வெற்றி—அதை எப்படி மதிப்பிடுவீர்கள்?
ஜெஸி லிவர்மோர்; உவால் ஸ்ட்ரீட் பங்குச் சந்தையின் முடிசூடா மன்னர் என சிலரால் கருதப்பட்டவர். வியாபார ரீதியாக புத்திசாலித்தனமான முடிவுகளை எடுப்பதில் அவருக்கு நிகர் அவரே. அதனால், எக்கச்சக்கமான சொத்துபத்துகளைக் குவித்தார். கையினால் தைக்கப்பட்ட உயர்ரக ‘கோட், சூட்’களை உடுத்தினார்; 29 அறைகளைக் கொண்ட மாட மாளிகையில் வாழ்ந்தார்; கறுப்பு ரோல்ஸ்-ராய்ஸ் காரை டிரைவர் ஓட்ட அதில் ஒய்யாரமாக வலம் வந்தார்.
இவரைப்போலவே வெற்றிப்படிகளில் ஏறிக்கொண்டிருந்த மற்றொருவர் டேவிட்.a மாபெரும் கிராஃபிக்ஸ் நிறுவனத்தின் துணைத் தலைவராகவும் பொது மேலாளராகவும் பதவி வகித்தார்; அதின் மண்டலத் தலைவராக அடுத்துப் பொறுப்பேற்கவிருந்தார். ஆஸ்தியும் அந்தஸ்தும் அவரை இருகரம் நீட்டி வரவேற்கக் காத்திருந்தன. இருந்தபோதிலும், டேவிட் அந்த வேலையை ராஜினாமா செய்துவிடத் தீர்மானித்தார். “இதுபோல கைநிறைய சம்பளமும், பெரிய பதவியும் இனிமேல் கிடைக்காது என்று எனக்குத் தெரியும்” என டேவிட் சொன்னார். அவர் தவறான தீர்மானத்தை எடுத்துவிட்டார் என்று நினைக்கிறீர்களா?
புகழை, ஆஸ்தியை அல்லது அந்தஸ்தை அடைவதே உண்மையான வெற்றி என்பதாக அநேகர் நம்புகின்றனர். இருந்தபோதிலும், கைநிறைய பணத்தோடும் வீடு நிறைய பொருள்களோடும் வாழ்பவர்கள் மனதிற்குள் வெறுமையை உணரலாம்; ஏன் வாழ்கிறோம் என தெரியாமல் திண்டாடலாம். உண்மையில் அதுதான் திரு. லிவர்மோரின் வாழ்க்கையிலும் நிகழ்ந்தது. அவரிடம் செல்வம் கொட்டிக் கிடந்தபோதிலும், காலம் முழுவதும் மனமொடிந்தவராக, அவலங்களிலும் சோகங்களிலும் சிக்கித் தவித்தார். அதோடு மனச்சோர்வில் வாடினார், மண வாழ்க்கையில் பலமுறை தோல்வி கண்டார்; தன்னுடைய பிள்ளைகளுடன் ஒட்டுறவின்றி வாழ்ந்தார். கடைசியில், தன்னுடைய சொத்துசுகங்களை ஏறக்குறைய இழந்துவிட்ட நிலையில், ஒருநாள் ஆடம்பர ஹோட்டல் ஒன்றின் பாருக்குச் சென்று தனக்கு ஏற்பட்ட நஷ்டத்தைக் குறித்து புலம்பித் தீர்த்தார். மதுபானத்தைக் கொண்டுவரச் சொல்லிவிட்டு, தோல் அட்டைப்போட்ட நோட்புக்கை வெளியே எடுத்து தன் மனைவிக்கு கடைசி குறிப்புகளை எழுதினார். பின்பு, மதுபானத்தைக் குடித்துவிட்டு, மங்கலான வெளிச்சமிருந்த ஒரு சாமான் அறைக்குள் புகுந்து பரிதாபகரமாக தன்னையே சுட்டுக் கொண்டார்.
வெற்றிகரமான தொழிலதிபராக இருந்ததுதான் அவருடைய தற்கொலைக்கு காரணம் என்று சொல்லமுடியாது. என்றாலும், இந்த வாழ்க்கை அனுபவம் பின்வரும் பைபிள் கூற்று எவ்வளவு உண்மை என்பதைக் காட்டுகிறது: “ஐசுவரியவான்களாக விரும்புகிறவர்கள் . . . அநேக வேதனைகளாலே தங்களை உருவக் குத்திக் கொண்டிருக்கிறார்கள்.”—1 தீமோத்தேயு 6:9, 10.
புகழை, ஆஸ்தியை அல்லது அந்தஸ்தை வைத்து வெற்றியை அளவிடுபவர்கள் தவறான அளவுகோலைப் பயன்படுத்துகிறார்களா? வெற்றிகரமான நபராக உங்களைக் கருதுகிறீர்களா? எதை வைத்து இவ்வாறு முடிவு செய்தீர்கள்? எந்த அளவுகோலை பயன்படுத்தி உங்கள் வெற்றியை மதிப்பிட்டீர்கள்? வெற்றியைக் குறித்த உங்கள் கருத்துகளில் எது செல்வாக்கு செலுத்துகிறது? வெற்றி பெற லட்சக்கணக்கானோருக்கு உதவிய நம்பகமான அறிவுரைகளை அடுத்தக் கட்டுரை கலந்தாராயும். நீங்களும்கூட எவ்வாறு வெற்றி பெற முடியும் என்பதைக் கவனியுங்கள்.
[அடிக்குறிப்பு]
a பெயர் மாற்றப்பட்டுள்ளது.