யெகோவாவின் வழிகளில் நடப்பது அளவற்ற ஆசீர்வாதம்
உல்லாசத்திற்காக அல்லது உடற்பயிற்சிக்காக மலை பகுதிகளில் நீண்ட தூரம் நடந்த அனுபவம் உங்களுக்கு உண்டா? அப்போது, உலகின் உச்சியில் இருப்பது போன்ற உணர்வு உங்களுக்கு ஏற்பட்டிருக்கலாம். சுத்தமான காற்றை சுவாசித்து, தொலைதூர காட்சிகளைக் கண்டு, இயற்கையில் கொட்டிக் கிடக்கும் அழகை ரசிப்பதில்தான் எத்தனை ஆனந்தம்! ஒருவேளை கீழே விட்டுவந்த உலகின் அன்றாட கவலைகளெல்லாம் அப்போது பெரியதாக தோன்றியிருக்காது.
பெரும்பாலோருக்கு இப்படிப்பட்ட இன்பப் பயணங்கள் அரிதாகவே கிடைக்கின்றன. ஆனால், நீங்கள் ஒப்புக்கொடுத்த கிறிஸ்தவராக இருந்தால், ஆன்மீக ரீதியில் இப்படிப்பட்ட ஒரு மலைப் பகுதியில் நடப்பதற்கு ஒப்பான வாழ்க்கை பாதையில் சென்றுகொண்டிருப்பீர்கள். பூர்வ சங்கீதக்காரனைப் போலவே நீங்களும் இவ்வாறு ஜெபித்திருக்கலாம்: “கர்த்தாவே, உம்முடைய வழிகளை எனக்குத் தெரிவியும்; உம்முடைய பாதைகளை எனக்குப் போதித்தருளும்.” (சங்கீதம் 25:4) முதல் தடவையாக யெகோவாவின் ஆலயமாகிய பர்வதத்திற்குச் சென்று உயரமான பகுதிகளில் நடக்க ஆரம்பித்தபோது எப்படி உணர்ந்தீர்கள் என்பது உங்களுக்கு நினைவிருக்கிறதா? (மீகா 4:2; ஆபகூக் 3:19) மெய் வணக்கத்தின் உன்னதமான பாதைகளில் நடப்பது பாதுகாப்பையும் சந்தோஷத்தையும் தந்ததை நீங்கள் சீக்கிரத்தில் புரிந்துகொண்டிருப்பீர்கள் என்பதில் சந்தேகமில்லை. சங்கீதக்காரனைப் போலவே பின்வருமாறு நீங்கள் உணர ஆரம்பித்திருப்பீர்கள்: “கெம்பீர சத்தத்தை அறியும் ஜனங்கள் பாக்கியமுள்ளவர்கள் [“சந்தோஷமுள்ளவர்கள்,” NW]; கர்த்தாவே, அவர்கள் உம்முடைய முகத்தின் வெளிச்சத்தில் நடப்பார்கள்.”—சங்கீதம் 89:15.
மலைப்பாங்கான பகுதிகளில் நடப்பவர்கள் சில சமயங்களில் நீண்ட, செங்குத்தான சரிவுகளில் கொஞ்சம் சிரமப்பட வேண்டியிருக்கும். அவர்கள் கால்கள் வலிக்கும், சோர்ந்துபோவார்கள். நாமும்கூட கடவுளுடைய சேவையில் கஷ்டங்களை அனுபவிக்கலாம். சமீப காலங்களில், அவ்வாறு நடப்பது நமக்கு கொஞ்சம் சிரமமாக இருந்திருக்கலாம். உற்சாகத்தையும் சந்தோஷத்தையும் எப்படி திரும்ப பெறலாம்? யெகோவாவின் வழிகளுடைய உன்னதத்தன்மையை புரிந்துகொள்வதே முதல் படி.
