மிஷனரிகளை ‘பூமியின் தொலைதூரங்களுக்கு’ கிலியட் அனுப்புகிறது
கடந்த ஐம்பது வருடங்களாக மிஷனரிகளை அனுப்பி வருகிறது உவாட்ச்டவர் பைபிள் ஸ்கூல் ஆஃப் கிலியட். செப்டம்பர் 11, 1999-ல் கிலியட்டின் 107-வது வகுப்பு பட்டம் பெற்றது. இந்த வகுப்பில் 11 நாடுகளைச் சேர்ந்த 48 மாணாக்கர்கள் இருந்தனர். இவர்கள் 24 வித்தியாசமான நாடுகளில் ஊழியம் செய்யும்படி நியமிக்கப்பட்டனர். இயேசு பரலோகத்திற்கு செல்வதற்கு முன்பு இறுதியாக சொன்ன வார்த்தைகளை நிறைவேற்றுவதில் குறிப்பிடத்தக்க பங்கு வகித்த ஆயிரக்கணக்கான மற்ற மிஷனரிகளோடு இவர்களும் சேர்ந்திருக்கின்றனர். தம்முடைய சீஷர்கள் ‘பூமியின் மிகத் தொலைதூர பாகமளவாகவும் சாட்சிகளாக இருப்பார்கள்’ என இயேசு முன்னுரைத்தார்.—அப்போஸ்தலர் 1:8, NW.
நியூ யார்க், பாட்டர்சனில் உவாட்ச்டவர் எஜுகேஷனல் சென்டரின் அழகு கொஞ்சும் சூழமைவில் இந்த பட்டமளிப்பு விழா நடந்தது. பார்வையாளர்களில் தங்களது உறவினர்களும் நெருங்கிய நண்பர்களும் விருந்தினர்களும் வந்திருந்திருந்ததை கண்ட பட்டம் பெற்ற மாணாக்கர்கள் அகம் மகிழ்ந்தனர். அதுமட்டுமா, வால்கில் மற்றும் புரூக்லின் காம்ளக்ஸில் ஒலி, ஒளி இணைப்புகள் மூலம் நிகழ்ச்சியை அனுபவித்தவர்களின் எண்ணிக்கை 4,992.
யெகோவாவையும் அயலகத்தாரையும் உண்மையுடன் சேவித்தல்
“யெகோவாவின் பக்கம் இருப்பது யார்?” என்பதுதான் பட்டமளிப்பு நிகழ்ச்சியின் சேர்மனும் ஆளும் குழுவின் உறுப்பினருமாகிய கேரி பார்பருடைய துவக்க உரையின் தலைப்பு. மோசேயின் நாட்களில் இஸ்ரவேலர்கள் எதிர்ப்பட்ட விவாதம் இதுதான் என்பதாக விளக்கினார் இவர். யெகோவாவின் பக்கமாக அநேக இஸ்ரவேலர்கள் உண்மையுடன் நிலைத்திருக்கவில்லை. இதனால் அவர்கள் தங்களுடைய ஜீவனை வனாந்திரத்தில் பறிகொடுத்தார்கள் என்பதை பட்டம் பெறும் மாணாக்கர்களுக்கும் கூடியிருந்த பார்வையாளர்களுக்கும் பேச்சாளர் ஞாபகப்படுத்தினார். விக்கிரக வணக்கத்தில் வீழ்ந்த பிறகு, அவர்கள் ‘புசிக்கவும் குடிக்கவும் உட்கார்ந்து கூத்தாட எழுந்தார்கள்.’ (யாத்திராகமம் 32:1-29, தி.மொ.) இதேவிதமான ஆபத்தைக் குறித்து கிறிஸ்தவர்களை இயேசு எச்சரித்தார்: “உங்கள் இருதயங்கள் பெருந்திண்டியினாலும் வெறியினாலும் லவுகீக கவலைகளினாலும் பாரமடையாதபடிக்கும், நீங்கள் நினையாத நேரத்தில் அந்த நாள் உங்கள்மேல் வராதபடிக்கும் எச்சரிக்கையாயிருங்கள்.”—லூக்கா 21:34-36.
