நீங்கள் ‘வாய்ப்பான காலத்தை வாங்குகிறீர்களா’?
முதல் நூற்றாண்டிலிருந்த எபேசு கிறிஸ்தவர்களுக்கு அப்போஸ்தலனாகிய பவுல் இவ்வாறு அறிவுரை கூறினார்: “நீங்கள் ஞானமற்றவர்களைப்போல நடவாமல், ஞானமுள்ளவர்களைப்போலக் கவனமாய் நடந்து கொள்ளப்பார்த்து, நாட்கள் பொல்லாதவைகளானதால் காலத்தைப் பிரயோஜனப்படுத்திக்கொள்ளுங்கள் [“வாய்ப்பான காலத்தை வாங்குங்கள்,” NW].” (எபேசியர் 5:15, 16) இந்த அறிவுரை ஏன் தேவைப்பட்டது? இக்கேள்விக்கு பதிலை கண்டுபிடிக்க வேண்டுமெனில், அந்தப் பூர்வகால பட்டணத்தில் வாழ்ந்த கிறிஸ்தவர்கள் எதிர்ப்பட்ட சூழ்நிலைகளைப் பற்றி அறிந்து கொள்வது அவசியம்.
எபேசு பட்டணம் செல்வ செழிப்புக்கும், படுமோசமான ஒழுக்கக்கேட்டுக்கும், கட்டுக்கடங்காத குற்றச்செயலுக்கும், பலதரப்பட்ட பேய் வணக்கத்துக்கும் பேர்போனது. அதோடு அங்கிருந்த கிறிஸ்தவர்கள் காலத்தைக் குறித்த தத்துவரீதியிலான நம்பிக்கைகளோடு போராட வேண்டியிருந்தது. எபேசுவிலிருந்த கிறிஸ்தவர்களல்லாதவர்கள் காலம் முன்னோக்கி ஒரே திசையில் போய்க்கொண்டிருந்ததை நம்பவில்லை. வாழ்க்கையானது, முடிவற்ற காலசுழற்சியில் மீண்டும் மீண்டுமாக வந்துகொண்டிருந்தது என கிரேக்க தத்துவம் அவர்களுக்குக் கற்பித்திருந்தது. அதன்படி, ஒரு வாழ்க்கை சுழற்சியில் தன்னுடைய காலத்தை வீணடிப்பவர் அடுத்த வாழ்க்கை சுழற்சியில் மீண்டுமாக அதைத் திரும்பப் பெற முடியும். இப்படிப்பட்ட எண்ணம், தெய்வீக நியாயத்தீர்ப்பு உட்பட, ஒவ்வொரு சம்பவங்களுக்கும் யெகோவா வைத்துள்ள கால அட்டவணையை துச்சமாக எடைபோடும்படி எபேசு கிறிஸ்தவர்களைத் தூண்டியிருக்கலாம். ஆகவே ‘வாய்ப்பான காலத்தை வாங்குங்கள்’ என்று பவுல் அறிவுரை கொடுத்தது பொருத்தமானதே.
காலத்தைப் பற்றிய பொதுவான கருத்தை பவுல் பேசவில்லை. அவர் பயன்படுத்திய கிரேக்க வார்த்தை, ஒரு குறிப்பிட்ட நோக்கத்திற்காக குறிக்கப்பட்ட காலத்தை, தகுந்த காலத்தை அர்த்தப்படுத்துகிறது. இப்போது அனுபவித்துவரும் வாய்ப்பான காலப்பகுதி அல்லது அனுக்கிரக காலம் முடிவடைவதற்கு முன்பாகவும் தெய்வீக இரக்கத்தையும் இரட்சிப்பையும் அடைவதற்கான சந்தர்ப்பம் நீக்கப்பட்டு போவதற்கு முன்பாகவும் அதை ஞானமாக பயன்படுத்தும்படி முதல் நூற்றாண்டு கிறிஸ்தவர்களுக்கு பவுல் அறிவுரை வழங்கினார்.—ரோமர் 13:11-13; 1 தெசலோனிக்கேயர் 5:6-11.
நாமும்கூட இதுபோன்ற வாய்ப்பான காலப்பகுதியில் வாழ்ந்து வருகிறோம். இந்த உலகம் தரும் தற்காலிக இன்பங்களை நாடித்தேடுவதன் மூலம் மீண்டும் ஒருபோதும் கிடைக்கப்போகாத, அனுக்கிரக காலப்பகுதியை வீணடிப்பதற்கு பதிலாக, கிடைத்த தருணத்தில் ‘தேவபக்திக்குரிய செயல்களை’ செய்து, படைப்பாளராகிய யெகோவா தேவனுடன் தங்கள் உறவை பலப்படுத்துவார்களாகில் கிறிஸ்தவர்கள் ஞானமுள்ளவர்கள்.—2 பேதுரு 3:11, NW; சங்கீதம் 73:28; பிலிப்பியர் 1:11.