உதவி கேட்டு தேவதூதர்களிடம் ஜெபிக்கலாமா?
துன்பப்படும்போது தேவதூதர்களிடம் ஜெபிப்பது சரியா? சரியென்றே அநேகர் நினைக்கின்றனர். சொல்லப்போனால், நியூ கேத்தலிக் என்ஸைக்ளோப்பீடியா இவ்வாறு கூறுகிறது: “தேவதூதர்களிடம் மனிதர்கள் ஜெபிப்பது உண்மைதான், ஆனால் நமக்காக கடவுளிடம் பரிந்து பேச வேண்டும் என்ற கருத்தில்தான் ஜெபிக்கிறார்கள்.” ஆகவே, நமக்காக பரிந்துபேச தேவதூதர்களிடம் ஜெபிக்கலாமா?
கடவுளுக்கு உண்மையுடன் சேவை செய்த மிகாவேல், காபிரியேல் என்ற இரு தூதர்களுடைய பெயரை மட்டுமே கடவுளுடைய வார்த்தை குறிப்பிடுகிறது. (தானியேல் 8:16; 12:1; லூக்கா 1:26; யூதா 9) பைபிளில் இந்தப் பெயர்கள் குறிப்பிடப்பட்டிருப்பதால் ஒவ்வொரு தேவதூதரும் ஒரு பெயரைக் கொண்ட தனித்துவமிக்க ஆவி ஆள், ஏதோ பெயரற்ற வெறும் சக்தி அல்ல என்பதை நாம் புரிந்துகொள்கிறோம். என்றாலும், மற்ற தேவதூதர்கள் தங்களுடைய பெயர்களைச் சொல்ல மறுத்தார்கள். உதாரணமாக, தன்னை சந்திக்க வந்த ஒரு தேவதூதரிடம் யாக்கோபு அவருடைய பெயரைக் கேட்டபோது, அவர் அதை தெரியப்படுத்த மறுத்துவிட்டார். (ஆதியாகமம் 32:29; நியாயாதிபதிகள் 13:17, 18) பைபிளில் தேவதூதர்களுடைய பெயர் பட்டியல் எதுவும் கொடுக்கப்படவில்லை, அவர்கள் மீது மனிதர்கள் அனாவசியமாக கவனம் செலுத்துவதை தவிர்க்கவே அது கொடுக்கப்படவில்லை.
கடவுளிடமிருந்து வரும் செய்தியை மனிதர்களுக்குத் தெரியப்படுத்துவது தேவதூதர்கள் செய்யும் வேலைகளில் ஒன்றாகும். சொல்லப்போனால், “தேவதூதர்” என மொழிபெயர்க்கப்பட்டுள்ள எபிரெய மற்றும் கிரேக்க வார்த்தைகள் சொல்லர்த்தமாக, “செய்தியை கொண்டுசெல்பவர்” என பொருள்படுகின்றன. என்றாலும், மிகவும் உன்னதமானவருடைய சிங்காசனத்திற்கு மனிதருடைய ஜெபங்களைக் கொண்டு செல்லும் மத்தியஸ்தர்களாக தேவதூதர்கள் சேவை செய்வதில்லை. தமது குமாரனாகிய இயேசு கிறிஸ்துவின் பெயரில் தம்மிடமே ஜெபங்களை ஏறெடுக்க வேண்டுமென கடவுள் நிர்ணயித்திருக்கிறார், ஆகவேதான் இயேசு கிறிஸ்து இவ்வாறு கூறினார்: ‘நீங்கள் என் நாமத்தினாலே பிதாவைக் கேட்டுக்கொள்வது எதுவோ, அதை அவர் உங்களுக்குக் கொடுப்பார்.’—யோவான் 15:16; 1 தீமோத்தேயு 2:5.
நாம் தகுந்த விதத்தில் யெகோவா தேவனை அணுகும்போது அவர் நமது ஜெபத்தைக் கேட்க முடியாத அளவுக்கு ஒருபோதும் அதிக வேலையாக இருப்பதில்லை. “தம்மை நோக்கிக் கூப்பிடுகிற யாவருக்கும், உண்மையாய்த் தம்மை நோக்கிக் கூப்பிடுகிற யாவருக்கும், கர்த்தர் சமீபமாயிருக்கிறார்” என பைபிள் நமக்கு உறுதியளிக்கிறது.—சங்கீதம் 145:18.