அடுத்த பேச்சாளர், ஜென் ஸ்மலி. இவர் ரைட்டிங் டிபார்ட்மெண்டை சேர்ந்தவர். “நீங்கள் பாரிகோரியாவாக இருப்பீர்களா?” என்ற கேள்வியை பட்டம் பெறும் மாணாக்கர்களிடம் கேட்டார். கிரேக்க வார்த்தையாகிய பாரிகோரியா ஆங்கிலத்திலும் பயன்படுத்தப்படுகிறது. ஆங்கிலத்தில் வேதனையை தணிக்கும் ஒரு மருத்துவ கலவைக்கு இந்தப் பெயர் சூட்டப்பட்டிருக்கிறது என்பதாக அவர் விளக்கினார். கொலோசெயர் 4:11-ல் தனது உடன் வேலையாட்களை குறிப்பிடுகையில் பொருள் பொதிந்த இந்த கிரேக்க வார்த்தையை பவுல் பயன்படுத்தினார். புதிய உலக மொழிபெயர்ப்பு பைபிள் (ஆங்கிலம்) இந்த வார்த்தையை “பலமளித்த உதவி” என்பதாக மொழிபெயர்த்துள்ளது.
பட்டம் பெறும் மிஷனரிகள் பூமியின் மூலை முடுக்குகளிளெல்லாம் தங்களுடைய ஊழிய நியமிப்பில் நவீன கால பாரிகோரியாவாக இருப்பார்கள். உள்ளூர் சகோதர சகோதரிகளுக்கு உதவிக்கரங்களை நீட்டுபவர்களாக தாழ்மையுடன் இவர்கள் தங்களை அளிப்பார்கள். மேலும் உடன் மிஷனரிகளோடு தோழமை கொள்ளும்போது அன்புடன் ஒத்துழைப்பார்கள்.
ஆளும் குழுவின் உறுப்பினரான டானியேல் ஸிட்லிக், அடுத்ததாக “பொன்விதியின்படி வாழ்தல்” என்ற தலைப்பில் பேசினார். மத்தேயு 7:12-ல் இயேசுவால் குறிப்பிடப்பட்ட மிக உயர்ந்த நியமத்தை அவர் விளக்கினார். “மனுஷர் உங்களுக்கு எவைகளைச் செய்ய விரும்புகிறீர்களோ, அவைகளை நீங்களும் அவர்களுக்குச் செய்யுங்கள்.” இது மற்றவர்களுக்கு கெட்ட காரியங்களை செய்வதிலிருந்து விலகியிருப்பதோடு மட்டுமல்லாமல், அவர்களுக்கு நல்ல காரியங்களை செய்ய வேண்டும் என்பதையும் உட்படுத்துகிறது.
இதை வெற்றிகரமாக செய்வதற்கு மூன்று காரியங்கள் அவசியம்: கனிவான பார்வை, இரக்கமுள்ள இதயம் மற்றும் உதவிக்கரம். அனைத்தையும் சுருக்கி சொல்பவராக, “நாம் மற்றவர்களுக்கு உதவிசெய்ய வேண்டும் என நினைத்தால் அதை உடனே செய்துவிட வேண்டும். நமக்காக மற்றவர்கள் என்ன செய்ய வேண்டும் என எதிர்பார்க்கிறோமோ, அதை நாம் மற்றவர்களுக்கு செய்வதற்கு கூடுதலான முயற்சி எடுக்க வேண்டும்.” மற்ற நாடுகளில் உள்ளவர்கள், உண்மையான கிறிஸ்தவத்தை பின்பற்றுவதற்கு உதவப்போகும் மிஷனரிகள் விஷயத்தில் இது உண்மையாக இருக்கிறது.
