நீங்கள் யெகோவாவைத் துதிப்பீர்களா?
“தேவனே, உமது நாமம் விளங்குகிறதுபோல உமது புகழ்ச்சியும் பூமியின் கடையாந்தரங்கள் பரியந்தமும் விளங்குகிறது.” கோராகின் புத்திரருடைய தீர்க்கதரிசன பாடல் வார்த்தைகள் இவை. (சங்கீதம் 48:10) இன்று, லட்சக்கணக்கான யெகோவாவின் சாட்சிகளடங்கிய பலத்த பல்லவியானது கடவுளுடைய ராஜ்ய நற்செய்தியைப் பிரசங்கிப்பதன் மூலம் அவரைத் துதித்து அவருடைய பெயரைத் தெரியப்படுத்தி வருகிறது. 300-க்கும் மேற்பட்ட மொழிகளில், 232 நாடுகளிலும் சமுத்திரத் தீவுகளிலும் இதைச் செய்வதன் மூலம், அவர்கள் நேர்பொருளில் “பூமியின் கடையாந்தரங்கள் பரியந்தமும்” சென்றெட்டுகின்றனர்.
யெகோவாவைத் துதிப்பதற்கு வித்தியாசப்பட்ட பண்பாடு, சமூக நிலை, மேலும் மொழிப் பின்னணிகளிலிருந்து வரும் மக்களை எது கட்டாயப்படுத்துகிறது? கடவுளுடைய வார்த்தையாகிய பைபிளைப் பற்றிய திருத்தமான அறிவிற்கான நன்றிமதித்துணர்வே ஒரு முக்கிய காரணம். மூட நம்பிக்கைகளிலிருந்தும் நித்திய வாதனை போன்ற அடிமைப்படுத்தும் மத நம்பிக்கைகளிலிருந்தும் ஆவிக்குரிய சத்தியம் அவர்களை விடுவித்திருக்கிறது. (யோவான் 8:32) இந்தச் சத்தியமானது, கடவுளுடைய அன்பு, வல்லமை, ஞானம், மேலும் இரக்கத்தோடு மிதப்படுத்தப்பட்ட நீதி என்கின்ற அவருடைய மகத்தான குணங்களை மெச்சிப் போற்றவும் அவர்களுக்கு உதவுகிறது. மனிதவர்க்கத்திற்கான மீட்கும்பொருளாக, கடவுள் தம்முடைய ஒரேபேறான குமாரனாகிய இயேசு கிறிஸ்துவை அளித்ததைப் பற்றிய அறிவை அடைவது, செவ்வையான ஆட்கள் யெகோவாவைத் துதிக்கவும் சேவிக்கவும் தூண்டுகிறது.
வெளிப்படுத்துதல் என்ற பைபிள் புத்தகத்தின்படி, ஒரு பரலோக பல்லவி ஆர்ப்பரிக்கிறது: “கர்த்தாவே, தேவரீர், மகிமையையும் கனத்தையும் வல்லமையையும் பெற்றுக்கொள்ளுகிறதற்குப் பாத்திரராயிருக்கிறீர்; நீரே சகலத்தையும் சிருஷ்டித்தீர், உம்முடைய சித்தத்தினாலே அவைகள் உண்டாயிருக்கிறவைகளும் சிருஷ்டிக்கப்பட்டவைகளுமாயிருக்கிறது.” (வெளிப்படுத்துதல் 4:11) அப்பேர்ப்பட்ட துதி வெறும் கடமையுணர்வினால் விளைவடைவதில்லை. மாறாக, யெகோவாவுக்கான பயபக்தியினால் உண்டாகிறது.
நற்செய்தியைப் பிரஸ்தாபிப்பதன் மூலம் கடவுளைத் துதியுங்கள்
யெகோவாவைத் துதிப்பதில், கடவுளின் தலையாய துதிப்பாளராகிய இயேசு கிறிஸ்துவின் மிக நேர்த்தியான முன்மாதிரியை ஒரு நபர் பின்பற்றுகிறார். இயேசுவின் அடிச்சுவடுகளில் பின்தொடர்வது கடவுளுடைய ராஜ்யத்தைப் பற்றிய நற்செய்தியைப் பிரசங்கிக்கும் வேலையில் பங்குகொள்வதை உள்ளடக்குகிறது. (மத்தேயு 4:17, 23; 24:14) இந்தப் பிரசங்க வேலையே யெகோவாவைத் துதிப்பதில் மிகப் பெரிதான உலகளாவிய வேலையாக ஆகியிருக்கிறது.
