2003 “தேவனை மகிமைப்படுத்துங்கள்” யெகோவாவின் சாட்சிகளுடைய மாவட்ட மாநாடு
1 யெகோவா தமது உண்மையுள்ள தீர்க்கதரிசியாகிய ஏசாயாவின் மூலம், “என் ஜனங்களே, நான் சொல்வதைக் கவனியுங்கள்; என் தேசத்தாரே, எனக்குச் செவிகொடுங்கள்” என கட்டளையிட்டார். (ஏசாயா 51:4, தி.மொ.) இக்கட்டு அதிகரித்துவரும் இந்தக் கடைசி காலத்தில் யெகோவாவின் கட்டளைக்கு கவனம் செலுத்துவது எப்போதையும்விட இப்போது ரொம்பவே முக்கியம் என்பதை நீங்கள் ஒப்புக்கொள்வீர்கள் அல்லவா? வணக்கத்துக்காக கூடிவரும்படி யெகோவா கொடுத்திருக்கும் கட்டளைக்குக் கீழ்ப்படிவது அவருக்கு ‘செவிகொடுப்பதற்கு’ ஒரு வழி. அந்த விசேஷ வாய்ப்பை நம் வருடாந்தர மாவட்ட மாநாடுகள் அளிப்பதால் அதற்காக நாம் எவ்வளவாய் காத்திருக்கிறோம்! மீண்டும் யெகோவாவின் சாட்சிகளுடைய ஆளும் குழு, 2003-ல் இந்திய கிளை அலுவலக பிராந்தியத்தில் அநேக மாவட்ட மாநாடுகளை நடத்த ஏற்பாடு செய்திருக்கிறது.
2 இந்தியாவில் கடந்த வருடம் நடைபெற்ற, ஆவிக்குரிய புத்துணர்ச்சியூட்டிய “வைராக்கியத்தோடு ராஜ்யத்தை அறிவிப்போர்” மாவட்ட மாநாடுகளில் 33,372 பேர் கலந்துகொண்டார்கள். ஒன்பது மாநாடுகள் நடைபெற்றதில், 807 பேர் தங்கள் ஒப்புக்கொடுத்தலுக்கு அடையாளமாக முழுக்காட்டுதல் பெற்றது இருதயத்தைப் பூரிக்க செய்தது. வந்திருந்த பிரதிநிதிகள் இந்த மாநாட்டில் செய்யப்பட்ட ஏற்பாடுகளைக் கண்டு உள்ளம் நெகிழ்ந்து போனார்கள். சென்னை, கொச்சி, மும்பை, செகந்திராபாத் ஆகிய நான்கு மாநாட்டு நகரங்களிலுள்ள சகோதர சகோதரிகள் நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்திருந்த ஆயிரக்கணக்கான பிரதிநிதிகளை வரவேற்று உபசரித்தார்கள்; அவர்களில் அநேகர் முதன்முதலாக இப்படியொரு மாபெரும் மாநாட்டை கண்டுகளித்தார்கள். பிரதிநிதிகள் அனைவரும் அருமையான கூட்டுறவையும் ஆவிக்குரிய புத்துணர்ச்சியையும் அனுபவித்தார்கள் என்பதில் சந்தேகமேயில்லை. அந்த உற்சாகமூட்டுதல், இன்னும் அதிகமாக அன்பு காட்டவும் நற்செயல்களில் பெருகவும் நம்மை தூண்டவில்லையா? இந்த அநுக்கிரக காலத்தில் கடவுளை மகிமைப்படுத்துவதற்கு இன்னும் அநேகருக்கு உதவும்படி நாம் நன்கு தயார்படுத்தப்பட்டிருக்கிறோம், ஊக்குவிக்கப்பட்டிருக்கிறோம் என்பதில் சந்தேகமேயில்லை.—2 கொ. 6:1, 2.
3 2003-ம் ஆண்டிற்கான மாவட்ட மாநாட்டை அனுபவிக்க காத்திருக்கிறோம்; நம் அருமையான சகோதர கூட்டுறவை அனுபவிக்கவும், யெகோவா நமக்கு கொடுத்த ஐக்கியத்திற்கு நன்றி சொல்லவும் புதிய வாய்ப்புகளை எதிர்நோக்கி இருக்கிறோம். நம் மாவட்ட மாநாடுகளுக்காக இப்போது செய்யப்படும் ஏற்பாடுகளிலிருந்து முழுமையாக பயனடைய நாம் என்ன செய்யலாம்?