யெகோவாவின் உயர்ந்த சட்டங்கள்
யெகோவாவின் வழிகள் ‘மனிதனுடைய வழிகளைப் பார்க்கிலும் உயர்ந்தவை,’ அவருடைய வணக்கம், ‘பர்வதங்களின் கொடுமுடியில் ஸ்தாபிக்கப்பட்டு, மலைகளுக்கு மேலாய் உயர்த்தப்பட்டிருக்கிறது.’ (ஏசாயா 55:9; மீகா 4:1) யெகோவாவின் ஞானம், ‘பரத்திலிருந்து வருகிற ஞானம்.’ (யாக்கோபு 3:17) அவருடைய சட்டங்கள் எல்லாவற்றையும்விட மேலானவை. உதாரணமாக, பிள்ளைகளை பலிகொடுக்கும் கொடூரமான பழக்கத்தை கானானியர்கள் பின்பற்றியபோது, இஸ்ரவேலருக்கு யெகோவா கொடுத்த சட்டங்கள், ஒழுக்கப்பிரகாரமாக மேம்பட்டிருந்தன, அவை இரக்கத்துக்கு இடமளித்தன. அவர்களிடம் அவர் இவ்வாறு சொன்னார்: “சிறியவனுக்கு முகதாட்சிணியம் செய்யாமலும், பெரியவனுடைய முகத்துக்கு அஞ்சாமலும் [இருப்பாயாக] . . . அந்நியனைச் சுதேசிபோல எண்ணி, நீங்கள் உங்களில் அன்புகூருகிறது போல அவனிலும் அன்புகூருவீர்களாக.”—லேவியராகமம் 19:15, 34.
பதினைந்து நூற்றாண்டுகளுக்குப் பின்பு, யெகோவாவின் ‘மகத்தான சட்டங்களுக்கு’ இயேசு பல உதாரணங்களைக் கொடுத்தார். (ஏசாயா 42:21, NW) மலைப்பிரசங்கத்தில் சீஷர்களிடம் இவ்வாறு சொன்னார்: “உங்கள் சத்துருக்களைச் சிநேகியுங்கள்; . . . உங்களைத் துன்பப்படுத்துகிறவர்களுக்காகவும் ஜெபம் பண்ணுங்கள். இப்படிச் செய்வதினால் நீங்கள் பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதாவுக்குப் புத்திரராயிருப்பீர்கள்.” (மத்தேயு 5:44, 45) “ஆதலால், மனுஷர் உங்களுக்கு எவைகளைச் செய்ய விரும்புகிறீர்களோ, அவைகளை நீங்களும் அவர்களுக்குச் செய்யுங்கள்” என்றும், “இதுவே நியாயப்பிரமாணமும் தீர்க்கதரிசனங்களுமாம்” என்றும் சொன்னார்.—மத்தேயு 7:12.
இதற்குக் கீழ்ப்படிகிறவர்களின் இருதயங்களில் இந்த உயர்ந்த சட்டங்கள் மாற்றத்தை ஏற்படுத்துவதால் தாங்கள் வணங்கும் கடவுளை பின்பற்ற அவர்கள் தூண்டப்படுவார்கள். (எபேசியர் 5:1; 1 தெசலோனிக்கேயர் 2:13) பவுலின் வாழ்க்கையில் ஏற்பட்ட மாற்றத்தை நினைத்துப்பாருங்கள். முதன்முதலாக அவரைப் பற்றி பைபிள் குறிப்பிடுகையில் அவர் ஸ்தேவானை ‘கொலை செய்கிறதற்குச் சம்மதித்திருந்தார்’ என்றும் ‘சபையை பாழாக்கிக்கொண்டிருந்தார்’ என்றும்தான் வாசிக்கிறோம். சில ஆண்டுகளுக்குப்பின் பார்த்தால், “பால்கொடுக்கிற தாயானவள் தன் பிள்ளைகளைக் காப்பாற்றுகிறதுபோல” தெசலோனிக்கேயிலிருந்த கிறிஸ்தவர்களை கனிவாக நடத்தி வந்தார். கடவுளிடமிருந்து பெற்ற போதனை, ஒரு காலத்தில் துன்புறுத்துகிறவராக இருந்த பவுலை கரிசனையுள்ள கிறிஸ்தவராக மாற்றியிருந்தது. (அப்போஸ்தலர் 8:1, 3; 1 தெசலோனிக்கேயர் 2:7) கிறிஸ்துவின் போதனைகளால் அவருடைய குணங்கள் அடியோடு மாறிவிட்டதற்காக உண்மையிலேயே அவர் நன்றியுள்ளவராக இருந்தார். (1 தீமோத்தேயு 1:12, 13) இதே போன்ற நன்றியுணர்வு எப்படி கடவுளுடைய உயரிய பாதைகளில் தொடர்ந்து நடக்க நமக்கு உதவும்?
