உங்களுடைய சிந்தையை விரிவாக்க வேண்டுமா?
பாழாக்கும் பூமியதிர்ச்சி மேற்கு ஜப்பானிலுள்ள கோப் நகரை “தாலாட்டிவிட்டுச்” சென்றது. பாதிக்கப்பட்ட நகரவாசிகளுக்கு உதவ சுயதியாக மனப்பான்மை கொண்ட தொண்டர்கள் விரைந்து வந்தார்கள். ஆனால் அந்நகரத்தின் சுகாதார இலாகாவிலுள்ள ஒருவர், அங்கு வந்த மருத்துவர்களுக்கு மருத்துவ நிவாரணப் பொருட்களைத் தர மறுத்துவிட்டார். இவர் ஒரு பெரிய முனிசிபல் மருத்துவமனையின் இயக்குநர். பாதிக்கப்பட்டோருக்கு நிவாரண மையங்களில் மருத்துவர்கள் விலையுயர்ந்த ஊசிபோடுவதற்கும், சிரைவழி செலுத்தப்படும் மருந்து கொடுப்பதற்கும் பதிலாக, கோபிலுள்ள மருத்துவமனைகளுக்கே அவர்கள் போகட்டும் என நினைத்தார். கடைசியில், அந்த மருத்துவர்களுடைய வேண்டுகோளுக்கு இணங்கினார், இதனால் மருத்துவ நிவாரணிகள் வழங்கப்பட்டன. ஆனால் தொடக்கத்தில் அந்த அதிகாரி காண்பித்த முரண்டுத்தனத்தையும் ஈவிரக்கமில்லாதவர்போல் நடந்துகொண்டதையும் எவராலும் மறக்க முடியவில்லை. எங்கும் அதே பேச்சுதான்.
அதிகாரத்திலுள்ள ஒருவரிடமிருந்து ஒருவேளை நீங்கள் இப்படிப்பட்ட அனுபவத்தைப் பெற்றிருக்கலாம். ஒருவேளை நீங்களே இப்படி செய்திருக்கலாம். பரந்த மனப்பான்மையை வளர்த்துக்கொள்வதிலிருந்து நீங்கள் பயனடையக் கூடுமா?
முழு காட்சியை பெறுங்கள்
பொதுவாக, காரியங்களை ஒரே கோணத்தில் அல்லது நோக்குநிலையில் மாத்திரமே மக்கள் பார்க்கிறார்கள். இதனால் காரியங்களைப் பற்றிய தங்களுடைய கருத்தை அல்லது புரிந்துகொள்ளுதலை மட்டுப்படுத்துகின்றனர். இது பெரும்பாலும் கல்வி, வாழ்க்கை அனுபவம், பின்னணி காரணமாக ஏற்படுகிறது. ஒருவர் முழுமையான காட்சியை பெற முயற்சி செய்கையில் ஞானமான தீர்மானங்களை எடுக்க முடியும். உதாரணமாக, டிராபிக் நிறைந்த, சிக்னல் இல்லாத சாலையை நீங்கள் கடக்க நேரிட்டால், நேராக மட்டுமே பார்த்து கடப்பது ஞானமாயிருக்குமா? நிச்சயமாகவே இராது! அதைப் போலவே, தீர்மானங்களைச் செய்வதிலும், பொறுப்பாக செயல்படுவதிலும், முழு காட்சியை பெறும்படி, உங்கள் சிந்தனையை விரிவாக்குவது மிகவும் உதவியாக இருக்கும். அது உயிரையும் காக்கலாம்.
இந்த விஷயத்தில் நாம் அனைவருமே முன்னேற்றம் செய்யலாம். ஆகையால் உங்களை நீங்களே இவ்வாறு கேட்டுக்கொள்ளுங்கள், ‘என் சிந்தையை விரிவாக்குவதால் நான் நன்மை பெறக்கூடிய சில அம்சங்கள் யாவை?’
