உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • w07 1/1 பக். 4-7
  • வெற்றி பெற உங்களால் முடியும்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • வெற்றி பெற உங்களால் முடியும்
  • காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2007
  • துணை தலைப்புகள்
  • இதே தகவல்
  • “துன்மார்க்கருடைய ஆலோசனை”
  • உலகம் உங்கள் வாழ்க்கையைச் செதுக்க அனுமதிக்காதீர்கள்
  • கடவுளுடைய ஆலோசனையைப் பின்பற்றினால் வெற்றி நிச்சயம்
  • நீங்கள் எவ்வாறு வெற்றி பெறலாம்
  • வாழ்வில் வெற்றி பெற...
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2012
  • உங்கள் வாழ்க்கைப் பாதையில் வெற்றிநடை போடுங்கள்!
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1999
  • “யெகோவாவின் பிரமாணத்தில்” இன்பம் காண்கிறீர்களா?
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2004
  • நாம் வெற்றி பெறவே அவர் விரும்புகிறார்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2010
மேலும் பார்க்க
காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2007
w07 1/1 பக். 4-7

வெற்றி பெற உங்களால் முடியும்

தாய்தந்தையர் தங்கள் பிள்ளைகளை கண்ணும்கருத்துமாக வளர்க்கிறார்கள்; அவர்கள் வாழ்க்கையில் வெற்றிபெற வேண்டுமென விரும்புகிறார்கள்; அதைப்போலவே நம்முடைய பரலோகத் தந்தையும் நம்மை அக்கறையுடன் கவனிக்கிறார், நாம் வெற்றி சிறக்க வேண்டுமெனவும் விரும்புகிறார். வெற்றி, தோல்விகளைக் குறித்து எக்கச்சக்கமான தகவலைத் தருவதன்மூலம் நம்மேல் அவருக்கிருக்கும் கனிவான அக்கறையைக் காட்டுகிறார். உண்மையில், கடவுள் சொல்வதை கவனித்துக் கேட்கும் ஒருவரைப்பற்றி விவரிக்கையில், பைபிள் இந்த நம்பிக்கையான கூற்றைத் தெரிவிக்கிறது: “[அவர்] தாம் செய்வதனைத்திலும் வெற்றி பெறுவார்.”​—⁠சங்கீதம் 1:3, பொது மொழிப்பெயர்ப்பு.

கடவுள் சொல்வதைக் கேட்டு நடக்கும் ஒருவருடைய வாழ்க்கை இப்படியிருந்தாலும், இன்று வெற்றிகரமான, மகிழ்ச்சிகரமான, திருப்திகரமான வாழ்க்கை ஏன் அநேகருக்கு எட்டாக்கனியாகவே இருக்கிறது? இந்தச் சங்கீதத்தை விலாவாரியாக ஆராய்ந்தால், நம் கேள்விக்கு பதில் கிடைக்கும்; அதோடு, நாம் எவ்வாறு வாழ்க்கையில் வெற்றி பெற முடியும் என்பதையும் தெரிந்துகொள்வோம்.

“துன்மார்க்கருடைய ஆலோசனை”

“துன்மார்க்கருடைய ஆலோசனையில்” நடப்பதால் வரும் ஆபத்துக்களைக் குறித்து சங்கீதக்காரன் எச்சரிக்கிறார். (சங்கீதம் 1:1) பிரதான ‘துன்மார்க்கன்’ பிசாசாகிய சாத்தானே. (மத்தேயு 6:13, NW) அவன் “இந்த உலகத்தின் அதிபதி” என்றும் இந்த “உலகமுழுவதும் பொல்லாங்கனுக்குள் கிடக்கிறதென்றும்” பைபிள் நமக்குச் சொல்கிறது. (யோவான் 16:11; 1 யோவான் 5:19) எனவே, இந்த உலகிலிருந்து கிடைக்கிற பெரும்பாலான ஆலோசனைகள் இந்தப் பொல்லாங்கனுடைய எண்ணங்களையே பிரதிபலிக்கின்றன என்பதில் ஆச்சரியமில்லை.

