ஒரே தொகுப்பாக பைபிள்
பைபிளை நகலெடுக்க கோடெக்ஸை முதன்முதலாக பயன்படுத்தியவர்கள் ஆரம்ப கால கிறிஸ்தவர்களே. கோடெக்ஸ் என்பது சுருளல்ல, ஆனால் புத்தகம். எடுத்தவுடன் பைபிளின் எல்லா புத்தகங்களையும் ஒரே தொகுப்பாக அவர்கள் வெளியிடவில்லை. ஒரே வால்யூம் பைபிள்களை எல்லா இடங்களிலும் பரவலாக தயாரித்து வெளியிடுவதில் முதலில் தீவிரமாய் ஈடுபட்டவர் ஆறாம் நூற்றாண்டைச் சேர்ந்த பிளேவியஸ் காஸிடோரஸ் ஆவார்.
பிளேவியஸ் மாகனஸ் ஆரிலியஸ் காஸிடோரஸ் என்பவர் தற்போதைய இத்தாலியின் தென் முனையிலுள்ள காலாபிரியாவில் ஒரு பணக்கார குடும்பத்தில் சுமார் பொ.ச. 485-490-ல் பிறந்தார். அவர் வாழ்ந்த காலம் இத்தாலிய சரித்திரத்திலேயே மிகவும் கொந்தளிப்பான காலம். இந்த தீபகற்பத்தை முற்கால ஜெர்மானிய இனத்தவரும் (Goths) அதன் பிறகு பைசாண்டைய (Byzantines) இனத்தவரும் ஆக்கிரமித்திருந்தனர். அவருக்கு சுமார் 60 அல்லது 70 வயதாக இருந்தபோது காலாபிரியாவில் ஸ்குவில்லேச்சேயி என்ற இடத்தில் தன் வீட்டின் அருகே விவேரியம் துறவி மடத்தையும் ஒரு நூலகத்தையும் நிறுவினார்.
சிரத்தையுள்ள பைபிள் பதிப்பாசிரியர்
மக்களுக்குப் பைபிள் கிடைக்க எவ்வாறு வழிசெய்யலாம் என்பதே காஸிடோரஸின் பெரும் கவலைகளில் ஒன்றாக இருந்தது. “வேதாகமம் மக்கள் கையில் கிடைக்கச் செய்வதற்கு அனைத்து லத்தீன் இலக்கியங்களையும் முழுமையாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும். பண்டைய லத்தீன் இலக்கியங்களை வாசிக்கவும் நகலெடுக்கவும் இதற்கு முன்னால் பயன்படுத்தப்பட்ட எல்லா உபகரணங்களையும் உபயோகித்து வேதாகமத்தை தெளிவாக புரிந்துகொண்டு பகுத்துணர்வோடு நகலெடுக்க வேண்டும். புதிதாக உருவான ஒரு கிரகத்தைப் போல கடவுளுடைய வார்த்தை என்ற சூரியனைச் சுற்றி லத்தீன் கலாச்சாரம் முழுவதும் வட்டமிட வேண்டும் என்பதே காஸிடோரஸின் கருத்து” என்று கூறுகிறார் வரலாற்றாசிரியர் பீட்டர் பிரெளன்.
காஸிடோரஸ் மொழிபெயர்ப்பாளர்களையும் இலக்கணப் புலவர்களையும் விவேரியம் துறவி மடத்தில் கூட்டி முழு பைபிளையும் ஒப்பிட்டு ஆராய வழிசெய்தார். பதிப்பாசிரியருக்குரிய மிகவும் சிரத்தையுள்ள வேலைகளைச் செய்வதில் தலைமை தாங்கினார். கல்வியறிவு பெற்றிருந்த ஒரு சிலரிடம் மாத்திரமே இந்த வேலையை அவர் ஒப்படைத்தார். நகல் எடுத்தவர் தவறு செய்திருக்கலாம் என்ற ஊகத்தின் அடிப்படையில் அவசரப்பட்டு இவர்கள் திருத்தங்களை செய்யக்கூடாது. இலக்கணம் சம்பந்தமாக ஒரு சந்தேகம் எழுந்தால், மிகப் பழமையான பைபிள் கையெழுத்துப் பிரதிகளையே ஆய்வுக்கு எடுத்துக்கொள்ள வேண்டும். லத்தீனில் புழக்கத்திலுள்ளதை அங்கே உபயோகிக்கக்கூடாது. காஸிடோரஸ் இவ்வாறு உத்தரவு போட்டார்: “விநோதமாக இருக்கும் இலக்கணம் . . . பாதுகாக்கப்பட வேண்டும், ஏனென்றால் ஆவியால் ஏவப்பட்டெழுதப்பட்ட வசனம் தவறாக இருக்க முடியாது. . . . பைபிள் சொற்றொடர், உருவகம், மரபுத்தொடர் ஆகியவை லத்தீனைப் பொறுத்தவரை மிகவும் விநோதமாக இருந்தாலும் அவை பாதுகாக்கப்பட வேண்டும். அவ்வாறே ‘எபிரெய’ பெயர்களும்கூட பாதுகாக்கப்பட வேண்டும்.”—த கேம்பிரிட்ஜ் ஹிஸ்டரி ஆஃப் த பைபிள்.
