ஏப்ரல் 2000-த்தை சிறந்த மாதமாக்க முடியுமா?
1 ஏப்ரல் 19, புதன்கிழமை மாலை, நம் ஊழிய ஆண்டின் முக்கியமான சமயமாக திகழும். அன்று, சூரியன் தூங்கச் சென்று கொண்டிருக்கும் மாலைப் பொழுதில், உலகம் முழுவதிலுமுள்ள எல்லா யெகோவாவின் சாட்சிகளின் சபைகளும், குழுக்களும் கிறிஸ்துவின் மரண நினைவு ஆசரிப்பை அனுசரிக்கும். நாம் உலகின் எந்த பகுதியில் வாழ்ந்தாலும் சரி, இயேசு கிறிஸ்துவின் பலியை நினைவுகூருவது அந்த வருடத்தின் ஓர் முக்கிய நிகழ்ச்சியாக அமையும். யெகோவாவின் சாட்சிகளுடைய 2000 காலண்டரில் நினைவு ஆசரிப்பிற்கான நாள் குறித்து காட்டப்பட்டுள்ளது.
2 யெகோவா தம் மகனுடைய பலியின் மூலம் தகுதியற்ற தயவை வெளிப்படுத்தியுள்ளார். அதற்கு நாம் முழு இருதயத்துடன் போற்றுதலை தெரிவிக்க வேண்டும். அவ்வாறு செய்வதற்கு வரக்கூடிய ஏப்ரல் மாதம் ஓர் அருமையான வாய்ப்பை அளிக்கிறது. எவ்வாறு? அப்போஸ்தலனாகிய பவுல் இவ்வாறு எழுதினார்: “கிறிஸ்துவினுடைய அன்பு எங்களை நெருக்கி ஏவுகிறது: ஏனென்றால், எல்லாருக்காகவும் ஒருவரே மரித்திருக்க, எல்லாரும் மரித்தார்கள் என்றும்; பிழைத்திருக்கிறவர்கள் இனித் தங்களுக்கென்று பிழைத்திராமல், தங்களுக்காக மரித்து எழுந்தவருக்கென்று பிழைத்திருக்கும்படி, அவர் எல்லாருக்காகவும் மரித்தாரென்றும் நிதானிக்கிறோம்.” (2 கொ. 5:14, 15) ஆம், நாம் நமக்காக அல்ல, ஆனால் நமக்காக மரித்தவருக்காகவே வாழ்கிறோம் என்பதை ஏப்ரல் மாதத்தின்போது வெளிக்காட்டலாம். ராஜ்யத்தின் ஊழியர்களாக இந்த மாதத்தை சிறந்த மாதமாக்கலாம்!
3 ஏப்ரலில் துணைப் பயனியர் செய்யுங்கள்: “அவைகளில் ஒன்றையுங்குறித்துக் கவலைப்படேன்; என் பிராணனையும் நான் அருமையாக எண்ணேன்; என் ஓட்டத்தைச் சந்தோஷத்தோடே முடிக்கவும், தேவனுடைய கிருபையின் சுவிசேஷத்தைப் பிரசங்கம்பண்ணும்படிக்கு நான் கர்த்தராகிய இயேசுவினிடத்தில் பெற்ற ஊழியத்தை நிறைவேற்றவுமே விரும்புகிறேன்” என்று சொன்ன பவுல் நமக்கு ஒரு அருமையான முன்மாதிரியை வைக்கிறார் அல்லவா. (அப். 20:24) யெகோவா தேவனைப் பற்றி முழுமையான சாட்சி கொடுக்கும் இந்த சிலாக்கியத்தை நாமும் பெற்றிருக்கிறோம். அப்படியானால், துணைப் பயனியர் ஏற்பாட்டின் மூலம் ஏப்ரல் மாதத்தை ஒரு சிறந்த மாதமாக்கலாம்!
