ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் பத்திரிகைகளை அளியுங்கள்
1 நூறுக்கும் மேற்ப்பட்ட ஆண்டுகளாக, காவற்கோபுரம் பத்திரிகையானது ராஜ்ய சத்திய நோக்கங்களை ஆதரித்துப் பேசி வந்திருக்கிறது. அது கடவுளுடைய வார்த்தையை ஒரு பட்டயமாக திறம்பட்ட விதத்தில் உபயோகித்து தவறான பொய்மத போதனைகளை ஊடுருவி வெட்டுகிறது. அதன் துணை பத்திரிகையான விழித்தெழு!-வும்கூட சத்தியத்தின் சார்பாக வாதாடுகிறது. நீதியின்பேரில் மனச்சாய்வுள்ள ஆட்களுக்குச் சங்கத்தின் மற்ற பிரசுரங்களில் காணப்படும் ஆழமான வேதப்பூர்வ தகவல்களின்பேரில் அவர்களுடைய ஆர்வத்தை அது தூண்டக்கூடும். இன்னும் அதிகமான ஆட்களின் கைகளில் இந்தப் பத்திரிகைகளைக் கிடைக்கச் செய்வதற்கு நாம் என்ன செய்யலாம்?
2 முதல்படியானது பத்திரிகைகளில் உள்ள தகவல்களை அறிந்துகொள்வதாகும். அப்படியானால் அதை பெற்றவுடனேயே படிக்க வேண்டும். பின்பு அந்தக் கட்டுரைகளைப் பற்றி சபையிலுள்ள மற்றவர்களிடம் பேச வேண்டும். இது பத்திரிகைகளை நாம் மற்றவர்களிடம் வைராக்கியத்துடன் அளிப்பதற்கும் அவற்றின் மதிப்பைப் பற்றிய ஒரு நம்பிக்கையான மனநிலையைக் காத்து வருவதற்கும் உதவிசெய்யும்.
3 அடுத்தபடியானது மற்றவர்களிடம் பத்திரிகைகளை அளிப்பதற்காக ஒவ்வொரு வாரமும் நேரத்தை ஒதுக்கிவைப்பதாகும். உங்களுடைய வேலைகளின் வழக்கமான அட்டவணையில் இதை ஒரு பாகமாக ஆக்கிக்கொள்ளுங்கள். பத்திரிகைகளை விநியோகிப்பதற்கான மற்ற வாய்ப்புகளுக்காக நீங்கள் விழிப்புடனிருக்கிறீர்களா?
ஜனங்களிடம் பேசுங்கள்
4 வீட்டுக்குவீடு பத்திரிகை ஊழியத்தில் ஈடுபடும்போது அநேக ஆட்கள் வீட்டிலிருப்பதில்லை. ஆனால் எங்கே ஆட்களை நீங்கள் காண்கிறீர்களோ அங்கே நீங்கள் பேசலாம். தெருக்களில் நடந்துபோகும்போது ஜனங்களை அணுகுங்கள். கார்களில் உட்கார்ந்திருப்பவர்களிடம், வீட்டின் முற்றத்திலிருப்பவர்களிடம், பேரூந்துக்காக காத்துக்கொண்டிருக்கையில் மற்றும் அதுபோன்ற சூழ்நிலைமைகளில் பேசுங்கள். திட்டவட்டமான, அக்கறையைத் தூண்டும் ஒரு கட்டுரையைக் காண்பியுங்கள். அவர்களுடைய அக்கறையைத் தூண்டும் சிறந்த புகைப்படங்களையும் படச்சித்தரிப்புகளையும் பயன்படுத்துங்கள். அனலும் சிநேகப்பான்மையும் நம்பிக்கையான முறையிலும் ஆட்களிடம் பேசுங்கள். பத்திரிகைகளை வாசிக்கும்போது நீங்கள் திரட்டிய செய்திகளிலிருந்து திட்டவட்டமான குறிப்புகளை உண்மை மனதோடு அறிமுகப்படுத்துங்கள்.
மற்ற வாய்ப்புகள்
5 இந்த ஆலோசனைகள் வியாபார பிராந்தியங்களில் ஊழியம் செய்யும்போதும்கூட பயனுள்ளவைகள். வியாபாரிகள் தங்கள் வாடிக்கையாளருடன் தொடர்பு கொண்டிராத சமயங்களை அனுகூலப்படுத்திக்கொள்ளுங்கள். வழக்கமாக ஈடுபடும் வீட்டுக்கு வீடு வேலையை காட்டிலும் வியாபார பிராந்தியங்களில் பத்திரிகைகளை விநியோகிப்பதை அநேக பிரஸ்தாபிகள் சுலபமானதாக காண்கின்றனர்.
6 பத்திரிகை மார்க்கம் ஒன்றை ஏற்படுத்திக்கொள்ள நீங்கள் முயன்றிருக்கிறீர்களா? வீடுகளிலோ அல்லது வியாபார ஸ்தலங்களிலோ நீங்கள் பத்திரிகையை விநியோகிக்கும்போது, அடுத்த இதழ்களோடு இரண்டு வாரங்களில் நீங்கள் அவர்களை மீண்டும் சந்திக்க சந்தோஷப்படுவீர்கள் என்று தெரியப்படுத்துங்கள். நீங்களே நேரடியாக சந்தித்து பத்திரிகை வழங்கும் இந்த முறையை எத்தனைபேர் விரும்புகின்றனர் என்பதைக் காண்பதில் ஆச்சரியமடையக்கூடும். அந்த ஆளுடன் பேசுவதற்கோ அல்லது பிரசுரங்களை கொடுப்பதற்கோ நீங்கள் திரும்ப சந்திக்கும் ஒவ்வொரு முறையும் ஒரு மறுசந்திப்பை நீங்கள் அறிக்கை செய்யலாம்.
7 பத்திரிகை விநியோகிப்பதற்காக நீங்கள் மற்ற சந்தர்ப்பங்களையும் நாடலாம். அதாவது மாலை ஊழியம், உறவினர்களிடம் பேசுவது, மறுசந்திப்பு செய்வது, பயணம் செய்கையில், அல்லது கடைக்குப் போகையில் பேசுவது போன்றவை. இந்த எல்லா ஆலோசனைகளையும் பின்பற்றுவதானது அநேகர் நம்முடைய பைபிள் பிரசுரங்களின் தொடர்ச்சியான வாசகர்களாகவும் இறுதியாக யெகோவாவை துதிப்பவர்களாகவும் ஆவதற்கு ஒரு வழிவகையாக இருக்கக்கூடும்.