வாழ்க்கை சரிதை
நம் உலகளாவிய சகோதரத்துவத்தால் பலம் பெற்றேன்
தாம்ஸன் காங்காலா சொன்னபடி
வருடம் 1993, ஏப்ரல் மாதம் 24-ஆம் தேதி. ஜாம்பியாவிலுள்ள, லுஸாகாவில் 13 கட்டடங்கள் அடங்கிய புதிய கிளை அலுவலக பிரதிஷ்டை நிகழ்ச்சியில் கலந்துகொள்ள எனக்கு அழைப்பு வந்தது. எனக்கு நடப்பதில் சிரமம் இருந்ததால், அலுவலகத்தைச் சுற்றிக்காட்ட எங்களோடு வந்த கிறிஸ்தவ சகோதரி “இடையிடையே நீங்கள் உட்கார்ந்துகொள்வதற்கு வசதியாக ஒரு நாற்காலியை உங்களுக்காக நான் எடுத்துவரவா?” என்று தயவாக கேட்டார்கள். நான் கறுப்பர் இனத்தைச் சேர்ந்தவன். அந்தச் சகோதரியோ வெள்ளை இனத்தைச் சேர்ந்தவர்கள். ஆனால் அதெல்லாம் அவர்களுக்கு முக்கியமாய் இருக்கவில்லை. நான் மிகவும் நெகிழ்ந்து போய் அவர்களுக்கு நன்றி சொன்னேன், ஏனென்றால் அவர்களுடைய தயவால்தான் முழு வளாகத்தையும் என்னால் சுற்றிப் பார்க்க முடிந்தது.
இதுபோல என் இதயத்தைத் தொட்ட அனுபவங்கள் ஆண்டாண்டு காலங்களில் எத்தனை எத்தனையோ! யெகோவாவின் சாட்சிகளுடைய கிறிஸ்தவ கூட்டுறவில், தம்மை உண்மையுடன் பின்பற்றுகிறவர்களின் அடையாளம் என்று கிறிஸ்து குறிப்பிட்ட அந்த அன்பு இருப்பதை உறுதி செய்த அனுபவங்கள் அவை. (யோவான் 13:35; 1 பேதுரு 2:17) 1931-ல் இந்தக் கிறிஸ்தவர்களோடு எனக்கு எப்படி பழக்கம் ஏற்பட்டது என்பதை நான் சொல்கிறேன். பைபிள் அடிப்படையில் யெகோவாவின் சாட்சிகள் என்ற பெயரால் அறியப்பட விரும்பியதை அவர்கள் பகிரங்கமாக அறிவித்த வருடம் அது.—ஏசாயா 43:12.
ஆப்பிரிக்காவில் ஆரம்ப கால ஊழியம்
நவம்பர் 1931-ல், எனக்கு 22 வயது. நான் வட ரோடீஷியாவின் (இப்போது ஜாம்பியா) காப்பர்பெல்ட் பகுதியில் அமைந்துள்ள கீட்வேயில் வாழ்ந்து வந்தேன். என்னோடு கால்பந்தாட்டம் ஆடிய நண்பன்தான் எனக்கு சாட்சிகளை அறிமுகம் செய்து வைத்தான். அவர்கள் நடத்தும் சில கூட்டங்களுக்கு சென்றேன், த ஹார்ப் ஆஃப் காட்a என்ற புத்தகத்திலிருந்து எனக்கு பைபிள் படிப்பை நடத்துமாறு தென் ஆப்பிரிக்காவில் கேப் டவுனிலுள்ள கிளை அலுவலகத்துக்கு கடிதம் எழுதினேன். புத்தகம் ஆங்கிலத்தில் இருந்தது, எனக்கு ஆங்கிலம் நன்றாக தெரியாததால் அதைப் புரிந்துகொள்வது கஷ்டமாக இருந்தது.