போதனையாளர்கள் கொடுத்த கனிவான நினைப்பூட்டுதல்கள்
கிலியட் போதனையாளர் கார்ல் ஆடம்ஸ், பட்டம் பெறும் மாணாக்கர்களை “வளர்ந்துகொண்டே இருங்கள்” என்பதாக உற்சாகப்படுத்தினார். எந்த அம்சங்களில்? முதலாவதாக அறிவை பெற்றுக்கொள்வதிலும் அதை திறமையான விதத்தில் பயன்படுத்துவதிலுமே. பைபிள் விவரங்களின் பின்னணியையும் அமைப்பையும் தெரிந்துகொள்வதற்காக எவ்வாறு ஆராய்ச்சி செய்ய வேண்டும் என்பதை மாணவர்கள் கிலியட்டில் கற்றுக்கொண்டனர். அவர்களுடைய வாழ்க்கையை ஒவ்வொரு பைபிள் விபரமும் எவ்வாறு பாதிக்கிறது என்பதை கவனிக்கும்படியாகவும் அவர்கள் உற்சாகப்படுத்தப்பட்டிருந்தனர். இதை அவர்கள் தொடர்ந்து செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டனர்.
“இரண்டாவதாக, அன்பில் தொடர்ந்து வளர்ந்துகொண்டே இருக்க வேண்டும். பேணிவளர்க்கும்போது அன்பானது வளருகிறது. இதை கவனிக்காமல் விட்டால், இறந்தே போய்விடும்” என்பதாக சகோதரர் ஆடம்ஸ் சொன்னார். (பிலிப்பியர் 1:9, 11) இப்பொழுது மிஷனரிகளாக இவர்கள் வித்தியாசமான சூழ்நிலைமைகளில் அன்பில் வளர வேண்டும். மூன்றாவது: “நம்முடைய கர்த்தரும் இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்துவின் கிருபையிலும் அவரை அறிகிற அறிவிலும் வளருங்கள்.” (2 பேதுரு 3:18) “அற்புதமான இந்த தயவை தமது குமாரன் மூலம் யெகோவா காண்பித்தார்” என பேச்சாளர் குறிப்பிட்டார். “இந்தத் தகுதியற்ற தயவை போற்றுவதில் நாம் வளர்ந்துகொண்டே இருக்கும்போது, கடவுள் நமக்கு நியமித்த வேலையையும் அவருடைய சித்தத்தையும் செய்வதில் மகிழ்ச்சி வெள்ளம் புரண்டோடுகிறது.”
அடுத்து வருபவர், கிலியட்டின் மற்றொரு போதனையாளரான மார்க் நூமர். “சவால் நிறைந்த சூழ்நிலமைகளை அன்புடன் ஏற்றுக்கொண்டால் நிலைத்திருக்க முடியும்” என்பதே இவருடைய பேச்சின் தலைப்பு. அவரது புத்திமதி: “மிஷனரி வாழ்க்கையில் வரும் சவால் நிறைந்த சூழ்நிலமைகளை அன்புடன் ஏற்றுக்கொள்ள கற்றுக்கொண்டால் உங்களால் நிலைத்திருக்க முடியும். தாம் நேசிப்பவர்களை மட்டுமே யெகோவா தண்டனை கொடுத்து திருத்துகிறார். ஒருவேளை கொடுக்கப்படும் சில ஆலோசனைகள் உங்களுக்கு ஞானமற்றதாகவும் எரிச்சலூட்டுவதாகவும் சரியில்லாததாகவும் தோன்றினால் அப்பொழுது என்ன? யெகோவாவிடம் நீங்கள் கொண்டிருக்கும் அன்பும் உறவும் அந்த அறிவுரைகளை ஏற்றுக்கொள்ள உங்களுக்கு உதவும்.”
