இளம் பிள்ளைகளே, யெகோவாவைத் துதியுங்கள்!
‘பூமியிலுள்ளவைகளே, யெகோவாவைத் துதியுங்கள் . . . வாலிபரே, கன்னிகைகளே, . . . யெகோவாவைத் துதியுங்கள்.’—சங்கீதம் 148:7, 12.
1, 2. (அ) என்னென்ன தடைகள் தங்களுக்கு இருக்கிறதென்று அநேக பிள்ளைகள் தெரிந்து வைத்திருக்கிறார்கள்? (ஆ) பெற்றோர் தங்களுக்குத் தடை விதிக்கிறார்கள் என்பதற்காக, பிள்ளைகள் ஏன் சங்கடப்படக் கூடாது?
என்னவெல்லாம் செய்ய தங்களுக்கு அனுமதியில்லை என்பதை இளம் பிள்ளைகள் பெரும்பாலும் நன்றாகவே தெரிந்து வைத்திருக்கிறார்கள். சாலையை எப்போது தனியாகக் கடக்க அனுமதிக்கப்படுவார்கள், எப்போது முதற்கொண்டு லேட்டாக படுக்கைக்குச் செல்ல அனுமதிக்கப்படுவார்கள், எந்த வயதில் வண்டி ஓட்ட அனுமதிக்கப்படுவார்கள் என்பதையெல்லாம் அவர்களில் அநேகர் சட்டென சொல்லிவிடுவார்கள். ஏதோவொன்றைச் செய்ய ஆசையோடு அனுமதி கேட்கும்போதெல்லாம், “அதற்கு உனக்கு வயது போதாது” என்ற ஒரேவிதமான பதில்தான் தங்களுக்குக் கிடைப்பதாக அவர்கள் சிலசமயம் நினைக்கலாம்.
2 இளம் பிள்ளைகளான உங்களுடைய நன்மையை மனதில் வைத்துத்தான் ஒருவேளை உங்கள் பெற்றோர் ஞானமாக அப்படித் தடைவிதிக்கிறார்கள் என்பது உங்களுக்குத் தெரிந்திருக்கும். அதுமட்டுமல்ல, பெற்றோருக்கு நீங்கள் கீழ்ப்படியும்போது யெகோவா சந்தோஷப்படுகிறார் என்பதும்கூட உங்களுக்கு நன்றாகத் தெரிந்திருக்கும். (கொலோசெயர் 3:20) ஆனால் இந்தத் தடைகளெல்லாம் இருப்பதால், ‘எல்லாவற்றையும் செய்ய என்னை எப்போதுதான் அனுமதிப்பார்களோ’ என்று நினைத்திருக்கிறீர்களா? முக்கியமான எல்லாக் காரியங்களையுமே நீங்கள் பெரியவர்களாக ஆகும்வரை தள்ளிப்போட வேண்டுமா? இல்லை, வேண்டியதே இல்லை! நீங்கள் செய்ய காத்திருக்கிற எந்தவொரு வேலையையும்விட, மிக மிக முக்கியமான ஒரு வேலை இன்று நடைபெற்று வருகிறது. பிள்ளைகளான உங்களுக்கு அந்த வேலையில் கலந்துகொள்ள அனுமதி இருக்கிறதா? அனுமதி மட்டுமல்ல, நீங்கள் அதில் கலந்துகொள்ள வேண்டுமென உன்னதமான தேவன் தாமே உங்களுக்கு அழைப்பு விடுக்கிறார்!
3. எந்த விசேஷ வேலையில் ஈடுபடும்படி பிள்ளைகளை யெகோவா அழைக்கிறார், என்ன கேள்விகளை இப்போது நாம் சிந்திப்போம்?
3 எந்த வேலையைப் பற்றி இப்போது நாம் பேசிக் கொண்டிருக்கிறோம்? இக்கட்டுரையின் முக்கிய வசனத்திலுள்ள வார்த்தைகளைக் கவனியுங்கள்: ‘பூமியிலுள்ளவைகளே, யெகோவாவைத் துதியுங்கள் . . . வாலிபரே, கன்னிகைகளே, முதிர் வயதுள்ளவர்களே, பிள்ளைகளே, யெகோவாவைத் துதியுங்கள்.’ (சங்கீதம் 148:7, 12) ஆம், உங்களுக்கு இருக்கும் மாபெரும் பாக்கியம் இதுதான்: உங்களால் யெகோவாவைத் துதிக்க முடியும். ஒரு பிள்ளையாக, அவ்வேலையில் ஈடுபடுவது உங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறதா? பலருக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. அப்படி மகிழ்வது ஏன் தகுந்தது என்பதைப் புரிந்துகொள்ள, மூன்று கேள்விகளை இப்போது நாம் சிந்திக்கலாம். முதலாவது, யெகோவாவை நீங்கள் ஏன் துதிக்க வேண்டும்? இரண்டாவது, நீங்கள் எவ்வாறு திறம்பட்ட விதத்தில் அவரைத் துதிக்கலாம்? மூன்றாவது, நீங்கள் எப்போது முதற்கொண்டு யெகோவாவைத் துதிக்க வேண்டும்?
யெகோவாவை ஏன் துதிக்க வேண்டும்?
4, 5. (அ) 148-ம் சங்கீதத்தின்படி, நாம் என்ன அருமையான சூழ்நிலையில் இருக்கிறோம்? (ஆ) பேச முடியாத, விளக்கமளிக்க முடியாத படைப்புகள் எவ்வாறு யெகோவாவைத் துதிக்கின்றன?