4 ஏப்ரல் 2000-த்தில் 5 சனி ஞாயிறுகள் இருப்பதால், அநேகர் பயனியர் செய்வதற்கான அருமையான மாதமாக இது அமைகிறது. ஏப்ரல் 1998-ல் 2,170 பேர் என்ற துணைப் பயனியர் உச்சநிலையை எட்டினோம். அதாவது, மொத்த பிரஸ்தாபிகளில் 12 சதவீதத்தினர் துணைப் பயனியர் ஊழியம் செய்தனர். அதன் பிறகு ஒரே வருடத்தில், ஆகஸ்ட் 1999-ல் அறிக்கை செய்திருந்த மொத்த பிரஸ்தாபிகளின் எண்ணிக்கை 17-க்கும் அதிக சதவீதம் அதிகரித்திருந்தது. அப்படியானால் முன்பிருந்த துணைப் பயனியர் உச்சநிலையை மிஞ்ச அநேக வாய்ப்புகள் உள்ளதை இது காட்டுகிறது. அத்துடன், தேவையான மணிநேரம் இப்போது குறைக்கப்பட்டிருக்கிறது. இது, சபையிலுள்ள மற்ற அநேகரும் இந்த சேவையை செய்வதற்கு வாய்ப்பளிக்கிறது. ஏப்ரல் மாதத்தின்போது தன்னால் துணைப் பயனியர் ஊழியம் செய்ய முடியுமா என ஒவ்வொரு முழுக்காட்டப்பட்ட பிரஸ்தாபியும் ஜெப சிந்தையுடன் யோசித்துப் பார்க்க வேண்டும்.
5 2000 காலண்டரில் உள்ள ஏப்ரல் மாதப் பகுதியை பயன்படுத்தி அடுத்த மாதத்திற்கு இப்போதே அட்டவணையிடுங்கள். வெளி ஊழியத்தில் எந்தெந்த நாட்களில் உங்களால் கலந்துகொள்ள முடியும் என தீர்மானியுங்கள். அடுத்த மாதம் பிரசங்க வேலைக்கு உங்களால் எவ்வளவு நேரத்தை அர்ப்பணிக்க முடியும் என்பதை கூட்டிப்பாருங்கள். ஏற்பாடு செய்யப்பட்ட பிரசங்கிப்பானாலும், சந்தர்ப்ப சாட்சியானாலும் அவற்றில் உங்களால் எவ்வளவு நேரம் செலவிட முடியும் என நினைக்கிறீர்களோ அதையும் சேர்த்துக்கொள்ளுங்கள். அதன் மொத்த எண்ணிக்கை, துணைப் பயனியர் ஊழியத்திற்கு தேவையான 50 மணிநேரத்தை எட்டுகிறதா? ஒருவேளை அந்த மணிநேரத்தை எட்ட முடியவில்லை என்றால், துணைப் பயனியர் செய்வதற்காக உங்கள் அட்டவணையில் ஏதாவது மாற்றங்களை செய்து நேரத்தை வாங்க முடியுமா என்று சிந்தியுங்கள். ஒரு மாதத்திற்குரிய 50 மணிநேரத்தை எட்டுவதற்கு நாம் ஒவ்வொரு நாளும் சராசரியாக ஒரு மணிநேரம் 40 நிமிடங்களை பிரசங்கிப்பில் செலவழிக்க வேண்டும்.
