உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • w02 12/1 பக். 9-12
  • யோசுவா நினைவுகூர்ந்தவை

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • யோசுவா நினைவுகூர்ந்தவை
  • காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2002
  • துணை தலைப்புகள்
  • இதே தகவல்
  • அடிமையாக இருந்தது முதல் தலைவராக ஆனது வரை
  • மோசேயின் உதவியாளராக
  • கானானில் ஓர் உளவாளி
  • மோசேக்குப் பின் தலைவராக நியமிக்கப்பட்டார்
  • நாம் வெற்றி பெறவே அவர் விரும்புகிறார்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2010
  • பைபிள் புத்தக எண் 6—யோசுவா
    ‘வேதாகமம் முழுவதும் கடவுளால் ஏவப்பட்டது பயனுள்ளது’
  • “பலங்கொண்டு திடமனதாயிரு“
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1987
  • யோசுவா புத்தகத்திலிருந்து சிறப்பு குறிப்புகள்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2004
மேலும் பார்க்க
காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2002
w02 12/1 பக். 9-12

யோசுவா நினைவுகூர்ந்தவை

“என் தாசனாகிய மோசே மரித்துப்போனான்; இப்பொழுது நீயும் இந்த ஜனங்கள் எல்லாரும் எழுந்து, இந்த யோர்தானைக் கடந்து, . . . நான் கொடுக்கும் தேசத்துக்குப் போங்கள்” என்று யெகோவா சொன்னார். (யோசுவா 1:2) எப்பேர்ப்பட்ட சுமையை யோசுவா தன் தோளில் சுமக்க வேண்டியிருந்தது! அவர் கிட்டத்தட்ட 40 ஆண்டுகள் மோசேயின் உதவியாளராக சேவித்து வந்திருக்கிறார். இப்போதோ தன் எஜமானனின் பொறுப்பை ஏற்றுக்கொண்டு, அடிக்கடி தகராறு செய்து கொண்டிருந்த இஸ்ரவேல் புத்திரரை வாக்குப்பண்ணப்பட்ட தேசத்திற்கு வழிநடத்தும்படி அவரிடம் சொல்லப்படுகிறது.

யோசுவா தான் சந்திக்கப்போகிறவற்றை சிந்தித்துப் பார்க்கையில், ஒருவேளை அவர் ஏற்கெனவே எதிர்ப்பட்ட சோதனைகளும் அவற்றை சமாளித்த விதமுமே அடுத்தடுத்து மனத்திரையில் தோன்றி மறைந்திருக்கலாம். யோசுவா நினைவுகூர்ந்த காரியங்கள் அன்று அவருக்கு மதிப்புமிக்கவையாக இருந்ததில் சந்தேகமில்லை; இன்று கிறிஸ்தவர்களுக்கும் அவை மதிப்புமிக்கவையாக இருக்கலாம்.

அடிமையாக இருந்தது முதல் தலைவராக ஆனது வரை

பல ஆண்டுகள் அடிமைத்தனத்தில் இருந்தது யோசுவாவின் நினைவில் மங்காமல் நிலைத்திருந்தது. (யாத்திராகமம் 1:13, 14; 2:23) அந்தக் காலப்பகுதியில் யோசுவாவின் அனுபவங்கள் என்னென்ன என்பதை நம்மால் ஊகித்துத்தான் பார்க்க முடியும்; ஏனெனில் பைபிள் அவற்றை விலாவாரியாக விளக்குவதில்லை. எகிப்தில் சேவை செய்கையில் சிறந்த ஒழுங்கமைப்பாளராக இருப்பது எப்படி என்பதை யோசுவா கற்றிருக்கலாம்; அத்தேசத்தை விட்டு வெளியேறிய எபிரெயர்களையும் ‘பல ஜாதியான ஜனங்களையும்’ ஒழுங்குபடுத்துவதில் அவர் ஒத்துழைப்பு கொடுத்திருக்கலாம்.​—⁠யாத்திராகமம் 12:38.

