சாதுரியத்தோடு நற்செய்தியை அறிவித்தல்
1 பல நாடுகளில் வகுப்புவாத கொந்தளிப்புகள் அதிகரித்து வருவதால் மற்ற மதங்களைப் பற்றி பேசும்போது ஆட்கள் எளிதில் புண்பட்டுவிடுவதை நாம் கவனித்திருக்கலாம். இவை ‘கடைசி நாட்கள்’; இவற்றைப் பற்றி பவுல் குறிப்பிடுகையில், ஜனங்கள் “இணங்காதவர்களாயும், இச்சையடக்கமில்லாதவர்களாயும், கொடுமையுள்ளவர்களாயும், . . . துணிகரமுள்ளவர்களாயும்” இருப்பார்கள் என விவரித்தார். (2 தீ. 3:1-4) ஆகவே இந்தக் காலங்களில் யெகோவாவின் ஜனங்கள் நற்செய்தியை அறிவிக்கையில் சாதுரியத்தோடு நடந்துகொள்ள வேண்டும்.
2 சாதுரியம் என்றால் என்ன? ஓர் அகராதி அதற்கு இவ்வாறு விளக்கம் தருகிறது: “ஒரு சிக்கலான சூழ்நிலையில், மற்றவர்களுடன் சுமுகமான உறவுகளை காத்துக்கொள்வதற்கு அல்லது மற்றவர்களை புண்படுத்துவதை தவிர்ப்பதற்கு மிகவும் கவனமாக பேசுவதை அல்லது நடந்துகொள்வதைக் குறிக்கிறது.” கிறிஸ்தவர்களாகிய நாம் எல்லா சமுதாயத்தாரிடமும் சுமுகமான உறவுகளை காத்துக்கொள்ளவும் அவர்களை அநாவசியமாக புண்படுத்துவதை தவிர்க்கவும் விரும்புகிறோம். ஆகவே, ‘நம்மாலான மட்டும் எல்லா மனுஷரோடும் பேச்சிலும் நடத்தையிலும் சமாதானமாயிருப்போம்.’—ரோ. 12:18.
3 சாதுரியமான ஒரு கிறிஸ்தவ சாட்சிக்கு பவுல் சிறந்த மாதிரியாக விளங்கினார். அத்தேனே பட்டணத்தார் உருவங்களை வழிபட்டதும் பல பொய் கடவுட்களை வணங்கியதும் பவுலுக்கு எரிச்சலூட்டியது; இருந்தாலும் அவற்றைக் குறித்து அவர்களை சாடவோ கண்டனம் செய்யவோ இல்லை. (அப். 17:16) பல கடவுட்களை வணங்குவதில் அவர்களுக்கு இருந்த ஆர்வத்தையே சாதுரியத்தோடு முன்னுரையாக பயன்படுத்தி பவுல் சிறந்த விதத்தில் பேசினார்.—அப். 17:22-31.
4 தங்களுடைய மதத்தில் தீவிர ஈடுபாடுள்ள ஆட்களை நாமும் சந்திக்கலாம்; அவர்கள் அதை நம்மிடம் நேரடியாகவும் சொல்லலாம். அப்போது நாம் என்ன செய்ய வேண்டும்? நாம் சாதுரியத்தோடு நடந்துகொள்ள வேண்டும். அடித்துப் பேசுகிறவராகவோ சண்டை போடுகிறவராகவோ அல்லது குறைகூறுகிறவராகவோ இருக்கக் கூடாது. மாறாக, ஒத்துப்போகக்கூடிய விஷயங்களைக் கண்டுபிடித்து, கூடுமானால் அவற்றின் அடிப்படையிலேயே பேச வேண்டும். நமது செய்தியை ஏற்றுக்கொள்ளாதவர் தெரிவிக்கும் எல்லா ஆட்சேபணைகளுக்கும் வாக்குவாதம் செய்யவோ மறுப்பு தெரிவிக்கவோ வேண்டிய அவசியமில்லை.
5 நன்கு செவிகொடுப்பவராய் இருங்கள்: சாதுரியமாக இருப்பதற்கு இதுவும் அவசியம். எல்லாவற்றையும் நாமே பேசுவது எளிதாக இருக்கலாம், ஆனால் வீட்டுக்காரருடைய எண்ணங்களையும் கருத்துக்களையும் சொல்லும்படி சாதுரியமாக ஊக்குவிப்பதன் மூலம் அவர் என்ன நினைக்கிறார் என்பதை நாம் அறிந்து கொள்வோம். கேள்விகள் கேட்பது பயன்தரும், ஆனால் அக்கேள்விகள் வீட்டுக்காரரை தர்மசங்கடத்திற்குள்ளாக்கி விடாதவாறு நாம் கவனமாய் இருக்க வேண்டும். மாறாக, அவரை மனம் திறந்து பேச வைப்பதற்கு அந்தக் கேள்விகளைப் பயன்படுத்த வேண்டும்.
6 நாம் எல்லாரிடமும் வார்த்தையாலும் முகபாவனையாலும் தனிப்பட்ட அக்கறையையும் தயவையும் சிநேகத்தையும் வெளிக்காட்டினால் பெரும்பாலும் அநேகர் அதைக் கவனித்து, நம் செய்தியை காதுகொடுத்து கேட்பார்கள். “அவனவனுக்கு இன்னின்னபடி உத்தரவு சொல்ல வேண்டுமென்று நீங்கள் அறியும்படிக்கு, உங்கள் வசனம் எப்பொழுதும் கிருபை பொருந்தினதாயும் உப்பால் சாரமேறினதாயுமிருப்பதாக” என்ற பவுலின் ஆலோசனையை நினைவில் வையுங்கள்.—கொலோ. 4:6.