4 யெகோவாவைத் துதிப்பதற்கான ஒப்பற்ற ஒரு காரணம், அவர் படைப்பாளர் என்பதே. 148-ம் சங்கீதம் இந்த உண்மையின் பேரில் நம் கவனத்தைக் குவிக்கிறது. சற்றுக் கற்பனை செய்து பாருங்கள்: நெஞ்சைத் தொடும் மிக இனிய ஒரு பாடலை ஒன்றுசேர்ந்து பாடிக்கொண்டிருக்கும் பெரிய கூட்டத்தாரின் அருகே செல்கையில் எப்படி உணருவீர்கள்? அவர்கள் பாடிக்கொண்டிருக்கும் பாடல் வரிகள் உண்மையானவை என்பதும், முக்கியமான, சந்தோஷமான, உற்சாகமூட்டும் கருத்துகள் அவற்றில் உள்ளன என்பதும் உங்களுக்குத் தெரிய வந்தால் எப்படி உணருவீர்கள்? அவற்றிலுள்ள வார்த்தைகளை மனதில் பதித்து அவர்களோடு சேர்ந்து பாட ஆசைப்படுவீர்களா? நம்மில் பெரும்பாலோர் அப்படித்தான் ஆசைப்படுவோம். அதுபோன்ற ஒரு சூழ்நிலையில், இல்லையில்லை, அதைவிட மிக அருமையான ஒரு சூழ்நிலையில் நீங்கள் இருக்கிறீர்கள் என 148-ம் சங்கீதம் காண்பிக்கிறது. திரளான ஒரு கூட்டம் யெகோவாவை ஒன்றுசேர்ந்து துதிப்பது பற்றி அந்தச் சங்கீதம் விவரிக்கிறது. ஆனால் அதை வாசிக்கும்போது, ஒரு விஷயம் விநோதமாக இருப்பதைக் கவனிப்பீர்கள். அது என்ன?
5 சங்கீதம் 148-ல், கடவுளைத் துதிப்பதாக விவரிக்கப்பட்டுள்ள பெரும்பாலோரால் பேசவும் முடியாது விளக்கமளிக்கவும் முடியாது. உதாரணமாக, சூரியன், சந்திரன், நட்சத்திரங்கள், வெண்பனி, காற்று, மலைகள், மேடுகள் ஆகியவை யெகோவாவைத் துதிப்பதாக அதில் நாம் வாசிக்கிறோம். உயிரற்ற இந்தப் படைப்புகளால் யெகோவாவை எப்படித் துதிக்க முடியும்? (வசனங்கள் 3, 8, 9) மரங்களும், கடற்பிராணிகளும், மிருகங்களும் எவ்விதத்தில் துதிக்கின்றனவோ அதேவிதத்தில்தான் அவை துதிக்கின்றன. (வசனங்கள் 7, 9, 10) ரம்மியமான சூரிய அஸ்தமனக் காட்சியையோ, நட்சத்திர வானில் நீந்திச் செல்லும் முழு நிலவையோ நீங்கள் எப்போதாவது பார்த்து ரசித்திருக்கிறீர்களா? அல்லது மிருகங்கள் விளையாடுவதைப் பார்த்து குதூகலித்திருக்கிறீர்களா? அல்லது பிரமாதமான இயற்கை காட்சிகளைக் கண்டு அப்படியே வாயடைத்து நின்றிருக்கிறீர்களா? ஆம் என்றால், படைப்புகள் ஏறெடுக்கும் துதிப்பாடலை நீங்கள் “கேட்டிருக்கிறீர்கள்” என்றே அர்த்தம். யெகோவாதான் சர்வவல்லமையுள்ள சிருஷ்டிகர் என்பதையும், சக்தியிலும் ஞானத்திலும் அன்பிலும் அவரை விஞ்ச இப்பிரபஞ்சத்தில் யாருமே கிடையாது என்பதையும் அவருடைய அனைத்துப் படைப்புகளும் நமக்கு நினைப்பூட்டுகின்றன.—ரோமர் 1:20; வெளிப்படுத்துதல் 4:11.
6, 7. (அ) புத்திக்கூர்மையுள்ள எந்தப் படைப்புகள் யெகோவாவைத் துதிப்பதாக 148-ம் சங்கீதம் விவரிக்கிறது? (ஆ) யெகோவாவைத் துதிக்க நாம் ஏன் தூண்டப்படலாம்? எடுத்துக்காட்டுடன் விளக்குங்கள்.
6 புத்திக்கூர்மையுள்ள படைப்புகள்கூட யெகோவாவைத் துதிப்பதாக 148-ம் சங்கீதம் விவரிக்கிறது. 2-ம் வசனத்தில், யெகோவாவுடைய பரலோக “சேனை,” அதாவது தேவதூதர்கள், அவரைத் துதிப்பதாகச் சொல்லப்பட்டிருக்கிறது. ராஜாக்கள், நியாயாதிபதிகள் போன்ற செல்வாக்குமிக்க பெரிய ஆட்களும் இந்தத் துதியை ஏறெடுக்கும்படி 11-ம் வசனத்தில் அழைக்கப்படுகிறார்கள். சக்திவாய்ந்த தேவதூதர்களே யெகோவாவைச் சந்தோஷமாகத் துதிக்கும்போது, சாதாரண மனிதர்களான நாம் அப்படிச் செய்வதைக் கௌரவக் குறைச்சலாக நினைக்கலாமா? பிறகு 12, 13 ஆகிய வசனங்களில், பிள்ளைகளான நீங்களும் யெகோவாவைத் துதிப்பதில் சேர்ந்துகொள்ளும்படி அழைக்கப்படுகிறீர்கள். அவ்வாறு செய்ய தூண்டப்படுகிறீர்களா?