நன்றியுணர்வுடன் நடப்பது
மலையேறுபவர்கள் கண்ணைக் கவரும் காட்சிகளைக் காண்கையில் பிரமிப்பில் பூரிப்பர். விநோதமான பாறை, அழகிய மலர், காட்டு விலங்கின் கணநேர காட்சி என வழிநெடுகிலும் காண கிடைக்கும் சின்னஞ்சிறிய காரியங்களில் மனம் லயிக்கவும் கற்றுக்கொள்கிறார்கள். அவ்வாறே ஆன்மீக ரீதியிலும், கடவுளோடு நடக்கையில் கிடைக்கும் பெரிய மற்றும் சிறிய ஆசீர்வாதங்களை கண்டுணர விழிப்புடன் இருக்க வேண்டும். இந்த உணர்வு நமக்கிருந்தால், புதுத் தெம்புடன் துள்ளிக் குதிப்போம்; கெந்தி நடக்காமல் வீறுநடை போடுவோம். தாவீதின் பின்வரும் வார்த்தைகளை நாமும் திரும்பச் சொல்வோம்: “அதிகாலையில் உமது கிருபையைக் கேட்கப்பண்ணும், உம்மை நம்பியிருக்கிறேன், நான் நடக்க வேண்டிய வழியை எனக்குக் காண்பியும்.”—சங்கீதம் 143:8.
பல வருடங்களாக யெகோவாவின் பாதைகளில் நடந்துவரும் மேரி இவ்வாறு சொல்கிறார்கள்: “யெகோவாவின் படைப்பை பார்க்கும்போது, அதன் சிக்கலான வடிவமைப்பை மட்டுமே பார்ப்பதில்லை, அதில் கடவுளுடைய அன்பான ஆளுமையைப் பார்க்கிறேன். விலங்கு, பறவை, பூச்சி என எதுவாக இருந்தாலும் ஒவ்வொன்றுமே ஒரு குட்டி உலகம், ஆச்சரியங்கள் நிறைந்த உலகம். வருடங்கள் செல்லச் செல்ல இன்னும் தெளிவாகிவரும் ஆன்மீக சத்தியங்கள்கூட அதைப் போன்ற மகிழ்ச்சியையே தருகின்றன.”
நம் போற்றுதலை எவ்வாறு இன்னும் வளர்க்கலாம்? யெகோவா நமக்கு செய்பவற்றை அசட்டை செய்யாமல் இருப்பதன் மூலம் ஒரு விதத்தில் போற்றுதல் காட்டலாம். “இடைவிடாமல் ஜெபம் பண்ணுங்கள்” என்று பவுல் எழுதினார். “எல்லாவற்றிலேயும் ஸ்தோத்திரஞ் செய்யுங்கள்.”—1 தெசலோனிக்கேயர் 5:17, 18; சங்கீதம் 119:62.
நன்றியுணர்வை வளர்த்துக்கொள்ள தனிப்பட்ட படிப்பு உதவுகிறது. கொலோசே கிறிஸ்தவர்களை பவுல் இவ்வாறு ஊக்கப்படுத்தினார்: ‘நீங்கள் அவரோடு [கிறிஸ்து இயேசுவோடு] ஒன்றித்து நடந்துவாருங்கள். . . . விசுவாசத்தில் உறுதிபெற்று நன்றிமிக்கவர்களாய்த் திகழுங்கள்.’ (கொலோசெயர் 2:6, 7, கத்.பை.) பைபிளை வாசிப்பதும் தியானிப்பதும் நம் விசுவாசத்தைப் பலப்படுத்தி அதன் ஆசிரியரிடம் நம்மை நெருங்கி வரச் செய்கிறது. ‘நன்றிமிக்கவர்களாய் திகழும்படி’ நம்மைத் தூண்டுவதற்கு அதன் பக்கத்துக்குப் பக்கம் பொக்கிஷங்கள் கொட்டிக் கிடக்கின்றன.
நம்முடைய சகோதரர்களோடு சேர்ந்து யெகோவாவை சேவிப்பதும், வழியை சுலபமாக்குகிறது. சங்கீதக்காரன் தன்னைப் பற்றி இவ்வாறு சொன்னார்: ‘உமக்குப் பயப்படுகிற அனைவருக்கும் நான் தோழன்.’ (சங்கீதம் 119:63) நாம் சந்தோஷமாக உணரும் சில சமயங்கள் கிறிஸ்தவ அசெம்பிளிகள் அல்லது நம்முடைய சகோதரர்களோடு இருக்கும் சமயங்கள். யெகோவாவும் அவருடைய உயரிய வழிகளுமே அருமையான உலகளாவிய ஒரு கிறிஸ்தவ குடும்பம் இருப்பதற்கு காரணமாக உள்ளன என்பதை நாம் மதித்துணருகிறோம்.—சங்கீதம் 144:15ஆ.