இந்த காப்பர்பெல்ட் பகுதி, பாங்விலு ஏரியின் தென்மேற்கில் சுமார் 240 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது. இந்தப் பகுதிக்கு அருகில்தான் நான் வளர்ந்தேன். இங்குள்ள தாமிர சுரங்கங்களில் வேலை செய்ய மற்ற மாநிலங்களிலிருந்து நிறைய பேர் வந்திருந்தார்கள். இங்கே சாட்சிகள் அநேக தொகுதிகளாக ஒன்றுகூடி தவறாமல் பைபிள் படித்து வந்தார்கள். கொஞ்ச நாட்களுக்குப்பின், கீட்வேக்கு அருகிலிருந்த நதோலா நகருக்குச் சென்று அங்கிருந்த சாட்சிகளோடு கூட்டுறவு கொள்ள ஆரம்பித்தேன். அந்தச் சமயத்தில் பிரின்ஸ் ஆஃப் வேல்ஸ் என்றழைக்கப்பட்ட கால்பந்தாட்ட குழுவுக்கு நான் கேப்டனாக இருந்தேன். மத்திய ஆப்பிரிக்காவில் பல வியாபார ஸ்தலங்களை ஸ்தாபித்திருந்த ஆஃப்பிரிக்கன் லேக் கார்ப்பரேஷன் என்ற கம்பெனி மேனேஜரின் (வெள்ளையர்) வீட்டில் வேலை செய்து வந்தேன்.
படிப்பு சுமார்தான். ஐரோப்பியர்களிடம் வேலை பார்த்ததால் கொஞ்சம் ஆங்கிலம் கற்றுக்கொண்டேன். ஆனாலும் மேற்கொண்டு படிக்க ஆர்வம் இருந்ததால் தென் ரோடீஷியாவில் (இப்போது ஜிம்பாப்வே) ப்ளம்ட்ரீயிலுள்ள ஒரு பள்ளிக்கு விண்ணப்பத்தை அனுப்பினேன். ஆனால், இதற்கிடையில் கேப் டவுன் கிளை அலுவலகத்துக்கு இரண்டாவது முறை கடிதம் எழுதினேன். அதில், த ஹார்ப் ஆஃப் காட் புத்தகத்தைப் பெற்றுக்கொண்டதையும் யெகோவாவை முழுநேரமாக சேவிக்க விரும்புவதையும் தெரிவித்தேன்.
அவர்களிடமிருந்து பின்வரும் பதிலைப் பெற்றபோது எனக்கு ஆச்சரியம் தாளவில்லை: “யெகோவாவை சேவிக்க நீங்கள் விரும்புவதை நாங்கள் பாராட்டுகிறோம். அதைக் குறித்து ஜெபிக்கும்படி நாங்கள் உங்களை உற்சாகப்படுத்துகிறோம். சத்தியத்தை நன்றாக புரிந்துகொள்ள யெகோவா உங்களுக்கு உதவி செய்வார். அவரை சேவிக்கும்படி உங்களுக்கு ஓரிடத்தை அவர் காண்பிப்பார்.” திரும்பத் திரும்ப பல தடவை அந்தக் கடிதத்தைப் படித்தப்பின், நான் என்ன செய்ய வேண்டும் என்று பல சாட்சிகளிடம் கேட்டேன். “யெகோவாவை சேவிப்பதே உண்மையில் உங்கள் ஆசையாக இருந்தால், இப்போதே அதைச் செய்யுங்கள்” என அவர்கள் சொன்னார்கள்.
ஒரு வாரம் முழுவதுமாக நான் இதைக் குறித்து ஜெபித்தேன், கடைசியாக படிப்பை தொடரும் ஆசையை உதறித் தள்ளிவிட்டு சாட்சிகளோடு பைபிள் படிப்பைத் தொடர்ந்தேன். அடுத்த ஆண்டு, அதாவது 1932 ஜனவரியில், யெகோவா தேவனுக்கு செய்திருந்த ஒப்புக்கொடுத்தலுக்கு அடையாளமாக தண்ணீர் முழுக்காட்டுதல் பெற்றேன். நதோலாவுக்கு அருகிலிருந்த லுவான்ஷாவுக்கு நான் இடம் மாறியபோது, விசுவாசியாக இருந்த ஜெனட்டை சந்தித்தேன், நாங்கள் 1934 செப்டம்பரில் திருமணம் செய்துகொண்டோம். எங்கள் திருமணத்தின் போது ஜெனட்டுக்கு ஏற்கெனவே ஒரு மகனும் மகளும் இருந்தார்கள்.