அநேக வேலைகள் மிஷனரி சேவையில் அடங்கியிருக்கின்றன என சகோதரர் நூமர் சுட்டிக்காட்டினார். “இருப்பினும் அன்போடு செய்யப்படாத வேலைகள் உங்களுக்கு திருப்தியை அளிக்காது. உதாரணமாக, மிஷனரிகள் தங்கியிருக்கும் இடத்தில் நீங்கள் செய்யும் வீட்டு வேலைகளை எடுத்துக்கொள்ளுங்கள். சமைப்பது, கடைக்குப் போவது, பழங்களை சுத்தம் செய்வது மற்றும் வெந்நீர் வைப்பது போன்ற வேலைகளை உங்களுக்கு விருப்பமில்லாமல் செய்தீர்கள் என்றால் அவை சலிப்புத்தட்டி விடும் அல்லவா! வேலையை கொஞ்சம் நிறுத்திவிட்டு யோசியுங்கள். ‘இந்த வேலைகளை எல்லாம் நான் ஏன் செய்கிறேன்?’ ‘இந்த முயற்சிகள் என்னுடைய சக மிஷனரிகளுடைய ஆரோக்கியத்திற்கும் மகிழ்ச்சிக்கும் வித்திடுகிறது’ என்பதை நீங்கள் நினைத்தீர்கள் என்றால் இது கடினமாக இருக்காது.” பிறகு எல்லாவற்றையும் ரத்தின சுருக்கமாக: “சிட்சையை ஏற்றுக்கொள்வதிலோ அல்லது உங்களுடைய மிஷனரி பொறுப்புகளை நிறைவேற்றுவதிலோ அல்லது உங்களுக்குள் ஏற்படும் பிரச்சினைகளை கையாளும்போதோ அன்புடன் செயல்படுங்கள். இவ்வாறு செய்வது உங்களுடைய ஊழிய நியமிப்பில் தொடர்ந்து நிலைத்திருக்க உதவும். ‘அன்பு ஒருக்காலும் ஒழியாது.’ ”—1 கொரிந்தியர் 13:8.
அடுத்ததாக, உள்ளூர் சபைகளோடு ஊழியம் செய்தபோது ஏற்பட்ட மகிழ்ச்சியான அநேக அனுபவங்களை நடித்துக்காட்டும் நிகழ்ச்சியை கிலியட் போதனையாளர் வாலஸ் லிவரன்ஸ் நடத்தினார். வீட்டுக்குவீடு ஊழியத்தில் ஈடுபட்டது மட்டுமல்லாமல், மிஷனரிகள் தங்களது பயிற்சியின்போது மக்களை தேடி லாரி நிறுத்தும் இடங்கள், துணிகளை துவைக்கும் இடங்கள், இரயில்வே ஸ்டேஷன்கள் உட்பட இன்னும் அநேக இடங்களுக்கு சென்றார்கள்.
அனுபவமுள்ள மிஷனரிகள் நம்பிக்கையளிக்கிறார்கள்
புதிய மிஷனரிகள் வெளிநாடுகளுக்கு செல்லும்போது பயப்பட வேண்டுமா? வெளிநாடுகளில் ஊழிய நியமிப்புகளிலுள்ள சவால்களை வெற்றிகரமாக எதிர்கொள்ள முடியுமா? இந்தப் புதிய வரவுகள் தங்களுடைய நியமிப்புகளில் வெற்றிசிறப்பதற்கு கிளை அலுவலகங்களால் என்ன ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன? இந்தக் கேள்விக் கணைகளுக்கும் மற்றவற்றிற்கும் பதிலளிப்பதற்காக சர்வீஸ் டிபார்ட்மெண்டை சேர்ந்த ஸ்டீவன் லெட்டும், ரைட்டிங் டிபார்ட்மெண்டை சேர்ந்த டேவிட் ஸ்பிலேனும் சில சகோதரர்களை பேட்டி கண்டனர். பட்டமளிப்பு விழா நடைபெற்ற சமயத்தின்போது உவாட்ச்டவர் எஜுகேஷனல் சென்டரில் கிளை அலுவலக கண்காணிகளுக்கான பள்ளி நடந்துகொண்டிருந்தது. இப்பள்ளியில் கலந்துகொண்ட சகோதரர்களைத்தான் அவர்கள் பேட்டி கண்டனர். பேட்டி காணப்பட்டவர்கள் ஸ்பெயின், ஹாங்காங், லைபீரியா, பெனின், மடகாஸ்கர், பிரேசில், ஜப்பான் போன்ற நாடுகளிலுள்ள கிளை அலுவலக குழுவின் அங்கத்தினர்களாக சேவை செய்பவர்களாவர்.