7 ஓர் எடுத்துக்காட்டைக் கவனியுங்கள். விளையாட்டு, கலை, இசை போன்ற ஏதோவொரு துறையில் படு கெட்டிக்காரராக உள்ள ஒருவர் உங்களுடைய நெருங்கிய நண்பராக இருக்கிறார் என்றால், உங்கள் குடும்பத்தாரிடமும் மற்ற நண்பர்களிடமும் அவரைப் பற்றிப் பேசுவீர்களா, மாட்டீர்களா? நிச்சயமாகவே பேசுவீர்கள். அதேபோல, யெகோவா என்னவெல்லாம் செய்திருக்கிறார் என்பதைக் கற்றுக்கொள்ளும்போது, அவரைப் பற்றி மற்றவர்களிடம் பேசுவதற்கு நாம் தூண்டப்படுவோம். உதாரணமாக, நட்சத்திரங்கள் நிறைந்த வானம், ‘வார்த்தைகளைப் பொழிய’ வைக்கிறது என்று சங்கீதம் 19:1, 2 (NW) சொல்கிறது. யெகோவா செய்துள்ள வியக்க வைக்கும் காரியங்களை நாம் சிந்தித்துப் பார்க்கும்போது, அவரைப் பற்றி மற்றவர்களிடம் சொல்லாமல் நம்மால் இருக்கவே முடியாது.
8, 9. என்ன காரணங்களுக்காக நாம் யெகோவாவைத் துதிக்க வேண்டுமென அவர் விரும்புகிறார்?
8 யெகோவாவைத் துதிப்பதற்கான மற்றொரு ஒப்பற்ற காரணம், நாம் அப்படித் துதிக்க வேண்டுமென அவர் விரும்புவதே. அவர் ஏன் அதை விரும்புகிறார்? மனிதர்களிடமிருந்து அவருக்குப் புகழ் வேண்டும் என்பதற்காகவா? இல்லை. புகழ் வேண்டுமென மனிதர்களான நாம் சிலசமயம் நினைக்கலாம், ஆனால் யெகோவா நம்மைவிட பல மடங்கு உயர்ந்தவர். (ஏசாயா 55:8) தம்மைப் பற்றியோ தம்முடைய பண்புகளைப் பற்றியோ அவருக்கு எவ்வித சந்தேகமும் கிடையாது. (ஏசாயா 45:5) என்றபோதிலும், நாம் அவரைத் துதிக்க வேண்டுமென அவர் விரும்புகிறார், அவ்வாறு நாம் செய்யும்போது அவர் மிகவும் சந்தோஷப்படுகிறார். ஏன்? இரண்டு காரணங்களைக் கவனியுங்கள். முதலாவதாக, அவரைத் துதிக்க வேண்டிய அவசியம் நமக்கு இருப்பதை அவர் அறிவார். ஆன்மீகத் தேவையோடு, அதாவது வழிபட வேண்டுமென்ற தேவையோடு அவர் நம்மை உண்டாக்கியிருக்கிறார். (மத்தேயு 5:3, NW) சத்துள்ள உணவை நீங்கள் சாப்பிடுவதைப் பார்க்கும்போது உங்கள் பெற்றோர் எப்படிச் சந்தோஷப்படுவார்களோ அப்படியே ஆன்மீகத் தேவையை நாம் பூர்த்தி செய்துகொள்வதைப் பார்க்கும்போது யெகோவா சந்தோஷப்படுகிறார்.—யோவான் 4:34.
9 இரண்டாவதாக, நாம் அவரைத் துதிப்பதை மற்ற ஜனங்கள் கேட்க வேண்டிய அவசியத்தையும் அவர் அறிந்திருக்கிறார். இளைஞனான தீமோத்தேயுவுக்கு அப்போஸ்தலன் பவுல் இவ்வாறு எழுதினார்: “உன்னைக் குறித்தும் உபதேசத்தைக் குறித்தும் எச்சரிக்கையாயிரு, இவைகளில் நிலைகொண்டிரு, இப்படிச் செய்வாயானால், உன்னையும் உன் உபதேசத்தைக் கேட்பவர்களையும் இரட்சித்துக்கொள்ளுவாய்.” (1 தீமோத்தேயு 4:16) ஆம், யெகோவா தேவனைப் பற்றி நீங்கள் மற்றவர்களுக்குக் கற்பிக்கும்போது, அவரைத் துதிக்கும்போது, அவர்களும்கூட யெகோவாவை அறிந்துகொள்ளலாம். அத்தகைய அறிவு அவர்களை நித்திய ஜீவனுக்கு வழிநடத்தலாம்!—யோவான் 17:3.
10. நம்முடைய கடவுளைத் துதிக்க நாம் ஏன் தூண்டப்படுகிறோம்?
