சபை புத்தகப் படிப்பு ஏற்பாடு நமக்கு எப்படி உதவுகிறது?
1 வாரா வாரம் நடத்தப்படுகிற ஐந்து கூட்டங்களுமே நோக்கத்திலும் நடத்தப்படும் முறையிலும் வித்தியாசப்படுகின்றன. ஆனால், ‘அன்புக்கும் நற்கிரியைகளுக்கும் நாம் ஏவப்படும்படி ஒருவரையொருவர் கவனித்துக்’ கொள்வதற்கு இந்த எல்லா கூட்டங்களுமே முக்கியம். (எபி. 10:24, 25) சபை புத்தகப் படிப்பின் ஒப்பற்றதும், பயனுள்ளதுமான சில அம்சங்கள் யாவை?
2 ஆன்மீக ரீதியில் வளருவதற்கு உதவி: பொதுவாக, மற்ற சபை கூட்டங்களுக்கு வருவோரின் எண்ணிக்கையைவிட புத்தகப் படிப்புக்கு வருவோரின் எண்ணிக்கை குறைவாக இருக்கிறது. அதனால், ஆன்மீக ஆதரவை அளிக்கிற நட்புறவுகளை வளர்க்க இது கைகொடுக்கிறது. (நீதி. 18:24) உங்கள் புத்தகப் படிப்புத் தொகுதியிலுள்ள ஒவ்வொருவரைப் பற்றியும் தெரிந்துகொள்ள நீங்கள் முயன்றிருக்கிறீர்களா, ஒருவேளை உங்களோடு சேர்ந்து ஊழியம் செய்யும்படி அவர்கள் ஒவ்வொருவரையும் அழைத்திருக்கிறீர்களா? புத்தகப் படிப்பு ஏற்பாடு, அத்தொகுதியிலுள்ள ஒவ்வொருவருடைய பிரத்தியேகமான சூழ்நிலைகளை அறிந்துகொள்ளவும் தனிப்பட்ட விதமாக அவர்களை ஊக்குவிக்கவும் புத்தகப் படிப்பு கண்காணிக்கு உதவுகிறது.—நீதி. 27:23.
3 உங்களோடு பைபிள் படிப்பவர்களை புத்தகப் படிப்புக்கு உங்களுடன் வரும்படி அழைத்திருக்கிறீர்களா? நம்முடைய பெரிய கூட்டங்களுக்கு வரத் தயங்குகிற ஆர்வமுள்ள ஆட்கள் சிறிய கூட்டத்திற்கு, அதிலும் வீட்டில் நடத்தப்படுகிற கூட்டத்திற்கு வரத் தயங்குவதில்லை. அங்கு நிலவுகிற அன்பான சூழல் இளம் பிள்ளைகளுக்கும் புதிதாக வருபவர்களுக்கும் பதில் சொல்வதை எளிதாக்குகிறது. தொகுதி சிறியதாக இருப்பதால், யெகோவாவைத் துதித்து பதில்களைச் சொல்வதற்கு நமக்கு நிறைய வாய்ப்புகள் கிடைக்கும்.—சங். 111:1.
4 புத்தகப் படிப்புகள் சபையின் பிராந்தியத்தில் வசிக்கிற பிரஸ்தாபிகளுக்கு சௌகரியமான இடங்களில் பொதுவாக நடத்தப்படுகின்றன. எல்லாரையுமே அவர்களுடைய வீடுகளுக்கு அருகே நடத்தப்படுகிற புத்தகப் படிப்பு மையத்திற்கு நியமிக்க முடியாமல் போகலாம்; இருந்தாலும் நமக்கு நியமிக்கப்பட்ட மையத்திற்குச் செல்ல மற்ற சபை கூட்டங்களுக்குப் பயணிப்பதைவிட குறைவான நேரமே எடுக்கிறது. புத்தகப் படிப்பு மையம் வெளி ஊழியத்திற்கு கூடிவருவதற்கு ஏற்ற இடமாகவும் இருக்கலாம்.
5 ஊழியத்திற்கு உதவி: ஊழியத்தில் தவறாமல் கலந்துகொள்வதற்கும் பலன்தருவதற்கும் மகிழ்ச்சியைக் கண்டடைவதற்கும் ஒவ்வொருவருக்கும் உதவ புத்தகப் படிப்பு கண்காணி விரும்புகிறார். எனவே, அத்தொகுதியிலுள்ள ஒவ்வொருவருடனும் அவர் வேலை செய்ய முயலுவார்; அப்போது ஊழியத்தின் பல்வேறு அம்சங்களில் அவரால் தனிப்பட்ட உதவி அளிக்க முடியும். ஊழியத்தின் ஒரு குறிப்பிட்ட அம்சத்தில் ஈடுபடுவது உங்களுக்கு கஷ்டமாக இருந்தால், உதாரணமாக மறுசந்திப்புகள் செய்வது கஷ்டமாக இருந்தால், புத்தகப் படிப்புக் கண்காணிக்குத் தெரியப்படுத்துங்கள். ஒருவேளை, அத்தொகுதியிலுள்ள அனுபவமிக்க பிரஸ்தாபியுடன் வேலை செய்ய அவர் ஏற்பாடு செய்வார். புத்தகப் படிப்பை நடத்துகையில் அவரிடம் காணப்படுகிற நல்ல போதிக்கும் முறைகளை நீங்கள் உன்னிப்பாகக் கவனித்து வந்தால், பைபிள் படிப்புகள் நடத்துவதில் திறம்பட்டவர்களாகி விடுவீர்கள்.—1 கொ. 4:17.
6 சபை புத்தகப் படிப்பு எப்படிப்பட்ட அன்பான ஏற்பாடாக இருக்கிறது, அல்லவா! யெகோவா செய்திருக்கும் இந்த அன்பான ஏற்பாடு இந்த இக்கட்டான காலங்களில் ஆன்மீக ரீதியில் ஆட்டங்காணாமல் இருப்பதற்கு நமக்கு உதவுகிறது.—சங். 26:12.
[கேள்விகள்]
1. வாரா வாரம் நடத்தப்படுகிற ஐந்து கூட்டங்களும் நமக்கு எவ்வாறு உதவுகின்றன?
2. புத்தகப் படிப்பில் சிறு கூட்டமாக கூடி வருவதால் கிடைக்கும் நன்மைகள் யாவை?
3. பைபிள் படிப்பு ஏற்பாடு பதில் சொல்வதற்கும் பைபிள் மாணாக்கர்கள் வருவதற்கும் எப்படி ஊக்கம் அளிக்கிறது?
4. புத்தகப் படிப்பு ஏற்பாடு நமக்கு என்னென்ன விதங்களில் வசதியாக இருக்கலாம்?
5. ஊழியம் செய்வதில் நம் புத்தகப் படிப்பு கண்காணியிடமிருந்து என்னென்ன விதங்களில் நாம் உதவி பெறலாம்?
6. புத்தகப் படிப்பு ஏற்பாட்டிலிருந்து நாம் ஏன் முழுமையாக பயனடைய முயல வேண்டும்?