இந்தப் பிரசங்க வேலை அவ்வளவு முக்கியமாயிருப்பதால் பைபிள் அதைத் தெளிவாக இரட்சிப்போடு சம்பந்தப்படுத்திப் பேசுகிறது. ரோமர் 10:13-15 வாசிக்கிறது: “கர்த்தருடைய நாமத்தைத் தொழுதுகொள்ளுகிற எவனும் இரட்சிக்கப்படுவான். அவரை விசுவாசியாதவர்கள் எப்படி அவரைத் தொழுதுகொள்ளுவார்கள்? அவரைக்குறித்துக் கேள்விப்படாதவர்கள் எப்படி விசுவாசிப்பார்கள்? பிரசங்கிக்கிறவன் இல்லாவிட்டால் எப்படிக் கேள்விப்படுவார்கள்? அனுப்பப்படாவிட்டால் எப்படிப் பிரசங்கிப்பார்கள்? சமாதானத்தைக் கூறி, நற்காரியங்களைச் சுவிசேஷமாய் அறிவிக்கிறவர்களுடைய பாதங்கள் எவ்வளவு அழகானவைகள் என்று எழுதியிருக்கிறதே.”
கடந்த வருடம் மாத்திரம், யெகோவாவின் சாட்சிகள் பிரசங்க வேலையில் 100 கோடி மணிநேரங்களுக்கும் மேலாகச் செலவிட்டனர். இப்படிக் கடவுளைத் துதித்ததிலிருந்து என்னே நற்பலன்கள் கிடைத்தன! சுமார் 3,14,000 பேர் தண்ணீர் முழுக்காட்டுதல் மூலம் யெகோவாவுக்கான தங்கள் ஒப்புக்கொடுத்தலை அடையாளப்படுத்தி, துதிப்பவர்களின் பல்லவியைச் சேர்ந்துகொண்டனர்.
என்றாலும், 1994 கிறிஸ்துவின் மரண நினைவு ஆசரிப்புக்கு வந்திருந்த 1,22,88,917 பேரைப் பற்றி என்ன சொல்லலாம்? அவர்களில் 70,00,000-க்கும் மேற்பட்டவர்கள் நற்செய்தியின் பிரசங்கிகளாக இன்னும் யெகோவாவைத் துதிக்கவில்லை. ஆனால் இந்த முக்கிய நிகழ்ச்சியன்று அவர்கள் வந்திருந்தது, இறுதியில் துதிப்பவர்களின் பல்லவியோடு இன்னும் லட்சக்கணக்கானவர் சேர்ந்துகொள்வதில் முடிவடையும். யெகோவாவைத் துதிப்பவர்களாக ஆவதற்கு அக்கறையுள்ள இந்த ஆட்களுக்கு உதவ என்ன செய்யலாம்?
கிடைக்கக்கூடிய உதவி
அக்கறை காட்டுபவரில் அநேகர் யெகோவாவைத் துதிப்பதற்கான ஆசையுடையவர்களாக இருந்தாலும் அதற்குரிய தகுதிகளைப் பூர்த்தி செய்ய முடியாதவர்களாக உணரலாம். அப்பேர்ப்பட்ட ஆட்கள் சங்கீதக்காரனின் வார்த்தைகளை நினைவில் கொள்வது மிகவும் நல்லது: “மலைகளை நோக்கி என் கண்களை உயர்த்தினேன்: “உதவி எனக்கு எங்கிருந்து வரும்?” என்றேன். உதவி எனக்கு ஆண்டவரிடமிருந்தே வரும்: அவரே வானமும் வையமும் படைத்தவர்.” (சங்கீதங்கள் 120:1, 2, தமிழ்க் கத்தோலிக்க பைபிள்) தெளிவாகவே, சங்கீதக்காரன் தன் கண்களை, யெகோவாவின் ஆலயமும் தேவராஜ்ய அரசாங்கத்தின் பூமிக்குரிய ஆசனமும் இருந்த எருசலேம் மலைகளை நோக்கி உயர்த்தினார், அங்கேயே கடவுளைத் துதிப்பதற்கும் ராஜ்ய செய்தியைப் பிரஸ்தாபிப்பதற்கும் தேவையான உதவியானது யெகோவாவிடமிருந்தும் அவருடைய அமைப்பினிடமிருந்துமே வருகிறது என்று சரியாகவே முடிவு செய்யலாம்.—சங்கீதம் 3:4; தானியேல் 6:10.
இன்று, யெகோவாவைத் துதிக்க விரும்புவோர் அவருடைய பூமிக்குரிய அமைப்பிலிருந்து அன்பான உதவி கிடைக்கும் என்று எதிர்பார்க்கலாம். உதாரணமாக, யெகோவாவின் சாட்சிகள் அக்கறையுள்ள ஆட்களோடு இலவச வீட்டுப் பைபிள் படிப்புகளை நடத்துவதன் மூலம் உதவி அளிக்கின்றனர். இந்தக் கல்வித் திட்டம் வெறும் பைபிள் கொள்கைகளை அறிந்திருப்பதிலும் அதிகத்தை உட்படுத்துகிறது. தான் கற்றுக்கொள்ளும் காரியங்களுக்கும் யெகோவா பயன்படுத்தும் அமைப்புக்குமான போற்றுதலை விருத்திசெய்ய அது மாணாக்கருக்கு உதவுகிறது.