அடுத்தவர்களைப் பற்றி உங்கள் அபிப்பிராயம்
மற்றவர்களில் நீங்கள் என்ன பார்க்கிறீர்கள்? அவர்கள் சொல்வது அல்லது செய்வது எல்லாவற்றையுமே, ஒன்று நல்லதாகவோ அல்லது கெட்டதாகவோ கருதும் மனப்பான்மை உங்களுக்கு இருக்கிறதா? ஒருவர் சொல்லும் ஒரு குறிப்பை, புகழ்ச்சியாக அல்லது இகழ்ச்சியாக நினைக்கிறீர்களா? ஒருவர் சொல்வது அல்லது செய்வது, எல்லாமே சரியாக, அல்லது எல்லாமே தவறாக தோன்றுகிறதா? ஒருவருக்கு இப்படிப்பட்ட நோக்குநிலை இருந்தால், ஒரு போட்டோகிராஃபர் கருப்பு வெள்ளை நிறத்தின் அடிப்படையிலேயே சிந்திக்கையில், இலையுதிர்கால இயற்கைக் காட்சியின் வண்ண வண்ண நிறங்களெல்லாம் முக்கியமல்ல என நினைத்து அதைப் புறக்கணிப்பதற்கு ஒப்பாக இது இருக்கும். வேறுவிதத்தில் சொன்னால், எழில் கொஞ்சும் இயற்கை காட்சியில் மனம் லயித்தபடி பயணம் செய்யும் ஒருவர், எவரோ ஒரு சுற்றுலா பயணி தரையில் கசக்கி எறிந்த குப்பைக் காகிதத்தால் மனம் உடைந்து, தன் ரசனை உணர்வையே பறிகொடுக்க அனுமதிப்பதைப் போல இருக்கும். அதைப் போலவே, ஒருவருடைய எதிர்மறையான குணங்களிலேயே கவனத்தை ஊன்ற வைக்கும் போக்குடையோராக இருக்கிறீர்களா?—ஒப்பிடுக: பிரசங்கி 7:16.
மனிதரின் தவறை யெகோவா நோக்கும் விதத்தை சிந்திப்பதால் அதிகம் கற்றுக்கொள்ளலாம். அவர் மனிதனின் பற்பல பலவீனங்களையும் தவறுகளையும் அறிந்திருந்தாலும், அவற்றின்மீது மனதை அல்லது கவனத்தை ஊன்ற வைப்பதில்லை. நன்றியுணர்ச்சி பொங்க சங்கீதக்காரன் இவ்வாறு குறிப்பிட்டார்: “யெகோவா, நீர் அக்கிரமங்களைக் கவனித்திருப்பீரானால் நிலைநிற்கக்கூடியவன் யார் ஆண்டவரே?” (சங்கீதம் 130:3, தி.மொ.) மனந்திரும்பின பாவிகளிடமிருந்து அக்கிரமங்களைத் தூர விலக்குவதற்கு, ஆம், அவருடன் நமக்கு இருக்கும் உறவின்மீது அவை கறையாக படியாதபடி அவற்றை தயாளத்துடன் துடைத்தழிப்பதற்கு, யெகோவா மனமுள்ளவராக இருக்கிறார். (சங்கீதம் 51:1; 103:12) பத்சேபாள் விஷயத்தில் பெரும் பாவங்களைச் செய்த அரசனாகிய தாவீதைக் குறித்து, ‘என் பார்வைக்குச் செம்மையானதையே செய்ய, தன் முழு இருதயத்தோடும்,’ என்னைப் பின்பற்றின என் தாசனாகிய தாவீது’ என்று யெகோவா சொன்னார். (1 இராஜாக்கள் 14:8) தாவீதைக் குறித்து கடவுள் எப்படி இவ்வாறு சொல்ல முடிந்தது? ஏனெனில் மனந்திரும்பின தாவீதின் நல்ல பண்புகளின்மீது அவர் தம் கவனத்தை ஊன்றவைத்தார். பொருத்தமான காரணங்களையெல்லாம் அவர் கவனித்துப் பார்த்து, தம்முடைய ஊழியனுக்கு தொடர்ந்து இரக்கத்தைக் காண்பிக்கத் தெரிந்துகொண்டார்.
மற்றவர்களின் தவறுகளைப் பெரிதுபடுத்தாத இந்தப் பெருந்தன்மையே இயேசுவுக்கும் இருந்தது. (யோவான் 5:19) தம்முடைய அப்போஸ்தலரின் குறைபாடுகளை எதிர்ப்பட்டபோது, இயேசு இரக்கமுள்ளவராகவும் புரிந்துகொள்பவராகவும் இருந்தார். “ஆவி உற்சாகமுள்ளதுதான், மாம்சமோ பலவீனமுள்ளது” என்று அபூரண மனிதரைக் குறித்து அவர் அறிந்திருந்தார். (மத்தேயு 26:41) இதை மனதில் வைத்து இயேசு தம்முடைய சீஷர்களின் பலவீனங்களையும் தவறுகளையும், பொறுமையோடும் புரிந்துகொள்ளுதலோடும் கையாண்டார். சீஷர்களுடைய தவறுகளையே கவனித்துக் கொண்டிராமல் அவர்களுடைய நற்பண்புகளின்மீதே கவனத்தை ஒருமுகப்படுத்தினார்.
