யெகோவாவின் சாட்சிகள் நடத்தவிருக்கும் சர்வதேச மாநாடுகள்
1998-ல் சர்வதேச மாநாடுகளை நடத்த யெகோவாவின் சாட்சிகளின் ஆளும்குழு திட்டமிட்டுக் கொண்டிருக்கிறது. அக்டோபர் 5, 1996, சனிக்கிழமை அன்று ஜெர்சி நகர மாநாட்டு மன்றத்தில் நடைபெற்ற உவாட்ச் டவர் பைபிள் அண்ட் டிராக்ட் சொஸைட்டி ஆஃப் பென்ஸில்வேனியாவின் வருடாந்தரக் கூட்டத்தில் செய்யப்பட்ட இந்த அறிவிப்புக்கு வெகு உற்சாகமான வரவேற்பு கிடைத்தது.
எப்போதும் நடைபெறும் மாவட்ட மாநாடுகளோடுகூட 1998-ன் மத்திபத்தில் வட அமெரிக்காவில் பல சர்வதேச மாநாடுகள் நடத்தப்படவிருக்கின்றன. உலகில் பல பாகங்களிலுமுள்ள நூறாயிரக்கணக்கான சாட்சிகளை இப்படிப்பட்ட கூட்டங்கள் ஒன்றிணைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. எத்தனை அநேக நாடுகளைப் பிரதிநிதித்துவம் செய்யும்படி அனுமதிக்க முடியுமோ அத்தனை நாடுகளையும் அனுமதிப்பதற்காக வேண்டி உவாட்ச் டவர் சங்கத்தின் 100-க்கும் அதிகமான கிளை அலுவலகங்களின் பிரதிநிதிகள் வட அமெரிக்காவின் தேர்ந்தெடுக்கப்படும் சர்வதேச மாநாட்டு நகரத்திற்கு செல்லும்படி பிரித்து அனுப்பப்படுவார்கள்.
வட அமெரிக்காவுக்கு செல்ல எல்லாருக்கும் விருப்பம் இருந்தாலும் அவ்வாறு செல்லமுடியாது என்பது தெரிந்த விஷயமே. எனினும், தங்களுடைய நாட்டிற்கு அருகில் நடக்கவிருக்கும் சர்வதேச மாநாட்டில் கலந்துகொள்வது ஆயிரக்கணக்கானவர்களுக்கு சாத்தியமானதாய் இருக்கலாம். ஐரோப்பாவில், இரண்டு அல்லது மூன்று நாடுகளிலும் மற்றவை ஆசியா, ஆப்பிரிக்கா, கரிபியன், தென் பசுபிக், லத்தீன் அமெரிக்காவிலும் சர்வதேச மாநாடுகள் நடத்தப்படுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
தக்க சமயத்தில், சங்கத்தின் கிளை அலுவலகங்கள், தங்கள் பிராந்தியங்களிலுள்ள சபைகள் எந்தெந்த மாநாட்டு நகரத்துக்கு அல்லது நகரங்களுக்கு நியமிக்கப்படுகின்றன என்பதைப் பற்றிய தகவலைத் தெரிவிக்கும். மாநாட்டு தேதிகளைப் பற்றியதும், பிரதிநிதிகளைத் தெரிந்தெடுப்பது பற்றியதுமான தகவல் அறிவிக்கப்படும். பிரதிநிதிகளாக தெரிந்தெடுக்கப்பட விண்ணப்பிக்க விரும்புவோர் இந்த விசேஷ நிகழ்ச்சிகளை எதிர்நோக்கியவர்களாக தங்களுடைய பணத்தில் கொஞ்சத்தை இப்போது முதலே சேமித்து வைக்க விரும்பலாம்.
1998-க்கான இந்த சர்வதேச கூட்டங்களில் ஏற்பாடு செய்து அளிக்கப்படவிருப்பவற்றை உலகமுழுவதிலுமுள்ள யெகோவாவின் சாட்சிகள் அனைவரும் எதிர்நோக்கி இருக்கலாம். எல்லா நாடுகளிலும் நடைபெற இருக்கும் மாவட்ட மாநாடுகளும் இதேபோன்ற நிகழ்ச்சிநிரலைக் கொண்டிருக்கும்.