லைபீரியா போரின் மத்தியிலும் ராஜ்ய அதிகரிப்பு
பத்தாண்டு காலமாக லைபீரியாவில் உள்நாட்டுச் சண்டை கோரதாண்டவம் ஆடியிருக்கிறது. 2003-ம் ஆண்டின் மத்திபத்திற்குள், தலைநகரமாகிய மன்ரோவியாவுக்குள் கலகக்காரர்கள் நுழைந்தார்கள். யெகோவாவின் சாட்சிகளில் பலர், தங்களுடைய வீட்டை விட்டு வெளியேறும்படி—அதுவும் சில சமயங்களில் அடிக்கடி—கட்டாயப்படுத்தப்பட்டார்கள். மீண்டும் மீண்டும் அவர்களுடைய உடைமைகள் கொள்ளையடிக்கப்பட்டன.
தலைநகரில் சண்டை நடந்து கொண்டிருந்த சமயத்தில் ஆயிரக்கணக்கானோர் கொலை செய்யப்பட்டார்கள். அவர்களில் இருவர் சாட்சிகள், ஒரு சகோதரர் மற்றும் ஒரு சகோதரி. இந்தத் துன்பத்தை எப்படி மற்ற சகோதரர்கள் சமாளித்தார்கள், அவர்களுக்கு என்ன உதவி அளிக்கப்பட்டது?
தேவையிலிருப்போருக்கு உதவி
நெருக்கடிமிக்க அந்தக் காலப்பகுதி முழுவதும், தேவையிலிருப்போருக்கு நிவாரண உதவியளிக்க யெகோவாவின் சாட்சிகளுடைய லைபீரியா கிளை அலுவலகம் ஏற்பாடு செய்தது. உணவு, வீட்டுக்குத் தேவையான அத்தியாவசிய பொருட்கள், மருந்து மாத்திரைகள் ஆகியவை வழங்கப்பட்டன. துறைமுகப் பகுதி கலகக்காரர்கள் பிடியிலிருந்த சமயத்தில், உணவு தட்டுப்பாடு ஏற்பட்டது. இதை கிளை அலுவலகம் முன்னறிந்து, அந்நகரம் முழுவதிலுமுள்ள ராஜ்ய மன்றங்களுக்குள் தஞ்சம்புகுந்த இரண்டாயிரம் சாட்சிகளுக்காக முன்னதாகவே உணவுப் பொருட்களை சேர்த்து வைத்திருந்தது. துறைமுகம் மீண்டும் செயல்படும் வரை அந்தச் சகோதரர்கள் உணவை பங்கிட்டு வழங்கினார்கள். பெல்ஜியம் மற்றும் சியர்ரா லியோன் கிளை அலுவலகங்கள் மருந்துப் பொருட்களை விமானத்தில் அனுப்பி வைத்தன, பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் கிளை அலுவலகங்கள் துணிமணிகளை அனுப்பி வைத்தன.
மிக மோசமான சூழ்நிலைமைகள் மத்தியிலும், நமது சகோதரர்கள் நம்பிக்கையை இழக்கவில்லை; அவர்கள் மகிழ்ச்சியுடன் நிலைத்திருந்தார்கள். மூன்று முறை வீட்டிலிருந்து தப்பியோடியவர் ஒருவர், “இந்த மாதிரியான நிலைமைகளைப் பற்றித்தானே நாம் பிரசங்கிக்கிறோம்; நாம் வாழ்ந்து வருவது கடைசி காலம் ஆயிற்றே” என்று கூறினார். மற்ற அநேகருடைய மனதிலிருந்த உணர்வும் இதுதான்.
நற்செய்திக்கு கிடைத்த பலன்கள்
தேசிய அளவில் கொந்தளிப்பு இருந்தபோதிலும், வெளி ஊழியத்தில் சாட்சிகள் தொடர்ந்து மிகச் சிறந்த பலன்களைப் பெறுகிறார்கள். ஜனவரி 2003-ல், என்றுமில்லாத உச்சநிலை எண்ணிக்கையாக 3,879 ராஜ்ய பிரஸ்தாபிகள் இருந்தார்கள், பிப்ரவரியில் 15,227 பைபிள் படிப்புகள் நடத்தினார்கள்.