ஒரு சந்தர்ப்பத்தில், எல்லாரிலும் யார் மிகப் பெரியவன் என்ற அப்போஸ்தலரின் விவாதத்தை தீர்த்த பின்பு, இயேசு சொன்னார்: “எனினும், எனக்கு நேரிட்ட சோதனைகளில் என்னோடு நிலைத்திருந்தவர்கள் நீங்களே; என் பிதா ஒரு ராஜ்யத்திற்கான உடன்படிக்கையை என்னோடு செய்திருப்பது போலவே, நீங்கள் என் ராஜ்யத்தில் என் பந்தியில் புசித்துக் குடித்து, இஸ்ரவேலின் பன்னிரண்டு கோத்திரங்களை நியாயந்தீர்க்க சிங்காசனங்களில் உட்காரும்படிக்கு, நானும் உங்களுடன் ஓர் உடன்படிக்கை செய்கிறேன்.” (லூக்கா 22:24-30, NW) ஆம், அப்போஸ்தலர் பல விஷயங்களில் தவறினபோதிலும், அவர்கள் உண்மையுள்ளோராயும் தம்மிடம் அன்புள்ளோராயும் இருந்ததை இயேசு நினைவில் வைத்தார். (நீதிமொழிகள் 17:17) அவர்களால் எவ்வளவு முடியும் எந்தளவு செய்வார்கள் என்பதில் இயேசு நம்பிக்கையுடையவராக இருந்தார், ஆகையால் ராஜ்யத்திற்கான ஓர் உடன்படிக்கையை அவர்களுடன் செய்தார். ஆம், ‘இயேசு . . . முடிவுபரியந்தம் தம்முடைய சீஷர்களிடத்தில் அன்புவைத்தார்.’—யோவான் 13:1.
ஆகையால், ஒருவருடைய ‘ஒருமாதிரியான’ இயல்புகளும் தவறுகளும் உங்களுக்கு எரிச்சல் உண்டாக்கினால், யெகோவாவையும் இயேசுவையும் போல் இருங்கள். உங்கள் சிந்தையை விரிவாக்கி, எல்லா காரணங்களையும் கவனத்தில் ஏற்க பிரயாசப்படுங்கள். காரியங்களை உள்ளபடி சரியாக நோக்குவதால் உங்கள் சகோதரர்களை நேசிப்பதும் மதிப்பதும் எளிதாக இருக்கும்.
பொருள் உதவி அளிப்பதில்
அள்ளி வழங்கும் அரும் பாக்கியம் கிறிஸ்தவர்களுக்கு அருளப்பட்டுள்ள சந்தோஷங்களில் ஒன்று. ஆனால் நம்மை அளிப்பதை ஒரே செயலோடு, உதாரணமாக வெளி ஊழியத்தில் ஈடுபடுவதற்கு மாத்திரமே மட்டுப்படுத்த வேண்டுமா? (மத்தேயு 24:14; 28:19, 20) அல்லது, மற்றவர்களின் பொருளாதார தேவைகளுக்கும் சுகநலத்துக்கும் உங்கள் சிந்தையை விரிவாக்க முடியுமா? நிச்சயமாகவே, ஆவிக்குரிய அளிப்பை மிக அதிக முக்கியமானதாய் கிறிஸ்தவர்கள் மதிக்கிறார்கள். (யோவான் 6:26, 27; அப்போஸ்தலர் 1:8) எனினும், பொருள்சம்பந்தமாக அள்ளி வழங்குவதையும் நிச்சயமாகவே கவனியாமல் விட்டுவிடக்கூடாது.—யாக்கோபு 2:15, 16.
