ஆன்மீக இலக்குகளை வையுங்கள்
1 நித்திய காலத்திற்கும் யெகோவாவை துதிப்பது எப்பேர்ப்பட்ட பாக்கியம்! இந்த இலக்கை அடைவதற்கு, இப்போதே சில ஆன்மீக இலக்குகளை வைத்து அவற்றை அடைய முயற்சி செய்வது உதவியாக இருக்கலாம். அவ்வாறு செய்வது நம் ஆற்றல்களை ஞானமாக பயன்படுத்த உதவும். (1 கொ. 9:26) நீங்கள் என்னென்ன நடைமுறையான இலக்குகளை வைக்கலாம்?
2 பைபிள் படிப்பு: ஒவ்வொரு சபை கூட்டத்துக்கும் தயாரிக்கிறீர்களா? அப்படியானால், படிக்கும்போது ஆராய்வதற்கும் தியானிப்பதற்கும் நேரத்தை ஒதுக்குகிறீர்களா? உதாரணமாக, வாராந்தர காவற்கோபுர படிப்புக்கும் சபை புத்தகப் படிப்புக்கும் தயாரிக்கும்போது, வெறுமனே பதில்களை கோடிடுகிறீர்களா அல்லது குறிப்பிடப்பட்டிருக்கும் வசனங்களை எடுத்துப் பார்த்து கொடுக்கப்பட்டிருக்கும் விளக்கங்களுக்கான காரணங்களையும் யோசித்துப் பார்க்கிறீர்களா? தேவ ராஜ்ய ஊழியப் பள்ளியில் ஒவ்வொரு வாரத்துக்கும் நியமிக்கப்பட்டிருக்கும் பைபிள் வாசிப்பு பகுதியிலிருந்து ஒருசில குறிப்புகளையாவது ஆராய்வதை உங்கள் இலக்காக வைக்க முடியுமா? இவ்வாறு ஆன்மீக ரீதியில் தோண்டியெடுப்பதற்கு நேரமும் முயற்சியும் அவசியம் என்றாலும் அபரிமிதமான பலன்கள் நிச்சயம்.—நீதி. 2:4, 5.
3 சபை கூட்டங்கள்: ஐந்து வாராந்தர சபை கூட்டங்களுக்கும் தவறாமல் போய்வருவது மற்றொரு இலக்கு. உடன் விசுவாசிகளுடன் கூட்டுறவு கொள்வதற்காக முன்னதாகவே கூட்டத்துக்கு வந்து தொடக்க பாட்டிலும் ஜெபத்திலும் கலந்துகொள்வது சபையில் நிலவும் மனப்பான்மையை மேம்படுத்துவதற்கு துணை புரியும். ஒவ்வொரு கூட்டத்திலும் குறிப்பு சொல்லவும், சொல்லும் குறிப்புகளில் முன்னேற்றம் காட்டவும் நாம் முயற்சி எடுக்கலாம். பாராவிலுள்ள ஒரு வசனம் அங்கு சிந்திக்கப்படும் விஷயத்துடன் எப்படி சம்பந்தப்பட்டுள்ளது அல்லது அந்த விஷயம் அன்றாட வாழ்க்கைக்கு எப்படி பொருந்துகிறது என நீங்கள் ஒருவேளை சொல்லலாம்.—எபி. 10:24, 25.
4 வெளி ஊழியம்: இலக்குகளை வைக்கையில் நம் ஊழியத்தில் அதிக முன்னேற்றம் காணலாம். ஒவ்வொரு மாதமும் குறிப்பிட்ட மணிநேரத்தை ஊழியத்தில் செலவிட வேண்டுமென்ற தனிப்பட்ட இலக்கை வைத்திருக்கிறீர்களா? இப்படி செய்வது சிலருக்கு பலனளிக்கிறது. அல்லது வீட்டுக்கு வீடு ஊழியத்தில் பைபிளை பயன்படுத்துவது, அதிக அர்த்தமுள்ள மறுசந்திப்புகளை செய்வது, ஒரு பைபிள் படிப்பை தொடங்க கடினமாக முயற்சி செய்வது, அல்லது பைபிள் படிப்புகளில் இன்னும் திறம்பட போதிப்பது போன்ற ஏதாவதொரு வழியில் ஊழியத்தில் முன்னேறலாமா?
5 பெற்றோரே, யெகோவாவின் சேவையில் உங்கள் பிள்ளைகள் இலக்குகளை வைக்கும்படி உற்சாகப்படுத்துகிறீர்களா? ஒரு பயனியராக அல்லது பெத்தேல் குடும்ப அங்கத்தினராக சேவை செய்வது யெகோவாவுக்கு ஆழ்ந்த போற்றுதலை காட்டுவதற்கு ஒரு சிறந்த வழி என்பதை அவர்கள் காண உதவுங்கள்.—பிர. 12:1.
6 நம் நடவடிக்கைகளை ஆராய்ந்து, ஆன்மீக இலக்குகளை வைத்து, அவற்றை அடைய முயலும்போது, நம் சேவையில் அதிக சந்தோஷத்தை காண்போம், மற்றவர்களையும் உற்சாகப்படுத்துவோம்.—ரோ. 1:11.