துன்மார்க்கர் எத்தகைய அறிவுரையைத் தருகின்றனர்? பொதுவாகவே, துன்மார்க்கர் தேவனை அசட்டை பண்ணுகிறார்கள். (சங்கீதம் 10:13) கடவுளை அசட்டை செய்யும் அல்லது அவமதிக்கும் விதமாக அவர்கள் கொடுக்கும் ஆலோசனை எங்கும் எதிலும் இருக்கிறது. இன்றைய சமுதாயம், “உடல் ஆசை, இச்சை நிறைந்த பார்வை, செல்வச் செருக்கு” ஆகியவற்றையே ஊக்குவிக்கிறது. (1 யோவான் 2:16, பொ.மொ.) எல்லா வசதிவாய்ப்புகளுடன், “வாழ்க்கையை நன்கு அனுபவி” என்ற தத்துவத்தை மீடியாக்கள் நம்மீது திணிக்கின்றன. உலகெங்கும் உள்ள கம்பெனிகள் தங்களுடைய பொருள்கள் மக்களுக்குத் தேவையோ இல்லையோ எப்படியாவது அவற்றை அவர்களுடைய தலையில் கட்டிவிட வேண்டுமென்பதற்காக வருடத்திற்கு 25 லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமான பணத்தை விளம்பரங்களில் வாரியிறைக்கின்றன. இத்தகைய விளம்பரங்கள் வசீகர வலையை விரித்து பொருள்களை வாங்கிக் குவிக்க மக்களை கவர்ந்திழுத்திருக்கின்றன. அதோடு, வெற்றியைக் குறித்ததில் அவர்களுடைய கண்ணோட்டத்தையும் மாற்றிவிட்டிருக்கின்றன.

அதன் விளைவாக, பல வருடங்களுக்கு முன்பு தங்களுக்குக் கிடைக்காதா என்று ஏங்கிய பொருள்களை இப்பொழுது அநேகர் சொந்தமாக வைத்திருக்கிறார்கள்; இருந்தாலும்கூட, பொருள்களை வாங்கிக் குவிப்பதில் மக்களுக்குத் தீரா மோகம் இன்னும் இருக்கத்தான் செய்கிறது. உங்களிடம் இந்தப் பொருள்களெல்லாம் இல்லையென்றால், நீங்கள் சந்தோஷமாகவோ வெற்றிகரமாகவோ வாழ முடியாது என்ற எண்ணம் வந்துவிடுகிறது. ஆனால், இது மிகத் தவறான எண்ணம், அதோடு, இப்படிப்பட்ட எண்ணம் “தந்தையிடமிருந்து வருவன அல்ல. அவை உலகிலிருந்தே வருபவை.”​—⁠1 யோவான் 2:16, பொ.மொ.

நம்மை நிஜமாகவே வெற்றி பெற்றவராக ஆக்குவது எது என்பதை நம் படைப்பாளர் அறிந்திருக்கிறார். அவர் தரும் ஆலோசனை ‘துன்மார்க்கருடைய ஆலோசனையிலிருந்து’ மிகவும் வேறுபடுகிறது. எனவே, வெற்றிப் பாதை என இந்த உலகம் காட்டுகிற பாதையில் சென்றுகொண்டு அதே சமயத்தில் கடவுளுடைய அங்கீகாரத்தையும் பெற முயல்வது, ஒரே சமயத்தில் இரு சாலைகளில் நடக்க முயலுவதைப்போல உள்ளது. அது கண்டிப்பாக முடியாத காரியம். அதனால்தான், பைபிள் இவ்வாறு எச்சரிக்கிறது: “இந்த உலகின் தராதரங்களுக்கு ஏற்றாற்போல் நடந்துகொள்ளாதீர்கள்.”​—⁠ரோமர் 12:2, டுடேஸ் இங்லிஷ் வர்ஷன்.