6 இப்போது ஒழுங்கான பயனியருக்கு தேவையான மணிநேரமும் குறைக்கப்பட்டுள்ளது, முழுநேர ஊழியத்தில் சேர்ந்துகொள்ள நீங்கள் திட்டமிட்டுக் கொண்டிருக்கிறீர்களா? ஏப்ரல் மாதத்தின்போது பகல் வெளிச்சம் வெகுநேரம் இருப்பதால், நீங்கள் துவங்குவதற்கு இதுவே சரியான மாதமாக அமையும்! ஒழுங்கான பயனியருக்கு தேவையான 70 மணிநேரத்தை எட்ட முடியும் என்பதைக் குறித்து நீங்கள் நிச்சயமாய் இல்லையென்றால், ஏன் ஏப்ரல் மாதத்தின்போது 70 மணிநேரத்தை இலக்காக வைத்து துணைப் பயனியர் செய்யக்கூடாது? உங்களால் செய்ய முடியும் என தெரிந்தவுடன், எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் ஒழுங்கான பயனியர்களின் அணியில் நீங்களும் சேர்ந்துகொள்ள விண்ணப்பிக்கலாம்.—நம் ஊழியம் புத்தகத்தில், பக்கங்கள் 113-14-ஐ பார்க்கவும்.
7 நற்செய்தியின் பிரசங்கியாக முழுமையாக பங்குகொள்ளுங்கள்: நம் தனிப்பட்ட சூழ்நிலைகளுக்கு ஏற்ப யெகோவாவின் சேவையில் நம்மால் என்னவெல்லாம் செய்ய முடியுமோ அவற்றை முழு இருதயத்தோடு செய்யும்படி, பிரஸ்தாபிகளாக இருந்தாலும்சரி பயனியர்களாக இருந்தாலும்சரி நம் எல்லோரையும் கடவுள் மீதும் உடன் மனிதர்கள் மீதும் நமக்குள்ள உண்மையான அன்பு தூண்டுவிக்கிறது. (லூக். 10:27) “பிரயாசப்படுகிறோம், நிந்தையும் அடைகிறோம்; ஏனெனில் எல்லா மனுஷருக்கும், விசேஷமாக விசுவாசிகளுக்கும் இரட்சகராகிய ஜீவனுள்ள தேவன்மேல் நம்பிக்கை வைத்திருக்கிறோம்” என்பதை நாம் இந்த விதத்தில் காட்டுவோம். (1 தீ. 4:10) அதனால், நாம் ஏப்ரல் மாதத்தின்போது ராஜ்ய வேலையில் எல்லோரும் முழுமையான பங்கை, 100 சதவீத பங்கை கொண்டிருக்க எதிர்பார்க்கலாம்.
8 இயேசுவின் உந்துவிப்பை நாம் மறந்துவிடாதிருப்போமாக: “அறுப்பு மிகுதி, வேலையாட்களோ கொஞ்சம்; ஆதலால், அறுப்புக்கு எஜமான் தமது அறுப்புக்கு வேலையாட்களை அனுப்பும்படி அவரை வேண்டிக்கொள்ளுங்கள்.” இதை சொன்னவுடன் இயேசு, தம்முடைய 12 அப்போஸ்தலர்களை கூட்டிச்சேர்த்து பிரசங்கிக்க அனுப்பினார். (மத். 9:37, 38; 10:1, 5, 7) சுமார் ஒரு வருடம் கழித்து, அந்த 12 சீஷர்கள் பிரசங்கிப்பு வேலையில் நன்கு பயிற்சி பெற்ற பிறகு, இயேசு “வேறே எழுபதுபேரை நியமித்து” அவர்களுக்கும் அதே விஷயத்தை போதித்து அனுப்பினார்: “அறுப்புமிகுதி, வேலையாட்களோ கொஞ்சம்; ஆகையால் அறுப்புக்கு எஜமான் தமது அறுப்புக்கு வேலையாட்களை அனுப்பும்படி அவரை வேண்டிக்கொள்ளுங்கள்.” (லூக். 10:1, 2) அந்த ஜெபங்களுக்கு கடவுள் எவ்வாறு பதிலளித்தார் என பைபிள் புத்தகமாகிய அப்போஸ்தலர் சொல்கிறது. பொ.ச. 33, பெந்தெகொஸ்தே நாளிற்குள் சீஷர்களின் எண்ணிக்கை சுமார் 120-ஆக உயர்ந்தது. அதைத் தொடர்ந்து அந்த எண்ணிக்கை 3,000 மற்றும் 5,000 என்ற உச்சநிலையை எட்டியது. (அப். 1:15; 2:41; 4:4) அதன் பிறகு “சீஷருடைய தொகை . . . பெருகிற்று.” (அப். 6:7) அதேபோல, இக்காலத்திலும், இன்னும் அதிக ராஜ்ய பிரசங்கிகளை அனுப்புமாறு நாம் எஜமானிடம் கெஞ்சிக் கேட்டுக்கொண்டிருக்க வேண்டும்! நம் ஜெபங்களுக்கு இசைவாக, சபையிலுள்ள எல்லா பிரஸ்தாபிகளும் ஒவ்வொரு மாதமும் ஊழியத்தில் பங்கேற்க திட்டமான ஏற்பாடுகளை செய்ய வேண்டும்.