படிப்படியாக ஆன்மீகத்தில் முன்னேறினேன், 1937-ல் நான் முழுநேர ஊழியத்தை ஆரம்பித்தேன். அதற்கு சற்று பின்னர், இப்போது வட்டாரக் கண்காணி என்றழைக்கப்படும் பிரயாண ஊழியராக சேவிக்கும்படியான நியமனத்தைப் பெற்றேன். பிரயாணக் கண்காணிகள் யெகோவாவின் சாட்சிகளை ஆன்மீகத்தில் பலப்படுத்துவதற்காக அவர்களுடைய சபைகளை சந்திக்கிறார்கள்.
ஆரம்ப கால பிரசங்கிப்பு
ஜனவரி 1938-ல் சோக்கோநிட்வி என்ற பெயருள்ள ஒரு ஆப்பிரிக்க கிராமத் தலைவரைப் போய்ச் சந்திக்கும்படி கேட்டுக் கொள்ளப்பட்டேன். இவர் யெகோவாவின் சாட்சிகள் தன்னை வந்து சந்திக்கும்படி கேட்டுக்கொண்டிருந்தார். அவர் இருந்த இடத்தை அடைய மூன்று நாட்கள் சைக்கிளில் பிரயாணம் செய்தேன். கேப் டவுன் அலுவலகத்திற்கு அவர் அனுப்பியிருந்த கடிதத்தில் கேட்டுக்கொண்டதன்படி நான் அங்கு வந்திருப்பதை அவரிடம் சொன்னபோது மனதார நன்றி சொன்னார்.
அந்தப் பகுதியில் குடிசை குடிசையாக சென்று, இன்ஸாகா (பப்ளிக் பூத்) எனப்படும் ஒரு பொதுவான இடத்துக்கு வரும்படி மக்களை அழைத்தேன். பிறகு வந்திருந்த கூட்டத்தாரிடம் பேசினேன். இதனால் அநேக பைபிள் படிப்புகள் ஆரம்பிக்கப்பட்டன. அந்த கிராமத் தலைவரும் அவருடைய குமாஸ்தாவும்தான் அங்கிருந்த சபைகளில் முதன் முதலில் கண்காணிகள் ஆனார்கள். இன்று அந்தப் பகுதியில் 50-க்கும் மேற்பட்ட சபைகள் உள்ளன. அது இப்போது சாம்ஃபியா மாவட்டம் என்றழைக்கப்படுகிறது.
1942 முதல் 1947 வரை, பாங்விலு ஏரியைச் சுற்றியுள்ள பகுதியில் ஊழியம் செய்து வந்தேன். ஒவ்வொரு சபையிலும் பத்து நாட்கள் செலவிட்டேன். அந்தச் சமயத்தில், ஆவிக்குரிய அறுவடையில் வெகு சிலரே ஈடுபட்டிருந்தனர்; “அறுப்பு மிகுதி, வேலையாட்களோ கொஞ்சம்; ஆதலால், அறுப்புக்கு எஜமான் தமது அறுப்புக்கு வேலையாட்களை அனுப்பும்படி அவரை வேண்டிக்கொள்ளுங்கள்” என சொன்னபோது நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து உணர்ந்த விதமாகவே நாங்களும் உணர்ந்தோம். (மத்தேயு 9:36-38) அந்தக் காலத்தில் பிரயாணம் செய்வது மிகவும் கடினம், ஆகவே சபைகளை சந்திக்க செல்லுகையில் ஜெனட் பொதுவாக பிள்ளைகளோடு தங்கிவிடுவாள். அதற்குள் ஜெனட்டுக்கும் எனக்கும் இன்னும் இரண்டு பிள்ளைகள் பிறந்திருந்தன. ஆனால் அப்பிள்ளைகளில் ஒன்று பத்து மாதங்களில் இறந்துபோனது.
