ராஜ்ய பிரசங்க வேலை—ஓர் அரிய சிலாக்கியம்
1 உயிர்வாழ்வதற்காக யெகோவா அபரிமிதமாய் வழங்கும் காரியங்களிலிருந்து கோடானுகோடி மக்கள் அனுதினமும் பயனடைகின்றனர். (மத். 5:45) என்றபோதிலும், வெகு சிலரே தங்களுடைய சிருஷ்டிகருக்கு அவற்றிற்கான நன்றியைத் தெரிவிக்கின்றனர்; ஆம், கடவுளுடைய ராஜ்யத்தைப் பற்றிய நற்செய்தியைப் பிரசங்கிப்பதன் மூலமாக அந்த நன்றியைத் தெரிவிக்கும் அரிய சிலாக்கியத்தைப் பெற்றிருக்கின்றனர். (மத். 24:14) இந்த அரிய சிலாக்கியத்தை நீங்கள் எந்தளவுக்கு உயர்வாக மதிக்கிறீர்கள்?
2 ராஜ்ய பிரசங்க வேலை கடவுளை மகிமைப்படுத்துவதோடு கொந்தளிக்கும் பிரச்சினைகளில் சிக்கித் தவிக்கும் ஜனங்களுக்கு நம்பிக்கையையும் சமாதானத்தையும் தருகிறது. (எபி. 13:15) நற்செய்தியை ஏற்றுக்கொள்கிறவர்களுக்கு நித்திய ஜீவ நம்பிக்கையையும் அளிக்கிறது. (யோவா. 17:3) இப்படிப்பட்ட நன்மைகளை வேறெந்த வேலையாவது தொழிலாவது அளிக்குமா? அப்போஸ்தலன் பவுல், ஊழியத்திற்கான போற்றுதலை அதை செய்த விதத்தில் காண்பித்தார். அதை அவர் பொக்கிஷமாக கருதினார்.—அப். 20:20, 21, 24; 2 கொ. 4:1, 7.
3 இந்த அரிய சிலாக்கியத்திற்கு நன்றி காண்பித்தல்: பிரசங்க சிலாக்கியத்திற்கு நம் நன்றியைக் காண்பிப்பதற்கான ஒரு வழி நம்முடைய ஊழியத்தின் தரத்திற்கு அதிக கவனம் செலுத்துவதாகும். வீட்டுக்காரரின் இருதயத்தைத் தொடும் விதத்தில் அறிமுகக் குறிப்புகளைச் சொல்ல நாம் நேரமெடுத்து தயாரிக்கிறோமா? பைபிள் வசனங்களை உபயோகித்து அதிலிருந்து நியாயங்காட்டிப் பேசும் திறமையை வளர்த்துக்கொள்கிறோமா? நமக்கு நியமிக்கப்பட்ட பிராந்தியத்தை முழுமையாகச் செய்து முடிக்கிறோமா? ஒரு பைபிள் படிப்பை ஆரம்பித்து அதைத் தொடர்ந்து நடத்துகிறோமா? இந்த வேலையைப் பற்றிய சரியான கண்ணோட்டம், விசுவாசமுள்ள கிறிஸ்தவர்களை அன்றும் இன்றும் எப்படித் தூண்டியிருக்கிறதோ, அவ்வாறே நம்மையும் தூண்டுகிறது. இந்தச் சிலாக்கியத்தை நாம் மனதார போற்றுகிறோம்.—மத். 25:14-23.
4 முதுமை, சுகவீனம், வேறு கடினமான சூழ்நிலைகள் ஆகியவற்றால் நாம் அவதிப்பட்டுக்கொண்டிருந்தாலும், ஊழியத்திற்காக நாம் எடுக்கும் வைராக்கியமான முயற்சிகள் உயர்வாக மதிக்கப்படுகின்றன என்பதை அறியும்போது உண்மையில் ஆறுதலடைகிறோம். யெகோவாவுக்குச் சேவை செய்ய நாம் எடுக்கும் சிறு சிறு முயற்சிகளையும், ஒருவேளை அது மனித கண்களுக்கு அற்பமாகக் தெரிந்தாலும் யெகோவா அதை உயர்வாகக் கருதுகிறார் என்று அவருடைய வார்த்தையான பைபிள் நமக்கு உறுதி அளிக்கிறது.—லூக். 21:1-4.
5 ராஜ்ய பிரசங்க வேலை அதிக திருப்தியளிக்கும் வேலையாகும். 92 வயதான ஒரு சகோதரி இவ்வாறு சொன்னார்: “கடவுளுக்கு ஒப்புக்கொடுத்து சேவை செய்த கடந்த 80 ஆண்டுகளை ஒருகணம் யோசித்துப் பார்க்கிறேன். துளிகூட வருத்தம் இல்லை! எப்பேர்ப்பட்ட சிலாக்கியம் அது! மறுபடியும் என் வாழ்க்கையை ஆரம்பிக்க முடியுமானால், இதே வாழ்க்கையைத்தான் வாழ்வேன். ஏனென்றால், ‘ஜீவனைப்பார்க்கிலும் கடவுளுடைய கிருபையே நல்லது.’” (சங். 63:3) கடவுள் தந்திருக்கும் இந்த அரிய சிலாக்கியமான ராஜ்ய பிரசங்க வேலையை அச்சகோதரியைப் போல நாமும் பொக்கிஷமாகக் கருதுவோமாக.