அனுபவம் வாய்ந்த யெகோவாவின் ஊழியர்களான இவர்களில் பலர் மிஷனரிகளாக பல பத்தாண்டுகளாக சேவை செய்திருக்கின்றனர். இவர்கள் பட்டம் பெறும் மாணாக்கர்களையும் கூடிவந்திருந்த அவர்களுடைய பெற்றோர்கள் மற்றும் உறவினர்களையும் நம்பிக்கையூட்டி உற்சாகப்படுத்தினார்கள். பிரச்சினைகளையும் கவலைகளையும் வெற்றிகரமாக தீர்க்க முடியும் என்பதை தங்களுடைய சக மிஷனரிகளின் அனுபவத்திலிருந்தும், தங்களுடைய சொந்த அனுபவத்திலிருந்தும் இவர்கள் எடுத்துக் காண்பித்தனர். பிரச்சினைகள் ஒருவேளை பெரிதாக இருக்கலாம், “ஆனால் அவை தீர்க்கப்பட முடியும். சங்கமும் நமக்கு உதவி செய்யும்” என்பதாக உறுதியுடன் கூறினார் ரைமோ கோக்கனன். இவர் மடகாஸ்கரிலுள்ள ஒரு மிஷனரி. தற்போது பிரேசிலில் சேவை செய்துவரும் ஹோஸ்டன் குஸ்டாவசோன், “எங்களுடைய ஊழிய நியமிப்பை நாங்கள் பெற்றுக்கொண்டோமே தவிர, அதை தேர்ந்தெடுக்கவில்லை. ஆகவே நாங்கள் அதிலே தொடர்ந்து நிலைத்திருப்பதற்கு எங்களால் முடிந்ததை எல்லாம் செய்ய வேண்டும் என்று உறுதியாக இருந்தோம்” என்பதாக சொன்னார். “ஏற்கெனவே மிஷனரிகளாக ஊழியம் செய்த சகோதரர்கள் அருகில் இருந்ததே” தனக்கு அதிக உதவியாக இருந்ததாக ஜப்பானில் சேவை செய்துவரும் ஜேம்ஸ் லிண்டன் சொன்னார். மிஷனரி சேவையானது மகிழ்ச்சியான ஒன்று. இது, யெகோவாவை திருப்தியோடு சேவிக்கவும் அவரது மந்தைகளை நல்லவிதமாக கவனிப்பதற்கும் சிறந்த வழியாகும்.
ஆவிக்குரிய தன்மையை கொலை செய்துவிடும் கொள்ளை நோய்
இறுதியான பேச்சை கொடுத்தவர், தியோடர் ஜராக்ஸ். ஆளும் குழுவின் உறுப்பினரான இவர் 1946-ல் கிலியட்டின் ஏழாவது வகுப்பில் பட்டம் பெற்றவர். அவருடைய பேச்சின் பொருள்: “ஆவிக்குரிய விதமாக தொடர்ந்து ஊக்கமாக இருப்பதின் சவால்.” முதலாவதாக, இந்த உலகத்தின் பல்வேறு பாகங்களை உலுக்கியெடுக்கும் கொடுமையான அட்டூழியங்களை ஒப்புக்கொண்ட அவர், படுமோசமான அழிவுகள் மனித இனத்தை உண்மையிலேயே பாடாய்படுத்துகின்றன என்பதாக சுட்டிக்காட்டினார்.