உலகம் உங்கள் வாழ்க்கையைச் செதுக்க அனுமதிக்காதீர்கள்

சாத்தானுடைய ஆதிக்கத்திலுள்ள இவ்வுலகம் நம் நலனில் அக்கறை இருப்பதுபோல காட்டிக்கொள்ள முயலுகிறது. இருந்தாலும், நாம் கவனமாக இருக்க வேண்டும். சாத்தான் தன்னுடைய சுயநல விருப்பங்களுக்காகவே முதல் மனுஷியாகிய ஏவாளை ஏமாற்றினான் என்பதை மறந்துவிடாதீர்கள். அதன் பிறகு, அவளைக் கொண்டே ஆதாமையும் பாவம் செய்யத் தூண்டினான். இன்றும் தவறான தகவல்களைப் பரப்புவதற்கு மனிதர்களையே சாத்தான் பயன்படுத்துகிறான்.

உதாரணமாக, கடந்த கட்டுரையில் குறிப்பிடப்பட்ட டேவிட், வேலை நேரம்போக மீதிநேரமும்கூட ஆபிஸே கதி என இருக்க வேண்டியிருந்தது, அதோடு அடிக்கடி பிஸினஸ் டூர் செல்ல வேண்டியிருந்தது. “திங்கட்கிழமை அதிகாலை கிளம்பிச் சென்றால், வியாழக்கிழமை சாயங்காலம்தான் திரும்பி வருவேன்” என்று டேவிட் சொன்னார். உலகில் வெற்றி பெற்ற நபராக திகழ்வதற்கு, இத்தகைய தியாகங்களைச் செய்தே ஆக வேண்டுமென்பதுபோல், அவருடைய நல்ல நண்பர்களும், குடும்ப அங்கத்தினர்களும், சகாக்களும் நினைத்தார்கள்; அதனால், “குடும்பத்துக்காக இதெல்லாம் செய்” என்று அவரிடம் சொன்னார்கள். இன்னும் சில வருடங்களில் முன்னுக்கு வந்துவிடுவாய், அதுவரை இப்படி ஓடியாடி வேலை செய்தால் போதும் என்றெல்லாம் அவர்கள் நியாயப்படுத்தினார்கள். டேவிட் அதை இவ்வாறு விளக்குகிறார்: “நான் கைநிறைய சம்பாதித்தால், என் குடும்பத்தை நன்கு கவனித்துக் கொள்ளலாம், நல்ல நிலைக்கு வந்துவிடலாம் என்றெல்லாம் அவர்கள் என்னிடம் நியாயப்படுத்திப் பேசினார்கள். வீட்டில் மனைவி மக்களுடன் இருப்பதற்கு நேரம் கிடைக்காவிட்டாலும், என் குடும்பத்துக்காகத்தான் நான் நிறைய செய்கிறேன் என என் நண்பர்கள் என்னை நம்பவைத்தார்கள்.” டேவிட்டைப் போன்ற அநேகர், தங்களுடைய அன்புக்குரியவர்களுக்கு எதெல்லாம் தேவை என அவர்கள் நினைக்கிறார்களோ அதையெல்லாம் தருவதற்காக இராப்பகலாய் உழைக்கிறார்கள். ஆனால், இப்படிப்பட்ட அறிவுரையை கேட்டு நடப்பது உண்மையிலேயே வெற்றிக்கு வழிவகுக்குமா? ஒரு குடும்பத்துக்கு உண்மையிலேயே தேவைப்படுவது எது?