க்ரேன்டியோர் கோடெக்ஸ்
விவேரியம் துறவிமடத்தில் நகலெடுப்பவர்களுக்கு லத்தீனில் குறைந்தபட்சம் மூன்று தனித்தனி பைபிள் பதிப்புகளை உருவாக்கும் வேலை கொடுக்கப்பட்டது. முதல் பதிப்பில் ஒன்பது தொகுப்புகள் இருந்தன, இதில் பழமையான லத்தீன் வாசகம் இருந்தது. இந்த மொழிபெயர்ப்பு இரண்டாம் நூற்றாண்டின் பிற்பகுதியைச் சேர்ந்தது. இரண்டாவது பதிப்பில் லத்தீன் வல்கேட் இருந்தது, இதை ஐந்தாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் பூர்த்தியாக்கியவர் ஜெரோம். மூன்றாவது பதிப்பாகிய, “பெரிய கோடெக்ஸ்” என்று அர்த்தம் தரும் கோடெக்ஸ் க்ரேன்டியோர் மூன்று பைபிள் பதிவுகளிலிருந்து தொகுக்கப்பட்டது. இரண்டாவதும் மூன்றாவதுமான பதிப்புகளில் பைபிளின் எல்லா புத்தகங்களும் ஒரே தொகுப்பாக்கப்பட்டன.
காஸிடோரஸ்தான் லத்தீன் பைபிள்களை முதன்முதலாக ஒரே தொகுப்பாக்கியவர் என தெரிகிறது. இதற்கு அவர் பான்டெதிஸ் (pandectae) என்று பெயரிட்டார்.a பைபிளின் எல்லா புத்தகங்களையும் ஒரே தொகுப்பாக சேர்த்துவிட்டால் சுலபமாகிவிடும் என்று அவர் நினைத்ததில் சந்தேகமே இல்லை. இதனால் பல்வேறு தொகுப்புகளை எடுத்துப் பார்க்கும் நேரமும் மிச்சப்படுகிறது.
தென் இத்தாலியிலிருந்து பிரிட்டிஷ் தீவுகளுக்கு
காஸிடோரஸின் மரணத்துக்குப்பின் கொஞ்ச காலத்திற்குள் (ஒருவேளை சுமார் பொ.ச. 583) கோடெக்ஸ் க்ரேன்டியோர் மற்ற இடங்களுக்கும் பரவ ஆரம்பித்தது. அந்தச் சமயத்தில் விவேரியம் நூலகத்தின் ஒரு பகுதி ரோமிலிருந்த லேட்டரன் நூலகத்துக்கு மாற்றப்பட்டதாக நம்பப்படுகிறது. பொ.ச. 678-ல் ரோமில் கொஞ்ச காலம் தங்கியிருந்த ஆங்கிலோ-சாக்ஸன் துறவி மடத் தலைவர் சியால்ஃபெரட் பிரிட்டிஷ் தீவுகளுக்குத் திரும்பி வரும்போது இதைத் தன்னுடன் கொண்டுவந்தார். இப்படியாக இந்த கோடெக்ஸ் இன்றைய இங்கிலாந்தின் நார்த்தம்பிரியா பகுதியில் அமைந்துள்ள சியால்ஃபெரட் மேற்பார்வையில் இருந்த வெர்மெளத், ஜேரோ என்ற இரண்டு துறவி மடங்களுக்கு வந்து சேர்ந்தது.
காஸிடோரஸின் ஒரே தொகுப்பு பைபிளைப் பார்த்து சியால்ஃபெரட்டும் அவருடன் இருந்த துறவிகளும் பரவசமடைந்திருக்க வேண்டும், அது பயன்படுத்த அதிக சௌகரியமாக இருந்ததால் அவர்களுக்கு மிகவும் பிடித்திருந்தது. ஆகவே ஒரு சில பத்தாண்டுகளுக்குள், இன்னும் மூன்று ஒரே-தொகுப்பு பைபிள்களைத் தயாரித்துவிட்டனர். இவற்றில் கோடெக்ஸ் அமையேட்டினஸ் மாத்திரமே இன்றுவரை பாதுகாக்கப்பட்டுள்ளது. இது மிகப் பெரிய கையெழுத்துப் பிரதியாகும். இதில் 2,060 தோல் பக்கங்கள் உள்ளன. ஒவ்வொன்றும் சுமார் 51 சென்டிமீட்டர் நீளமும் 33 சென்டிமீட்டர் அகலமும் உடையது. அட்டையும் சேர்த்து அது 25 சென்டிமீட்டர் தடிப்பமும் 34 கிலோகிராமுக்கு அதிக எடையுமுள்ளது. இதுதான் இன்றுவரை இருக்கும் மிகப் பழமையான, முழுமையான, ஒரே-தொகுப்பு லத்தீன் பைபிளாகும். இதை 1887-ல் கண்டுபிடித்தவர் 19-வது நூற்றாண்டைச் சேர்ந்த பைபிள் அறிஞர் ஃபென்டன் ஜே. ஏ. ஹார்ட் என்பவராவார். இதைக் கண்டு அவர் இவ்வாறு கருத்து தெரிவித்தார்: “அதிசயக்கத்தக்க இதை [கையெழுத்துப் பிரதியை] பார்த்து இன்றைய சமுதாயத்தினர்கூட பிரமித்துப்போவர்.”
