ஒரு தேவையிருப்பதை நீங்கள் காண்கிறீர்களா?
1 யெகோவா உதவியளிப்பவராகவும் அடைக்கலமானவராகவும் விவரிக்கப்படுகிறார். தேவைப்படும் சமயத்தில் நாம் அவரை அணுகலாம் என்பதையும் அவர் நமக்கு உதவிசெய்வார் என்பதையும் அறிந்திருக்கிறோம். (சங். 18:2; 46:1) தேவையைக் காண்கையில் மற்றவர்களுக்கு உதவியளிப்பதன் மூலம் இந்த ஒற்றுணர்வின் பண்பை நாம் பின்பற்றலாம்.
2 ஓர் ஆள் யாராவது ஒருவருக்கு உதவிசெய்ய ஒரு விசேஷ முயற்சி செய்யும்படி எது அவரைத் தூண்டுகிறது? செய்யவேண்டிய அன்பான, மனிதாபிமானமுள்ள காரியம் என்பதாக பெரும்பாலான மக்கள் இதை உணருகின்றனர். நிச்சயமாகவே கடவுளுடைய வார்த்தை அதை உற்சாகப்படுத்துகிறது. (ரோ. 15:1) ‘அவனவன் தனக்கானவைகளையல்ல, பிறருக்கானவைகளையும் நோக்குவானாக,’ என்பதாக பவுல் நம்மைத் தூண்டினார்.—பிலி. 2:4.
3 செய்வதில் நாமனைவரும் சந்தோஷத்தைக் கண்டடையக்கூடிய ஒன்றாக இது இருக்கிறது. (அப். 20:35) சகோதரர்களுக்கான ‘காரியங்களை உண்மையாய் விசாரிக்கிறதில்’ ஒரு முன்மாதிரியாக தீமோத்தேயுவை பவுல் தனிப்படுத்திக் காண்பிக்கிறார். (பிலி. 2:20) இதுபோன்ற குணத்தையுடைய அநேக இளைஞரை நாம் இன்று சபையில் கொண்டிருப்பது நல்லது. ஆனால் நாம் இளைஞராக இருந்தாலும் சரி முதியோராக இருந்தாலும் சரி, ஒரு தேவையிருப்பதைக் காண்போமாகில் நாம் செய்யக்கூடிய காரியங்கள் இருக்கின்றன.
4 மேம்பட்ட கவனம் செலுத்த வேண்டிய தேவைகள் சிலருக்கு இருக்கின்றன என்பதை நீங்கள் எப்பொழுதாவது உணர்ந்திருக்கிறீர்களா? ஒரு சகோதரரோ சகோதரியோ மருத்துவமனையில் இருந்திருக்கலாம், சிலர் சந்திக்கச் சென்றிருக்கலாம்; அல்லது சிலர் ஊனமுற்றோராக ஆகியிருக்கலாம். அவர்களுக்குப் பயனுள்ள வேலைகளை அல்லது வீட்டுவேலைகளைச் செய்ய ஒருவருமில்லை. யெகோவாவை சேவிப்பவர்களை, ஒருவருக்கொருவர் உண்மையுடன் கவனித்துக்கொள்கிற ஒரு குடும்ப அங்கத்தினர்களாக இயேசு கருதுகிறார். (மாற். 3:33-35) செம்மறியாடுகள் வெள்ளாடுகள் பற்றிய உவமையில், ராஜாவின் வலதுகரத்தில் இருக்கக்கூடிய தயவை அனுபவிப்பவர்கள் ராஜாவின் சகோதரர்களுக்கு செய்த அவர்களுடைய உதவியின் காரணமாக அவ்வாறு இருக்கிறார்கள் என்பதாக இயேசு காட்டினார்.—மத். 25:40.
5 நான் எவ்வாறு உதவிசெய்ய முடியும்? உண்மையான தேவையிருக்கும்போது உதவியளிப்பதற்கு என்ன செய்யலாம்? ஏதாவது முறையில் உதவிசெய்வதற்கு நாம் முதற்படியெடுக்க முடியுமா? ஒருவேளை ஊக்கம் தேவைப்படக்கூடிய முதியோர்கள் இருக்கலாம், ஆனால் அவர்களுக்கு உதவியளிக்க நெருங்கிய தோழர்கள் இல்லாமலிருக்கலாம். உதவி தேவைப்படுகிற இளைஞர் இருக்கலாம். அநேக பிள்ளைகளையுடைய அக்கறைகாட்டுகிற புதிய குடும்பத்தினர், அவர்களுக்குப் படிப்பு நடத்துகிற பிரஸ்தாபியானவர் இல்லாமல் இருக்கும்போது இராஜ்ய மன்றத்திற்கு வந்திருக்கலாம். பிள்ளைகளைக் கவனிப்பதில் அவர்களுக்கு யாராவது ஒருவர் மனமுவந்து உதவிசெய்வதை அவர்கள் போற்றலாம்.
6 சத்தியத்திற்கும் யெகோவாவின் அமைப்புக்குமான அன்பில் வளரும்போது, சபையிலுள்ள மற்றவர்களுக்கான போற்றுதலிலும் அக்கறையிலும்கூட வளருவோம். இதன் சம்பந்தமாக விரிவாகும்படி பவுல் நம்மை உற்சாகப்படுத்தினார். (2 கொ. 6:11-13, NW) நாம் உண்மையிலேயே இயேசுவின் சீஷர்கள் என்பதை வெளிப்படுத்திக் காண்பிப்பதற்கு பிரதான வழி, ஒருவருக்கொருவர் நாம் அன்பு காட்டுவதே என்பதை இயேசு வலியுறுத்திக் காண்பித்தார்.—யோவா. 13:35.
7 ஆகவே, ஒரு தேவையிருப்பதைக் காண்கையில், முதற்படியெடுப்பதற்கும் நம்மால் முடிந்த எவ்வழியிலும் உதவி செய்வதற்கும் நம்முடைய சகோதரர்கள் மற்றும் சபைக்கான உண்மையான அன்பு நம்மைத் தூண்டவேண்டும். (கலா. 6:9, 10) மற்றவர்களுக்கான இந்த அக்கறை நெருக்கமான அன்பு மற்றும் ஐக்கியத்தின் கட்டுகளில் நம்மை ஒன்றாகச் சேர்க்கிறது. (1 கொ. 10:24) இந்த முறையில், சபையிலுள்ள ஒரு தேவையை நிரப்புவதில் உதவி செய்வதற்கு நம்முடைய பங்கை நாம் செய்கிறோம்.