10 யெகோவாவைத் துதிப்பதற்கு மற்றொரு காரணமும் இருக்கிறது. உங்கள் கெட்டிக்கார நண்பரைப் பற்றிய எடுத்துக்காட்டை நினைவுபடுத்திக் கொள்ளுங்கள். அந்த நண்பரைப் பற்றி மற்றவர்கள் தாறுமாறாகப் பேசி, அவருடைய நல்ல பெயரைக் களங்கப்படுத்துகிறார்கள் என்றால், அவரைப் பற்றி இன்னுமதிகமாகப் புகழ்ந்து பேச தீர்மானிப்பீர்கள் அல்லவா? யெகோவாவின் பெயரும்கூட இவ்வுலகில் பெருமளவு களங்கப்படுத்தப்பட்டுள்ளது. (யோவான் 8:44; வெளிப்படுத்துதல் 12:9) எனவே, அவர் மீது அன்புள்ளவர்கள் அவரைப் பற்றிய உண்மைகளை மற்றவர்களிடம் சொல்லி, அவரைக் குறித்த தப்பபிப்பிராயங்களைச் சரிசெய்ய தூண்டப்படுகிறார்கள். யெகோவா மீதுள்ள அன்பையும் அவருக்கான உங்கள் நன்றியையும் தெரிவிக்க நீங்களும்கூட தூண்டப்படுகிறீர்களா? யெகோவாவுடைய முக்கிய எதிரியான சாத்தானுக்குப் பதிலாக, அவர்தான் உங்கள் ஆட்சியாளராக இருக்க வேண்டுமென விரும்புவதைக் காண்பிக்க ஆசைப்படுகிறீர்களா? இதையெல்லாம் யெகோவாவைத் துதிப்பதன் மூலம் நீங்கள் செய்யலாம். அப்படியானால், அவரை எப்படித் துதிப்பது என்பதே அடுத்து நாம் சிந்திக்க வேண்டிய கேள்வியாகும்.
பிள்ளைகள் சிலர் யெகோவாவைத் துதித்தது எவ்வாறு
11. பிள்ளைகள் யெகோவாவைத் துதிப்பதில் திறம்பட்டவர்களாக இருக்க முடியும் என்பதை பைபிளிலுள்ள எந்த உதாரணங்கள் காண்பிக்கின்றன?
11 யெகோவாவைத் துதிப்பதில் பிள்ளைகள் பெரும்பாலும் திறம்பட்டவர்களாக இருக்கிறார்கள் என்பதை பைபிள் காண்பிக்கிறது. உதாரணத்திற்கு, சீரியர்களால் அடிமையாகக் கொண்டு செல்லப்பட்ட இஸ்ரவேல் சிறுமியை எடுத்துக்கொள்ளுங்கள். யெகோவாவின் தீர்க்கதரிசி எலிசாவைப் பற்றித் தன்னுடைய எஜமானியிடம் அவள் தைரியமாகச் சாட்சி கொடுத்தாள். அவள் அப்படிப் பேசியது ஓர் அற்புதத்திற்கு வழிவகுத்தது, அதோடு வலிமைமிக்க சாட்சியாகவும் அமைந்தது. (2 இராஜாக்கள் 5:1-17) இயேசுவும்கூட சிறு வயதில் தைரியமாகச் சாட்சி கொடுத்தார். அவருடைய சிறுபிராயத்தில் நடந்த எத்தனையோ சம்பவங்களில் ஒன்றை மட்டுமே யெகோவா பைபிளில் பதிவுசெய்து வைத்திருக்கிறார்; இயேசு 12 வயதாக இருந்தபோது எருசலேம் ஆலயத்திலிருந்த மதப் போதகர்களிடம் தைரியமாகக் கேள்விகளைக் கேட்டு, யெகோவாவின் வழிகளைப் பற்றித் தமக்கிருந்த அறிவினால் அவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்திய சம்பவமே அது.—லூக்கா 2:46-49.
12, 13. (அ) தாம் மரிப்பதற்குச் சில நாட்கள் முன்பு, ஆலயத்தில் இயேசு என்ன செய்தார், அங்கிருந்த மக்கள் எப்படிப் பிரதிபலித்தார்கள்? (ஆ) சிறுவர்கள் துதிப்பதைக் கேட்ட இயேசு எவ்வாறு உணர்ந்தார்?
12 இயேசு வளர்ந்து பெரியவரானபோது, யெகோவாவைத் துதிக்குமாறு மற்ற பிள்ளைகளுக்கும் ஊக்கமளித்தார். உதாரணமாக, தாம் மரிப்பதற்குச் சில நாட்கள் முன்பு, எருசலேம் ஆலயத்தில் நேரம் செலவிட்டார். அங்கே அவர் ‘அதிசயங்களைச்’ செய்ததாக பைபிள் சொல்கிறது. அந்தப் பரிசுத்த இடத்தைக் கள்வர்களின் குகையாக ஆக்கி வந்த ஆட்களை அவர் வெளியே துரத்தியடித்தார். கண் பார்வையற்றவர்களையும் கால் ஊனமுற்றவர்களையும் அவர் குணப்படுத்தினார். அங்கிருந்தவர்கள், குறிப்பாக மதத் தலைவர்கள், இதையெல்லாம் பார்த்து யெகோவாவையும் அவருடைய குமாரனான மேசியாவையும் துதிக்க மனம் தூண்டப்பட்டிருக்க வேண்டும். ஆனால், வருத்தகரமாக, அன்றிருந்த அநேகர் அப்படித் துதிக்கவே இல்லை. இயேசு, கடவுளால் அனுப்பப்பட்டவர் என்பது அவர்களுக்குத் தெரிந்திருந்த போதிலும், மதத் தலைவர்களைக் கண்டு பயப்பட்டார்கள். ஆனால் ஒரு தொகுதியினர் மட்டும் தைரியமாகத் துதித்தார்கள். அவர்கள் யாரென்று உங்களுக்குத் தெரியுமா? பைபிள் இவ்வாறு சொல்கிறது: “அவர் [இயேசு] செய்த அதிசயங்களையும், தாவீதின் குமாரனுக்கு ஓசன்னா! என்று தேவாலயத்திலே ஆர்ப்பரிக்கிற பிள்ளைகளையும், பிரதான ஆசாரியரும் வேதபாரகரும் கண்டு, கோபமடைந்து, அவரை [இயேசுவை] நோக்கி: இவர்கள் சொல்லுகிறதைக் கேட்கிறீரோ என்றார்கள்.”—மத்தேயு 21:15, 16; யோவான் 12:42.