ஒருசமயம் பிஸினஸ் டூர் சென்றிருந்தபோது, தன் குடும்பத்துக்கு என்ன தேவை என்பதை டேவிட் அறிந்துகொண்டார். “என் மகள் ஏன்ஜலிக்காவுடன் போனில் பேசிக் கொண்டிருந்தேன், அப்போது அவள், ‘ஏன் டாடி, நீங்க எங்கக்கூட வீட்டில இருக்கிறதேயில்ல?’ என்று சொன்னாள். அதைக் கேட்டதும் நான் அப்படியே நொந்து போயிட்டேன்” என்று டேவிட் சொன்னார். அவருடைய மகள் அப்படிச் சொன்னது, வேலையை ராஜினாமா செய்ய வேண்டுமென்ற அவருடைய விருப்பத்தை வலுப்படுத்தியது. தன் குடும்பத்தாருக்கு உண்மையிலேயே எது தேவை என்பதை உணர்ந்த டேவிட் அதைக் கொடுக்கத் தீர்மானித்தார்; அவர்களோடு இருக்கவும், நேரம் செலவழிக்கவும், அவர்களைக் கவனித்துக் கொள்ளவும் தீர்மானித்தார்.

கடவுளுடைய ஆலோசனையைப் பின்பற்றினால் வெற்றி நிச்சயம்

இன்றைய உலகில் பரவலாக இருக்கிற இத்தகைய தவறான ஆலோசனைகளை நாம் எப்படி ஒதுக்கித் தள்ளலாம்? ‘கர்த்தருடைய வேதத்தில் பிரியமாயிருந்து, இரவும் பகலும் அவருடைய வேதத்தில் தியானமாயிருக்கிற மனுஷனே’ வெற்றிபெற்றவனாக, சந்தோஷமுள்ளவனாக இருப்பான் என்று சங்கீதக்காரன் சொல்கிறார்.​—⁠சங்கீதம் 1:⁠2.

இஸ்ரவேல் தேசத்தின் தலைவராக யோசுவாவை நியமித்தபோது அவரிடம், “இரவும் பகலும் அதைத் [கடவுளுடைய வார்த்தையை] தியானித்துக் கொண்டிருப்பாயாக” என்று கடவுள் சொன்னார். ஆம், கடவுளுடைய வார்த்தையை வாசித்து, தியானிப்பது மிகவும் அவசியமானதாக இருந்தது. ஆனால், “இதில் எழுதியிருக்கிறவைகளின்படியெல்லாம் நீ செய்யக் கவனமாயிரு” என்பதற்கும் யோசுவா கீழ்ப்படிய வேண்டியிருந்தது. உண்மைதான், பைபிளை வாசித்தவுடனேயே வெற்றி உங்களைத் தேடி வந்துவிடாது. நீங்கள் வாசிப்பவற்றைக் கடைப்பிடிக்க வேண்டும். “அப்பொழுது நீ உன் வழியை வாய்க்கப்பண்ணுவாய், அப்பொழுது புத்திமானாயும் நடந்துகொள்ளுவாய்” என்று யோசுவாவிடம் கடவுள் சொன்னார்.​—⁠யோசுவா 1:8

மலர்ந்த முகத்துடன் ஒரு மழலை தன் பாசமுள்ள அப்பாவின் மடியில் அமர்ந்துகொண்டு, அவருடன் சேர்ந்து தனக்கு பிடித்த கதையை வாசிப்பதை கற்பனை செய்து பாருங்கள். அவர்கள் அதை அதற்கு முன்பு எத்தனை தரம் வாசித்திருந்தாலும், அத்தருணங்கள் அவர்களுக்கு பொன்னான தருணங்களாகவே இருக்கும். அதைப்போல, கடவுளை நேசிக்கும் ஒரு நபருக்கு தினமும் பைபிள் வாசிப்பது ஓர் இனிய அனுபவமாக இருக்கும்; தன் பரலோகத் தகப்பனுடன் செலவிட்ட பொன்னான தருணமாக இருக்கும். யெகோவாவின் ஆலோசனைகளையும் அறிவுரைகளையும் ஏற்று நடக்கும்போது, “நீர்க்கால்களின் ஓரமாய் நடப்பட்டு, தன் காலத்தில் தன் கனியைத் தந்து, இலையுதிராதிருக்கிற மரத்தைப்போலிருப்பான்; அவன் செய்வதெல்லாம் வாய்க்கும்” என்று சொல்லப்பட்ட விதமாக அந்நபர் இருப்பார்.​—⁠சங்கீதம் 1:⁠3.