அந்தக் காலத்தில் வாகன வசதியும் அந்தளவுக்கு இல்லை, சாலை வசதிகளும் அதிகமாக இல்லை. ஒரு நாள் ஜெனட்டின் சைக்கிளில் 200 கிலோமீட்டருக்கும் அதிக தூர பிரயாணத்தை ஆரம்பித்தேன். சில சமயங்களில் சிறிய ஆற்றைக் கடக்கையில், தோள்களின்மேல் சைக்கிளை போட்டுக்கொண்டு, அதை ஒரு கையால் பிடித்துக்கொண்டு மற்றொரு கையால் நீந்திச் செல்வேன். லுவான்ஷாவில் சாட்சிகளின் எண்ணிக்கை கிடுகிடுவென அதிகரித்தது, 1946-ல் 1,850 பேர் கிறிஸ்துவின் மரண நினைவு ஆசரிப்புக்கு வந்திருந்தார்கள்.
எங்கள் வேலைக்கு எதிர்ப்பு
இரண்டாம் உலகப் போரின்போது ஒரு சமயம், காவாம்புவாவில் மாவட்ட கமிஷனர் என்னை அழைத்து, “உவாட்ச் டவர் சொஸைட்டியின் புத்தகங்கள் இப்போது தடை செய்யப்பட்டிருப்பதால், அதைப் பயன்படுத்துவதை நீங்கள் உடனடியாக நிறுத்தியாக வேண்டும். ஆனால் உங்களுடைய ஊழியத்தில் பயன்படுத்த வேறு புத்தகங்களை எழுதுவதற்குத் தேவையான ஆய்வுக் குறிப்புகளை நான் தருகிறேன்” என்று சொன்னார்.
“எங்களிடம் இருக்கும் பிரசுரங்களே எனக்குப் போதும், வேறு எதுவும் வேண்டாம்” என்று பதிலளித்தேன்.
“அமெரிக்கர்களைப் பற்றி உனக்குத் தெரியாது.” (அப்போது நம்முடைய பிரசுரங்கள் ஐக்கிய மாகாணங்களில் அச்சிடப்பட்டன.) “அவர்கள் உங்களை ஏமாற்றிவிடுவார்கள்.”
“எனக்குத் தெரிந்தவர்கள் அப்படி செய்ய மாட்டார்கள்” என்று பதிலளித்தேன்.
அதற்குப் பின், “மற்ற மதங்களைப் போல் போருக்கு நிதி திரட்டும்படி உங்கள் சபைகளில் உள்ளவர்களை ஏன் உற்சாகப்படுத்தக்கூடாது?” என அவர் கேட்டார்.
“அது அரசாங்க ஊழியர்களின் வேலை” என்று பதில் சொன்னேன்.
“நீ வீட்டுக்குப் போய் இதைப் பற்றி யோசித்துப் பார்” என்று அவர் சொன்னார்.
“யாத்திராகமம் 20:13, 2 தீமோத்தேயு 2:24 ஆகிய வசனங்களில் கொலை செய்யவும் சண்டை போடவும் கூடாது என்று பைபிள் எங்களுக்கு கட்டளையிடுகிறது” என்று சொன்னேன்.
என்னை போகும்படி விட்டுவிட்டார்கள். ஆனால் அதற்குப் பிறகு இப்போது மான்ஸா என்றழைக்கப்படும் ஃபோர்ட் ரோஸ்பெரி என்ற பட்டணத்தின் மாவட்ட கமிஷனர் என்னை அழைத்தார். “உங்கள் புத்தகங்களை அரசாங்கம் தடை செய்திருப்பதை தெரிவிப்பதற்காகவே அழைத்தேன்” என்று அவர் சொன்னார்.
“ஆம், அதை நான் கேள்விப்பட்டேன்” என்று சொன்னேன்.
“ஆகவே உங்களுடைய எல்லா சபைகளுக்கும் சென்று உங்கள் வணக்கத்தார் அனைவரும் தங்களிடமுள்ள எல்லா புத்தகங்களையும் இங்கு கொண்டுவந்து தரும்படி சொல்ல வேண்டும், என்ன புரிகிறதா?” என்றார்.
“அது என்னுடைய வேலை இல்லை. அரசாங்க ஊழியர்களின் வேலை” என்றேன்.