இதற்கிணங்க, பைபிள் படிப்பு நடத்தும் அந்தச் சாட்சி எதை உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டுமென்றால், புதிதாகக் கிடைத்த இந்தச் சத்தியங்கள் மனதை மாத்திரம் சென்றெட்டாமல் இருதயத்தையும் சென்றெட்டுவதையே. மேலும், யெகோவா பூமியில் தம்முடைய நோக்கத்தை நிறைவேற்ற எவ்வாறு தம்முடைய அமைப்பைப் பயன்படுத்துகிறார் என்பதை மாணாக்கருக்கு எடுத்துக்காட்டுவதிலிருந்து போதிக்கும் இந்த நபர் பின்வாங்கக்கூடாது. யெகோவாவின் சாட்சிகள்—ஒற்றுமையுடன் உலகம் முழுவதிலும் கடவுளுடைய சித்தத்தைச் செய்கிறார்கள் என்ற சிற்றேடும் யெகோவாவின் சாட்சிகள்—அந்தப் பெயருக்குப் பின்னுள்ள அமைப்பு (ஆங்கிலம்) என்ற வீடியோடேப்பும் இதைச் செய்வதில் பெரும்பாலும் உதவியாயிருப்பதாக நிரூபித்திருக்கின்றன.
கிறிஸ்தவக் கூட்டங்களும் பிற்காலத்தில் யெகோவாவைத் துதிப்பவர்களாகிறவர்களுக்கு உதவுவதில் முக்கிய பங்கை வகிக்கின்றன. பைபிள் படிப்பின் வெகு ஆரம்ப கட்டங்களிலேயே கிறிஸ்தவக் கூட்டங்களுக்கு ஆஜராக மாணாக்கரை அழைக்கலாம். காலப்போக்கில், எல்லா சபைக் கூட்டங்களுக்கும் ஒழுங்காக ஆஜராகி, பங்குகொள்வதன் முக்கியத்துவத்தைக் கற்றறிந்துகொள்வார். (எபிரெயர் 10:24, 25) கண்காணிகள் ஆவிக்குரிய விதத்தில் கட்டியெழுப்புவதாகவும் நடைமுறைக்கு ஏற்ற விதமாகவும் கூட்டங்கள் அமையத் தயாரிப்பதன் மூலம் உடன் விசுவாசிகளுக்கும் பிற்காலத்தில் யெகோவாவைத் துதிப்பவர்களுக்கும் அருமதிப்புள்ள உதவியை அளிக்கலாம்.
யெகோவாவைத் துதிக்க பிள்ளைகளுக்கு உதவுங்கள்
அருகாமையிலுள்ள எதிர்காலத்தில் நற்செய்தியின் பிரஸ்தாபிகளாக ஆகக்கூடிய அநேகரில் பிள்ளைகளும் இருக்கின்றனர். பிள்ளைகளை “கர்த்தருக்கேற்ற சிட்சையிலும் போதனையிலும்” கொண்டு வருவதற்கு விசேஷமாகத் தந்தையருக்குப் பைபிள் சார்ந்த பொறுப்பு இருக்கிறது. (எபேசியர் 6:4) தெய்வ பயமுள்ள பெற்றோரால் சரியாகப் பயிற்றுவிக்கப்படுகையில், வெகு இளம் பிள்ளைகளும் யெகோவாவைத் துதிப்பதற்கான விருப்பத்தை விருத்தி செய்யலாம்.
அர்ஜன்டினாவைச் சேர்ந்த ஒரு சிறுமி, பல மாதங்களாகத் திரும்பத்திரும்ப சபை மூப்பர்களை அணுகி, தான் ஒரு ராஜ்ய பிரஸ்தாபியாகத் தகுதிபெற அவர்களுடைய உதவி வேண்டுமென்று கேட்டாள். காலப்போக்கில், அவளுடைய பெற்றோரும் மூப்பர்களும் அவளை ஒரு முழுக்காட்டப்படாத பிரஸ்தாபியாக அனுமதிப்பதற்கு ஒப்புக்கொண்டனர். ஏற்கெனவே வீடுகளில் ராஜ்ய செய்தியைத் திறம்பட்ட விதத்தில் அவள் பிரசங்கிக்க ஆரம்பித்துவிட்டிருக்கிறாள். இந்தச் சிறுமிக்கு ஐந்து வயதுதான் ஆகிறது, அவளுக்கு வாசிக்கவுங்கூட தெரியாது; ஆனாலும் சில பைபிள் வசனங்கள் இருக்கும் இடங்களை நினைவில் வைத்திருக்கிறாள். ஒரு வேதவசனத்தை எடுத்துவிட்ட பிறகு, வீட்டுக்காரரைப் படிக்கும்படி சொல்லி, பின்னர் அதற்கு அவள் விளக்கம் கொடுக்கிறாள்.