சங்கீதக்காரன் இங்கே விவரிக்கிற இந்த மரம் தானாக முளைத்துவிடவில்லை. அதை ஒரு விவசாயி நீரோடையின் அருகே நட்டு, நன்கு பராமரித்திருக்கிறார். அதைப்போலவே, நம் பரலோகத் தகப்பனும் பைபிளிலுள்ள ஆலோசனைகளின் மூலமாக நம்முடைய எண்ணங்களைச் செதுக்கி சரிப்படுத்துகிறார். அதன் விளைவாக, நாம் கடவுளுடைய ஆலோசனைகளுக்கு இசைவான குணங்களை வளர்க்கிறோம், வாழ்விலும் தழைக்கிறோம்.

ஆயினும், ‘துன்மார்க்கரோ அப்படியிருப்பதில்லை.’ ஆம், அவர்கள் கொஞ்ச நாட்களுக்கு செழிப்பதுபோல தோன்றலாம், ஆனால், கடைசியில் அவர்கள் மோசமான முடிவைச் சந்திப்பார்கள். அவர்கள், ‘நியாயத்தீர்ப்பில் . . . நிலைநிற்பதில்லை.’ ஏனென்றால் “துன்மார்க்கரின் வழியோ அழியும்.”​—⁠சங்கீதம் 1:4-6.

எனவே, இந்த உலகத்தின் லட்சியங்களும் மதிப்பீடுகளும் உங்கள் வாழ்க்கையைச் செதுக்க அனுமதிக்காதீர்கள். நீங்கள் அதிக திறமைசாலியாக இருக்கலாம், இந்த உலகில் வெற்றி சிறப்பதற்கான தகுதிகளும் உங்களுக்கு இருக்கலாம்; ஆனால், உங்கள் திறமைகளை எப்படி பயன்படுத்துகிறீர்கள் என்பதில் அல்லது உலகம் உங்கள் திறமைகளை எந்தளவுக்கு பயன்படுத்திக் கொள்ள அனுமதிக்கிறீர்கள் என்பதில் கவனமாயிருங்கள். பயனற்ற, பொருளாதார நாட்டங்கள் ஒரு நபரை ‘உதிர்ந்து’ போகச் செய்யலாம். மறுபட்சத்தில், கடவுளுடன் நல்லுறவை வைத்துக்கொள்வது உண்மையான சந்தோஷத்தையும் வெற்றியையும் தரும்.

நீங்கள் எவ்வாறு வெற்றி பெறலாம்

கடவுளுடைய ஆலோசனையைப் பின்பற்றும் ஒருவர் எப்படி தான் செய்வதனைத்திலும் வெற்றி பெறுவார்? இந்த உலகில் வெற்றி சிறப்பதைப் பற்றி சங்கீதக்காரன் குறிப்பிடவில்லை. தேவபக்தியுள்ள ஒரு நபருடைய வெற்றி கடவுளுடைய சித்தத்தைச் செய்வதுடன் சம்பந்தப்பட்டுள்ளது; கடவுளுடைய சித்தம் எப்போதுமே வெற்றி பெறும். பைபிள் நியமங்களைக் கடைப்பிடித்தால் நீங்கள் எவ்வாறு வெற்றி பெறலாம் என்பதைக் கவனியுங்கள்.

