‘நான் என்ன செய்ய வேண்டும்?’
1 ‘நான் என்ன செய்ய வேண்டும்?’ இதுவே, 1870-களில் சார்ல்ஸ் டேஸ் ரஸலால் ஒன்று சேர்க்கப்பட்டிருந்த சிறிய பைபிள் படிப்பு தொகுதியிலிருந்த அங்கத்தினர்களுடைய மனங்களில் அடிக்கடி எழுந்த கேள்வியாக இருந்திருக்கும். அந்த பைபிள் மாணாக்கர்கள் கடவுளுடைய சித்தத்தைப் பற்றி அதிகமான புரிந்துகொள்ளுதலை படிப்படியாக பெற ஆரம்பித்தனர். மற்றவர்களும் கடவுளுடைய சித்தத்தை தெரிந்துகொள்ள தங்களால் என்ன செய்ய முடியும் என நிச்சயம் அப்போது சிந்தித்திருப்பர். அவர்கள் பெற்றுக்கொண்டிருந்த அந்த பைபிள் அறிவை, உலகம் முழுவதிலுமுள்ள எல்லா பகுதிகளுக்கும் எடுத்துச் செல்வது என்பது அவ்வளவு சாதாரண விஷயமாக இல்லை. அது ஒரு பிரமாண்டமான வேலையை உட்படுத்தியது.
2 சந்தோஷத்திற்குரிய விஷயம் என்னவெனில், இந்த சவாலை அவர்கள் திறம்பட்ட விதத்தில் சமாளித்தனர். எவ்வாறு? அவர்கள் ஒவ்வொருவரும் அவர்களுடைய பங்கில் பார்ப்பதற்கு கொஞ்சமாக தோன்றிய வேலையையே செய்தனர். ஆனால் இன்றோ, யெகோவாவின் சாட்சிகள் உலகம் முழுவதிலும் நன்கு அறியப்பட்டவர்களாக இருக்கின்றனர். ஏறக்குறைய 60 லட்சம் ராஜ்ய பிரசங்கிப்பாளர்களை கொண்ட ஓர் உலகளாவிய அமைப்பாக இன்று இது இருக்கிறது. இவர்கள் 234 தேசங்களிலும் தீவுகளிலுமுள்ள சுமார் 90,000 சபைகளில் சேவை செய்து வருகின்றனர்!—ஏசா. 60:22.
3 முழு ஒத்துழைப்பை கொடுங்கள்: கடைசி நாட்களில் செய்யப்படும் என்று இயேசு முன்னுரைத்த இந்த பிரமாண்டமான வேலையில் நாம் ஒவ்வொருவரும் சிறு பங்கையாவது கொண்டிருப்பது மிக முக்கியம். (மாற். 13:10) நிச்சயமாகவே, இன்று குறைந்த எண்ணிக்கையிலிருக்கும் மூப்பர்கள் மேலேயே இந்த முழு பொறுப்பையும் சுமத்திவிட முடியாது. அல்லது இந்த பொறுப்பு பயனியர்களின் தலையிலேயே விழுந்துவிடுவதுமில்லை. உண்மை என்னவெனில், ஒவ்வொரு ஒப்புக்கொடுத்த கிறிஸ்தவனும் ஒரு முக்கியமான பாகத்தை செய்ய வேண்டியிருக்கிறது. நாம் எல்லோரும் பிரசங்கிப்பு வேலையின் ஏதாவது ஒரு அம்சத்தில் எப்போதும் பங்குகொள்ளலாம். (1 தீ. 1:12) நாம் இதை எந்தளவுக்கு செய்கிறோமோ, அந்தளவுக்கு இது நமக்கும் மற்றவர்களுக்கும் அதிக பலன்களை கொடுக்கும்.—1 தீ. 4:16.
4 அத்துடன், நாம் ஒவ்வொருவரும் நம்முடைய கிறிஸ்தவ சகோதரத்துவத்திற்கு மற்ற குறிப்பிடத்தக்க வழிகளிலும் முழு ஒத்துழைப்பை அளிக்கலாம். கிறிஸ்தவ கூட்டங்களில் தவறாமல் ஆஜராவது, அதோடு உற்சாகத்துடன் பங்குகொள்வதன் மூலமாகவும் அதற்கு நம்முடைய ஒத்துழைப்பை கொடுக்கலாம். (சங். 122:1, 8, 9) ஒழுக்கரீதியில் சபையை சுத்தமாக காத்துக்கொள்ள நம்முடைய பாகத்தில் சிறந்ததை செய்யலாம். நம்முடைய வசதிக்கு தக்கவாறு இந்த உலகளாவிய வேலைக்கு பண உதவி அளித்து ஆதரிக்கலாம். ராஜ்ய மன்றத்தை சுத்தம் செய்வதில் நாம் பங்கு கொள்ளலாம். புதியவர்கள், இளைஞர்கள், முதியவர்கள் போன்ற எல்லோருக்கும் பாரபட்சமின்றி உதவி செய்வதன் மூலம், சபையில் அன்பு, ஐக்கியம் எனும் அனலான ஆவியை முன்னேற்றுவிக்கலாம்.—கொலோ. 3:12, 14
5 ஆக, ‘நான் என்ன செய்ய வேண்டும்?’ என ஒருவேளை நீங்களும் கேட்கலாம்! உங்களுடைய தனிப்பட்ட முயற்சிகள் ஒருவேளை மிகக் குறைவாக தோன்றினாலும், உங்களுடைய பாகத்தை சரியாக செய்யும்போது, பலமான, சுறுசுறுப்பான, ஆரோக்கியமான சபைக்கு நீங்கள் அதிகத்தை செய்கிறீர்கள். ஆக, யெகோவாவின் நாமத்தை மகிமைப்படுத்தும் விஷயத்தில், நம் அனைவருக்கும் முக்கியமான பங்கு உண்டு.