தெளிவாகவே, யெகோவாவைத் துதிப்பவர்களாவதற்கு முன்னேற்றம் செய்யும் ஆட்களை மூப்பர்களும் பெற்றோரும் உற்சாகப்படுத்தி, உதவி செய்வதன் மூலம் அதிக நன்மையைப் பெறலாம்.—நீதிமொழிகள் 3:27.
யெகோவாவுடன் ஒரு நித்தியகால உறவு
எனினும், நீங்கள்தானே கொஞ்ச காலமாக யெகோவாவின் சாட்சிகளோடு கூட்டுறவுகொண்டு இன்னும் அவர்களுடைய பிரசங்க வேலையில் சேர்ந்துகொள்ளவில்லை என்றால் அப்போது என்ன? பின்வரும் கேள்விகளை உங்களுக்கு நீங்களே கேட்டுக்கொள்வது பயனுள்ளதாயிருக்கும், ‘சத்தியத்தைக் கண்டடைந்துவிட்டேன் என்றும் யெகோவாவே மெய்யான கடவுள் என்றும் நான் நம்புகிறேனா? மனிதவர்க்க பிரச்சினைகளுக்குக் கடவுளுடைய ராஜ்யமே பரிகாரம் என்று முற்றுமுழுக்க நம்புகிறேனா? யெகோவாவை அவமதிக்கும் பொய் மதம் முழுவதையும் உலகப்பிரகாரமான பண்பாடுகளையும் பழக்கவழக்கங்களையும் விட்டு விலகிவிட்டேனா? கடவுளுக்கும் அவருடைய நீதியான தராதரங்களுக்கும் ஆழ்ந்த பற்றை உடையவனாக இருக்கிறேனா?’ (சங்கீதம் 97:10) இக்கேள்விகளுக்கு ஆம் என்று உங்களால் நேர்மையாகப் பதில் சொல்ல முடிந்ததென்றால், யெகோவாவைத் துதிப்பதிலிருந்து உங்களைத் தடைசெய்வது எது?—அப்போஸ்தலர் 8:36-ஐ ஒப்பிடுக.
யெகோவாவைத் துதிப்பது நற்செய்தியைப் பிரசங்கிப்பதைக் காட்டிலும் அதிகத்தை உட்படுத்துகிறது. திருத்தமான அறிவைப் பெற்று, மெய்யான விசுவாசத்தை உடையவர்களாக, தெய்வீக தராதரங்களுக்கு ஏற்ப உங்களுடைய வாழ்க்கையை மாற்றியமைத்துக்கொண்டால், கடவுளோடு கொண்டிருக்கும் தனிப்பட்ட உறவை நீங்கள் திடப்படுத்தவேண்டியது அவசியம். எவ்வாறு? ஜெபத்தில் அவருக்கு ஒப்புக்கொடுத்து அதைப் பிறகு தண்ணீர் முழுக்காட்டுதல் மூலம் அடையாளங்காட்டுவதனால் ஆகும். நித்திய ஜீவன் வெற்றிதோல்வி உறுதியற்ற போராட்ட நிலையில் இருக்கிறது. ஆகையால், இயேசுவின் ஆலோசனையின்பேரில் இப்போதே செயல்படுங்கள்: “இடுக்கமான வாசல்வழியாய் உட்பிரவேசியுங்கள்; கேட்டுக்குப் போகிற வாசல் விரிவும், வழி விசாலமுமாயிருக்கிறது; அதின் வழியாய்ப் பிரவேசிக்கிறவர்கள் அநேகர். ஜீவனுக்குப் போகிற வாசல் இடுக்கமும், வழி நெருக்கமுமாயிருக்கிறது, அதைக் கண்டுபிடிக்கிறவர்கள் சிலர்.”—மத்தேயு 7:13, 14.
இந்தத் தற்கால காரிய ஒழுங்குமுறை அதன் அழிவுக்குரிய முடிவை நெருங்குகையில், தயங்குவதற்கான காலமல்ல இது. யெகோவாவுடன் நித்தியகால உறவை வைத்துக்கொள்ள உடனடியான படிகளை எடுங்கள். நிச்சயமாகவே, நீங்கள் யெகோவாவைத் துதிப்பீர்களா என்ற கேள்விக்குச் சாதகமாகப் பிரதிபலிக்கும் காலம் இதுவே.