உங்கள் கதவு திறந்திருக்கிறதா?
1 முதல் நூற்றாண்டில் அநேக கிறிஸ்தவர்கள் தங்களுடைய வீடுகளில் சபை கூட்டங்களை நடத்துவதற்கு அனுமதித்தார்கள். (1 கொ. 16:19; கொலோ. 4:15; பிலே. 1, 2) இன்று சில சபைகளில் புத்தகப் படிப்புகளையும் வெளி ஊழியக் கூட்டங்களையும் நடத்துவதற்கு போதுமான இடவசதி இல்லை. இதனால், சில புத்தகப் படிப்பு தொகுதிகளில் 30 அல்லது அதற்கும் அதிகமானவர்கள் ஆஜராகிறார்கள்; இது சுமார் 15 பேர் என்ற நிர்ணயிக்கப்பட்ட எண்ணிக்கையைவிட அதிகமாகும்.
2 அருமையான சிலாக்கியம்: சபை புத்தகப் படிப்பை உங்கள் வீட்டில் நடத்துவதற்கு அனுமதிப்பதைப் பற்றி யோசித்திருக்கிறீர்களா? கூட்டத்தை நடத்துவதற்கு ஏற்ப போதிய இடவசதி, வெளிச்சம், காற்றோட்டம் உள்ள ஒரு சுத்தமான ரூம் போதுமானது. புத்தகப் படிப்பும்கூட, சபை கூட்டங்களிலும் யெகோவாவின் போதிக்கும் ஏற்பாடுகளிலும் ஒன்றாகும். எனவே, உங்கள் வீட்டில் புத்தகப் படிப்பை நடத்த இடமளிப்பது ஓர் அருமையான சிலாக்கியம். தங்களுடைய வீடுகளை இவ்விதமாக பயன்படுத்த அனுமதித்ததால் அநேகர் ஆவிக்குரிய பலன்களை அடைந்திருப்பதாக சொல்கிறார்கள்.
3 உங்கள் வீடு இதற்கு ஏற்ற இடம் என்று நீங்கள் நினைத்தால், தயவுசெய்து மூப்பர்களிடம் தெரிவியுங்கள். கூடுவதற்கு இன்னொரு இடத்திற்காக அவர்கள் தேடிக் கொண்டிருக்கலாம். உங்கள் வீட்டில் புத்தகப் படிப்பை நடத்த வசதி இல்லை என்றாலும் வெளி ஊழியக் கூட்டத்தையாவது நடத்த முடியுமா? தற்சமயம் தேவை இல்லையென்றாலும் உங்கள் வீடு தயாராக இருப்பதை அறிவதை மூப்பர்கள் போற்றுவார்கள். ஒருவேளை எதிர்காலத்தில் நீங்கள் இந்த சிலாக்கியத்தை பெறலாம்.
4 நன்னடத்தை தேவை: தனிப்பட்டவர்களின் வீடுகளில் கூடும்போது ஆஜராகும் அனைவரும் அந்த வீட்டுக்காரரின் பொருட்களுக்கு தகுந்த மரியாதை காட்ட வேண்டும். அவர்களுடைய தனிப்பட்ட அறைகளுக்கு சென்றுவிடாமல் படிப்பிற்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இடத்திலேயே பிள்ளைகள் இருக்கும்படி பெற்றோர்கள் பார்த்துக்கொள்ள வேண்டும். அக்கம்பக்கத்தாருக்கு எந்த வகையிலும் தேவையற்ற தொந்தரவு கொடுத்துவிடாதபடி கவனமாக இருப்பதும் முக்கியம்.—2 கொ. 6:3; 1 பே. 2:12.
5 “நன்மை செய்யவும், தானதர்மம் பண்ணவும் மறவாதிருங்கள்; இப்படிப்பட்ட பலிகளின் மேல் தேவன் பிரியமாயிருக்கிறார்” என்பதாக எபிரெயர் 13:16 நம்மை உற்சாகப்படுத்துகிறது. சபை கூட்டங்களுக்காக உங்கள் கதவுகளை திறந்து வைப்பது மற்றவர்களுடன் நன்மையான விஷயங்களை பகிர்ந்து கொள்ளவும் ‘உங்கள் எல்லா பொருளாலும் யெகோவாவை கனம் பண்ணவும் உதவும்.’—நீதி. 3:9, NW.