டத்திற்கும் சரியான சமயத்தில் செல்வதன் மூலம் யெகோவாவுக்கு மரியாதை காட்டுகிறோம், மற்றவர்கள் மீதும் கரிசனை காட்டுகிறோம். கலந்தாலோசிப்பில் பங்குபெறுங்கள். நீங்கள் யாருடன் ஊழியம் செய்ய வேண்டுமென்று கூட்டத்தை நடத்துபவரே தீர்மானிக்கட்டும்; யாருடனாவது சேர்ந்து ஊழியம் செய்ய நீங்கள் தீர்மானித்தால், கூட்டம் நடப்பதற்கு முன்பே ஏற்பாடு செய்துகொள்ளுங்கள். அப்படி நீங்களாக ஏற்பாடு செய்யும்போது எப்போதும் நெருங்கிய நண்பர்களுடனேயே சேர்ந்துகொள்ளாமல், வெவ்வேறு பிரஸ்தாபிகளுடன் செல்வதன் மூலம் கூட்டுறவில் ‘விரிவாகுங்கள்.’ (2 கொ. 6:11-13; NW) கூட்டம் முடிந்ததும் ஏற்கெனவே செய்த ஏற்பாடுகளில் மாற்றங்களைச் செய்யாமல், உடனே பிராந்தியத்திற்குச் செல்லுங்கள்.
5 சபை கூட்டங்களை நடத்துகிற அதே நோக்கத்துடன்தான் வெளி ஊழியக் கூட்டங்களும் நடத்தப்படுகின்றன. ‘அன்புக்கும் நற்கிரியைகளுக்கும் நாம் ஏவப்படும்படி ஒருவரையொருவர் கவனிப்பதற்காகவே’ அவை ஏற்பாடு செய்யப்படுகின்றன. (எபி. 10:24, 25) இக்கூட்டங்களிலிருந்து நாம் பயனடைய கடினமாக முயற்சி செய்ய வேண்டும். அப்படிச் செய்தால், உண்மையிலேயே ‘நற்கிரியையாக’ இருக்கும் நம் ஊழியத்தைச் செய்வதற்குத் தேவையான உதவி நமக்குக் கிடைக்கும்.
[கேள்விகள்]
1. வெளி ஊழியக் கூட்டங்கள் நமக்கு எப்படி உதவலாம்?
2. என்ன சில விஷயங்களை நடத்துபவர் கலந்தாலோசிக்கலாம்?
3. இந்தக் கூட்டத்தை நடத்த எவ்வளவு நேரம் எடுத்துக்கொள்ள வேண்டும், அந்நேரத்திற்குள் எதையெல்லாம் குறிப்பிட்டுவிட வேண்டும்?
4. வெளி ஊழியக் கூட்டங்களிலிருந்து எல்லாரும் முழுமையாகப் பயனடைய எது உதவும்?
5. வெளி ஊழியக் கூட்டங்கள் என்ன நோக்கத்துடன் நடத்தப்படுகின்றன?