நற்செய்தியை மக்கள் உடனே ஏற்றுக்கொள்கிறார்கள். அந்நாட்டின் தென்கிழக்குப் பகுதியிலுள்ள ஒரு கிராமம் இதற்கு உதாரணமாகும். ப்வான் என்ற ஒரு பெரிய கிராமத்தில் கிறிஸ்துவின் நினைவுநாளை ஆசரிப்பதற்கு ஒரு சபை திட்டமிட்டது; இந்தக் கிராமம் அவர்கள் வழக்கமாக கூடிவரும் இடத்திலிருந்து சுமார் ஐந்து மணிநேரம் நடந்து செல்லும் தூரத்தில் இருந்தது. அந்தச் சகோதரர்கள் நினைவு ஆசரிப்புக்காக மக்களை அழைக்க அந்த கிராமத்திற்குச் செல்லும் முன்பு ப்வானிலுள்ள மேயருக்கு ஓர் அழைப்பிதழ் கொடுத்தார்கள். அவரோ அதைப் பெற்றுக்கொண்டு பைபிளுடன் அந்த கிராமத்துக்குச் சென்றார். அந்த அழைப்பிதழில் உள்ள ஒரு வசனத்தை அந்தக் கிராமத்து மக்களிடம் வாசித்துக் காண்பித்து, நினைவு ஆசரிப்பில் கலந்துகொள்ளும்படி அவர்களை உற்சாகப்படுத்தினார். ஆகவே, அந்தப் பிரஸ்தாபிகள் வந்து சேர்ந்தபோது, தாங்கள் செய்ய வேண்டிய வேலை ஏற்கெனவே செய்து முடிக்கப்பட்டிருந்ததைக் கண்டார்கள்! அந்த மேயர் தனது பிள்ளைகளுடனும் இரு மனைவிமார்களுடனும் நினைவு ஆசரிப்புக்கு வந்திருந்தார். மொத்தம் 27 பேர் ஆஜரானார்கள். அதன்பின், அந்த மேயர் மெத்தடிஸ்ட் சர்ச்சைவிட்டு விலகிவிட்டார், சாட்சிகளுடன் பைபிள் படிக்க ஆரம்பித்தார், ராஜ்ய மன்றம் கட்டுவதற்கு நிலமும் கொடுத்து உதவினார்.
மனமாற்றம்
சத்தியத்தை எதிர்ப்பவர்கள் சிலருடைய மனநிலையை மாற்ற நமது சகோதரர்களின் நடத்தையும் உதவியாக இருந்திருக்கிறது. உதாரணமாக, ஓபோக்கு என்ற மனிதரை எடுத்துக்கொள்ளுங்கள். விசேஷ பயனியர் ஒருவர் வெளி ஊழியத்தில் இவரை சந்தித்து காவற்கோபுரம் பத்திரிகையை கொடுத்தார். அதை வாங்கிப் பார்த்த ஓபோக்குக்கு அந்தப் பத்திரிகையிலுள்ள ஒரு கட்டுரை பிடித்துவிட்டது, ஆனால் அவரிடம் பணமில்லை. இதற்கு விலை கிடையாது என்று விளக்கி, அந்தப் பயனியர் அவரிடம் அந்தப் பத்திரிகையை கொடுத்துவிட்டு, மறுபடியும் சந்திக்க ஏற்பாடு செய்தார். மீண்டும் சந்தித்தபோது, “என்னை உங்களுக்குத் தெரியுமா? ஹார்ப்பர் டவுனிலுள்ள உங்கள் ஆட்கள் அநேகருக்கு என்னைப் பற்றி தெரியும். உங்களுடைய பிள்ளைகளை ஸ்கூலிலிருந்து வெளியேற்றுவது என்னுடைய வழக்கமாக இருந்தது!” என்றார் ஓபோக்கு. தான் அந்த டவுனிலுள்ள ஓர் உயர்நிலைப் பள்ளி பிரின்ஸிபல் என்றும், கொடி வணக்கம் செய்யாததற்காக யெகோவாவின் சாட்சிகளுடைய பிள்ளைகளை இம்சித்தவன் என்றும் அவர் கூறினார்.