எப்பிராயீம் கோத்திரத்தை சேர்ந்தவர் யோசுவா. அவருடைய தாத்தா எலிஷாமா அந்தக் கோத்திரத்தின் பிரபுவாக இருந்தார்; அதோடு இஸ்ரவேலில் மூன்று கோத்திரங்களாக பிரிக்கப்பட்டிருந்தவற்றில் ஒரு கோத்திரத்தின் ஆயுதந்தரித்த 1,08,100 பேரை அவர் வழிநடத்தினார் என்றும் சொல்லப்பட்டிருக்கிறது. (எண்ணாகமம் 1:4, 10, 16; 2:18-24; 1 நாளாகமம் 7:20, 26, 27) இருந்தாலும், இஸ்ரவேலர் எகிப்தை விட்டு வந்த கொஞ்ச காலத்திற்குள் அமலேக்கியர் அவர்களை தாக்க வந்தபோது, அவர்களோடு யுத்தம் செய்வதற்கு ஆட்களை ஒழுங்கமைக்கும்படி யோசுவாவிடம் மோசே சொன்னார். (யாத்திராகமம் 17:8, 9அ) யோசுவாவின் தாத்தா அல்லது தகப்பன் இருக்கும்போது அவர் ஏன் யோசுவாவை அழைத்தார்? ஒரு கருத்துப்படி: “எப்பிராயீம் என்ற முக்கிய கோத்திரத்தில் முதன்மையானவராயும், ஒழுங்கமைப்பதில் திறம்பட்டவராக ஏற்கெனவே அறியப்பட்டவராயும், ஜனங்களுக்கு முற்றிலும் நம்பகமானவராயும் [யோசுவா] இருந்ததால் யுத்த வீரரை தேர்ந்தெடுத்து ஒழுங்குபடுத்துவதற்கு மிகவும் ஏற்ற தலைவராக அவரை மோசே தேர்ந்தெடுத்தார்.”

காரணம் என்னவாக இருந்தாலும், யோசுவாவை தேர்ந்தெடுத்தபோது அவர் மோசே கட்டளையிட்டபடியே செய்தார். யுத்தம் செய்வதில் இஸ்ரவேலருக்கு எந்த அனுபவமும் இல்லாதபோதிலும் கடவுள் துணை செய்வார் என்பதில் யோசுவா உறுதியாக இருந்தார். ஆகவே, “நாளைக்கு நான் மலையுச்சியில் தேவனுடைய கோலை என் கையில் பிடித்துக்கொண்டு நிற்பேன்” என்று மோசே சொன்னபோது அதுவே நம்புவதற்கு யோசுவாவுக்கு போதுமானதாக இருந்தது. ஏனெனில், சற்று முன்னரே அந்நாளைய மிகப் பெரிய ராணுவ வல்லரசை யெகோவா ஒழித்துக்கட்டியது யோசுவாவின் நினைவிற்கு வந்திருக்க வேண்டும். மறுநாள் சூரியன் அஸ்தமிக்கும் வரை மோசே தன் கைகளை உயர்த்திப் பிடித்தார்; அப்போது இஸ்ரவேலருக்கு எதிராக எந்த எதிரியாலும் நிற்க முடியாமல் போனது, அமலேக்கியர்கள் முறியடிக்கப்பட்டார்கள். அதற்குப்பின் “அமலேக்கை வானத்தின் கீழெங்கும் இராதபடிக்கு நாசம் பண்ணுவேன்” என்ற தமது தீர்ப்பை “யோசுவாவின் செவி கேட்கும்படி வாசி”க்க மோசேக்கு யெகோவா கட்டளையிட்டார். (யாத்திராகமம் 17:9ஆ-14) ஆம், யெகோவா அந்தத் தீர்ப்பை கண்டிப்பாக நிறைவேற்றவிருந்தார்.

மோசேயின் உதவியாளராக

அமலேக்கியருடன் எதிர்ப்பட்ட அந்த அனுபவம் யோசுவாவுக்கும் மோசேக்கும் இடையிலான உறவை இன்னும் பலப்படுத்தியிருக்க வேண்டும். யோசுவா, “தன் வாலிப காலமுதல்” (திருத்திய மொழிபெயர்ப்பு) மோசேயின் மரணம் வரைக்கும் சுமார் 40 ஆண்டுகள் அவருக்கு உதவியாளராக அல்லது ‘ஊழியக்காரனாக’ சேவை செய்யும் மேன்மையை பெற்றிருந்தார்.​—⁠எண்ணாகமம் 11:28.