9 2000 காலண்டரில் ஏப்ரல் மாதத்தை கவனமாக பாருங்கள். அந்த மாதத்தின் முதல் இருநாட்கள் சனி ஞாயிறாக இருக்கின்றன. அதனால், அந்த நாட்களின்போது ஊழியத்தில் கலந்துகொண்டு, இப்படியாக அந்த மாதத்தைத் துவக்க உங்களால் திட்டமிட முடியுமா? அந்த மாதத்தின்போது உங்கள் சபை புத்தகப் படிப்பு தொகுதியோடு சேர்ந்து எல்லா “பத்திரிகை நாள்”லும் ஊழியத்திற்கு சென்று உங்கள் ஆதரவை காட்ட முடியுமா? ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமையும் ஒன்று அல்லது அதற்கும் அதிகமான மணிநேரத்தை ஊழியத்தில் செலவழிப்பதைப் பற்றி என்ன? மாலை நேரத்தில் வெளிச்சம் வெகு நேரம் இருப்பது நமக்கு இன்னும் சாதகமாக அமைகிறது. மாலை நேர சாட்சிகொடுத்தலில் பங்கேற்க ஏற்பாடுகளை செய்ய முடியுமா? அத்துடன் நீங்கள் வேலை செய்யும் இடத்தில், பள்ளியில் அல்லது மற்ற அன்றாட காரியங்களில் ஈடுபடும்போதும் சந்தர்ப்ப சாட்சி கொடுப்பதற்கான எல்லா வாய்ப்புகளையும் சரியாக பயன்படுத்திக்கொள்ள மறவாதீர்கள். என்றெல்லாம் உங்களால் ஊழியத்தில் சிறிது நேரத்தை செலவு செய்ய முடியுமோ அவற்றை குறியுங்கள். அந்த மாதத்தில் உங்கள் ஊழிய மணிநேரத்தை பதிவு செய்ய அல்லது கணக்கில் வைக்க காலண்டரை பயன்படுத்துங்கள்.
10 தகுதிபெற்ற, முழுக்காட்டப்படாத பிரஸ்தாபியாக சேவிப்பதற்கு மூப்பர்களால் ஆங்கீகரிக்கப்பட்ட நபர்களுக்கு இந்த ஏப்ரல் மாதம் சிறந்த சமயமாக அமையும். நீங்கள் ஒரு பைபிள் படிப்பு எடுக்கிறீர்கள்; அவர் தன்னை நற்செய்தியின் பிரசங்கியாக்கும்படி சபையின் நடத்தும் கண்காணியை அணுகி கேட்கும் அளவிற்கு முன்னேறியிருக்கிறாரா? உங்கள் பிள்ளைகள் முழுக்காட்டுதல் பெறாதவர்களாக இருந்தால், அவர்களுடைய ஆவிக்குரிய முன்னேற்றத்தைப் பற்றி மூப்பர்களிடம் பேசியிருக்கிறீர்களா? அவர்கள் பிரசங்கிப்பைத் துவங்குவதற்கு இதைவிட வேறு எந்த சமயம் பொருத்தமாக இருக்கக்கூடும்?—நம் ஊழியம் புத்தகத்தில், பக்கங்கள் 97-100-ஐ பார்க்கவும்.