நம்முடைய சொந்த சபையிலும் உலகம் முழுவதிலும் இருக்கும் நம் ஆவிக்குரிய சகோதரரின் அவசரத் தேவைகளை நாம் சிந்தித்துப் பார்க்கையில், அவர்களுக்கு உதவ நாம் என்ன செய்யலாம் என்பதை அதிக முழுமையாய் காண இயலும். பொருள்சம்பந்தமாக மற்றவர்களோடு பகிர்ந்துகொள்ளும் வசதியான நிலைமையில் இருப்போர், தயாள சிந்தையுடன் மற்றவர்களுக்கு அதை கொடுக்கையில் சமநிலை ஏற்படுகிறது. இவ்வகையில் நம்முடைய எல்லா சகோதரரின் தேவைகளும் பூர்த்தி செய்யப்படுகின்றன. கிறிஸ்தவ மூப்பர் ஒருவர் இதை இவ்வாறு சொன்னார்: “உலகத்தின் எங்காவது ஒரு இடத்தில் எதாவது தேவை எழும்பினால், உலகத்தின் மற்றொரு மூலையிலுள்ள சகோதரர்கள் அவர்களுக்கு உதவ முன்வருவார்கள். அவர்களால் முடியவில்லையென்றால், வேறு எங்காயினும் இருக்கும் சகோதரர்கள் அதைச் செய்வார்கள். இப்படி, உலகமெங்குமுள்ள நம்முடைய சகோதரர்களுடைய தேவைகள் கவனித்துக்கொள்ளப்படுகின்றன. உலகளாவிய இந்தச் சகோதரத்துவம் நிச்சயமாகவே அதிசயமானது.”—2 கொரிந்தியர் 8:13-15; 1 பேதுரு 2:17.
கிழக்கு ஐரோப்பாவில் நடத்தப்பட்ட சர்வதேச மாநாடுகள் ஒன்றுக்குச் செல்ல அதிக ஆசையாக இருந்தார் ஒரு கிறிஸ்தவ சகோதரி. ஆனால் அவரால் செல்ல இயலவில்லை. என்றாலும், அங்குள்ள சகோதரருக்கு பைபிள்கள் மிகவும் தேவை என அவர் கேள்விப்பட்டார். அதற்குச் சென்ற ஒருவரிடம் அதற்குரிய நன்கொடையை கொடுத்தனுப்பினார். இவ்வாறு, கொடுப்பதால்—அந்நிய நாட்டிலுள்ள தன் சகோதரருடன் பகிர்ந்துகொண்டதால்—கிடைத்த சந்தோஷத்தை அவர் அனுபவித்தார்.—அப்போஸ்தலர் 20:35.
ஒருவேளை உங்கள் சிந்தையை விரிவாக்குவதால், உலகெங்கும் பரவலாகிக்கொண்டே இருக்கும் பைபிள் அறிவுபுகட்டும் ஊழியத்திற்கு, இன்னுமதிக பங்களிப்பையும் நீங்கள் செய்யக்கூடும். இவ்வாறு உங்களுக்கும் மற்றவர்களுக்கும் சந்தோஷத்தைக் கொண்டுவரலாம்.—உபாகமம் 15:7; நீதிமொழிகள் 11:24; பிலிப்பியர் 4:14-19.
அறிவுரை அளிக்கையில்
அறிவுரை கொடுக்கும்படி அல்லது திருத்தும்படி அழைக்கப்படுகையில், அன்பாகவும், சமநிலையோடும், காரணம் காட்டியும் அறிவுரை அளிக்க வேண்டும். இது நம்முடைய ஆவிக்குரிய சகோதரர் நம்மை மதிக்கவும், உண்மையில் பலன்தரத்தக்க உதவியை பெறவும் உதவிசெய்யும். சில காரியங்களுக்கு மட்டும் கவனம் செலுத்தி, அவசர அவசரமாக ஒருதலைப்பட்சமான முடிவுக்கு வருவது மிக எளிது. இது, தங்கள் வரையற்ற சட்டதிட்டங்களை மற்றவர்கள் தலைமேல் சுமத்தின, இயேசுவின் நாளிலிருந்த மதத் தலைவர்களைப்போல் நாம் குறுகிய மனப்போக்கு உடையோராக இருக்கிறோம் என்ற அபிப்பிராயத்தைக் கொடுக்கிறது. (மத்தேயு 23:2-4) மறுபட்சத்தில், மட்டுக்குமீறி செல்வதை நாம் தவிர்த்து வேத நியமங்களில் உறுதியாய் ஆதாரத்தையுடைய, யெகோவாவின் நீதியான, சமநிலையும் இரக்கமுமுள்ள சிந்தையைப் பிரதிபலிக்கும் நல்ல அறிவுரையை அளிக்க வேண்டும். அப்படி செய்தால் நம் ஆலோசனைகளை ஏற்று, பொருத்திப் பயன்படுத்துவது மற்றவர்களுக்கு மிகவும் இலகுவாக இருக்கும்.