4 மூன்று நாட்களும் கலந்துகொள்ளுங்கள்: உண்மையும் விவேகமுமுள்ள அடிமை வகுப்பார் மூலம் அளிக்கப்படும் போதனையிலிருந்து முழுமையாக பயனடைய நாம் விரும்புகிறோம்; எனவே முழு நிகழ்ச்சியிலும் கலந்துகொள்ள தீர்மானமாய் இருப்போமாக. (மத். 24:45) மூன்று நாட்களும் மாநாட்டில் கலந்துகொள்ளும்படி விடுமுறை எடுக்க வேலையிடத்தில் உங்கள் அதிகாரியிடம் அனுமதி கேட்க வேண்டுமா? எருசலேமிற்குப் போய் அதன் மதில் சுவர்களை மீண்டும் கட்டுவதற்கு அர்தசஷ்டா ராஜாவிடம் அனுமதி கேட்பதற்கு முன்பு நெகேமியா “பரலோகத்தின் தேவனை நோக்கி ஜெபம்பண்ணி”னார். (நெ. 2:4) அதே போலவே நீங்களும் மாவட்ட மாநாட்டில் மூன்று நாட்களும் கலந்துகொள்வதற்கு உங்கள் அதிகாரியிடம் அனுமதி கேட்பதற்கு முன்பு தைரியத்தைத் தரும்படி யெகோவாவிடம் ஜெபிக்க வேண்டும். விடுமுறை தர உங்கள் அதிகாரி தயங்கினால் என்ன செய்வது? நம் மாவட்ட மாநாடுகளில் அளிக்கப்படும் போதனை நேர்மையாக இருக்கவும் ஊக்கமாக வேலை செய்யவும் நம்பிக்கையான வேலையாட்களாக திகழவும் நமக்கு உதவுகிறது என்பதை விளக்குங்கள்; அப்போது ஒருவேளை அவர் அனுமதியளிக்கலாம். மேலும் விசுவாசத்தில் இல்லாத குடும்பத்தார் உங்களுக்கு இருக்கிறார்களா? அப்படியானால் முடிந்தவரை சீக்கிரத்திலேயே நம் மாவட்ட மாநாட்டு திட்டங்களைப் பற்றி அவர்களிடம் சொல்வது நல்லது.
5 புதிய அறை வசதி ஏற்பாடு: பெரிய மாவட்ட மாநாட்டிற்காக வரும் நூற்றுக்கணக்கானவர்களுக்கு தங்குமிடத்தைக் கண்டுபிடித்துக் கொடுப்பது என்பது எப்போதும் மாபெரும் பணியாக இருந்திருக்கிறது. இப்போது பெரும்பான்மையோர் ஹோட்டல்களில் அல்லது சத்திரங்களில் தங்க விரும்புகிறார்கள். மாநாட்டு ரூமிங் டிபார்ட்மென்டுகள், சில சமயங்களில் குறைந்த வாடகைக்கு சகோதரர்கள் தங்குவதற்கு ஹோட்டல்களை சந்தோஷத்துடன் ஏற்பாடு செய்துகொடுத்திருக்கின்றன; எனினும் நம் சகோதரர்களில் நிறைய பேர் தாங்களாகவே நேரடியாக அதற்குரிய ஏற்பாடுகளை செய்துகொள்கிறார்கள்.