11 ஏப்ரல் 2000-த்தை சிறந்த மாதமாக்க நாம் முயற்சிக்கும்போது, நாம் எல்லோரும் ஊழியத்தில் கலந்துகொள்ள வேண்டும். அத்துடன் அந்த மாதத்தின் முடிவில் ஊழிய அறிக்கையை தவறாமல் போட வேண்டும். (ஒப்பிடுக: மாற்கு 6:30.) புதிதாக வெளி ஊழியத்தில் கலந்துகொள்ளும் முழுக்காட்டப்படாத பிரஸ்தாபிகளை சரியாக ஊழிய அறிக்கையை போடும்படி உற்சாகப்படுத்த வேண்டும். நம்முடைய பாகத்தை சரியாக செய்வதன் மூலம், ஏப்ரல் மாத ஊழிய அறிக்கையிலும், சாட்சிகொடுப்பதன் மூலம் யெகோவாவிற்கு ஏறெடுக்கப்படும் துதிக்குரிய மகா சத்தத்திலும் அதிகமான பங்கை கொண்டிருக்கலாம்.
12 நினைவு ஆசரிப்பிற்கு மற்றவர்களையும் அழைத்துவாருங்கள்: 2000-மாவது ஆண்டில் கிறிஸ்துவின் மரண நினைவு ஆசரிப்பிற்கு கலந்துகொண்டவர்களின் எண்ணிக்கையில் புதிய உச்சநிலையை பார்ப்பது எவ்வளவு கிளர்ச்சியூட்டுவதாய் இருக்கும்! யெகோவா தேவனும் இயேசு கிறிஸ்துவும் நம்மேல் ஈடிணையற்ற அன்பை பொழிந்துள்ளனர். இதற்கு போற்றுதலை தெரிவிக்கும்வகையில் இதுவரை இல்லாத அளவிற்கு திரளான மக்கள் ஒன்றுகூடி வந்துள்ளனர் என அது அர்த்தப்படுத்தும்! (யோவா. 3:16; 15:13) அந்த நினைவாசரிப்பில் நீங்களும் உங்கள் குடும்பமும் ஆஜராவதை தடை செய்யாதபடி என்னவெல்லாம் செய்ய வேண்டுமோ அவற்றை முன்கூட்டியே செய்யுங்கள்.
13 மற்றவர்களை நினைவு ஆசரிப்பிற்கு அழைப்பதற்கு இதுவே சரியான நேரம். நீங்கள் யாரையெல்லாம் சந்தித்து அழைக்கப்போகிறீர்கள் என்று ஒரு பட்டியல் போடுங்கள். முன்பு பைபிள் படித்து வந்தவர்கள், இப்போது படித்துக் கொண்டிருப்பவர்கள் மற்றும் உங்களுடைய எல்லா மறுசந்திப்புகளையும் அந்த பட்டியலில் சேர்த்துக்கொள்ளுங்கள். அத்துடன் நீங்கள் வேலை செய்யும் இடத்தில், பள்ளியில், அயலகத்தில் உங்களுக்கு அறிமுகமானவர்கள் அல்லது உங்களுடன் வியாபாரம் செய்பவர்கள் போன்ற எல்லோரையும் அந்த பட்டியலில் சேர்த்துக்கொள்ளுங்கள். அதுமட்டுமல்ல உங்களுக்கு பரிச்சயமான மற்றவர்களையும் உங்கள் உறவினர்களையும் மறந்துவிடாதீர்கள். அந்த பட்டியலை போட்டு முடித்த பிறகு, அதிலுள்ள ஒவ்வொருவரையும் தனிப்பட்ட விதத்தில் சந்தித்து உள்ளார்வத்தோடு நினைவு ஆசரிப்புக்கு அழைக்கத் துவங்குங்கள். நினைவாசரிப்பு எங்கே, எப்போது நடைபெறும் என்பதை தெளிவாக சொல்லுங்கள். ஏப்ரல் 19-ம் தேதிக்கு இன்னும் சிறிது நாட்களே இருப்பதால், உங்கள் பட்டியலில் இருப்பவர்களுக்கு நீங்களே நேரில் சென்றோ அல்லது தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டோ நிகழ்ச்சியைப் பற்றி நினைப்பூட்டுங்கள். முடிந்தால், அன்று மாலை அவர்களை நீங்களே நினைவு ஆசரிப்பிற்கு கூட்டிக்கொண்டு போவதாக சொல்லுங்கள்.