மீண்டும் இத்தாலிக்கு
காஸிடோரஸின் முயற்சியால் உருவான முதல் கோடெக்ஸ் க்ரேன்டியோர் இப்போது இல்லை. ஆனால் ஆங்கிலோ-சாக்ஸன்களின் கோடெக்ஸ் அமையேட்டினஸ் தயாரானதும் அது மீண்டும் இத்தாலி நோக்கி பயணப்பட ஆரம்பித்தது. சியால்ஃபெரட், மரிப்பதற்கு சற்றுமுன் ரோமுக்கு மீண்டும் திரும்பி போய்விட தீர்மானித்தார். போப் இரண்டாம் கிரிகோரிக்கு பரிசளிப்பதற்காக தன்னுடைய மூன்று லத்தீன் பைபிள் கையெழுத்துப்பிரதிகளில் ஒன்றை தன்னுடன் எடுத்துச் சென்றார். ஆனால் சியால்ஃபெரட் வழியில் பிரான்ஸிலுள்ள லாங்கிரஸ் என்ற இடத்தில் பொ.ச. 716-ல் உயிர்நீத்தார். ஆனால் மற்ற பிரயாணிகளோடு அவரது பைபிள் பயணத்தைத் தொடர்ந்தது. கடைசியாக மத்திய இத்தாலியில் அமையேட்டா மலை துறவிமடத்திற்கு சொந்தமான நூலகத்தில் வைக்கப்பட்டது. இதன் காரணமாகவே இது கோடெக்ஸ் அமையேட்டினஸ் என்ற பெயரை பெற்றது. 1782-ல் இத்தாலியில் ஃப்ளாரென்ஸிலுள்ள மெடிஸியன்-லாரன்ஷியன் (Medicean-Laurentian) நூலகத்தில் இது வைக்கப்பட்டது. மிகவும் விலையுயர்ந்த ஒரு பொக்கிஷமாக அங்கே இன்னும் பாதுகாக்கப்பட்டு வருகிறது.
கோடெக்ஸ் க்ரேன்டியோரால் நமக்கு பயனென்ன? காஸிடோரஸ் காலம் முதற்கொண்டு நகலெடுப்பவர்களும் அச்சடிப்பவர்களும் ஒரே-தொகுப்பு பைபிள்களை தயாரிப்பதையே பெரிதும் விரும்பியிருக்கின்றனர். இன்று வரையாக இப்படிப்பட்ட பைபிளை கையில் வைத்திருப்பது சுலபமாக எடுத்துப் பார்ப்பதற்கும் அதன் வல்லமையினால் பயனடைவதற்கும் உதவியாக இருந்து வருகிறது.—எபிரெயர் 4:12.
[அடிக்குறிப்பு]
a கிரேக்கில் முழுமையான பைபிள்கள் நான்காவது அல்லது ஐந்தாவது நூற்றாண்டு முதல் புழக்கத்தில் இருந்து வருவதாக தெரிகிறது.
[பக்கம் 29-ன் தேசப்படம்]
(முழு வடிவத்திலுள்ள படத்திற்கு புத்தகத்தைப் பார்க்கவும்)
கோடெக்ஸ் அமையேட்டினஸ் பயணம்
விவேரியம் துறவி மடம்
ரோம்
ஜேரோ
வெர்மெளத்
கோடெக்ஸ் க்ரேன்டியோர் பயணம்
ஜேரோ
வெர்மெளத்
அமையேட்டா மலை
ஃப்ளாரென்ஸ்
[படத்திற்கான நன்றி]
Mountain High Maps® Copyright © 1997 Digital Wisdom, Inc
[பக்கம் 30-ன் படங்கள்]
மேலே: கோடெக்ஸ் அமையேட்டினஸ் இடது பக்கம்: கோடெக்ஸ் அமையேட்டினஸில் எஸ்றாவின் படம்
[படத்திற்கான நன்றி]
Biblioteca Medicea Laurenziana, Firenze