13 தம்மைப் புகழ்ந்து ஆர்ப்பரித்துக் கொண்டிருந்த பிள்ளைகளை இயேசு அடக்குவார் என அந்த மதத் தலைவர்கள் நினைத்தார்கள். ஆனால் அவர் அப்படிச் செய்தாரா? இல்லவே இல்லை! அதற்குப் பதிலாக அந்தத் தலைவர்களைப் பார்த்து, “ஆம், கேட்கிறேன். குழந்தைகளுடைய வாயினாலும் பாலகருடைய வாயினாலும் துதி உண்டாகும்படி செய்தீர் என்பதை நீங்கள் ஒருக்காலும் வாசிக்கவில்லையா?” என்று கேட்டார். அந்தச் சிறுவர்களின் வாயிலிருந்து வந்த துதியைக் கேட்டு இயேசுவும் அவருடைய பிதாவும் சந்தோஷப்பட்டார்கள் என்பதை இது தெளிவாகக் காட்டுகிறது. அங்கிருந்த பெரியவர்கள் அனைவரும் செய்திருக்க வேண்டிய காரியத்தையே அந்தப் பிள்ளைகள் செய்தார்கள். அந்தப் பிஞ்சு மனங்களில் எல்லாக் காரியங்களுமே வெகு தெளிவாக இருந்திருக்கும். இந்த மனிதர் பல அதிசயங்கள் செய்ததையும், தைரியத்தோடு விசுவாசத்தோடு பேசியதையும், கடவுள் மீதும் அவருடைய ஜனங்கள் மீதும் ஆழ்ந்த அன்பு காண்பித்ததையும் அவர்கள் கண்ணாரக் கண்டார்கள். ஆம், வாக்குப்பண்ணப்பட்ட மேசியாவாகிய ‘தாவீதின் குமாரன்’ தாம்தான் என்று அவர் சொன்னது உண்மையே. அவர் மீதுள்ள விசுவாசத்தைக் காண்பித்ததற்காக அந்தச் சிறுவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டார்கள், அதுமட்டுமல்ல தீர்க்கதரிசனத்தை நிறைவேற்றுகிற ஒப்பற்ற பாக்கியத்தையும் பெற்றார்கள்.—சங்கீதம் 8:2.
14. இளம் பிள்ளைகளிடம் உள்ள திறன்கள் கடவுளைத் துதிக்க எவ்வாறு அவர்களுக்கு உதவுகின்றன?
14 இத்தகைய உதாரணங்களிலிருந்து நாம் என்ன தெரிந்துகொள்கிறோம்? சிறு பிள்ளைகள் திறம்பட்ட விதத்தில் யெகோவாவைத் துதிக்க முடியும் என்பதைத் தெரிந்துகொள்கிறோம். சத்தியத்தைத் தெளிவாக, எளிதாகப் பார்க்கிற திறனும், தங்கள் நம்பிக்கையை ஊக்கமாக, ஆர்வமாகத் தெரிவிக்கிற திறனும் பொதுவாக அவர்களுக்கு இருக்கிறது. அதுமட்டுமல்ல, “வாலிபரின் அலங்காரம் அவர்கள் பராக்கிரமம் [அதாவது, வலிமை]” என்று நீதிமொழிகள் 20:29-ல் சொல்லப்பட்டுள்ளபடி, அவர்களுக்கு உடல்ரீதியிலும் திறன் இருக்கிறது. ஆம், இளவயதினரான உங்களுக்குப் பலமும் தெம்பும் இருக்கிறது—யெகோவாவைத் துதிப்பதற்கு இவை இரண்டுமே மிகப் பெரிய சொத்துகளாகும். அத்தகைய திறன்களை நீங்கள் குறிப்பாக எவ்வாறு திறம்பட பயன்படுத்த முடியும்?
யெகோவாவை நீங்கள் எவ்வாறு துதிக்கலாம்?
15. யெகோவாவைத் திறம்பட்ட விதத்தில் துதிப்பதற்கு, என்ன உள்நோக்கம் தேவை?