6 அறை வசதி தேவைப்படும் அனைவருக்கும் உதவுவதற்கும், மொத்தத்தில் இந்த ஏற்பாட்டை எளிதாக்குவதற்கும் இந்த வருடம் “தேவனை மகிமைப்படுத்துங்கள்” மாவட்ட மாநாடுகளில் கலந்துகொள்வோருக்கு ரூம் புக்கிங் சம்பந்தமாக கிளை அலுவலகம் புதிய ஏற்பாட்டை செய்ய தீர்மானித்திருக்கிறது. அதன்படி, இனிமேல் ஹோட்டலில் தங்குவதற்கு ரூமிங் டிபார்ட்மென்ட் முன்கூட்டிய புக் செய்துகொடுக்காது; அதற்கு பதிலாக நல்ல ஹோட்டல்களையும், அதன் கட்டண விவரங்களையும் பற்றிய பட்டியலை சபைக்கு அனுப்பி வைக்கும். இது, விருப்பமுள்ளவர்கள் தாங்களாகவே ஹோட்டல் நிர்வாகத்தை அணுகி தனிப்பட்ட ஏற்பாடுகளை செய்துகொள்வதற்கு உதவும். சத்திரத்தில் தங்க விரும்புகிறவர்களுக்கு இந்த ஏற்பாடு பொருந்தாது. அவர்கள் மாநாட்டு ரூமிங் டிபார்ட்மென்ட் மூலமாகவே அதற்கு புக் செய்து கொள்ளலாம்.
7 சத்திரங்கள்: பெரும்பாலும், ஹோட்டல் விவரங்கள் பற்றிய முதல் பட்டியல் அனுப்பப்பட்டு சுமார் ஒரு மாதத்திற்குப் பிறகு இது சம்பந்தப்பட்ட தகவலை சபைகள் பெற்றுக்கொள்ளும். சத்திரங்களில் தங்க விரும்புவோர், மாநாட்டு ரூமிங் டிபார்ட்மென்ட் சபைகளுக்கு அனுப்பும் பட்டியலில் குறிப்பிட்டுள்ள அறிவுரைகளுக்கு இணங்க செயல்பட வேண்டும்.
8 விசேஷ உதவி தேவைப்படுவோர்: பொதுவாக, விசேஷ உதவி தேவைப்படுபவர்களை கவனித்துக் கொள்ளும் ஏற்பாட்டை அந்தந்த சபையே பார்த்துக்கொண்டிருக்கிறது. அவர்களுடைய சூழ்நிலைகளை அறிந்திருக்கும் மூப்பர்களும் மற்றவர்களும் அவர்களுக்கு அன்புடன் உதவுவது பாராட்டுக்குரியது. அவர்கள் பெரும்பாலும், முழுநேர ஊழியத்தில் உள்ளவர்களை, வயதானவர்களை, சுகவீனர்களை அல்லது உதவி தேவைப்படுகிறவர்களை தங்களோடு அழைத்து செல்வதன் மூலமும் ஆதரித்திருக்கிறார்கள். மேலும், அவர்களுக்குத் தேவையான ஏற்பாடுகளை செய்து கொடுப்பது அல்லது முடிந்தால், அதுவும் தேவைப்பட்டால், பண உதவி அளிப்பது போன்ற மற்ற வழிகளிலும் அவர்களுடைய தேவைகளை கவனத்திருக்கிறார்கள். (யாக். 2:15-17; 1 யோ. 3:18) அத்தகைய அன்பான உதவியை தொடர்ந்து அவர்கள் அளிப்பார்கள் என நாங்கள் மனதார நம்புகிறோம். (யோவா. 13:35) எனினும் இப்படி விசேஷ உதவி தேவைப்படுகிறவர்கள் சுயமாக தங்களைக் கவனித்துக்கொள்ள முடியாமலோ, சபையிலுள்ளோர் அவர்களைக் கவனித்துக்கொள்ள முடியாமலோ இருந்தால் மாநாட்டு ரூமிங் டிபார்ட்மென்ட் அவர்களுக்கு அறை வசதி ஏற்பாடு செய்துகொடுக்கும். அவர்கள் தங்கள் சபையிலுள்ள மாநாட்டு ஒருங்கிணைப்பாளரை அணுகி, தங்கள் சூழ்நிலையை விளக்கி, விசேஷ உதவி தேவைப்படுவோருக்குரிய ரூம் ரிக்வெஸ்ட் படிவத்தைக் கேட்டுப் பெறலாம்.