சில ஆண்டுகளுக்கு முன்னால் பல சபைகளை சேர்ந்த இளம் சகோதரர்கள் போட்டி விளையாட்டுக்கு ஒன்றுகூடினார்கள். விசனகரமாய் போட்டி மனப்பான்மை அவர்களுக்குள் வலுத்து கடுகடுப்பான வாய்ச் சண்டைகளில் முடிந்தது. அந்தப் பிரச்சினையை அவ்விடத்து மூப்பர்கள் எவ்வாறு தீர்த்துவைத்தார்கள்? இளைஞர்களாக அவர்களுக்குப் பொழுதுபோக்கு விளையாட்டு தேவை என்று உணர்ந்தார்கள்; ஆகவே, அவர்கள் விளையாடுவதை முற்றிலும் நிறுத்திவிடும்படி அவர்கள் சொல்லவில்லை. (எபேசியர் 5:17; 1 தீமோத்தேயு 4:8) மாறாக, போட்டி மனப்பான்மை எதற்கு வழிநடத்தும் என்பதைப் பற்றி திடமான, எனினும் நியாயமான எச்சரிக்கைகளைக் கொடுத்தார்கள். மேலும், வயதில் பெரியவர்களும் பொறுப்புள்ளவர்களுமானவர்கள் அங்கிருப்பது போன்ற நல்ல ஆலோசனைகளையும் கொடுத்தார்கள். அந்த அறிவுரையின் ஞானத்தையும் சமநிலையையும் அந்த இளைஞர்கள் நன்றியோடு ஏற்றுக்கொண்டு, அதற்கேற்றவாறு நடந்தார்கள். மேலும், அந்த மூப்பர்கள் பேரில் அவர்களுக்கு இருந்த பற்றும் மரியாதையும் பெருகின.
பரந்த மனப்பான்மைக்காக உழையுங்கள்
ஒருவேளை நீங்கள் வேண்டுமென்றே தப்பெண்ணம் கொள்ளாதிருந்தாலும், உங்களுடைய சிந்தையை விரிவாக்குவதற்கு திடதீர்மானத்துடன் முயற்சியெடுக்க வேண்டியிருக்கலாம். கடவுளுடைய வார்த்தையை நீங்கள் படிக்கையில், யெகோவா சிந்திக்கும் முறையை புரிந்துகொள்ளவும் மதித்துணரவும் அதைக் குறித்து ஆழ்ந்து சிந்தியுங்கள். (சங்கீதம் 139:17) பைபிளில் சொல்லப்பட்டுள்ள கூற்றுகளுக்கான காரணங்களையும் அவற்றில் உட்பட்டுள்ள நியமங்களையும் புரிந்துகொள்ள பிரயாசப்பட்டு, காரியங்களை யெகோவா நோக்கும் முறையில் மதிப்பிட முயலுங்கள். இது, தாவீதின் விண்ணப்பத்திற்கு இசைவாக இருக்கும்: “யெகோவாவே, உமது வழிகளை எனக்குக் காட்டியருளும். உமது பாதைகளை எனக்குப் போதித்தருளும். உமது சத்தியத்திலே என்னை நடத்தி என்னைப் போதித்தருளும்.”—சங்கீதம் 25:4, 5, தி.மொ.
நீங்கள் பரந்த மனப்பான்மையை வளர்த்து வருகையில், ஆசீர்வதிக்கப்படுவீர்கள். நிதானமுள்ளவர், புரிந்துகொள்பவர் என்ற மதிப்பை பெறும்போது, பரந்த மனப்பான்மை ஓர் ஆசீர்வாதமாக இருக்கும். பல்வேறு சந்தர்ப்பங்களில் உதவி அளிக்கையில், மேலுமதிகமாய் நியாயமாக புரிந்துகொள்ளும் முறையில் பிரதிபலிப்பவர்களாக இருப்பீர்கள். இது, கிறிஸ்தவ சகோதரத்துவத்தின் அதிசயமான ஒற்றுமைக்கும் ஒத்திசைவுக்கும் உதவிபுரிவதாக இருக்கும்.
[பக்கம் 12-ன் படம்]
பரந்த மனப்பான்மையுடன் அள்ளி வழங்குவது மற்றவர்களுக்கு உதவிசெய்கிறது, வழங்குபவருக்கு சந்தோஷத்தை தருகிறது, நம் பரலோகத் தகப்பனுக்குப் பிரியமாக இருக்கிறது