15 திறம்பட்ட விதத்தில் துதிகளை ஏறெடுப்பது இருதயத்திலிருந்துதான் ஆரம்பமாகிறது. மற்றவர்கள் செய்யச் சொல்கிறார்கள் என்பதற்காக மட்டுமே நீங்கள் யெகோவாவைத் துதித்தால், அது திறம்பட்டதாக இருக்காது. “உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும் உன் முழு ஆத்துமாவோடும் உன் முழு மனதோடும் அன்புகூருவாயாக” என்ற கட்டளையே மிகப் பெரிய கட்டளை என்பதை மறந்துவிடாதீர்கள். (மத்தேயு 22:37) யெகோவாவுடைய வார்த்தையைத் தனிப்பட்ட விதமாகப் படிப்பதன் மூலம் அவரை நன்கு அறிந்திருக்கிறீர்களா? அவருடைய வார்த்தையைப் படிக்கும்போதுதான் அவர் மீது அன்பு வளரும். அந்த அன்பை வெளிக்காட்டுவதற்கு இயல்பான வழி அவரைத் துதிப்பதாகும். உங்கள் உள்நோக்கம் தெளிவாகவும் உறுதியாகவும் ஆகும்போது, யெகோவாவை உற்சாகம் பொங்க துதிப்பதற்கு நீங்கள் தயாராகிவிடுவீர்கள்.
16, 17. யெகோவாவைத் துதிப்பதில் நடத்தை எந்தளவு முக்கியமானது? உதாரணத்துடன் விளக்கவும்.
16 என்ன சொல்லி துதிப்பதென்று சிந்திக்கும் முன், எப்படி நடந்துகொண்டு துதிப்பது என்று இப்போது சிந்தியுங்கள். எலிசாவின் நாளிலிருந்த அந்த இஸ்ரவேல் சிறுமி எப்போது பார்த்தாலும் சிடுசிடுப்பாக, அவமரியாதையாக, அல்லது ஏமாற்றுபவளாக இருந்திருந்தால் யெகோவாவுடைய தீர்க்கதரிசி பற்றி அவள் சொன்னதை அந்தச் சீரியர்கள் கேட்டிருப்பார்கள் என்று நினைக்கிறீர்களா? ஒருவேளை கேட்டிருக்க மாட்டார்கள். அந்தச் சிறுமியைப் போலவே, மற்றவர்களிடம் மரியாதையாக, நாணயமாக, பவ்வியமாக நடந்துகொண்டீர்கள் என்றால், நீங்கள் சொல்லும் விஷயங்களை அவர்கள் நன்கு காதுகொடுத்துக் கேட்பார்கள். (ரோமர் 2:21) ஓர் உதாரணத்தைக் கவனியுங்கள்.
17 போர்ச்சுகலைச் சேர்ந்த 11 வயது சிறுமி, பண்டிகை நாட்களைக் கொண்டாடும்படி வற்புறுத்தப்பட்டாள், ஆனால் பைபிளால் பயிற்றுவிக்கப்பட்ட அவளுடைய மனசாட்சி அதற்கு இடம் கொடுக்கவில்லை. தான் பண்டிகைகளைக் கொண்டாட மறுப்பதற்கான காரணத்தை மரியாதையுடன் அவள் தன்னுடைய ஆசிரியையிடம் விளக்கினாள், அந்த ஆசிரியையோ அவளை ஏளனம் செய்தார். நாட்கள் செல்லச் செல்ல, அவளுடைய மதத்தைப் பற்றிக் கிண்டலடித்து மீண்டும் மீண்டும் அவளை அவமானப்படுத்தினார். என்றாலும், அந்தச் சிறுமி எப்போதும் மரியாதையோடு நடந்துகொண்டாள். பல வருடங்கள் கழித்து, அந்த இளம் சகோதரி முழுநேர ஊழியராக, ஒழுங்கான பயனியராகச் சேவை செய்து வந்தாள். ஒரு மாநாட்டின்போது, முழுக்காட்டுதல் பெறுபவர்களைப் பார்த்துக் கொண்டிருந்தாள்; அப்போது அவர்களில் ஒருவரை அடையாளம் கண்டுகொண்டாள். ஆம், அது அவளுடைய முன்னாள் ஆசிரியை! கண்ணீர் மல்க அவர்கள் இருவரும் கட்டியணைத்துக் கொண்டார்கள். தன்னுடைய மாணவியின் மரியாதையுள்ள நடத்தையை தான் மறக்கவே இல்லையென்று அப்போது அந்த ஆசிரியை அவளிடம் சொன்னார். யெகோவாவின் சாட்சி ஒருவர் அவரைச் சந்தித்திருக்கிறார், அப்போது தன்னுடைய முன்னாள் மாணவியின் நடத்தையைக் குறித்து அவரிடம் பேசியிருக்கிறார். அதன் விளைவாக, அவரோடு பைபிள் படிப்பு ஆரம்பிக்கப்பட்டது, பிற்பாடு அவர் பைபிள் சத்தியத்தை ஏற்றுக்கொண்டார். ஆம், உங்களுடைய நடத்தை யெகோவாவைத் துதிப்பதற்கான மிகச் சிறந்த ஒரு வழியாக இருக்கலாம் என்பதை இந்த உதாரணத்திலிருந்து தெரிந்துகொள்கிறோம்.
18. பைபிளையும் யெகோவா தேவனையும் பற்றிப் பேச ஆரம்பிக்க ஒரு பிள்ளை தயங்கினால் என்ன செய்யலாம்?
