நாம் நற்செய்தியை பிரசங்கிக்கிறோம்
1 “நற்காரியங்களைச் சுவிசேஷமாய்” எடுத்துச் செல்ல நாம் பெற்றிருக்கும் இந்த சிலாக்கியம் எவ்வளவு அருமையானது! (ரோ. 10:15) பெருங்குழப்பத்திலும் நம்பிக்கை இழந்த நிலையிலும் மூழ்கியுள்ள இன்றைய மக்களுக்கு, புத்துயிரூட்டும் செய்தி நம்மிடம் இருக்கிறது. நாம் அவர்களுக்காக ‘நலம் தரும் செய்தியை’ கொண்டுவந்திருப்பதை உணர்ந்துகொள்ள நாம் எவ்வாறு உதவலாம்?—ஏசா. 52:7, பொ.மொ.
2 சாதகமான செய்தியை தயாரியுங்கள்: நல்ல விஷயங்களில் நாம் கவனம் செலுத்தினால் பிரசங்கிப்பு வேலையில் நம்முடைய உரையாடல் நல்ல பாதிப்பை கொண்டிருக்கும். ஆக, நம்முடைய அளிப்பை நாம் தயாரிக்கும்போதும் நாம் பயன்படுத்தப்போகும் பிரசுரத்தை பார்வையிடும்போதும், நற்செய்தியின் நல்ல அல்லது சாதகமான அம்சங்களை வலியுறுத்திக் காட்டுவதற்கு தயாரிக்க வேண்டும். பைபிள் சார்ந்த நம்முடைய நம்பிக்கைகளை தன்னம்பிக்கையுடனும், ஆர்வத்துடனும் போதிக்க வேண்டும். அப்போதுதான், உற்சாகமளிக்கும் அநேக நல்ல பலன்களை நாம் எதிர்பார்க்கலாம்.—நீதி. 25:11.
3 நாளுக்குநாள் சீரழிந்துகொண்டிருக்கும் இன்றைய உலக நிலைமைகளால் மக்கள் மிகவும் பாதிக்கப்படுகின்றனர். தாங்கள் எவ்வாறெல்லாம் பாதிக்கப்பட்டிருக்கின்றனர் என்பதை அவர்கள் சொல்லும்போது, நாம் அவர்களுக்காக அனுதாபப்படுகிறோம். அதே சமயத்தில், இந்த பிரச்சினைகளுக்கெல்லாம் உண்மையான பரிகாரம் கடவுளுடைய ராஜ்யமே என்பதை அவர்களுக்கு சுட்டிக்காட்ட வேண்டும். சீக்கிரத்தில் வரவிருக்கும் யெகோவாவின் “நீதியைச் சரிக்கட்டும் நாளை” குறித்து நாம் பேசினாலும், இந்த செய்தி எவ்வாறு “பணிவானவர்களுக்கு நற்செய்தி” என்பதை அவர்களுக்கு காண்பிக்க வேண்டும். (ஏசா. 61:1, 2 NW) யெகோவா செய்யும் எல்லா காரியங்களும் கடைசியில் மிகச் சிறந்த பலன்களை அளிக்கும்; அதோடு, நம்மை மகிழ்ச்சியின் உச்சிக்கே அழைத்துச் செல்லும் என்று நமக்கு செவிகொடுப்போருக்கு உறுதியளிக்கலாம்.
4 சத்தியத்தை உண்மையான சந்தோஷத்துடன் அளியுங்கள்: புன்னகை தவழும் முகத்துடனும், நம்பிக்கையான தொனியிலும் நாம் பேச வேண்டும். அதை கவனிக்கும் மக்கள் பெரும்பாலும் நமக்கு செவிகொடுப்பது நிச்சயம். நம்பிக்கையான மனநிலையோடு பேசும்போது, நாம் “நம்பிக்கையிலே சந்தோஷமாயிரு”க்கிறோம் என்பதை கேட்போர் உணர்ந்துகொள்வர். (ரோ. 12:12) அப்போது அவர்கள் நற்செய்திக்கு சாதகமாக பிரதிபலிக்க தூண்டப்படுவர். ஆகவே, நம்முடைய ஊழியத்தில், எப்போதும் சாதகமான, சந்தோஷமான மனநிலையை வெளிக்காட்ட உண்மையிலேயே அநேக நல்ல காரணங்கள் உள்ளன.
5 நற்செய்தியின் ஊழியர்களாக, அதைப் பற்றி வெறுமனே தகவல்களைக் கொடுப்பதைப் பார்க்கிலும், நாம் அதிகத்தை செய்கிறோம். இப்போதும் எதிர்காலத்திலும் மேம்பட்ட வாழ்க்கைக்குரிய உறுதியான நம்பிக்கையை கேட்போருக்கு நம்முடைய பிரசங்கம் கொடுக்கிறது. (1 தீ. 4:8) நாம் ஒவ்வொருவரையும் அணுகும்போது, நமக்கிருக்கும் சாதகமான மனோபாவம் நம் பேச்சில் வெளிப்படும். அது மக்கள் நற்செய்தியை ஏற்றுக்கொள்ள உதவி செய்யும். நாம் என்ன பேசுகிறோம், எப்படி பேசுகிறோம் என்பதைக் குறித்து கவனமாயிருப்பது, நேர்மை இருதயமுள்ள ஆட்கள், நாம் பிரசங்கிக்கும் அருமையான நற்செய்திக்கு சாதகமாக பிரதிபலிக்க உதவும்!