சங்கீதம் 91-ஐ மேற்கோள் காட்டி, சகோதரர் ஜராக்ஸ் ‘கொள்ளை நோய்களும் சங்காரங்களும்’ நம்மை சுற்றியுள்ள லட்சக்கணக்கானவர்களை ஆவிக்குரிய விதமாக நோய்வாய்ப்படுத்தி, கொலை செய்தே இருக்கின்றன என்பதாக குறிப்பிட்டார். கொள்ளை நோய்போன்ற ஆய்வறிவுக் கோட்பாடு மற்றும் பொருளாசையை அடிப்படையாக கொண்ட பொய் பிரச்சாரங்களை பயன்படுத்தி சாத்தானும் அவனுடைய துன்மார்க்க உலகமும் நம்முடைய ஆவிக்குரிய தன்மையை பலவீனப்படுத்துவதற்கும் முழுமையாக நிறுத்திப்போடுவதற்கும் முயற்சித்திருக்கின்றனர். ஆனால் இப்படிப்பட்ட கொள்ளை நோய் நம்மை அணுகாது என்பதாக பைபிள் சொல்கிறது: “உன்னதமானவரின் மறைவிலிருக்கிறவன் சர்வவல்லவருடைய நிழலில் தங்குவான்.”—சங்கீதம் 91:1-7.
“விசுவாசத்தில் ஆரோக்கியமாக இருக்கவும் பாதுகாப்பான இடத்தில் தொடர்ந்து நிலைத்திருக்கவும் முயற்சிப்பதே நமக்கு முன்பாக இருக்கும் சவால். ‘ஆவிக்குரிய தன்மையில்லாமல் இருக்கும்’ பரிகாசக்காரர்களைப்போல நாம் இருக்க முடியாது. இன்று இதுவே ஒரு பிரச்சினை. அமைப்பிலுள்ள நம் அனைவரும் எதிர்ப்படும் பிரச்சினையும் இதுவே. உங்களுடைய மிஷனரி ஊழியத்திலும் இது தலைதூக்கக்கூடும்” என்றார் சகோதரர் ஜராக்ஸ். (யூதா 18, 19) ஆனால் பட்டம் பெறும் மாணாக்கர்கள் தங்களுடைய ஊழிய நியமிப்பில் ஆவிக்குரிய தன்மையை வெற்றிகரமாக காத்துக்கொள்ள முடியும் என்பதாக ஊற்சாகப்படுத்தப்பட்டனர். தடைகள், கடும் எதிர்ப்புகள், கேலிக்கிண்டல்கள், கடவுள் எதிர்ப்பு பிரச்சாரம் மற்றும் தவறான குற்றச்சாட்டுகளின் மத்தியிலும் ரஷ்யா, ஆசியா, ஆப்பிரிக்கா போன்ற இடங்களில் உள்ள நாடுகளிலுள்ள நமது சகோதரர்கள் எவ்வாறு சகித்திருக்கிறார்கள் என்பதை கவனிக்குமாறு அவர்கள் கேட்டுக்கொள்ளப்பட்டனர். மேலும் அநேக விஷயங்களில் அத்தியாவசிய பொருட்களின் குறைபாடுகளும் இனவேறுபாட்டால் வெடிக்கும் கலகங்களும் எரிகிற நெருப்பில் எண்ணெய்யை ஊற்றுகின்றன.