அந்த சேவையில் பல சிலாக்கியங்களும் பொறுப்புகளும் இருந்தன. உதாரணமாக, மோசே, ஆரோன், ஆரோனின் குமாரர், இஸ்ரவேல் மூப்பர்களில் 70 பேர் ஆகியோர் சீனாய் மலைக்கு ஏறிச்சென்று யெகோவாவுடைய மகிமையின் தரிசனத்தை கண்டபோது, யோசுவாவும் அவர்களில் ஒருவராக இருந்திருக்க வேண்டும். அவர் மோசேயின் உதவியாளராக இருந்ததால் மோசே மலைக்கு ஏறி யெகோவாவின் பிரசன்னத்தை அடையாளப்படுத்தும் மேகத்திற்குள் பிரவேசித்த சமயத்தில் யோசுவாவும் அவருடன் சென்று சற்று தூரமாக காத்திருந்திருக்க வேண்டும். உண்மையில், யோசுவா அந்த மலையில் 40 நாட்கள் இரவும் பகலும் தங்கியிருந்ததாக தெரிகிறது. அவர் தன் எஜமானின் வரவுக்காக உண்மையுடன் காத்திருந்தார் என்று சொல்லலாம்; ஏனெனில் மோசே சாட்சி பலகைகளுடன் திரும்பி வருகையில் அவரை வரவேற்க யோசுவா அங்கே இருந்தார்.​—⁠யாத்திராகமம் 24:1, 2, 9-18; 32:15-17.

இஸ்ரவேலர் பொன் கன்றுக்குட்டியை செய்து விக்கிரகாராதனையில் ஈடுபட்ட அந்த சம்பவத்திற்கு பின்பும், பாளயத்துக்குப் புறம்பேயுள்ள ஆசரிப்புக் கூடாரத்தில் மோசேயுடன் யோசுவா தொடர்ந்து உதவியாளராக சேவை செய்தார். அங்கே மோசேயிடம் யெகோவா முகமுகமாய் பேசினார். ஆனால், மோசே பாளயத்திற்கு திரும்பிச் சென்ற சமயத்திலும், யோசுவா ‘ஆசரிப்புக் கூடாரத்தை விட்டுப் பிரியாதிருந்தார்.’ ஒருவேளை இஸ்ரவேலர் தங்களை சுத்திகரியாமல் ஆசரிப்புக் கூடாரத்திற்குள் நுழைவதை தடுப்பதற்காக அவர் அங்கேயே இருக்க நேர்ந்திருக்கலாம். யோசுவா தன் பொறுப்பை எவ்வளவு முக்கியமானதாய் கருதினார்!​—⁠யாத்திராகமம் 33:7, 11.

சரித்திராசிரியர் ஜொஸிஃபஸ் குறிப்பிடுகிறபடி, 35 வயது மூத்தவரான மோசேயுடன் யோசுவா கூட்டுறவு வைத்திருந்தது அவரது விசுவாசத்தை பெருமளவில் பலப்படுத்தியிருக்க வேண்டும். அவர்களுடைய உறவு “குரு சிஷ்யனுக்கு இடையேயுள்ள முதிர்ச்சியும் இளமையும் இணைந்த உறவு” என அழைக்கப்படுகிறது; யோசுவா, “மனோதிடம் வாய்ந்த, நம்பிக்கைக்குப் பாத்திரமான ஒருவராக” ஆவதற்கு அது வழிவகுத்தது. இன்று நம் மத்தியில் மோசேயைப் போன்ற தீர்க்கதரிசிகள் இல்லை. ஆனால் யெகோவாவின் ஜனங்களுடைய சபைகளில் முதியவர்கள் இருக்கிறார்கள்; அவர்கள் அனுபவமும் ஆவிக்குரிய முதிர்ச்சியும் பெற்றிருப்பதால் பலத்திற்கும் உற்சாகத்திற்கும் மெய்யான ஊற்றுமூலமாக திகழ்கிறார்கள். அவர்களை நீங்கள் உயர்வாக மதிக்கிறீர்களா? அவர்களுடைய கூட்டுறவிலிருந்து நீங்கள் நன்மையடைகிறீர்களா?