14 சொஸைட்டியிலிருந்து ஏற்கெனவே வந்துள்ள வழிநடத்துதலுக்கு இசைய, மூப்பர் குழு தங்கள் பிராந்தியத்திலுள்ள எல்லா செயலற்ற பிரஸ்தாபிகளையும் சென்று சந்தித்து நினைவு ஆசரிப்பிற்கு வரும்படி உற்சாகப்படுத்த விசேஷ முயற்சி எடுப்பர். (மத். 18:12-14) சொஸைட்டியிடமிருந்து பிப்ரவரி 2, 1999 என்று தேதியிடப்பட்டு வந்த கடிதத்தை மூப்பர்கள் மறுபார்வை செய்ய வேண்டும். சபையின் செயலர் எல்லா செயலற்ற பிரஸ்தாபிகளையும் பட்டியலிடுவார், அப்படிப்பட்டவர்களை சந்தித்து நினைவு ஆசரிப்பிற்கு அழைப்பதற்காக ஊழியக் கண்காணி மூப்பர்களை நியமிப்பார். ஒருவேளை இப்படிப்பட்ட உற்சாகமூட்டும் மேய்ப்பு சந்திப்பிற்கு பிறகு, இந்த செயலற்ற பிரஸ்தாபிகள் வெளி ஊழியத்தில் அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே செயல்படும் பிரஸ்தாபிகளாக ஆவதற்கு உதவலாம். வெளி ஊழியத்தில் ஒரு திறமைவாய்ந்த பிரஸ்தாபியுடன் ஊழியம் செய்யும்படி அழைப்பது அவரை உற்சாகப்படுத்தும்.
15 ஏப்ரலில் நல்ல ஆதரவிற்கு உற்சாகப்படுத்துங்கள்! ஏப்ரல் 2000-த்தை ஒரு சிறந்த மாதமாக்குவதற்கு எல்லா மூப்பர்களும், உதவி ஊழியர்களும், குடும்பத் தலைவர்களும் கிரமமாக செயல்படுவது அவசியம். எல்லாவற்றையும் ஒழுங்கமைப்பதிலும், முன்னின்று நடத்துவதிலும் மூப்பர்கள் ஞானமாக செயல்படுவர். (எபி. 13:7) வார நாட்களின்போதும் வார இறுதி நாட்களின்போதும் வெளி ஊழியத்திற்கான கூட்டங்களை நடத்த நடைமுறையான ஏற்பாடுகளை செய்ய வேண்டும். மதிய வேலையிலும் மாலை வேலையிலும் கூடுதலான ஊழியத்திற்கான கூட்டங்களை நடத்த ஏற்பாடுகளை செய்யலாம். இவ்வாறு ஏப்ரலின்போது திட்டமிடப்பட்டிருப்பவற்றின் முழு அட்டவணையும் அறிவிப்பு பலகையில் ஒட்டப்பட வேண்டும். ஊழியத்திற்காக திட்டமிடப்பட்டிருக்கும் ஒவ்வொரு கூட்டத்தையும் கையாள யாராவது நியமிக்கப்பட வேண்டும். ஊழியத்திற்காக கூடும் ஒவ்வொரு குழுவிற்கும் போதுமான அளவு பிராந்தியம் கொடுக்கப்பட வேண்டும்.