தற்செயல் சந்திப்பு தந்த பலன்
போர் முடிந்த பின்பு நாங்கள் தொடர்ந்து பிரசங்கித்துக் கொண்டிருந்தோம். 1947-ல், முவான்ஸா என்ற கிராமத்திலிருந்த சபையில் சந்திப்பை முடித்துவிட்டு ஒரு கப் டீ எங்கே கிடைக்கும் என்று விசாரித்தேன். நிகோண்டீ என்பவருடைய வீட்டில் டீ கடை இருந்ததால் அங்கே போகும்படி சொன்னார்கள். அங்கு சென்றபோது அவரும் அவருடைய மனைவியும் என்னை அன்பாக வரவேற்றார்கள். நான் டீ குடிக்கையில் “நரகம், நம்பிக்கையோடு இளைப்பாறுவதற்குரிய இடம்” என்ற தலைப்புள்ள அதிகாரத்தை “கடவுள் சத்தியபரர்” என்ற ஆங்கில புத்தகத்திலிருந்து நிகோண்டீயை சப்தமாக வாசிக்கும்படி சொன்னேன்.
டீ குடித்து முடித்தப்பின், “இப்போது நரகம் என்ன என்பது புரிகிறதா?” என்று கேட்டேன். அவர் வாசித்த விஷயம் அவருக்கு ஆச்சரியத்தை அளித்தது, சாட்சிகளோடு சேர்ந்து பைபிளை படிக்க ஆரம்பித்தார், பின்பு அவரும் அவருடைய மனைவியும் முழுக்காட்டுதல் பெற்றார்கள். அவர் கடைசி வரை சாட்சியாக நிலைத்திருக்கவில்லை, ஆனால் அவருடைய மனைவியும் பிள்ளைகளில் பலரும் இன்னும் சாட்சிகளே. பில்னீ என்ற அவருடைய மகள் ஒருத்தி இப்போது ஜாம்பியாவிலுள்ள கிளை அலுவலகத்தில் சேவை செய்து வருகிறாள். பில்னீயின் அம்மாவுக்கு இப்போது வயதாகிவிட்டாலும் அவர்கள் இன்னும் உண்மையுள்ள சாட்சியாக இருக்கிறார்கள்.
கொஞ்ச காலம் கிழக்கு ஆப்பிரிக்க வாசம்
லுஸாகாவில் 1948-ன் ஆரம்பத்தில் ஸ்தாபிக்கப்பட்ட வட ரோடீஷியாவிலுள்ள எங்கள் கிளை அலுவலகம், டாங்கனீகாவுக்கு (இப்போது டான்ஜானியா) செல்லும் நியமிப்பை எனக்கு கொடுத்தது. மலைப்பகுதியில் நடந்தே சென்ற எங்கள் பயணத்தின்போது ஒரு சாட்சியும் எங்களோடு வந்தார். மூன்று நாட்கள் பிரயாணம் செய்தோம், மிகவும் களைப்பாக இருந்தது. நான் புத்தகங்களையும், என்னுடைய மனைவி துணிமணிகளையும், எங்களோடு வந்த சாட்சி படுக்கையையும் தூக்கிக்கொள்ள நடந்தோம்.
மார்ச் 1948-ல் நாங்கள் எம்பேயாவுக்கு வந்தபோது, பைபிள் போதனைகளுக்கு இசைவாக முழுமையாக நடப்பதற்கு தேவையான சரிப்படுத்துதல்களைச் செய்வதற்கு சகோதரர்களுக்கு பெரும் உதவி தேவைப்பட்டது. ஒரு விஷயம் என்னவென்றால், அந்தப் பகுதியில் உள்ளவர்கள் எங்களை உவாட்ச்டவர் ஜனங்கள் என்று அழைத்தார்கள். யெகோவாவின் சாட்சிகள் என்ற பெயரை சகோதரர்கள் ஏற்றுக்கொண்டபோதிலும், அது பகிரங்கமாக சொல்லப்படவில்லை. அதோடு, மரித்தோரை கனம்பண்ணுவது சம்பந்தமாக சில சாட்சிகள் சில பழக்கவழக்கங்களை விட்டுவிடுவது அவசியமாக இருந்தது. ஆனால் எல்லாருக்கும் முன்பாக கனமுள்ளதாக்கும்படி தங்கள் திருமணத்தை சட்டப்பூர்வமாக பதிவு செய்வதே அநேகருக்கு மிகக் கஷ்டமாக இருந்தது.—எபிரெயர் 13:4.