கானானில் ஓர் உளவாளி

இஸ்ரவேலர் நியாயப்பிரமாணத்தைப் பெற்று சிறிது காலத்திற்குள் யோசுவாவின் வாழ்க்கையில் ஒரு முக்கிய சம்பவம் நடந்தது. வாக்குப்பண்ணப்பட்ட தேசத்தை வேவு பார்ப்பதற்கு தன் கோத்திரத்தின் சார்பாக அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். இது நம்மெல்லாருக்கும் தெரிந்த சம்பவம்தான். யெகோவா சொன்னபடியே அது “பாலும் தேனும் ஓடுகிற” தேசம் என்பதை வேவு பார்க்க சென்ற 12 பேரும் ஒத்துக்கொண்டனர். என்றாலும், அவர்களில் விசுவாசமற்ற பத்துப் பேரோ, அத்தேசத்திலுள்ள ஜனங்களை விரட்டியடிப்பது இஸ்ரவேலரால் முடியாத காரியம் என நினைத்து பயந்தனர். யெகோவா கண்டிப்பாக நம்மோடிருப்பார், அதனால் பயந்து கலகம் செய்ய வேண்டாம் என ஜனங்களிடம் ஆணித்தரமாக கூறியவர்கள் யோசுவாவும் காலேபும் மட்டுமே. உடனே சபையார் எல்லாரும் அதை மறுத்து அவர்கள் இருவர் மேல் கல்லெறியும்படி பேசிக்கொண்டார்கள். யெகோவா தம் மகிமையை வெளிப்படுத்தி, அந்த விஷயத்தில் குறுக்கிடாமல் இருந்திருந்தால் அவர்கள் ஒருவேளை கல்லெறிந்திருப்பார்கள். அவர்களுடைய விசுவாசமின்மையால், இஸ்ரவேலில் 20 வயதும் அதற்கு மேற்பட்ட வயதுள்ள ஒருவரும் கானானுக்குள் பிரவேசிப்பதில்லை என கடவுள் அறிவித்தார். இவர்களில், யோசுவாவும், காலேபும் லேவியர்களும் மட்டுமே அத்தேசத்தில் பிரவேசித்தனர்.​—⁠எண்ணாகமம் 13:1-16, 25-29; 14:6-10, 26-30.

இந்த ஜனங்கள் எல்லாரும் எகிப்தில் யெகோவாவின் பலத்த செயல்களை பார்த்தவர்கள் அல்லவா? அப்படியானால், கடவுள் உதவி செய்வாரா என பெருவாரியான ஜனங்கள் சந்தேகிக்கையில், யோசுவாவால் மட்டும் எப்படி விசுவாசத்தோடு இருக்க முடிந்தது? யெகோவா வாக்குறுதியளித்ததும் நிறைவேற்றியதுமான காரியங்கள் அனைத்தையும் யோசுவா மனதில் தெளிவாக வைத்து அவற்றை தியானித்திருக்க வேண்டும். அதனால்தான், ‘இஸ்ரவேலருக்கு யெகோவா சொன்ன நல்வார்த்தைகளிலெல்லாம் ஒரு வார்த்தையும் தவறிப்போகவில்லை. அவைகளெல்லாம் நிறைவேறிற்று’ என பல வருடங்களுக்கு பின்பு அவரால் சொல்ல முடிந்தது. (யோசுவா 23:14) இவ்வாறு எதிர்காலத்தைக் குறித்து யெகோவா கொடுத்த அனைத்து வாக்குறுதிகளும்கூட நிச்சயமாக நிறைவேறும் என்பதிலும் யோசுவாவுக்கு விசுவாசம் இருந்தது. (எபிரெயர் 11:6) இது ஒருவரை இவ்வாறு கேட்கும்படி தூண்ட வேண்டும்: ‘என்னைக் குறித்து என்ன சொல்லலாம்? யெகோவா கொடுத்த வாக்குறுதிகளைப் பற்றி முயற்சி எடுத்து படிப்பதும் தியானிப்பதும் அவை நம்பகமானவை என்பதை எனக்கு உறுதிப்படுத்தி இருக்கின்றனவா? வரப்போகும் மிகுந்த உபத்திரவத்தின் போது கடவுள் தம் ஜனங்களுடன் என்னையும் பாதுகாப்பார் என நம்புகிறேனா?’