18 பள்ளியில் உங்கள் நம்பிக்கையைக் குறித்துப் பேச ஆரம்பிப்பது சில சமயம் உங்களுக்குக் கடினமாக இருக்கிறதா? உங்களுக்கு மட்டுமல்ல, மற்ற பிள்ளைகளுக்கும் அப்படித்தான் இருக்கிறது. என்றாலும், உங்களுடைய நம்பிக்கையைக் குறித்து மற்றவர்களைக் கேள்வி கேட்க வைப்பதற்காக நீங்கள் எதையாவது செய்யலாம். உதாரணத்திற்கு, சட்டப்பூர்வமாகவும் ஏற்கத்தக்கதாகவும் இருந்தால், பைபிள் பிரசுரங்களை உங்களோடு எடுத்துச் சென்று, மதிய உணவு நேரத்தில் அல்லது சௌகரியமான வேறு சமயங்களில் அவற்றை நீங்கள் வாசிக்கலாம், அல்லவா? உங்களுடைய சக மாணவர்கள் நீங்கள் என்ன வாசிக்கிறீர்கள் என்று ஒருவேளை உங்களைக் கேட்கலாம். அவர்கள் கேட்கும் கேள்விக்குப் பதிலளிக்கையிலும், நீங்கள் வாசிக்கிற அந்தக் கட்டுரையில் அல்லது புத்தகத்தில் உங்கள் ஆர்வத்தைத் தூண்டிய குறிப்புகளை அவர்களிடம் சொல்கையிலும் ஒரு நல்ல உரையாடலை சீக்கிரமாகவே ஆரம்பித்து விட்டிருப்பீர்கள். உங்களோடு படிக்கும் மாணவர்கள் என்ன நம்புகிறார்கள் என்பதைத் தெரிந்துகொள்வதற்காக அவர்களிடம் கேள்விகள் கேட்க மறந்துவிடாதீர்கள். அவர்கள் சொல்வதை மரியாதையுடன் கேளுங்கள், பிறகு பைபிளிலிருந்து கற்றுக்கொண்டுள்ள விஷயங்களை அவர்களிடம் சொல்லுங்கள். பக்கம் 29-ல் உள்ள அனுபவங்கள் காண்பிக்கிறபடி, பள்ளியில் ஏராளமான பிள்ளைகள் கடவுளைத் துதித்து வருகிறார்கள். இப்படிச் செய்வதால் அவர்கள் பெரிதும் மகிழ்கிறார்கள், அதோடு நிறைய பேர் யெகோவாவைப் பற்றித் தெரிந்துகொள்ளவும் ஆரம்பித்திருக்கிறார்கள்.
19. வீட்டுக்கு வீடு ஊழியத்தில் பிள்ளைகள் எவ்வாறு இன்னும் திறம்பட்டவர்கள் ஆக முடியும்?
19 யெகோவாவைத் துதிப்பதற்கான மிகச் சிறந்த வழி வீட்டுக்கு வீடு ஊழியமாகும். அந்த ஊழியத்தில் இன்னும் நீங்கள் ஈடுபடவில்லை என்றால், அதை ஏன் உங்கள் இலக்காக வைத்துக் கொள்ளக்கூடாது? ஒருவேளை அதில் ஈடுபட்டு வருகிறீர்கள் என்றால், வேறு என்ன இலக்குகளை நீங்கள் வைக்கலாம்? உதாரணத்திற்கு, ஒவ்வொரு வீட்டிலும் ஒரே விதமாகச் சாட்சி கொடுப்பதற்குப் பதிலாக, வெவ்வேறு விதங்களில் சாட்சி கொடுக்க முயலுங்கள், உங்கள் பெற்றோரைக் கேளுங்கள், பயனுள்ள குறிப்புகளைத் தெரிந்துகொள்வதற்காக அனுபவமிக்கவர்களிடம் கேளுங்கள். பைபிளை அதிகமாக உபயோகிக்க கற்றுக்கொள்ளுங்கள், திறம்பட்ட விதத்தில் மறுசந்திப்பு செய்யக் கற்றுக்கொள்ளுங்கள், அதோடு ஒரு பைபிள் படிப்பு நடத்த கற்றுக்கொள்ளுங்கள். (1 தீமோத்தேயு 4:15) இவ்வாறு, அதிகமதிகமாக யெகோவாவைத் துதிக்கும்போது நீங்கள் அதிகமதிகமாகத் திறம்பட்டவர்களாவீர்கள், அதோடு ஊழியத்தில் அதிகமதிகமாகச் சந்தோஷத்தைக் கண்டடைவீர்கள்.
எப்போது முதற்கொண்டு நீங்கள் யெகோவாவைத் துதிக்க வேண்டும்?
20. யெகோவாவைத் துதிப்பதற்குத் தங்களுக்கு வயது போதாதென்று பிள்ளைகள் ஏன் நினைக்க வேண்டியதில்லை?