அதற்குப் பின், உகாண்டா உட்பட கிழக்கு ஆப்பிரிக்காவில் மற்ற இடங்களிலும் சேவை செய்யும் பாக்கியம் எனக்கு கிடைத்தது. என்டீப்பிலும் கம்பாலாவிலும் சுமார் ஆறு வாரங்கள் தங்கினேன், இங்கு பலரும் பைபிள் சத்தியத்தை கற்றுக்கொள்ள உதவ முடிந்தது.
நியூ யார்க் நகருக்கு அழைப்பு
உகாண்டாவில் கொஞ்ச காலம் சேவை செய்த பின்பு, டாங்கனீகாவின் தலைநகரான டாரெஸ் ஸாலாமுக்கு 1956-ன் ஆரம்பத்தில் வந்து சேர்ந்தேன். யெகோவாவின் சாட்சிகளுடைய தலைமை அலுவலகத்திலிருந்து எனக்கு ஏற்கெனவே ஒரு கடிதம் வந்திருந்தது. 1958 ஜூலை 27 முதல் ஆகஸ்ட் 3 வரை நடைபெற இருந்த சர்வதேச மாநாட்டில் கலந்துகொள்ள நியூ யார்க்குக்கு வரும்படி அதில் சொல்லப்பட்டிருந்தது. அதை படித்தவுடன் நான் அடைந்த ஆனந்தத்துக்கு அளவே இல்லை.
அந்த நாளும் வந்தது; லூக்கா முவாங்கோ என்ற மற்றொரு பிரயாண கண்காணியும் நானும் நதோலாவிலிருந்து தெற்கு ரோடீஷியாவிலுள்ள சாலிஸ்பெரிக்கும் (இப்போது ஹராரே) அங்கிருந்து கென்யாவிலுள்ள நைரோபிக்கும் விமானத்தில் பறந்தோம். அங்கிருந்து இங்கிலாந்திலுள்ள லண்டனுக்கு விமானம் ஏறினோம். இங்கிலாந்தில் எங்களுக்கு கனிவான வரவேற்பு கிடைத்தது. இங்கிலாந்துக்கு வந்து சேர்ந்து இரவு படுக்க சென்ற போது, கறுப்பர்களாகிய எங்களுக்கு வெள்ளையர்கள் கொடுத்த வரவேற்பை எண்ணி எண்ணி மகிழ்ந்து அதைப் பற்றியே பேசிக்கொண்டிருந்தோம். அந்த அனுபவம் எங்களை மிகவும் உற்சாகப்படுத்திவிட்டது.
கடைசியாக மாநாடு நடைபெற்ற நியூ யார்க் நகரத்துக்கு வந்து சேர்ந்தோம். மாநாட்டில் ஒரு நாள், வட ரோடீஷியாவில் நடைபெறும் யெகோவாவின் சாட்சிகளுடைய ஊழியத்தைப் பற்றிய அறிக்கையை நான் கொடுத்தேன். அன்று நியூ யார்க் நகரின் போலோ மைதானத்திலும் யாங்கி ஸ்டேடியத்திலும் சுமார் 2,00,000 பேர் கூடியிருந்தார்கள். கிடைத்த வாய்ப்பை எண்ணி மகிழ்ச்சியில் திளைத்தபடியே இருந்ததால் எனக்கு அன்று தூக்கமே வரவில்லை.
மாநாடு முடிந்து நாங்கள் வீடு திரும்பினோம். வீடு திரும்பும் பிரயாணத்தின்போது மறுபடியும் இங்கிலாந்திலுள்ள நம்முடைய சகோதர சகோதரிகளின் அன்பான உபசரிப்பை அனுபவித்து மகிழ்ந்தோம். இனம், தேசம் என்ற எந்த பேதமும் இல்லாத ஒற்றுமையை யெகோவாவின் சாட்சிகள் மத்தியில் அந்தப் பயணத்தின்போது கண்ணாரக் கண்டதை எங்களால் மறக்கவே முடியாது!
