“யெகோவா எனக்கு மிகவும் இனியவர்!”
கார்ல் எஃப். கிலின் வாழ்க்கையில் ஓர் மைல்கல்—மார்ச் 1985-ன் ஓர் இனிய மாலைப்பொழுதில் நியூ யார்க்கிலுள்ள யெகோவாவின் சாட்சிகளுடைய தலைமை அலுவலகத்தின் ரைட்டிங் டிபார்ட்மென்டிலிருந்த ஆண்களும் பெண்களும் இதை குறித்து மகிழ்ந்தார்கள். அப்போது கிலின் முழுநேர சேவையில் 60 ஆண்டுகளை முடித்திருந்தார். “யெகோவா எனக்கு மிகவும் இனியவர்!” என சகோதரர் கிலின் உற்சாகம் பொங்க உரைத்தார். சங்கீதம் 37:4 தனக்கு மிகவும் பிடித்தமான பைபிள் வசனம் என குறிப்பிட்டார். பின்னர், தனது செல்லோவைக் கையிலெடுத்து இன்னிசை வழங்கி அனைவரையும் மகிழ்வித்தார்.
அடுத்த 15 ஆண்டுகள் ரைட்டிங் டிபார்ட்மென்ட் அங்கத்தினராகவும் யெகோவாவின் சாட்சிகளுடைய ஆளும் குழுவின் அங்கத்தினராகவும் சகோதரர் கார்ல் கிலின் தன் பணியைத் தொடர்ந்தார். பின்பு ஜனவரி 3, 2001-ல், தன்னுடைய 95-ம் வயதில் பூவுலக வாழ்வை உண்மைத் தன்மையோடு முடித்தார்.
கார்ல் ஜெர்மனியில் பிறந்தார். அவருடைய குடும்பம் அங்கிருந்து ஐக்கிய மாகாணங்களுக்கு குடிபெயர்ந்தது. இல்லினாய்ஸ் மாகாணத்தில் சிகாகோவிலுள்ள புறநகர்ப்பகுதியில் கார்ல் வளர்ந்தார். அவரும் அவருடைய தம்பி டெட் என்பவரும் சிறு வயதிலிருந்தே பைபிளில் ஆழ்ந்த ஆர்வம் காட்டினர். 1918-ல் கார்ல் முழுக்காட்டுதல் பெற்றார். 1922-ல் பைபிள் மாணாக்கர் நடத்திய மாநாட்டில் கேட்ட மெய்சிலிர்க்கச் செய்த விஷயங்களே வாழ்நாள் பூராவும் வெளி ஊழியத்தில் மிகுந்த ஆர்வத்தோடு ஈடுபட அவரை தூண்டின. அவர் வாரந்தவறாமல் ஊழியத்தில் ஈடுபட விரும்பினார்—ஏன், வாழ்க்கையின் இறுதி வாரங்களிலும் ஊழியத்தில் கலந்து கொண்டார்.
அவர் 1925-ல் தலைமை அலுவலகத்தில் ஓர் அங்கத்தினராகி, முதன்முதலில் அச்சாலையில் வேலை செய்தார். இசையில் அவருக்கு அதீத ஆர்வம் இருந்தது. ஆகவே, கிறிஸ்தவர்களின் வானொலி ஒலிபரப்பு இசைக் குழுவில் ‘செல்லோ’ இசைப்பவராக சில வருடங்கள் பணியாற்றினார். அதற்குப்பின் சர்வீஸ் டிபார்ட்மென்டில் பணிபுரிந்து, குறிப்பாக அதன் கண்காணி டி. ஜே. சல்லவனோடு நெருங்கிய தோழமை கொண்டார். இதற்கிடையில் டாரெஸ் என்பவரை டெட் மணமுடித்தார்; அவர்கள் இருவரும் பியூர்டோ ரிகோவில் தங்கள் மிஷனரி பணியை ஆரம்பித்தனர்.
கார்ல் கிலின் ரைட்டிங் டிபார்ட்மென்டில் பொன்விழா கண்டார். ஆராய்ச்சி செய்வதில் அளவிலா ஆர்வம் இருந்ததாலும், ஆழ்ந்த பைபிள் புலமை இருந்ததாலும் அத்துறையில் தலைசிறந்து விளங்கினார். 1963-ல், பொலிவியாவில் சேவையாற்றிய ஜெர்மானிய மிஷனரி மார்காரேட்டாவை கார்ல் கரம்பிடித்தார். மனைவியின் அன்பான ஆதரவால், முக்கியமாக உடல்நல பிரச்சினைகளை எதிர்ப்பட்டபோது, கடைசிவரை பலன்தரும் விதத்தில் அவரால் பணியாற்ற முடிந்தது; அநேகர் அந்த வயதில் ஓய்வு பெற்றுவிடுவர். இயல்பாகவே ஒளிவுமறைவின்றி பேசும் குணமும் ஓர் இசைக் கலைஞனுக்குரிய ஆர்வமும் நிறைந்தவர் கார்ல்; இதனால் சபைகளிலும் மாநாடுகளிலும் நெஞ்சைவிட்டு நீங்கா இனிய சொற்பொழிவுகளை அவரால் ஆற்ற முடிந்தது. அவர் இறப்பதற்கு சில நாட்களுக்கு முன்பு, நியூ யார்க்கிலுள்ள பெரிய பெத்தேல் குடும்பத்தினரின் சந்தோஷத்திற்காகவும் நன்மைக்காகவும் காலை தினவசனத்தை கலந்தாலோசித்தார்.
காவற்கோபுரம் பத்திரிகையை தவறாமல் வாசிப்பவர்கள் பலருக்கும் அக்டோபர் 1, 1984-ல் வெளிவந்த சகோதரர் கிலினின் மனதைக் கவரும் வாழ்க்கை சரிதை ஞாபகமிருக்கும். அவர் இன்னும் பதினைந்து வருடங்களுக்கு உண்மையுள்ள கிறிஸ்தவராக சேவை செய்தார் என்பதை நினைவில் வைத்து அதை நீங்கள் வாசிக்கும்போது அல்லது மறுபடியும் வாசிக்கும்போது இன்னுமதிகமாக ரசிப்பீர்கள்.
அபிஷேகம் செய்யப்பட்ட கிறிஸ்தவர்களில் ஒருவராக கிறிஸ்துவோடு பரலோகத்தில் ஆட்சி புரிய சகோதரர் கிலின் இருதயப்பூர்வமாக விரும்பினார். அவருடைய விருப்பத்தை யெகோவா இப்பொழுது நிறைவேற்றியிருக்கிறார் என நாம் முழுமையாக நம்பலாம்.—லூக்கா 22:28-30.
[பக்கம் 31-ன் படம்]
1943-ல் டி. ஜே. சல்லவன், டெட், டாரெஸ் ஆகியோருடன் கார்ல்
[பக்கம் 31-ன் படம்]
அக்டோபர் 2000-ல் கார்லும் மார்காரேட்டாவும்