யெகோவாவின் உயரிய பாதைகளில் தொடர்ந்து முன்னேறுவதற்கு, போற்றுதலோடுகூட பொறுப்புணர்ச்சியும் நம்மைப் பலப்படுத்தும்.
பொறுப்புணர்ச்சியுடன் நடப்பது
பொறுப்புணர்ச்சியுடன் மலையேறுபவர்கள், தாங்கள் வழிதவறிப் போய்விடாதிருக்கவும், செங்குத்தான பாறைச் சரிவுகளில் தவறிப் போய் காலை வைத்துவிடாதிருக்கவும் கவனமாக நடப்பது அவசியம் என்பதை உணர்கின்றனர். தெரிவு செய்யும் சுயாதீனம் நமக்கு இருப்பதால், யெகோவா ஓரளவு சுதந்திரத்தை நமக்கு கொடுத்திருக்கிறார்; நாமாகவே செயலாற்றவும் அனுமதி அளித்திருக்கிறார். ஆனால் நம்முடைய கிறிஸ்தவ பொறுப்புகளை நிறைவேற்றும்போது இந்த சுயாதீனத்தை பொறுப்புணர்ச்சியோடு பயன்படுத்த வேண்டும்.
உதாரணமாக, தமது ஊழியர்கள் தங்கள் கடமைகளை பொறுப்போடு செய்வார்கள் என்று அவர்கள் மீது யெகோவா நம்பிக்கை வைத்திருக்கிறார். கிறிஸ்தவ நடவடிக்கைகளில் எந்தளவுக்கு நம் சக்தியையும் நேரத்தையும் செலவிட வேண்டும் என்றோ பணமாகவோ மற்ற வழிகளிலோ எவ்வளவு நன்கொடைகள் தரவேண்டும் என்றோ அவர் சொல்வதில்லை. அதற்கு மாறாக, கொரிந்தியருக்கு பவுல் சொன்ன வார்த்தைகள் நம் அனைவருக்கும் பொருந்தும்: “அவனவன் தன் மனதில் நியமித்தபடியே கொடுக்கக்கடவன்.”—2 கொரிந்தியர் 9:7; எபிரெயர் 13:15, 16.
கிறிஸ்தவர்கள் பொறுப்புணர்ச்சியுடன் கொடுக்கும் விஷயத்தில் மற்றவர்களோடு நற்செய்தியை பகிர்ந்துகொள்வதும் அடங்கும். உலகளாவிய ராஜ்ய வேலைக்கு நன்கொடை அளிப்பதன் மூலமாகவும் நமக்கு பொறுப்பிருப்பதை காண்பிக்கிறோம். கிழக்கு ஐரோப்பாவில் நடந்த ஒரு அசெம்பிளிக்குச் சென்று வந்தபின் தானும் தன் மனைவியும் அதிகமாக நன்கொடை கொடுக்க தீர்மானித்ததை கெர்ஹார்ட் என்ற ஒரு மூப்பர் இவ்வாறு விவரிக்கிறார்: “அங்குள்ள நம் சகோதரர்கள் பொருளாதார ரீதியில் மிகவும் கஷ்டப்படுவதைப் பார்த்தோம்; இருந்தாலும் பைபிள் பிரசுரங்களிடம் அதிக போற்றுதல் காட்டினார்கள்; ஆகவே, மற்ற தேசங்களில் தேவையிலிருக்கும் நம் சகோதரர்களுக்கு எங்களால் முடிந்தவரை அதிகளவு ஆதரவு அளிக்க முடிவு செய்தோம்.”