தொடர்ந்த ஊழியமும் எதிர்ப்பட்ட சோதனைகளும்
1967-ல், மாவட்ட ஊழியராக—வட்டாரத்திலிருந்து வட்டாரத்துக்கு பிரயாணம் செய்யும் ஒரு ஊழியராக—நியமிக்கப்பட்டேன். அப்போது ஜாம்பியாவில் சாட்சிகளின் எண்ணிக்கை 35,000-க்கும் மேலாகிவிட்டது. உடல் நலக்குறைவால், மறுபடியுமாக வட்டார கண்காணியாக காப்பர்பெல்ட் பகுதிக்கு நியமிக்கப்பட்டேன். கடைசியாக, டிசம்பர் 1984-ல் ஜெனட்டுக்கு உடல்நல பிரச்சினைகள் ஏற்பட்டன; கடைசி வரை யெகோவாவுக்கு உண்மையுள்ளவளாக இருந்து அவள் மரித்தாள்.
அவளுடைய மரணத்துக்குப்பின், ஏதோ பில்லிசூனியம் வைத்து அவளை நான் கொன்றுவிட்டதாக ஜெனட்டின் குடும்பத்தார் குற்றம் சாட்டியபோது மிகவும் வேதனைப்பட்டேன். ஆனால் ஜெனட்டின் நோய் பற்றி அறிந்திருந்தவர்களும், அவளுக்கு சிகிச்சை அளித்த டாக்டரோடு பேசியவர்களும் உண்மையை இந்த உறவினர்களுக்கு விளக்கிச் சொன்னார்கள். அடுத்து மற்றொரு சோதனை வந்தது. உறவினர்கள் சிலர் உக்குபயானிக்கா என்றழைக்கப்படும் ஒரு பாரம்பரிய பழக்கத்தைப் பின்பற்றும்படி சொன்னார்கள். எங்கள் ஊர் வழக்கத்தின்படி, மணத்துணை மரிக்கையில், உயிரோடிருப்பவர் மரித்தவரின் ஒரு நெருங்கிய உறவினருடன் உடலுறவு கொள்ள வேண்டும். என்னால் அதை செய்யவே முடியாது என்று அடித்துச் சொல்லிவிட்டேன்.
ஒருவழியாக உறவினரின் தொல்லைகள் ஓய்ந்தன. உறுதியாக இருப்பதற்கு எனக்கு உதவியதற்காக யெகோவாவுக்கு நன்றி சொல்லுகிறேன். என்னுடைய மனைவியின் சவ அடக்கம் முடிந்து ஒரு மாதத்திற்குப் பின்பு, ஒரு சகோதரர் என்னிடம் வந்து இவ்வாறு கூறினார்: “சகோதரர் காங்காலா, உங்கள் மனைவி மரித்தபோது நீங்கள் நடந்துகொண்ட விதம் உண்மையில் எங்களை மிகவும் உற்சாகப்படுத்தியது. ஏனென்றால், எந்தவொரு பாரம்பரிய பழக்கத்திற்கும் நீங்கள் இடம்கொடுக்கவில்லை. உங்களுக்கு நாங்கள் ரொம்பவே நன்றி சொல்ல வேண்டும்.”
மகத்தான அறுவடை
யெகோவாவின் சாட்சிகளில் ஒருவராக முழுநேர ஊழியத்தை ஆரம்பித்து இப்போது 65 வருடங்கள் ஆகின்றன. ஒரு காலத்தில் நான் பிரயாண கண்காணியாக சேவித்த இடங்களில் இப்போது நூற்றுக்கணக்கான புதிய சபைகள் உருவாவதையும் அநேக ராஜ்ய மன்றங்கள் கட்டப்படுவதையும் காண்பது எப்பேர்ப்பட்ட சந்தோஷத்தை கொடுத்திருக்கிறது! ஜாம்பியாவில் சுமார் 2,800 சாட்சிகளே 1943-ல் இருந்தனர், இப்போது 1,22,000-க்கும் அதிகமான ராஜ்ய அறிவிப்பாளர்கள் இருக்கிறோம். ஆம், கடந்த வருடம் சுமார் ஒரு கோடியே பத்து லட்சம் மக்கள் தொகையை பெற்றிருந்த இந்த நாட்டில் 5,14,000-க்கும் மேற்பட்டவர்கள் நினைவு ஆசரிப்புக்கு வந்திருந்தார்கள்.
