சிறந்த ஆன்மீகப் பழக்கங்களை வளர்த்துக்கொள்ளுங்கள், அநேக ஆசீர்வாதங்களைப் பெறுங்கள்
1 நீங்கள் யெகோவாவின் சாட்சியாக ஆன சமயத்தில், பைபிள் வாசிப்பது, கூட்டங்களுக்குச் செல்வது, வெளி ஊழியத்தில் பங்கெடுப்பது, ஜெபம் செய்வது போன்ற பழக்கங்களை வளர்த்துக்கொள்ள அதிக முயற்சி எடுத்திருப்பீர்கள். உங்கள் முயற்சிகளை யெகோவா ஆசீர்வதித்ததன் பலனாக ஆன்மீக ரீதியில் முன்னேற்றம் அடைந்தீர்கள். நீங்கள் முழுக்காட்டுதல் எடுத்து இப்போது பல வருடங்கள் உருண்டோடி இருக்கலாம். அந்தச் சிறந்த பழக்கங்களை இப்போதும் கடைப்பிடித்து வருகிறீர்களா?
2 உங்கள் ஆன்மீகப் பழக்கங்களைச் சீர்தூக்கிப் பாருங்கள்: பைபிளிலிருந்து ஒரு பகுதியைத் தினந்தோறும் வாசிக்கிற பழக்கம் உங்களுக்கு இருக்கிறதா? அப்படி வாசிப்பது எவ்வளவாய் நன்மை அளிக்கிறது! (யோசு. 1:8; சங். 1:2, 3) பூர்வ இஸ்ரவேலில், ஒவ்வொரு ராஜாவும் நியாயப்பிரமாணத்தை ஒரு பிரதி எடுத்து, அதை “தன் ஜீவனுள்ள நாளெல்லாம்” வாசிக்க வேண்டியிருந்தது. அதனால் கிடைத்த நன்மைகள்? அந்த ராஜா மனத்தாழ்மையை வளர்த்துக்கொண்டு, யெகோவாவுக்குப் பயந்து நடக்க முடிந்தது, அவருடைய கட்டளைகளை விட்டு விலகாமல் இருக்க முடிந்தது. (உபா. 17:18-20) அவ்வாறே இன்றும், தினந்தோறும் பைபிள் வாசிப்பது, கோணலும் மாறுபாடுமான சந்ததியின் நடுவிலே குற்றமற்றவர்களும் கபடற்றவர்களுமாய் இருக்க உதவுகிறது. ஊழியம் செய்வதற்குத் தேவையான முழு தகுதியைப் பெறவும் உதவுகிறது.—பிலி. 2:15; 2 தீ. 3:17.
3 கடவுளுடைய வார்த்தை வாசிக்கப்பட்டு, விளக்கப்பட்ட ஜெபாலயத்திற்குச் செல்லும் பழக்கம் இயேசுவுக்கு இருந்தது. (லூக். 4:16) இப்படிச் சென்றது அவர் எதிர்ப்படவிருந்த சோதனைகளைச் சந்திக்க அவருக்குப் பலத்தைத் தந்திருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. சபை கூட்டங்களில் கிடைக்கும் ஆன்மீக அறிவுரைகளிலிருந்தும், ‘ஒருவருக்கொருவர் ஊக்கமூட்டுதலைப் பெறுவதிலிருந்தும்’ நாமும்கூட பலப்படுத்தப்படுகிறோம். (ரோ. [உரோ.] 1:11, 12, பொது மொழிபெயர்ப்பு) நம் சகோதரர்களோடு ஒன்றுகூடி வருவது, இந்தக் கடைசி நாட்களில் கஷ்டங்களைச் சகிக்க நமக்கு உதவுகிறது. (எபி. 10:24, 25) இப்போதும் எல்லாக் கூட்டங்களுக்கும் செல்வது உங்கள் பழக்கமா?
4 “தினந்தோறும் தேவாலயத்திலேயும் வீடுகளிலேயும்” நற்செய்தியைப் பிரசங்கிப்பதில் அப்போஸ்தலர்கள் பங்கெடுத்தனர் என்பதாகக் கடவுளுடைய ஆவியால் ஏவப்பட்டு எழுதப்பட்ட பைபிள் கூறுகிறது. (அப். 5:42) நம்மால் ஒருவேளை தினந்தோறும் பிரசங்க வேலையில் ஈடுபட முடியாதிருக்கலாம்; என்றாலும், ஒவ்வொரு வாரமும் ஏதோ ஒரு வகையில் ஊழியத்தில் ஈடுபடும் பழக்கத்தை நாம் ஏற்படுத்திக்கொள்ள முடியுமா? அப்படி ஏற்படுத்திக்கொண்டால், கடவுளுடைய வார்த்தையை இன்னும் திறம்பட பயன்படுத்துவோம்; பைபிள் சத்தியத்தை மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்வதில் நல்ல நல்ல அனுபவங்களைப் பெறுவோம்.
5 தானியேல் தீர்க்கதரிசி தன் வாழ்நாளெல்லாம் யெகோவாவுக்கு “இடைவிடாமல்” சேவை செய்ததால் அபரிமிதமாக ஆசீர்வதிக்கப்பட்டார். இந்த ‘இடைவிடாத’ சேவையில் யெகோவாவிடம் தவறாமல் ஜெபிக்கும் பழக்கமும் உட்பட்டிருந்தது. (தானி. 6:10, 16, 20) அவ்வாறே நாமும் தவறாமல் யெகோவாவிடம் உள்ளப்பூர்வமாக ஜெபிக்கும்போது, அவருடைய பரிசுத்த ஆவியைத் தந்து நம்மை ஆசீர்வதிப்பார். (லூக். 11:9-13) அதைவிட, அவர் நம்மிடம் நெருங்கி வருவதன் மூலமும், தம்மோடு நெருங்கிய உறவை அனுபவித்து மகிழ அனுமதிப்பதன் மூலமும் நம் ஜெபங்களுக்குப் பதில் அளிப்பார். (யாக். 4:8) என்னே மகத்தான ஆசீர்வாதம்! ஆகவே, அருமையான ஆன்மீகப் பழக்கங்களைக் கடைப்பிடிக்க ஊக்கத்துடன் உழைத்து யெகோவாவிடமிருந்து அபரிமிதமான ஆசீர்வாதங்களைப் பெறுவோமாக.
[கேள்விகள்]
1. உங்கள் ஆன்மீகப் பழக்கங்களைச் சீர்தூக்கிப் பார்ப்பது ஏன் நல்லது?
2. தினந்தோறும் பைபிள் வாசிப்பதால் நமக்கு என்ன நன்மைகள் கிடைக்கின்றன?
3. கூட்டங்களுக்குச் செல்லும் பழக்கத்தால் என்ன நன்மை அடைகிறோம்?
4. ஒவ்வொரு வாரமும் வெளி ஊழியத்தில் பங்கெடுப்பது நமக்கு எப்படி நன்மை அளிக்கும்?
5. யெகோவாவிடம் தவறாமல் ஜெபிப்பது ஏன் அவசியம்?