குடும்பம்: புருஷர்கள், “தங்கள் மனைவிகளைத் தங்கள் சொந்தச் சரீரங்களாகப் பாவித்து, அவர்களில் அன்புகூர வேண்டும்” என்றும், கிறிஸ்தவ மனைவி, ‘புருஷனிடத்தில் பயபக்தி [அல்லது, ஆழ்ந்த மரியாதை] உள்ளவளாய் இருக்கக்கடவள்’ என்றும் பைபிள் அறிவுரை தருகிறது. (எபேசியர் 5:28, 33) பெற்றோர் தங்கள் பிள்ளைகளுடன் நேரத்தைச் செலவிட வேண்டுமென்றும், அவர்களுடன் சேர்ந்து சிரித்து மகிழ வேண்டுமென்றும், வாழ்க்கையில் உட்பட்டுள்ள முக்கியமான விஷயங்களைக் குறித்து அவர்களுக்கு கற்பிக்க வேண்டுமென்றும் அது அறிவுறுத்துகிறது. (உபாகமம் 6:6, 7; பிரசங்கி 3:4) “உங்கள் பிள்ளைகளுக்கு எரிச்சல் மூட்டாதீர்கள்” என்றும்கூட பெற்றோருக்கு பைபிள் அறிவுரை தருகிறது. இந்த அறிவுரையை பெற்றோர் பின்பற்றினால், ‘[தங்கள்] பெற்றோருக்குக் கீழ்ப்படிந்து’ நடப்பதும் ‘தந்தையையும் தாயையும் மதித்து நடப்பதும்’ பிள்ளைகளுக்கு எளிதாக இருக்கும். (எபேசியர் 6:1-4, பொ.மொ.) கடவுள் கொடுக்கும் இந்த ஆலோசனைகளைக் கடைப்பிடித்தால் குடும்ப வாழ்க்கை சீரும் சிறப்புமாக அமையும்.

நண்பர்கள்: நம்மில் பெரும்பாலோர் நண்பர்கள் வேண்டுமென ஆசைப்படுகிறோம். பாசத்தைப் பொழிவதற்கும் பாசத்தைப் பெறுவதற்கும் ஏற்ற விதத்தில் நம்முடைய மனதும் உணர்ச்சிகளும் அமைந்துள்ளன. ‘ஒருவரிலொருவர் அன்பாயிருக்கும்படி’ இயேசு தம்மைப் பின்பற்றியவர்களிடம் சொன்னார். (யோவான் 13:34, 35) அன்பு காட்டும் அத்தகைய நல்ல நண்பர்கள் நமக்கு கிடைப்பார்கள், அவர்களை நம்மால் நேசிக்க முடியும், நம்ப முடியும்; அதுமட்டுமல்ல, நம் அடிமனதின் யோசனைகளையும் உணர்ச்சிகளையும்கூட அவர்களிடம் தெரிவிக்க முடியும். (நீதிமொழிகள் 18:24) எல்லாவற்றுக்கும் மேலாக, பைபிள் நியமங்களைக் கடைப்பிடித்தால், ‘தேவனிடம் நெருங்கி வர’ முடியும், அதோடு ஆபிரகாமைப்போல “தேவனுடைய நண்பன்” என்றும் அழைக்கப்பட முடியும்.​—⁠யாக்கோபு 2:23; 4:⁠8, ஈஸி டு ரீட் வர்ஷன்

அர்த்தமுள்ள வாழ்க்கை: உண்மையான வெற்றி பெற்றவர்கள் குறிக்கோளற்ற வாழ்க்கை வாழ்வதற்கு மாறாக, வாழ்க்கையின் அர்த்தத்தையும் நோக்கத்தையும் கண்டறிகிறார்கள். இன்றைய உலகில் காணப்படுகிற ஊசலாடும் நிலைமைகளின் அடிப்படையில் அவர்கள் வாழ்க்கையை அமைத்துக்கொள்ள மாட்டார்கள். வாழ்க்கையின் உண்மையான அர்த்தத்தை மையமாகக் கொண்ட லட்சியங்களை வைத்திருப்பதால் உண்மையான, நிலையான திருப்தியைப் பெறுகிறார்கள். வாழ்க்கையின் அர்த்தத்தை ஒருவர் எப்படி கண்டறியலாம்? “தேவனுக்குப் பயந்து, அவர் கற்பனைகளைக் கைக்கொள்; எல்லா மனுஷர்மேலும் விழுந்த கடமை இதுவே.”​—⁠பிரசங்கி 12:⁠13.

