கேள்விப் பெட்டி
◼ பெத்தேல் வீடுகளையும் கிளை அலுவலகங்களையும் பார்க்க வரும்போது எப்படிப்பட்ட ஆடை அலங்காரம் அவசியம்?
பெத்தேல் வளாகத்தை சுற்றிப் பார்க்க வந்தாலும் சரி, பெத்தேல் குடும்ப அங்கத்தினர்களை பார்க்க வந்தாலும் சரி, “நம்முடைய உடை, தோற்றம், சிகை அலங்காரம், நடத்தை ஆகியவை ராஜ்ய மன்றத்தில் வணக்கத்திற்காகக் கூட்டங்களுக்கு வருகையில் நம்மிடம் எதிர்பார்க்கப்படுவதற்கு ஒத்ததாய் இருக்க வேண்டும்.” (om-TL 131) என்றாலும், கிளை அலுவலகங்களுக்கு வரும்போது, சில சகோதர சகோதரிகள் ஏனோதானோவென்று உடை உடுத்தி வருகிறார்கள். இந்த இடங்களுக்கு அப்படி வருவது தகுந்ததல்ல. யெகோவா தேவனின் ஊழியர்களுக்கு ஏற்ற கண்ணியத்தை வெளிக்காட்டும் அடக்கமான, முன்மாதிரியான, சீரான தோற்றம் நமக்கு அவசியம்.—1 தீ. 2:9, 10.
பெத்தேல் வீடுகளையும் கிளை அலுவலகங்களையும் பார்க்க வரும்போது இதற்கு இந்தளவு முக்கியத்துவம் கொடுக்க காரணம், சாட்சிகள் அல்லாதவர்கள் பலர் நம்மை கவனிக்கிறார்கள். அவர்கள் தாங்கள் பார்ப்பதை வைத்தே கடவுளுடைய மக்களையும் அவருடைய அமைப்பையும் எடை போடுவார்கள். தகுந்த ஆடை அலங்காரத்துக்கு கவனம் செலுத்துவதன் முக்கியத்துவத்தை பைபிள் படிப்பவர்களிடமும் இவ்வாறு பார்க்க வரும் மற்றவர்களிடமும் சொல்லி வைப்பது நல்லது. இதற்கு பெத்தேல் குடும்பத்தார் நன்றியுடன் இருப்பார்கள்.
கிறிஸ்தவ ஊழியர்களாக இருக்கும் நாம், எவ்விதத்திலும் நம் தோற்றம் இடறலுக்கு காரணமாக இராதபடி பார்த்துக் கொள்ள வேண்டும். (2 கொ. 6:3, 4) மாறாக, தகுந்த தோற்றத்தால் எப்போதும் ‘நம்முடைய இரட்சகராகிய தேவனுடைய உபதேசத்தை எல்லாவற்றிலும் அலங்கரித்து’ கொள்வோமாக.—தீத். 2:9.