என்றாலும், யெகோவாவின் சாட்சிகளுடைய கிறிஸ்தவ அன்பின் மூன்று உதாரணங்கள் ஓபோக்கு தனது மனநிலையை மறுபரிசீலனை செய்து பார்க்க அவரைத் தூண்டின. முதலாவதாக, மோசமாக நோய்வாய்ப்பட்டுக் கிடந்த ஆவிக்குரிய சகோதரர் ஒருவரை சாட்சிகள் கவனித்துக் கொண்டதை அவர் பார்த்தார். பக்கத்து நாட்டிற்கு அழைத்துச் சென்று அவருக்கு சிகிச்சை கொடுப்பதற்கும் அவர்கள் ஏற்பாடு செய்தார்கள். வியாதியாயிருந்த அந்தச் சகோதரர், சாட்சிகள் மத்தியில் ஒரு “பெரும் புள்ளியாக” இருக்க வேண்டுமென ஓபோக்கு நினைத்திருந்தார், ஆனால் அவர் ஒரு சாதாரண சாட்சிதான் என்பதை அவர் அறிந்துகொண்டார். இரண்டாவதாக, 1990-களில், ஓபோக்கு கோட் டீவோரில் ஓர் அகதியாக இருந்தார். ஒருநாள் அவர் தாகமாயிருந்தபோது, ஓர் இளைஞனிடமிருந்து தண்ணீர் வாங்கச் சென்றார். ஓபோக்குவிடம் சில்லரை இல்லை, அந்த இளைஞனிடமும் இல்லை. எனவே பணம் இல்லாமல் இலவசமாக தண்ணீர் வாங்கிச் செல்ல அந்த இளைஞன் அனுமதித்தார். ஓபோக்குவிடம் தண்ணீர் கொடுத்தபோது, அந்த இளைஞன் இவ்வாறு கேட்டான்: “பணம் வாங்காமலேயே பொருட்களை ஒருவருக்கொருவர் கொடுத்து உதவும் ஒரு காலம் வருமென நீங்கள் நினைக்கிறீர்களா?” அவன் ஒரு யெகோவாவின் சாட்சி என ஓபோக்கு ஊகித்தார், அந்த இளைஞனும் அதை உறுதிப்படுத்தினான். அந்த இளைஞனுடைய தாராள மனப்பான்மையும் தயவும் அவரைக் கவர்ந்தது. கடைசியாக, அந்த விசேஷ பயனியர் விலையின்றி ஒரு பத்திரிகையைக் கொடுத்தது யெகோவாவின் சாட்சிகளைப் பற்றிய தன்னுடைய மனப்பான்மை தவறு என ஓபோக்குவை ஒத்துக்கொள்ளச் செய்தது. எனவே தவறான அந்த மனப்பான்மையை அவர் மாற்றிக்கொள்ள வேண்டியதாயிற்று. அவர் ஆவிக்குரிய விதத்தில் முன்னேறி இப்பொழுது முழுக்காட்டப்படாத பிரஸ்தாபியாக இருக்கிறார்.
லைபீரியாவில் வசிக்கும் சகோதரர்கள் தொடர்ந்து பயங்கர கஷ்டங்களை எதிர்ப்படுகிறபோதிலும், கடவுள் மீது நம்பிக்கை வைத்து, கடவுளுடைய ராஜ்யத்தின் நீதியான ஆட்சியில் நல்ல காலம் வருமென்ற நற்செய்தியை உண்மையுடன் அறிவித்து வருகிறார்கள். அவர்களுடைய கடின உழைப்பையும் தமது நாமத்திற்காக அவர்கள் காண்பிக்கும் அன்பையும் யெகோவா ஒருபோதும் மறக்க மாட்டார்.—எபிரெயர் 6:10.
[பக்கம் 30-ன் தேசப்படங்கள்]
(முழு வடிவத்திலுள்ள படத்திற்கு புத்தகத்தைப் பார்க்கவும்)
மன்ரோவியா
[பக்கம் 31-ன் படங்கள்]
நெருக்கடிமிக்க காலங்களில், தேவையிலிருப்போருக்கு யெகோவாவின் ஜனங்கள் ஆவிக்குரிய மற்றும் சரீரப் பிரகாரமான உதவியை அளிக்கிறார்கள்