நம்பிக்கை: கடவுளோடு நாம் வைத்திருக்கும் நட்பு எதிர்காலத்திற்கான நம்பிக்கையையும் தரும். ‘நிலையில்லாச் செல்வத்தில் நம்பிக்கை வைக்காமல் . . . கடவுளை மட்டுமே எதிர்நோக்கி இருக்கும்படி’ கிறிஸ்தவர்களை அப்போஸ்தலன் பவுல் ஊக்கப்படுத்தினார். அப்போது அவர்கள், “தங்களது வருங்காலத்திற்கென்று நல்லதோர் அடித்தளமாக இச்செல்வத்தைச் சேமித்துவைப்பதால் உண்மையான வாழ்வை அடைய முடியும்.” (1 தீமோத்தேயு 6:17-19, பொ.மொ.) கடவுளுடைய பரலோக ராஜ்யம் பூமியை மீண்டும் ஒரு பூங்காவன பரதீஸாக மாற்றும்போது இந்த உண்மையான வாழ்வு சீக்கிரத்தில் நிஜமாகும்.​—⁠லூக்கா 23:⁠43.

நீங்கள் பைபிள் நியமங்களைக் கடைப்பிடித்தால், உங்களுக்கு பிரச்சினைகளே வராது என்றில்லை; ஆனால், துன்மார்க்கர் தங்களுக்குத் தாங்களே வருவித்துக் கொள்ளும் மிகுந்த மனவேதனைகளையும் துயரங்களையும் உங்களால் தவிர்க்க முடியும். முன்னர் குறிப்பிட்ட டேவிட்டும், அவரைப் போன்ற லட்சக்கணக்கான ஆட்களும் தங்களுடைய வாழ்க்கையில் பைபிள் நியமங்களைக் கடைப்பிடிப்பதன் முக்கியத்துவத்தை கற்றிருக்கின்றனர். நேரத்தை அதிகம் உறிஞ்சிவிடாத ஒரு வேலையைத் தேடிக்கொண்ட பிறகு, டேவிட் இவ்வாறு சொல்கிறார்: “என் மனைவி, பிள்ளைகளுடன் நல்ல உறவை அனுபவிப்பதற்காகவும், சபையில் மூப்பராக யெகோவா தேவனை சேவிக்க முடிந்த பாக்கியத்திற்காகவும் நான் மிகவும் நன்றியுள்ளவனாக இருக்கிறேன்.” ஆக, கடவுளுடைய ஆலோசனையைக் கேட்டு நடக்கும் ஒருவரைக் குறித்து சங்கீதம் இவ்வாறு சொல்வதில் வியப்பேதுமில்லை: “தாம் செய்வதனைத்திலும் வெற்றி பெறுவார்”!

[பக்கம் 6-ன் அட்டவணை]

வெற்றிக்கு ஐந்து வழிகள்

1 இந்த உலகின் தராதரங்கள் உங்களைச் செதுக்க அனுமதிக்காதீர்கள்.

சங்கீதம் 1:1; ரோமர் 12:2

2 தினமும் கடவுளுடைய வார்த்தையை வாசித்து தியானியுங்கள்.

சங்கீதம் 1:2, 3

3 பைபிளின் ஆலோசனையை வாழ்க்கையில் பின்பற்றுங்கள்.

யோசுவா 1:7-9

4 கடவுளை உங்கள் நண்பராக்குங்கள்.

யாக்கோபு 2:23; 4:8

5 மெய்க் கடவுளுக்கு பயந்து, அவருடைய கட்டளைகளுக்குக் கீழ்ப்படியுங்கள்.

பிரசங்கி 12:⁠13

[பக்கம் 7-ன் படங்கள்]

வெற்றிக்கான இந்த வழிகளை நீங்கள் பின்பற்றுகிறீர்களா?

    தமிழ் பிரசுரங்கள் (1971-2026)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்