இதற்கிடையில் யெகோவா என்னை நல்ல விதமாக கவனித்து வருகிறார். மருத்துவ கவனிப்பு தேவைப்படும்போது கிறிஸ்தவ சகோதரர் ஒருவர் என்னை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்கிறார். சபைகள் பொதுப் பேச்சு கொடுக்கும்படி இன்னமும் என்னை அழைக்கின்றன, இவையெல்லாம் எனக்கு அதிக உற்சாகமளிக்கும் சந்தர்ப்பங்கள். என்னுடைய சபையிலுள்ள சகோதரிகள் ஒருத்தர் மாற்றி ஒருத்தர் தவறாமல் வந்து என் வீட்டை சுத்தம் செய்து தருகிறார்கள், சகோதரர்கள் ஒவ்வொரு வாரமும் என்னை வந்து கூட்டங்களுக்கு அழைத்துச் செல்கிறார்கள். நான் யெகோவாவை சேவிக்காவிட்டால் இந்த அன்பான கவனிப்பெல்லாம் எனக்கு கிடைத்திருக்காது என்பது தெரியும். என்னை முழுநேர ஊழியத்தில் தொடர்ந்து பயன்படுத்தி வருவதற்காகவும் இப்போது வரையாக எனக்குக் கிடைத்திருக்கும் பல்வேறு பொறுப்புகளுக்காகவும் நான் அவருக்கு நன்றிக் கடன்பட்டிருக்கிறேன்.
கண்பார்வை மங்கிவிட்டது. இடையிடையே நின்று நின்றுதான் ராஜ்ய மன்றத்துக்கு நடந்து செல்ல முடிகிறது. என்னுடைய புத்தக பை இப்போதெல்லாம் எனக்கு ரொம்ப கனக்கிறது. கூட்டத்தில் எனக்கு தேவைப்படாத புத்தகங்களை எடுத்து வைத்துவிட்டு அதன் கனத்தைக் குறைத்துக் கொள்கிறேன். சிலர் என்னுடைய வீட்டிற்கே வந்து பைபிள் படிப்பு படிப்பதால், ஊழியத்தை பெரும்பாலும் வீட்டில்தான் செய்கிறேன். ஆனாலும் கடந்துபோன வருடங்களை எண்ணிப் பார்த்து, ஏற்பட்டுள்ள மகத்தான வளர்ச்சியை கண்டு பூரித்துப்போகிறேன்! ஏசாயா 60:22-லுள்ள யெகோவாவின் வார்த்தைகள் குறிப்பிடத்தக்க விதத்தில் நிறைவேறியுள்ள பிராந்தியத்தில் நான் ஊழியம் செய்திருக்கிறேன். அந்த வசனம் இவ்வாறு சொல்கிறது: “சின்னவன் ஆயிரமும், சிறியவன் பலத்த ஜாதியுமாவான்; கர்த்தராகிய [யெகோவாவாகிய] நான் ஏற்றகாலத்தில் இதைத் தீவிரமாய் நடப்பிப்பேன்.” ஆம், இது ஜாம்பியாவில் மட்டுமல்ல, உலகம் முழுவதிலும் நிறைவேறிவருவதை என் வாழ்நாள் காலத்தில் பார்க்கிறேன்.b
[அடிக்குறிப்புகள்]
a யெகோவாவின் சாட்சிகளால் பிரசுரிக்கப்பட்டது, இப்போது அச்சிடப்படுவதில்லை.
b இந்தக் கட்டுரை பிரசுரிப்புக்குத் தயாராகையில் சகோதரர் காங்காலா பலவீனமடைந்து இறந்துவிட்டதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
[பக்கம் 24-ன் படங்கள்]
தாம்ஸன், பின்னணியில் ஜாம்பியா கிளை அலுவலகம்
[பக்கம் 26-ன் படம்]
இன்று ஜாம்பியா கிளை அலுவலகம்