9 இந்தப் படிவத்தை விசேஷ உதவி தேவைப்படுவோர் மட்டுமே உபயோகிக்க முடியும். அவர்கள் அந்தப் படிவத்தை பூர்த்தி செய்து மாநாட்டு ஒருங்கிணைப்பாளரிடம் கொடுக்க வேண்டும்; படிவம் முழுமையாகவும் திருத்தமாகவும் பூர்த்தி செய்யப்பட்டிருக்கிறதா என அவர் சரிபார்த்து, அவர்களுடைய சூழ்நிலைகளையும் உறுதிப்படுத்திக் கொள்வார். அந்தப் படிவத்தை அவர் மாநாட்டு ரூமிங் டிபார்ட்மென்ட்டுக்கு அனுப்பி வைத்தாலும் தங்குமிடம் சம்பந்தப்பட்ட விவரம், விசேஷ உதவி தேவைப்படும் அந்த நபருக்கு அல்லது நபர்களுக்கு நேரடியாக அனுப்பி வைக்கப்படும். இப்படிப்பட்டவர்களுக்கு உதவியாக, அவர்களுடைய சூழ்நிலைக்கேற்ப வீடுகளிலும் ஹோட்டலிலும் தங்குமிடம் ஏற்பாடு செய்து கொடுக்கப்படும். கை காசை செலவு செய்து ஹோட்டலில் தங்குவது உண்மையிலேயே தங்கள் சக்திக்கு மிஞ்சியது என்ற நிலையிலுள்ளவர்களுக்கு மட்டுமே பொதுவாக வீடுகளில் தங்கும் வசதி செய்து கொடுக்கப்படும் என்பதை தயவுசெய்து மனதில் வையுங்கள். இது, விடுமுறை காலத்திற்காக அல்லது இன்னும் பிற காரியங்களுக்காக பணத்தை மிச்சப்படுத்த நினைத்து இலவசமாக அல்லது செலவில்லாமல் தங்க ஆசைப்படுகிறவர்களுக்கு அல்ல. மேலும், மாநாட்டு தினங்களில் மட்டுமே அந்த வீட்டில் தங்குவதற்கு ஏற்பாடு செய்யப்படுகிறது. வீட்டைக் கொடுக்கும் சகோதரர்களிடம் உரிமை எடுத்துக்கொண்டு மாநாட்டுக்கு முன்பும் பின்பும் அங்குள்ள சுற்றுலா ஸ்தலங்களை சுற்றிப் பார்ப்பதற்கு அதிக நாட்கள் தங்க வைக்க வேண்டுமென எதிர்பார்ப்பது உண்மையிலேயே நியாயமானதாக இருக்காது.
10 மற்றொரு மாநாட்டில் கலந்துகொள்ளுதல்: உங்களுக்கு நியமிக்கப்பட்ட மாநாடுக்கு செல்ல முடியாமல் வேறொரு மாநாட்டிற்கு செல்லும் நிலை ஏற்படுகையில் தங்குவதற்கு ஹோட்டல் ரூம் தேவைப்படலாம்; இது சம்பந்தமாக தகவலறிய தயவுசெய்து உங்கள் சபை செயலரை அணுகவும். அவர் மாநாட்டு தலைமை அலுவலகங்களின் விலாசத்தை உங்களுக்குக் கொடுக்கலாம். அதிலுள்ள பொருத்தமான விலாசத்துக்கு எழுதுங்கள்; அத்துடன் சுயவிலாசம் எழுதி, ஸ்டாம்பு ஒட்டப்பட்ட கவரையும் சேர்த்து அனுப்புங்கள். அந்த நகரத்திலுள்ள ரூமிங் டிபார்ட்மென்ட் சிறந்த ஹோட்டல்களின் சமீபத்திய பட்டியலையும் கட்டணம் பற்றிய விவரங்களையும் உங்களுக்கு அனுப்பி வைக்கும்.