16 ஏப்ரல் மாதத்தின்போது காவற்கோபுரம், விழித்தெழு! பத்திரிகைகள் அளிக்கப்படும். பைபிள் படிப்பை துவங்கும் நோக்கத்துடன், ஆர்வமுள்ள எல்லோருக்கும் தேவைப்படுத்துகிறார் சிற்றேட்டை அளிக்க வேண்டும். ஆகவே, தேவையான அளவு பத்திரிகைகள் மற்றும் சிற்றேடுகளை அளிக்க வேண்டும்.
17 மாதத்தின் முடிவில், எல்லா புத்தகப்படிப்பு நடத்துனர்களும் அவர்களுடைய உதவியாளர்களும் அந்த மாதம் முடிந்தவுடன் ஊழிய அறிக்கையை போடும்படி தங்கள் புத்தகப் படிப்பிலுள்ள எல்லோரையும் உற்சாகப்படுத்த வேண்டும். ஏப்ரல் 30-ம் தேதி ஞாயிற்றுக்கிழமையின்போதே இதை செய்யலாம். அதன் பிறகு, செயலர் அறிக்கைகளை சரிபார்க்கும்போது இன்னமும் தங்கள் அறிக்கையை சில பிரஸ்தாபிகள் கொடுக்கவில்லை என்பது தெரியவரலாம். அவ்வாறு தெரியவந்தால், சபையின் ஊழிய அறிக்கை சொஸைட்டிக்கு போய் சேர வேண்டிய தேதியாகிய மே 6-ம் தேதிக்குள்ளாகவே அவர்களுடைய அறிக்கையை போடும்படி நினைப்பூட்டலாம். அவர் அந்த தனிப்பட்ட பிரஸ்தாபிகளை தொடர்புகொள்ள புத்தகப் படிப்பு நடத்துனர்களை உதவி செய்யும்படி கேட்கலாம்.
18 கடவுளுடைய மக்களுக்கு நினைவு ஆசரிப்பே அந்த வருடத்தின் முக்கிய காலம். யெகோவாவின் சேவையிலுள்ள நம் எல்லோருக்கும் அது மிகவும் சுறுசுறுப்பான காலமாக இருக்க வேண்டும். நற்செய்தியின் பிரசங்கிகளாக நம்மால் செய்ய முடிந்த எல்லாவற்றையும் செய்ய வேண்டும். துணைப் பயனியர் செய்ய முடிந்தவர்கள் அதை செய்ய வேண்டும். அத்துடன் கிறிஸ்துவின் மரண நினைவு ஆசரிப்பிற்கு மற்றவர்களை கூட்டிவருவதில் ஊக்கமாக உழைக்க வேண்டும். இப்படிச் செய்தால், அப்போது அது மிகவும் சறுசுறுப்பான காலமாக இருக்கும். ஏப்ரல் 2000-த்தை சிறந்த மாதமாக்குவதற்கு நாம் கடும்முயற்சி எடுப்பதோடு யெகோவாவுடைய அபரிமிதமான ஆசீர்வாதத்திற்காக உருக்கமாய் ஜெபிப்போமாக. இவை எல்லாம் கடவுளின் மகிமைக்கும் துதிக்குமே!—எபி. 13:15.
[பக்கம் 3-ன் சிறு குறிப்பு]
துணைப் பயனியர்கள்
இதுவரை காணா உச்சநிலை: 2,170
(ஏப்ரல் 1998)
[பக்கம் 4-ன் பெட்டி]
மொத்த பிரஸ்தாபிகள்
இதுவரை காணா உச்சநிலை: 21,212
(ஆகஸ்ட் 1999)
[பக்கம் 5-ன் பெட்டி]
நினைவு ஆசரிப்புக்கு ஆஜரானோர்
இதுவரை காணா உச்சநிலை: 47,081
(1999)