யோசுவா விசுவாசத்தை மட்டுமல்லாமல், சரியானதை செய்வதில் தைரியத்தையும் காட்டினார். அவர் மீதும் காலேப் மீதும் கல்லெறியும்படி சபையார் எல்லாரும் பேசிக்கொண்டபோது இவர்கள் இருவர் மட்டும் யெகோவாவின் பட்சம் உறுதியாக நிலைத்திருந்தார்கள். நீங்கள் என்ன செய்திருப்பீர்கள்? மிரண்டு போயிருந்திருப்பீர்களா? யோசுவா மிரண்டு போகவில்லை. அவரும் காலேபும் தாங்கள் நம்பியதை உறுதியாக சொன்னார்கள். யெகோவா மீதுள்ள உண்மைப் பற்றுறுதியால் நாமும் ஒரு நாள் இதையே செய்ய வேண்டியிருக்கலாம்.

உளவாளிகளைப் பற்றிய சம்பவம் யோசுவாவின் பெயர் மாற்றப்பட்டதைப் பற்றியும் சொல்கிறது. அவருடைய முதல் பெயர் ஓசேயா, அதன் அர்த்தம் “இரட்சிப்பு”; மோசே அப்பெயருடன் கடவுளுடைய பெயரை குறிக்கும் அசையை இணைத்து யெகோசுவா அல்லது யோசுவா என அழைத்தார், அதன் அர்த்தம் “யெகோவாவே இரட்சிப்பு” என்பதாகும். செப்டுவஜின்ட் இப்பெயரை “இயேசு” என மொழிபெயர்க்கிறது. (எண்ணாகமம் 13:8, 16) அந்த மகத்தான பெயருக்கு ஏற்ப யெகோவாவே இரட்சிப்பு என்பதை யோசுவா தைரியமாக அறிவித்தார். யோசுவாவின் பெயர் மாற்றப்பட்டதற்கு ஏதேனும் காரணம் இருந்திருக்க வேண்டும். யோசுவாவின் பண்புகளை மோசே உயர்வாக கருதியதை இது காட்டியது; மேலும் வாக்குப்பண்ணப்பட்ட தேசத்திற்கு ஒரு புதிய சந்ததியை வழிநடத்துவதில் அவர் நிறைவேற்றப் போகிற பங்கிற்கும் அப்பெயர் பொருத்தமாக இருந்தது.

தங்கள் மூத்த தலைமுறையினர் செத்து மடியும்வரை, இஸ்ரவேலர் உடல் களைக்க 40 ஆண்டுகள் வனாந்தரத்தில் சுற்றித்திரிந்தனர். அந்தக் காலக்கட்டத்திலுள்ள யோசுவாவைப் பற்றிய விவரங்கள் எதுவும் நமக்குத் தெரியாது. என்றாலும் யோசுவா அக்காலக்கட்டத்தில் அநேக காரியங்களை கற்றிருப்பார். கோராகு, தாத்தான், அபிராம் ஆகிய கலகக்காரர்களையும் அவர்களைப் பின்பற்றியவர்களையும் பாகால் பேயோரின் இழிவான வணக்கத்தில் ஈடுபட்டவர்களையும் யெகோவா அழித்துப்போட்டதை அவர் கண்ணார கண்டிருப்பார். மேரிபாவின் தண்ணீரைக் குறித்ததில் யெகோவாவை பரிசுத்தம் பண்ண தவறியதால் மோசேயாலும்கூட வாக்குப்பண்ணப்பட்ட தேசத்திற்குள் பிரவேசிக்க முடியாது என்பதை அறிந்தது யோசுவாவுக்கு மிகவும் வேதனையாக இருந்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை.​—⁠எண்ணாகமம் 16:1-50; 20:9-13; 25:1-9.