11 நாம் உலகத்துக்கு வேடிக்கை காட்சியாக இருக்கிறோம்: யெகோவாவின் சாட்சிகளுக்கும் உலகத்தாருக்கும் இடையே உள்ள வேறுபாட்டை ஜனங்கள் காண்கிறார்களா? சந்தேகமின்றி காண்கிறார்கள்! எனினும் சில சமயங்களில் சில ஹோட்டல் மேனேஜர்கள் நம்மைப் பற்றி வருந்தத்தக்க குறிப்புகளை சொன்னார்கள்; புக் செய்யப்பட்டிருந்த அறைகளை பிரதிநிதிகள் ரத்து செய்ததாக அல்லது சிலர் தங்கள் கட்டணத்தில் உட்படாத பல சௌகரியங்களை எதிர்பார்த்ததாக மேனேஜர்கள் புகார் செய்தார்கள். இனி மாநாடுகள் நடக்கையில் யெகோவாவின் சாட்சிகளுடைய பிரதிநிதிகளுக்கு தங்கள் ஹோட்டல்களில் இடமில்லையென அவர்களில் சிலர் சொன்னார்கள். தேவனாகிய யெகோவாவின் பெயரை நாம் பிரதிநிதித்துவம் செய்கிறோம் என்பதையும், அதனால் நம்மை மற்றவர்கள் கூர்ந்து கவனிக்கிறார்கள் என்பதையும் நம்மில் பலர் உணராததையே இது காட்டுகிறது.
12 ஆனால் பெரும்பாலும் ஹோட்டல் மேனேஜர்கள் நம்மைப் பற்றி பாராட்டி பேசியிருப்பது சந்தோஷத்துக்குரிய விஷயம். ஒரு நகரத்தில் ஹோட்டல் மேனேஜர் ஒருவர் இவ்வாறு சொன்னார்: “இங்கு நிறைய மாநாடுகள் நடந்திருக்கின்றன, அதற்காக அநேகர் இங்கு தங்கியிருக்கிறார்கள், ஆனால் நீங்கள் ரொம்பவே ஒத்துழைப்பவர்கள், அன்பாக நடந்துகொள்பவர்கள்.” “போன வாரம் வேறொரு மத தொகுதியினர் இங்கு தங்கியிருந்தார்கள். உங்களுக்கும் அவர்களுக்கும் இடையே ரொம்பவே வித்தியாசம்.” “உங்கள் உதவியும் ஒத்துழைப்பும் எங்களுக்கு எப்போதும் கிடைக்கும் என்பதில் எங்களுக்கு சந்தேகமேயில்லை.” இத்தகைய பாராட்டுக்கள் ‘பரத்திலிருந்து வரும் ஞானம்’ நம் ஆளுமையை எந்தளவுக்கு மாற்றியிருக்கிறது என்பதை புரிந்துகொள்ள நமக்கு உதவுகின்றன அல்லவா? (யாக். 3:17) நாம் ‘உலகத்துக்கு வேடிக்கை காட்சியாக’ இருப்பதால் எல்லா சமயத்திலும் நம் தேவனாகிய யெகோவாவின் கண்ணியத்தையும் மகிமையையும் வெளிக்காட்டும் விதத்தில் நம் நடத்தை இருப்பதாக.—1 கொ. 4:9, தி.மொ.
13 ‘இவ்வுலகத்தின் வேஷம் கடந்துபோவதால்’ ஆவிக்குரிய விதத்தில் நம் கவனத்தை ஒருமுகப்படுத்துவதில் உதவி செய்வதற்கு நம் மாவட்ட மாநாடுகள் நமக்குத் தேவை. (1 கொ. 7:31) மூன்று நாட்களும் கலந்துகொள்ளும்படி ஏற்பாடுகளை செய்வதற்கு நம் பங்கில் முயற்சி தேவை; அந்த முயற்சி வீண்போகாது. சாத்தானிய உலகின்மீது யெகோவா கொண்டு வரும் நியாயத்தீர்ப்பை நாம் எதிர்நோக்கியிருக்கிறோம்; இச்சமயத்தில் தொடர்ந்து உறுதியுடன் நிலைத்திருக்க நமக்கு உதவும் விதத்தில் “தேவனை மகிமைப்படுத்துங்கள்” மாவட்ட மாநாடு இந்த வருடம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. யெகோவா நமக்காக ஏற்பாடு செய்திருக்கும் இந்தப் போதனையைப் பெற்றுக்கொள்ளாதபடி தடை செய்ய எதையும் அனுமதிக்காதிருப்போமாக.—ஏசா. 51:4, 5.
[பக்கம் 3-ன் பெட்டி]
[நிகழ்ச்சிநிரல் நேரம்]
வெள்ளியும் சனியும்
காலை 9:30 - மாலை 5:00
ஞாயிறு
காலை 9:30 - மாலை 4:05