ஆவிக்குரிய தன்மையில் வீழ்ச்சி ஏற்படுமேயானால், “அதற்கான ஊற்றுமூலத்தை கண்டறிந்து, கடவுளுடைய வார்த்தையின் ஆலோசனையை பயன்படுத்தி, அதை கையாள வேண்டியது மிகவும் அவசியம்.” பைபிளில் அநேக உதாரணங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. நியாயப்பிரமாண புஸ்தகத்தின் தனது பிரதியை அடங்கிய குரலில் தினந்தோறும் வாசிக்கும்படியாக யோசுவா உற்சாகப்படுத்தப்பட்டார். (யோசுவா 1:8, NW) யோசியாவின் காலத்தில் நியாயப்பிரமான புத்தகம் கண்டுபிடிக்கப்பட்டபோது, அதனுடைய அறிவுரைகளை உண்மையுடன் பின்பற்றினவர்களை யெகோவா ஆசீர்வதித்தார். (2 இராஜாக்கள் 23:2, 3) தீமோத்தேயு தனது சிசுப்பருவம் முதல் “பரிசுத்த வேத எழுத்துக்களை” அறிந்திருந்தார். (2 தீமோத்தேயு 3:14, 15) பெரோயர்கள் வெறுமனே நன்றாக கேட்பவர்களாக மட்டும் இல்லை. அவர்கள் வேதவாக்கியங்களை தினந்தோறும் ஆராய்ந்து பார்த்ததால் “நற்குணசாலிகளாக” இருந்தனர். (அப்போஸ்தலர் 17:10, 11) கடவுளுடைய வார்த்தையை நன்கு அறிந்திருந்து, அதை பயன்படுத்தினதில் இயேசு கிறிஸ்து மிகச் சிறந்த முன்மாதிரியாக இருக்கிறார்.—மத்தேயு 4:1-11.
தனது முடிவான பேச்சில், புதிய மிஷனரிகளை சகோதரர் ஜராக்ஸ் அன்புடன் பின்வருமாறு நினைப்பூட்டினார்: “உங்களுடைய மிஷனரி ஊழிய நியமிப்பை நிறைவேற்றுவதற்கு இப்பொழுது நீங்கள் தயாராக இருக்கிறீர்கள். உண்மையிலேயே நீங்கள் பூமியின் பல்வேறு பகுதிகளிலுள்ள பல நாடுகளுக்கு பயணப்படப் போகிறீர்கள். ஆவிக்குரிய தன்மையில் ஊக்கமாக இருப்பதற்கு எதிராக நாம் சவால்களை எதிர்பட்டால் அப்பொழுது என்ன? நாம் எந்த ஊழியத்தை செய்வதற்கு தீர்மானித்திருக்கிறோமோ அதிலிருந்து நமது கவனத்தை திசைதிருப்பும் எதையும் நாம் ஒருபோதும் அனுமதிக்கப் போவதில்லை. நீங்கள் சுறுசுறுப்புடன் பிரசங்கிக்கப் போகிறீர்கள். உங்களுடைய விசுவாசத்தை பின்பற்றுவதற்கு மற்றவர்களை உந்துவிக்கப் போகிறீர்கள். யெகோவா நம்மை எவ்வாறு உயிர்துடிப்போடு வைத்திருக்கிறாரோ அதேபோல உங்களுடைய பிரசங்கத்தை கேட்பவர்களையும் யெகோவா அவ்வாறு செய்ய வேண்டும் என்ற உங்களுடைய ஜெபத்தில் நாங்களும் சேர்ந்து கொள்கிறோம். இன்று இந்த உலகத்தையே ஆட்டிப்படைக்கும் ஆவிக்குரிய அழிவிலிருந்து அநேகர் பாதுகாக்கப்பட போகிறார்கள். அதிகரித்துக்கொண்டே இருக்கும் யெகோவாவின் சித்தத்தை செய்வோரின் எண்ணிக்கையில் இவர்களும் நம்மை சேர்ந்துகொள்வார்கள். இறுதிவரை யெகோவா உங்களை ஆசீர்வதிப்பாராக.”