மோசேக்குப் பின் தலைவராக நியமிக்கப்பட்டார்

மோசேயின் மரணம் நெருங்கி வந்த சமயம், இஸ்ரவேலர் “மேய்ப்பன் இல்லாத மந்தையைப்போல் இராதபடிக்கு” தனக்கு அடுத்ததாக அவர்களுக்கு ஒரு தலைவரை ஏற்படுத்தும்படி கடவுளிடம் மோசே கேட்டார். அதற்கு யெகோவா கொடுத்த பதில்? “ஆவியைப் பெற்றிருக்கிற புருஷனாகிய” யோசுவாவை சபையனைத்திற்கும் முன்பு தலைவனாக நியமிக்க வேண்டும், அவர்கள் யோசுவாவுக்கு கீழ்ப்படிய வேண்டும் என்பதே அவர் கொடுத்த பதில். எப்பேர்ப்பட்ட சிபாரிசு! யோசுவாவின் விசுவாசத்தையும் திறமையையும் யெகோவா கவனித்திருந்தார். இஸ்ரவேலில் தலைமை வகிக்கும் பொறுப்பை ஒப்படைக்க இவரைவிட அதிக தகுதி படைத்த ஒருவர் இருந்திருக்க முடியாது. (எண்ணாகமம் 27:15-20) இருந்தாலும், யோசுவா அநேக சவால்களை சந்திக்கவிருந்ததை மோசே அறிந்திருந்தார். ஆகவே, யோசுவாவிடம் “பலங்கொண்டு திடமனதாயிரு,” யெகோவா தொடர்ந்து உன்னோடே இருப்பார் என்று கூறி மோசே உற்சாகப்படுத்தினார்.​—⁠உபாகமம் 31:7, 8.

இதே ஊக்கமூட்டும் வார்த்தைகளை மீண்டுமாக யோசுவாவிடம் கடவுளும் சொன்னதுடன் அவர் மேலும் கூறியதாவது: “என் தாசனாகிய மோசே உனக்குக் கற்பித்த நியாயப்பிரமாணத்தின்படியெல்லாம் செய்யக் கவனமாயிரு. . . . நீ போகும் இடமெல்லாம் புத்திமானாய் நடந்துகொள்ளும்படிக்கு, அதை விட்டு வலது இடதுபுறம் விலகாதிருப்பாயாக. இந்த நியாயப்பிரமாண புஸ்தகம் உன் வாயைவிட்டுப் பிரியாதிருப்பதாக; இதில் எழுதியிருக்கிறவைகளின்படியெல்லாம் நீ செய்யக் கவனமாயிருக்கும்படி, இரவும் பகலும் அதைத் தியானித்துக் கொண்டிருப்பாயாக; அப்பொழுது நீ உன் வழியை வாய்க்கப்பண்ணுவாய், அப்பொழுது புத்திமானாயும் நடந்துகொள்ளுவாய். நான் உனக்குக் கட்டளையிடவில்லையா? பலங்கொண்டு திடமனதாயிரு; திகையாதே, கலங்காதே, நீ போகும் இடமெல்லாம் உன் தேவனாகிய கர்த்தர் உன்னோடே இருக்கிறார்.”​—⁠யோசுவா 1:7-9.

ஒரு புறம் யெகோவாவின் வார்த்தைகள் காதில் ஒலித்துக்கொண்டிருக்க மறுபுறம் அடுக்கடுக்கான அனுபவங்களும் இருக்க யோசுவா இதை எப்படி சந்தேகிக்க முடியும்? தேசம் கைப்பற்றப்படுவதைக் குறித்து உறுதியளிக்கப்பட்டிருந்தது. இடையூறுகள் ஏற்படவிருந்தது நிச்சயம்; அவற்றில் மிகவும் பெரியதுதான் முதல் சவால், அதாவது கரைபுரண்டோடும் யோர்தான் நதியைக் கடப்பது. ஆனால், “எழுந்து, இந்த யோர்தானைக் கடந்து . . . போங்கள்” என்று யெகோவாவே கட்டளையிட்டிருந்தார். ஆகவே, அதில் அவர்களுக்கு என்ன பிரச்சினை?​—⁠யோசுவா 1:2.