நம் சகிப்புத்தன்மையை வளர்த்தல்
மலைப்பகுதிகளில் நடப்பவருக்கு உடல் வலிமை தேவை. மலையேறுபவர்கள் முடியும்போதெல்லாம் உடற்பயிற்சி செய்வர், பலர் நீண்ட பயணத்துக்கு தங்களைத் தயார்படுத்திக் கொள்வதற்காக குறுகிய தூரம் நடந்து நடந்து பழக்கப்படுத்திக்கொள்வர். அதேவிதமாகவே, நம்முடைய ஆன்மீக நலனைக் காத்துக்கொள்வதற்கு தேவராஜ்ய நடவடிக்கைகளில் நம்மைச் சுறுசுறுப்பாக வைத்துக்கொள்ள வேண்டும் என்று பவுல் சிபாரிசு செய்தார். ‘கர்த்தருக்குப் பாத்திரராய் நடந்துகொண்டு’ ‘பலப்படுத்தப்பட’ விரும்புகிறவர்கள் “சகலவித நற்கிரியைகளுமாகிய கனிகளைத்” தரவேண்டும் என்று பவுல் கூறினார்.—கொலோசெயர் 1:10, 11.
மலையில் நடந்துசெல்பவருக்கு உந்துதல் இருந்தால்தான் சகித்திருக்க முடியும். எப்படி? தூரத்தில் தெரியும் ஒரு மலையை அடைவது போன்ற ஒரு தெளிவான குறிக்கோளை எட்டுவதற்கு முக்கியத்துவம் கொடுத்தால், அவருக்குள் ஒருவித உந்துதல் கிடைக்கும். வழியில் காணப்படும் முக்கிய இடங்களைக் கடந்து செல்லும்போது, கடைசியாக தன் இலக்கை எட்டுவதற்கு இன்னும் எவ்வளவு தூரம் செல்ல வேண்டும் என்பதை அவரால் கணக்கிட முடியும். ஏற்கெனவே கடந்து வந்த தூரத்தை எண்ணிப் பார்க்கும்போது அவருக்கு மனநிறைவு ஏற்படுகிறது.
அதேவிதமாகவே, நித்திய ஜீவ நம்பிக்கை, நம்மைக் காத்து, முன்னேறச் செய்கிறது. (ரோமர் 12:12) அதற்கிடையில், யெகோவாவின் வழிகளில் நடக்கையில், கிறிஸ்தவ இலக்குகளை வைப்பதிலும் அதை அடைவதிலும் திருப்தி காண்போம். உண்மையுடன் நாம் சேவித்திருக்கும் பல வருடங்களை எண்ணிப் பார்க்கையில் அல்லது நம்முடைய குணாதிசயத்தில் செய்திருக்கும் மாற்றங்களைக் காண்கையில் நாம் எவ்வளவாய் பூரித்துப் போகிறோம்!—சங்கீதம் 16:11.
நீண்ட தூர பயணம் செய்யவும் சக்தியை பாதுகாத்துக் கொள்ளவும் நடந்துசெல்பவர்கள் ஒரே சீராக நடப்பார்கள். அதே விதமாகவே, தவறாமல் கூட்டங்களுக்குச் செல்வதையும் வெளி ஊழியத்தில் கலந்துகொள்வதையும் பழக்கமாக்கிக்கொள்வது, நம்முடைய இலக்கை நோக்கி முன்னேற உதவும். இதனால் பவுல் சக கிறிஸ்தவர்களை இவ்வாறு ஊக்கப்படுத்தினார்: “ஒரே ஒழுங்காய் நடந்துகொண்டு, ஒரே சிந்தையாயிருப்போமாக.”—பிலிப்பியர் 3:16.
யெகோவாவின் பாதைகளில் நாம் தன்னந்தனியாக நடப்பதில்லை. “அன்புக்கும் நற்கிரியைகளுக்கும் நாம் ஏவப்படும்படி ஒருவரையொருவர் கவனி”ப்போமாக என்று பவுல் எழுதுகிறார். (எபிரெயர் 10:24) நல்ல ஆன்மீக கூட்டுறவு, சக விசுவாசிகளோடு சேர்ந்து சீரான வேகத்தில் செல்வதை சுலபமாக்கும்.—நீதிமொழிகள் 13:20.
கடைசியாக, மிகவும் முக்கியமானது யெகோவா நமக்கு சக்தி அளிப்பதை ஒருபோதும் மறக்காமல் இருப்பது. யெகோவாவில் பெலன்கொள்ளுகிற மனுஷர் “பலத்தின்மேல் பலம் அடை”வர். (சங்கீதம் 84:5, 7) சில சமயங்களில் கரடுமுரடான வாழ்க்கைப் பாதையில் நாம் பயணம் செய்ய நேர்ந்தாலும், யெகோவாவின் உதவியோடு அதை கடந்து செல்ல முடியும்.