முன்னேறுகிற பைபிள் படிப்புகளை நடத்துதல்
பகுதி 12: பைபிள் படிப்புகளை ஆரம்பித்து, அவற்றைத் தொடர்ந்து நடத்த மாணாக்கர்களுக்கு உதவுதல்
1 நம்முடைய பைபிள் மாணாக்கர்கள் ஊழியத்தில் கலந்துகொள்ள ஆரம்பிக்கும்போது, சொந்தமாக பைபிள் படிப்புகளை நடத்த அவர்கள் பயப்படலாம். ஊழியத்தின் முக்கிய அம்சமான பைபிள் படிப்பை அவர்களாலும் நடத்த முடியுமென்ற நம்பிக்கையை ஊட்ட நாம் என்ன செய்யலாம்?—மத். 24:14; 28:19, 20.
2 ஒரு பைபிள் மாணாக்கர் முழுக்காட்டப்படாத பிரஸ்தாபியாக தகுதி பெறும்போது பெரும்பாலும் அவர் தேவராஜ்ய ஊழியப் பள்ளியில் ஏற்கெனவே பங்கு பெற்றுவந்திருப்பார். அங்கு பேச்சுகளைத் தயாரித்துக்கொடுப்பதில் கிடைக்கும் பயிற்சி, போதிக்கும் திறமையை வளர்த்துகொள்ள அவருக்கு உதவும். இந்த திறமை ‘வெட்கப்படாத ஊழியக்காரர்களுக்கும் சத்திய வசனத்தை நிதானமாய்ப் பகுத்துப் போதிக்கிறவர்களுக்கும்’ மிக அவசியம்.—2 தீ. 2:15.
3 உங்கள் முன்மாதிரியால் போதியுங்கள்: இயேசு தம்முடைய சீஷர்களுக்குத் தெளிவாகப் போதித்ததன் மூலமும், சிறந்த முன்மாதிரி வைத்ததன் மூலமும் பயிற்சி அளித்தார். “தேறினவன் எவனும் தன் குருவைப் போலிருப்பான்” என்று அவர் சொன்னார். (லூக். 6:40) இயேசுவைப் பின்பற்றி ஊழியத்தில் நீங்கள் ஒரு சிறந்த முன்மாதிரியாக இருப்பது மிக அவசியம். உங்களுடைய முன்மாதிரியைக் கவனிக்கும் மாணாக்கர்கள், பைபிள் படிப்புகளை ஆரம்பிப்பதுதான் மறுசந்திப்பின் முக்கிய நோக்கம் என்பதைப் புரிந்துகொள்வார்கள்.
4 வீட்டுக்காரருக்கு பைபிள் படிப்பை அறிமுகப்படுத்தும்போது அது எப்படி நடத்தப்படும் என்ற நீண்ட விளக்கத்தைத் தர வேண்டியதில்லை என மாணாக்கருக்குச் சொல்லுங்கள். அதற்குப் பதிலாக, படிப்புக்கான புத்தகத்திலிருந்து ஓரிரண்டு பாராவை மட்டும் உபயோகித்து படிப்பு எப்படி நடத்தப்படும் என்று வீட்டுக்காரருக்குக் காட்டலாம் என சொல்லுங்கள். இதைச் செய்வதற்கான பயனுள்ள ஆலோசனைகள், இந்த மாத நம் ராஜ்ய ஊழியத்தில் பக்கம் 8-லும், ஜனவரி 2002 நம் ராஜ்ய ஊழியத்தில் பக்கம் 6-லும் உள்ளன.
5 தேவைப்படும்போது உங்களுடைய மற்ற பைபிள் படிப்புகளுக்கு அல்லது அனுபவமுள்ள வேறொரு பிரஸ்தாபியினுடைய பைபிள் படிப்புகளுக்கு அந்த மாணாக்கரை அழைத்துச் செல்லலாம். படிப்பில் ஒரு பாராவிற்கான பதிலையோ, ஒரு முக்கிய வசனத்தைப் பற்றிய குறிப்பையோ அவரைச் சொல்லச் சொல்லலாம். இவ்வாறு, மற்றவர்களைக் கூர்ந்து கவனிப்பதன் மூலம், முன்னேறுகிற பைபிள் படிப்புகளை நடத்த மாணாக்கர் கற்றுக்கொள்வார். (நீதி. 27:17; 2 தீ. 2:2) சொன்ன பதில்களுக்காக அவரைப் பாராட்டி இன்னும் எப்படியெல்லாம் முன்னேறலாம் என்று குறிப்பிடுங்கள்.
6 புதிய பிரஸ்தாபிகளைக் கடவுளுடைய வார்த்தையின் போதகர்களாக ஆக்குவதற்குப் பயிற்றுவிக்கும்போது, ‘நற்கிரியைகளைச்’ செய்ய, அதாவது சொந்தமாக பைபிள் படிப்புகளை ஆரம்பித்து அவற்றைத் தொடர்ந்து நடத்த அவர்கள் தயாராவார்கள். (2 தீ. 3:16) “விருப்பமுள்ளவன் ஜீவத்தண்ணீரை இலவசமாய் வாங்கிக்கொள்ளக்கடவன்” என்று அவர்களோடு சேர்ந்து அன்பான அழைப்பை விடுக்கும்போது எப்பேர்ப்பட்ட மனதிருப்தி நமக்குக் கிடைக்கிறது!—வெளி. 22:17.