எரிகோவை கைப்பற்றுவது, விரோதிகளை படிப்படியாக முறியடிப்பது, தேசத்தை பங்கிடுவது என யோசுவாவின் வாழ்க்கையில் அடுத்தடுத்து நடந்த சம்பவங்கள், அவர் ஒருபோதும் கடவுளுடைய வாக்குறுதிகளை மறந்துவிடவில்லை என்பதை நமக்கு காண்பிக்கின்றன. தன் வாழ்க்கையின் முடிவு கட்டத்தில், அதாவது இஸ்ரவேலரை யெகோவா சத்துருக்களுக்கு விலக்கி இளைப்பாற செய்த சமயத்தில் யோசுவா ஜனங்களை கூடிவரச் செய்தார்; அப்போது கடவுள் தங்களுக்கு செய்த காரியங்களை மீண்டும் அவர்களுக்கு நினைவுபடுத்தி, அவரை முழுமனதுடன் சேவிக்கும்படி அறிவுறுத்தினார். அதன் விளைவாக, யெகோவாவோடு செய்துகொண்ட உடன்படிக்கையை இஸ்ரவேலர் மீண்டும் புதுப்பித்தனர்; தங்கள் தலைவரின் முன்மாதிரியால் ஊக்குவிக்கப்பட்டனர் என்பதிலும் சந்தேகமில்லை. ஏனெனில், “யோசுவா உயிரோடிருந்த சகல நாட்களிலும் . . . இஸ்ரவேலர் கர்த்தரை [“யெகோவாவை,” NW] சேவித்தார்கள்.”​—⁠யோசுவா 24:16, 31.

யோசுவா நமக்கு சிறந்ததோர் முன்மாதிரி. இன்று கிறிஸ்தவர்கள் ஏராளமான விசுவாச பரீட்சைகளை சந்திக்கிறார்கள். அப்பரீட்சைகளை வெற்றிகரமாக சமாளிப்பது மிகவும் முக்கியம்; அப்போதுதான் யெகோவாவின் அங்கீகாரம் தொடர்ந்து இருக்கும், அவர் உறுதியளித்திருப்பவற்றையும் அடைய முடியும். தன் பலமான விசுவாசத்தினால்தான் யோசுவாவால் கஷ்டங்களை வெல்ல முடிந்தது. கடவுளுடைய பலத்த செயல்களை யோசுவா கண்ணாரக் கண்டதுபோல் நாம் காணவில்லை என்பது உண்மையே. ஆனால், அதைக் குறித்து சந்தேகப்படுபவருக்கு யோசுவா எனும் பெயரிலேயே உள்ள பைபிள் புத்தகம் யெகோவாவுடைய வார்த்தையின் நம்பகத்தன்மைக்கு கண்கண்ட சான்று பகருகிறது. யோசுவாவைப் போல நாம் கடவுளுடைய வார்த்தையை தினமும் வாசித்து அதைப் பின்பற்ற கவனமாயிருந்தால் ஞானவான்களாகி வெற்றி பெறுவோம் என நமக்கும் உறுதியளிக்கப்படுகிறது.

சக கிறிஸ்தவர்களின் நடத்தையால் சில சமயங்களில் நீங்கள் புண்படுகிறீர்களா? 40 ஆண்டு காலப்பகுதியில் யோசுவா காண்பித்த சகிப்புத்தன்மையை சிந்தித்துப் பாருங்கள்; அவர் எந்தக் குற்றமும் செய்யாமலேயே விசுவாசமற்ற ஜனங்களுடன் சேர்ந்து வனாந்தரத்தில் சுற்றித் திரிய வேண்டியிருந்தது. உங்களுடைய நம்பிக்கையை ஆதரித்து உறுதியாக பேசுவதை கடினமாக காண்கிறீர்களா? யோசுவாவும் காலேபும் என்ன செய்தார்கள் என்பதை நினைத்து பாருங்கள். அவர்களுடைய விசுவாசத்திற்கும் கீழ்ப்படிதலுக்கும் மிகச் சிறந்த பலனை அடைந்தார்கள். ஆம், யெகோவா தம் வாக்குறுதிகள் எல்லாவற்றையும் நிறைவேற்றுவார் என்பதில் யோசுவாவுக்கு உண்மையில் விசுவாசம் இருந்தது. நமக்கும் அதே விசுவாசம் இருப்பதாக.​—⁠யோசுவா 23:14.

[பக்கம் 10-ன் படம்]

யோசுவாவுக்கும் காலேபுக்கும் யெகோவாவின் வல்லமையில் நம்பிக்கை இருந்தது

[பக்கம் 10-ன் படம்]

மோசேயின் கூட்டுறவு யோசுவாவின் விசுவாசத்தை பலப்படுத்தியது

[பக்கம் 10-ன் படம்]

யோசுவாவின் தலைமைத்துவம் யெகோவாவை பற்றியிருக்க ஜனங்களை தூண்டுவித்தது

    தமிழ் பிரசுரங்கள் (1971-2026)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்