உண்மைத்தன்மைக்கு அவர்கள் முன்மாதிரி
1 விசேஷ பயனியர் ஊழியம் என்ற புதிய அம்சம், 1937 முதல் முழுநேர ஊழியத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது. பிரசங்க வேலையில் அனுபவம் வாய்ந்த, திறம்பட்ட ஆண்களும் பெண்களும் இந்த ஊழியத்தில் ஈடுபட்டனர்; அமைப்பு அனுப்பிய இடங்களுக்கெல்லாம் மனமுவந்து சென்று ஊழியம் செய்தனர். இப்போது, பல பத்தாண்டுகளுக்குப் பின்னரும், அவ்விதமாகவே இந்த விசேஷ பயனியர்கள் தங்களது ஊழியத்தை உண்மைத்தன்மையோடு தொடர்ந்து செய்து வருகின்றனர்; இவ்வாறு நாம் பின்பற்றுவதற்கு சிறந்த முன்மாதிரி வைக்கின்றனர்.—எபி. 6:11.
2 ஊழியத்தில் முன்நின்றனர்: ஆரம்பத்தில், விசேஷ பயனியர்களே பிரசங்க வேலையை முன்நின்று வழிநடத்தினர். அப்போது சிறிய ஃபோனோகிராஃப் பெட்டிகளை எடுத்துச் சென்று பதிவுசெய்யப்பட்ட பொதுப் பேச்சுகளை வீட்டுக்காரருக்குப் போட்டுக் காட்டினர். அவற்றை அடிப்படையாக வைத்தே மறுசந்திப்புகளின்போதும் பைபிள் கலந்தாலோசிப்புகளை நடத்தினர். ஏற்கெனவே சபைகள் இருந்த பெருநகரங்களில் இவ்வாறு செய்தனர். அதற்குப் பின்பு, ராஜ்ய பிரஸ்தாபிகள் அதிகம் தேவைப்பட்ட பகுதிகளுக்கு விசேஷ பயனியர்கள் அனுப்பப்பட்டனர். சத்தியத்தில் துளி ஆர்வம் காட்டியவர்களையும் மீண்டும்போய் சந்தித்து பைபிள் படிப்புகளை நடத்தினர். அவர்களது ஊக்கமான முயற்சியின் பலனாக, புதிய சபைகள் நூற்றுக்கணக்கில் உருவாயின. நற்செய்தியை அவர்கள் அயராது பிரசங்கித்ததால்தான், இன்று அமைப்பில் மாபெரும் அதிகரிப்பைக் காண்கிறோம். (ஏசா. 60:22) இவ்வாறு, நற்செய்தி ‘வானத்தின் கீழிருக்கிற சகல சிருஷ்டிகளுக்கும் பிரசங்கிக்கப்பட்டுவருவதில்’ அவர்களே தொடர்ந்து முக்கியப் பங்கு வகித்து வருகின்றனர்.—கொலோ. 1:23.
3 பின்பற்றத்தக்க மாதிரி: விசேஷ பயனியர்களில் சிலர் பல ஆண்டுகளாக முழுநேர ஊழியம் செய்துவந்திருக்கின்றனர். கடந்த பல ஆண்டுகளில், உண்மையுள்ள இந்த ஊழியர்களின் விசுவாசம் வெவ்வேறு விதங்களில் சோதிக்கப்பட்டதால், அதன் தரம் உயர்ந்திருக்கிறது. (1 பே. 1:6, 7) குறிப்பிட்ட தேவையைப் பூர்த்தி செய்வதற்காக சில இடங்களுக்குப் போய் சேவை செய்ய தங்கள் சௌகரியங்களையும் அவர்கள் தியாகம் செய்திருக்கின்றனர். அவர்களில் சிலர் வயோதிகத்தின் காரணமாக உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையில் இருக்கின்றனர், அல்லது வேறு விதமான கஷ்டங்களை எதிர்ப்படுகின்றனர். (2 கொ. 4:16, 17) இந்தியாவில் பிரசங்க வேலைக்கு உதவ முடியாதபடி பணநெருக்கடி ஏற்பட்டதால் அவர்களில் அநேகர் தாங்கள் நெஞ்சார நேசித்து வந்த இந்த ஊழியத்தைத் துறந்திருக்கின்றனர். என்றாலும், அவர்கள் தொடர்ந்து ‘முதிர்வயதிலும் கனிதருகின்றனர்.’ (சங். 92:15) யெகோவாமீது முழு நம்பிக்கை வைக்கின்றனர், இதனால் அவருடைய ஆசீர்வாதத்தைப் பெறுகின்றனர்.—சங். 34:8; நீதி. 10:22.
4 விசேஷ பயனியர்கள் நிச்சயமாகவே நம் அன்பான பாராட்டுக்கு உரியவர்கள். உங்கள் சபையில் தற்போது விசேஷ பயனியர் ஊழியம் செய்பவர்கள் இருந்தாலோ, முன்பு விசேஷ பயனியர் ஊழியம் செய்தவர்கள் இருந்தாலோ, அது உங்களுக்குக் கிடைத்த பாக்கியமே; அவர்களோடு நேரம் செலவிடக் கிடைத்த இந்த வாய்ப்பை முழுமையாகப் பயன்படுத்திக்கொள்ளுங்கள், அவர்களது அனுபவத்திலிருந்து நன்மை அடையுங்கள். ராஜ்ய பிரஸ்தாபிகளாக அவர்கள் உண்மையுடன் உழைப்பதற்கு நன்றியுள்ளவர்களாய் இருங்கள். அவர்கள் சத்தியத்தில் உறுதியாய் நிலைத்திருப்பதைக் கண்டு ஊக்கம் பெறுங்கள். அவர்களது விசுவாசத்தைப் பின்பற்றும் அனைவருமே யெகோவாவின் தயவையும் ஆசீர்வாதத்தையும் பெறுவார்கள்; ஏனெனில் ‘உண்மையாய் நடக்கிறவர்கள் அவருக்குப் பிரியமானவர்கள்.’—நீதி. 12:22.