உலகத்தின் பல்வேறு நாடுகளிலிருந்து வந்திருந்த வாழ்த்து செய்திகளை பார்வையாளர்களுக்கு சேர்மேன் தெரிவித்தார். இப்பொழுது மாணாக்கர்கள் தங்களுடைய பட்டங்களை பெறுவதற்கான சமயம் வந்துவிட்டது. இதற்குப் பிறகு மாணாக்கர்கள் வரைந்த கனிவான நன்றி மடல் வாசிக்கப்பட்டது. தாங்கள் பெற்றுக்கொண்ட விசேஷ பயிற்சிக்கும் ‘பூமியின் மிகத் தொலைதூர பாகமளவாகவும்’ மிஷனரிகளாக தங்கள் ஒவ்வொருவருக்கும் கிடைத்த ஊழிய நியமிப்பிற்கும் இந்த மாணாக்கர்கள் அனைவரும் யெகோவாவுக்கும் அவருடைய அமைப்பிற்கும் எவ்வளவு போற்றுதலோடு இருக்கிறார்கள்!—அப்போஸ்தலர் 1:8, NW.
[பக்கம் 29-ன் பெட்டி]
வகுப்பின் புள்ளிவிவரங்கள்
பிரதிநிதித்துவம் செய்யப்பட்ட நாடுகள்: 11
அனுப்பப்பட்ட நாடுகளின் எண்ணிக்கை: 24
மாணவர்களின் எண்ணிக்கை: 48
தம்பதிகளின் எண்ணிக்கை: 24
சராசரி வயது: 34
சத்தியத்தில் இருக்கும் சராசரி ஆண்டுகள்: 17
முழுநேர ஊழியத்தில் இருக்கும் சராசரி ஆண்டுகள்: 12
[பக்கம் 26-ன் படம்]
உவாட்ச்டவர் கிலியட் பைபிள் பள்ளியில் பட்டம் பெறும் 107-வது வகுப்பு
கீழே கொடுக்கப்பட்டிருக்கும் பட்டியலில், வரிசை எண்கள் முன்னிருந்து பின்னோக்கியும், பெயர்கள் ஒவ்வொரு வரிசையிலும் இடமிருந்து வலமும் கொடுக்கப்பட்டுள்ளன.
1. பெரல்டா, சி.; ஹாலன்பெக், பி.; ஷா, ஆர்.; ஹாஸன், என்.; மார்டின், டி.; ஹட்சின்ஸன், ஏ. 2. எட்வர்ட்ஸ், எல்.; வீஜர், டி.; செருடி, க்யூ.; என்ட்ஸ்மிங்கர், ஜி.; டலோயிஸ், எல்.; பால்யிரி, எல். 3. நைட், பி.; கருஸா, ஏ.; கஸாஸ்கி, டி.; ரோஸ், எம்.; ஃபிரிடல், கே.; நியிடோ, ஆர். 4. ரோஸ், ஆர்.; பக்கஸ், டி.; டாலி, எஸ்.; ஹன்பெர்ட், டி.; பெர்ன்ஹார்ட், ஏ.; பெரல்டா, எம். 5. டலோயிஸ், ஏ.; ஹன்பெர்ட், டி.; டான், ஹெச்.; கேட்லிங், ஜி.; ஷா, ஜே.; செருடி, எம். 6. பால்யிரி, எஸ்.; கருஸா, ஜே.; ஹாலன்பெக், டி.; மார்டின், எம்.; பெர்ன்ஹார்ட், ஜே.; ஹட்சின்ஸன், எம். 7. பக்கஸ், ஏ.; டான், ஓ.; கேட்லிங், டி.; வீஜர், பி.; நைட், பி.; ஹாஸன், ஓ. 8. நியிடோ, சி.; டாலி, எம்.; ஃபிரிடல், டி.; கஸாஸ்கி, ஏ.; எட்வர்ட்ஸ், ஜே.; என்ட்ஸ்மிங்கர், எம்.