20 இந்தக் கலந்தாலோசிப்பிலுள்ள மூன்று கேள்விகளில், கடைசி கேள்விக்கான பதிலே மிக மிக எளிது. இதற்கான பைபிளின் நேரடி பதிலைக் கவனியுங்கள்: “நீ [“இப்போது,” NW] உன் வாலிபப் பிராயத்திலே உன் சிருஷ்டிகரை நினை” (பிரசங்கி 12:1) ஆம், யெகோவாவை நீங்கள் இப்போதே துதிக்க ஆரம்பிக்க வேண்டும். ஆனால், “யெகோவாவைத் துதிப்பதற்கு எனக்கு வயது போதவே போதாது. இதில் எனக்கு அனுபவமும் இல்லை. இன்னும் கொஞ்சம் பெரியவனாக(ளாக) ஆன பிறகு பார்த்துக்கொள்ளலாம்” என்று ஒருவேளை நீங்கள் நினைக்கலாம். உங்களைப் போலவே பலர் நினைத்திருக்கிறார்கள். உதாரணமாக, இளம் எரேமியா யெகோவாவிடம் “ஆ கர்த்தராகிய ஆண்டவரே, இதோ, நான் பேச அறியேன்; சிறு பிள்ளையாயிருக்கிறேன்” என்று சொன்னார். எதற்கும் பயப்பட வேண்டாம் என்று சொல்லி யெகோவா அவரைத் திடப்படுத்தினார். (எரேமியா 1:6, 7) அவர் சொன்னதற்கு இசைவாக, நாமும்கூட யெகோவாவைத் துதிக்கும்போது எதற்குமே பயப்பட வேண்டாம். யெகோவாவினால் முழுவதுமாகச் சரிசெய்ய முடியாதளவுக்கு எந்தத் தீங்கும் நமக்கு வரவே வராது.—சங்கீதம் 118:6.
21, 22. யெகோவாவைத் துதிக்கும் இளம் பிள்ளைகள் ஏன் பனித்துளிகளுக்கு ஒப்பிடப்படுகிறார்கள், அந்த ஒப்புமை ஏன் உற்சாகமூட்டுகிறது?
21 அப்படியானால், பிள்ளைகளான உங்களுக்கு ஒன்றை அறிவுறுத்துகிறோம்: யெகோவாவைத் துதிப்பதற்கு ஒருபோதும் தயங்காதீர்கள்! இன்று உலகில் நடைபெறும் மிக முக்கியமான வேலையில் ஈடுபடுவதற்கு இந்த இளவயதுதான் மிகச் சிறந்தது. அப்படி அதில் ஈடுபடும்போது, அருமையான ஒன்றின் பாகமாக நீங்கள் ஆகிறீர்கள், அதாவது பரலோகத்திலும் பூமியிலும் உள்ளவர்கள் அடங்கிய ஒரு பெரிய குடும்பத்தின் பாகமாக ஆகிறீர்கள். இந்தக் குடும்பத்தில் நீங்கள் இருப்பது யெகோவாவின் மனதை மகிழ்விக்கிறது. தேவ ஆவியால் ஏவப்பட்ட சங்கீதக்காரன் யெகோவாவை நோக்கிச் சொன்ன பின்வரும் வார்த்தைகளைக் கவனியுங்கள்: ‘உமது பராக்கிரமத்தின் நாளிலே உம்முடைய ஜனங்கள் மனப்பூர்வமும் பரிசுத்த அலங்காரமும் உள்ளவர்களாய் இருப்பார்கள்; விடியற்காலத்துக் கர்ப்பத்தில் பிறக்கும் பனிக்குச் சமானமாய் உம்முடைய யெளவன ஜனம் [அதாவது, இளைஞர் கூட்டம்] உமக்கு இருக்கும்.’—சங்கீதம் 110:3.
22 விடியற்கால வெளிச்சத்திலே பளபளக்கும் பனித்துளிகள் பார்க்க எத்தனை அழகாக இருக்கும், அல்லவா? அவை புத்துணர்வூட்டுவதாயும், பளிச்சிடுவதாயும், எண்ணற்றதாயும் இருக்கின்றன. இந்தக் கடினமான காலங்களில் தம்மை உண்மையுடன் துதித்து வரும் இளம் பிள்ளைகளான உங்களை யெகோவா அப்படித்தான் கருதுகிறார். யெகோவாவைத் துதிப்பதற்கான உங்கள் தீர்மானம் அவருடைய இருதயத்தைச் சந்தோஷப்படுத்துகிறது என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. (நீதிமொழிகள் 27:11) அப்படியானால், நீங்கள் எல்லா விதங்களிலும் யெகோவாவைத் துதித்திடுங்கள்!
எப்படிப் பதிலளிப்பீர்கள்?
• யெகோவாவைத் துதிப்பதற்கான முக்கிய காரணங்கள் சில யாவை?
• இளம் பிள்ளைகள் யெகோவாவைத் துதிப்பதில் மிகவும் திறம்பட்டவர்களாக இருக்க முடியும் என்பதை பைபிளிலுள்ள எந்த உதாரணங்கள் காண்பிக்கின்றன?
• இன்று இளம் பிள்ளைகள் யெகோவாவை எவ்வாறு துதிக்கலாம்?
• இளம் பிள்ளைகள் எப்போது முதற்கொண்டு யெகோவாவைத் துதிக்க வேண்டும், ஏன்?
[பக்கம் 25-ன் படங்கள்]
உங்கள் நண்பர் ஏதோவொரு துறையில் படு கெட்டிக்காரராக இருந்தால், அதைப் பற்றி மற்றவர்களிடம் சொல்வீர்கள் தானே?
[பக்கம் 27-ன் படம்]
உங்கள் நம்பிக்கைகளைப் பற்றித் தெரிந்துகொள்வதற்கு, சக மாணவர்கள் ஒருவேளை ஆர்வமாக இருக்கலாம்
[பக்கம் 28-ன் படம்]
ஊழியத்திலே முன்னேற வேண்டுமானால், பயனுள்ள குறிப்புகளை அனுபவமிக்க யெகோவாவின் சாட்சி ஒருவரிடம் கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள்