மறுசந்திப்புகள்—தடைகளை மேற்கொள்ளுங்கள்
1 நற்செய்தியின் ஊழியர்களாகிய நாம் சீஷர்களை உருவாக்க வேண்டும்; இது நமக்கு கொடுக்கப்பட்ட கட்டளை. (மத். 28:19, 20) மறுசந்திப்புகளுக்காக திட்டமிடுவதும் இதில் உட்படுகிறது. ஆனால், மறுசந்திப்புகளை நன்கு திறம்பட செய்வது மிகப் பெரிய சவாலாக இருக்கலாம். இதை மேற்கொள்ள அதிக முயற்சி தேவை. ராஜ்ய நம்பிக்கையை மற்றவர்களிடம் சொல்ல நேரம் ஒதுக்க வேண்டும். இதற்காக நம்முடைய சௌகரியங்கள் சிலவற்றை விட்டுக்கொடுக்க வேண்டியிருக்கலாம். நல்மனமுள்ள ஆட்களின் ஆவிக்குரிய தேவைகளைப் பூர்த்தி செய்ய மறுசந்திப்புகள் நமக்கு வாய்ப்பு அளிக்கின்றன.
2 அக்கறை காண்பிக்கும் அனைவரையும் மறுபடியும் சந்தியுங்கள்: பத்திரிகைகளை வாங்காவிட்டாலும் ராஜ்ய செய்திக்கு அக்கறை காண்பிக்கும் அனைவரையும் மறுசந்திப்பு செய்யுங்கள். ஆனால், நம்முடைய செய்தியில் அவர்களுடைய அக்கறையை எவ்வாறு தூண்டலாம்? கடவுளுடைய வார்த்தையாகிய பைபிளை உபயோகிப்பதன் மூலமே! ராஜ்ய செய்தியில் மற்றவர்களுடைய அக்கறையை எப்படி வளர்ப்பது என்பதை இயேசுவும் அவருடைய சீஷர்களும் காண்பித்தனர். பைபிளிலுள்ள ஒரு குறிப்பிட்ட விஷயத்தைப் பற்றி மக்களோடு பேசுவதன் மூலம் அதைச் செய்தனர்.—மாற். 10:17-21; அப். 2:37-41.
3 ஒரு பைபிள் படிப்பை ஆரம்பிக்க வேண்டும் என்பதே மறுசந்திப்பின் நோக்கம். வீட்டு பைபிள் படிப்பு எப்படி நடத்தப்படுகிறது என்பதை வீட்டுக்காரருக்கு நாம் நடித்துக் காட்டலாம். நேர்மையான ஆட்களை கண்டுபிடிக்கவும், போதிக்கவும் உங்களுக்கு உதவும்படி யெகோவாவிடம் ஜெபியுங்கள்; உங்கள் ஜெபத்திற்கு யெகோவா நிச்சயமாய் பதிலளிப்பார். எனவே, மறுசந்திப்புகள் செய்வதற்குமுன், அவற்றை பைபிள் படிப்புகளாக்குவதற்கு யெகோவாவின் உதவியை நீங்கள் நாடுங்கள். மறுசந்திப்பு செய்யப்படும் எல்லாருமே பைபிள் படிப்பை ஏற்றுக்கொள்வார்கள் என்று எதிர்பார்க்க முடியாது. அக்கறை காண்பிக்கும் ஆட்களின் இருதயத்தைத் தூண்டும்படி யெகோவாவிடம் மன்றாடலாம்.
4 துண்டுப்பிரதிகளை சிறந்த முறையில் உபயோகித்தல்: மறுசந்திப்புகளை பைபிள் படிப்புகளாக்குவதற்கு துண்டுப்பிரதிகளை சிறந்த முறையில் உபயோகிக்கலாம். குறிப்பாக, பிரசுரங்களைப் பெற்றுக்கொள்ளாதவர்களுக்கு இவற்றை கொடுக்கலாம். துண்டுப்பிரதியின் முன்பக்கத்திலுள்ள படத்தை விளக்கினாலே போதும், அவர்களோடு உரையாடலை ஆரம்பித்துவிடலாம். அநேகர் இவ்வாறு செய்திருக்கின்றனர். துண்டுப்பிரதியிலிருந்து ஒரு பத்தியை வீட்டுக்காரரிடம் வாசித்துக் காட்டுங்கள். ஏதாவது கேள்வி இடையில் வந்தால், வாசிப்பதை நிறுத்திவிட்டு அவருடைய கருத்தைக் கேளுங்கள். கொடுக்கப்பட்டுள்ள வசனங்களை வாசித்து, அவற்றை பொருத்திக் காண்பியுங்கள். இப்பொழுது, பைபிள் படிப்பிற்காக உபயோகிக்கும் புத்தகத்திற்கு கவனத்தைத் திருப்புங்கள்.
5 தடைகளை வெற்றிகரமாக மேற்கொள்ளுதல்: பிரஸ்தாபிகளில் சிலர் வீட்டுக்காரரிடம், “உங்களுக்கு வேற எதாவது கேள்வியிருந்தா, இந்தப் பத்திரிகைக்கு பின்னாலிருக்கிற அட்ரஸுக்கு எழுதுங்க” என்று சொல்வதாக பிரயாணக் கண்காணிகள் அறிவிக்கின்றனர். மேலே சொல்லப்பட்ட ஆலோசனைகளை நினைவில் வையுங்கள்; மார்ச் 1997 நம் ராஜ்ய ஊழியத்தில், “தைரியத்தை ஒன்றுதிரட்டி மறுசந்திப்புகள் செய்யுங்கள்” என்ற தலைப்பில் உட்சேர்க்கை உள்ளது; அதிலுள்ள குறிப்புகளை மறுபடியும் கவனமாக அலசி ஆராயுங்கள். இவற்றை பயன்படுத்தி மறுசந்திப்புகள் செய்வதில் வரும் தடைகளை நாம் திறம்பட சமாளிக்கலாம்.