‘விசுவாச குடும்பத்தாரிடம்’ ஊற்றெடுக்கும் அன்பு
உண்மை கிறிஸ்தவர்கள் ஒரே குடும்பம் போல் வாழ்கிறார்கள். நேற்று இன்று அல்ல, முதல் நூற்றாண்டு முதல் ஒருவரை ஒருவர் ‘சகோதரன்,’ ‘சகோதரி’ என்று சந்தோஷமாக கூப்பிடுகிறார்கள். (மாற்கு 3:13-35; பிலேமோன் 1, 2, NW) கடவுளை வணங்கும் மக்கள் ஒப்புக்கு கூப்பிடவேண்டுமே என்பதற்காக ‘சகோதரன்,’ ‘சகோதரி’ என்று கூப்பிடுவதில்லை. தங்களை உண்மையிலேயே அண்ணன் தம்பிகளாக, அக்கா தங்கைகளாக நினைத்து பழகுகிறார்கள். (1 யோவான் 4:7, 8-ஐ ஒப்பிடுக.) “நீங்கள் ஒருவரிலொருவர் அன்புள்ளவர்களாயிருந்தால், அதினால் நீங்கள் என்னுடைய சீஷர்களென்று எல்லாரும் அறிந்துகொள்வார்கள்” என்று இயேசு சொன்னார்.—யோவான் 13:35.
சிலி நாட்டில், நீண்டகால வறட்சிக்குப்பின், ஜூலை 1997-ல் மழை கொட்டோ கொட்டென்று கொட்டி, வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சாப்பாடு, துணிமணிகள், இன்னும் வேறுசில பொருட்களின் அவசியம் திடீரென்று ஏற்பட்டது. அப்போது உண்மை அன்பை வெளிக்காட்டுகிற வாய்ப்பு உண்மை கிறிஸ்தவர்களுக்கு கிடைத்தது. இதுபோல் இயற்கை சீறும்போது: “நமக்குக் கிடைக்கும் சமயத்திற்குத்தக்கதாக, யாவருக்கும், விசேஷமாக விசுவாச குடும்பத்தார்களுக்கும், நன்மைசெய்யக்கடவோம்” என்று பவுல் கலாத்தியர்களுக்கு அறிவுரை வழங்கினார். அதன்படி நடக்க யெகோவாவின் சாட்சிகள் பெரும் முயற்சி எடுக்கிறார்கள்.—கலாத்தியர் 6:10.
அவர்கள் இந்த அறிவுரையை ஏற்று, உடனே உதவ ஓடோடி வந்தார்கள். சாப்பாடு, துணிமணிகள், இதுபோல் வேறு பொருட்களை எல்லாம் சேகரித்து, வகை வகையாகப் பிரித்து, பொட்டலம் பொட்டலங்களாகக் கட்டி, பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு வண்டி வண்டியாக ஏற்றி அனுப்பினார்கள். சின்னப் பிள்ளைகள்கூட அவர்களுடைய விளையாட்டு சாமான்களை அனுப்பிவைத்தனர்! நிவாரணத்திற்கு வேண்டிய பொருட்கள் ராஜ்ய மன்றத்தில் வந்து குவிந்ததை பார்த்த ஒரு சகோதரி அப்படியே திக்குமுக்காடிப்போனார். “நான் அப்படியே அசந்துவிட்டேன்! எனக்கு அழுவதா சிரிப்பதா என்று ஒன்றுமே புரியவில்லை. எங்களுக்கு எது தேவையோ அது கிடைத்தது.” என்று கூறினார்.
வெள்ளம் வந்து தன் கைவரிசையை காட்டிவிட்டு போன ஒரு பகுதியில் திடீரென்று பூமி அதிர்ச்சி வந்து உலுக்கியது. பல வீடுகள் தரைமட்டம் ஆயின. பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ, நிறைய நிவாரண குழுக்களை அமைக்க வேண்டியிருந்தது. யெகோவாவின் சாட்சிகளுடைய ராஜ்ய மன்ற கட்டுமான பணிகளை கவனிக்கும் ரீஜினல் பில்டிங் கமிட்டிகள் உதவ ஓடோடி வந்தன. எப்படி உதவினார்கள்? வீடு இழந்தவர்களுக்கு நம் சகோதரர்களே அழகாக வடிவமைத்து, அளவான வீடுகளை கட்டிக்கொடுத்தார்கள். இந்த வீடுகள் பார்ப்பதற்கு டாம்பீகமாக இல்லையென்றாலும், நிவாரணத்திற்காக கடன் அடிப்படையில் தனியார் துறையினர் கட்டிக்கொடுத்த வீடுகளைவிட முற்றிலும் வித்தியாசமாக இருந்தன. தனியார் துறையினர் கட்டிக்கொடுத்த வீடுகளில் தரை பூசப்படவில்லை. ஜன்னல்கள் கிடையாது. வர்ணமும் பூசவில்லை.
சில சகோதரர்கள் உதவிசெய்வதற்காகவே வெகு தூரத்திலிருந்து வந்திருந்தார்கள். ரீஜினல் பில்டிங் கமிட்டியின் சேர்மேனாக இருந்த சகோதரர் சக்கர நாற்காலி வாழ்க்கையை ஒரு தடையாக கருதவில்லை. பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு அவரே நேரில் சென்று, தொடர்ந்து இரண்டு நாட்களாக நிலைமைகளை பார்வையிட்டார். கண்பார்வை இல்லாத சகோதரரும்கூட கஷ்டம்பாராமல் உழைத்து உதவினார். அவர் பெரிய பெரிய மரச்சட்டங்களை தூக்கிக்கொண்டுபோய், தச்சரிடம் கொடுத்தார். தச்சரோ அதை அளவாக வெட்டி வெட்டி தள்ளினார். வெட்டப்பட்ட மரச்சட்டங்களை காதுகேளாத சகோதரர் தூக்கிக்கொண்டுபோய் வேலை நடக்கும் இடங்களில் கொடுத்தார்.
இப்படியாக சகோதரர்கள் ஓடியாடி வேலை செய்து, பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவியதை பார்த்த பலர் ஆச்சரியத்தால் மூக்கில் விரல் வைத்தனர். பாதிக்கப்பட்ட ஒரு நகரில், சகோதரி ஒருவரின் வீட்டில் நம் சகோதரர்கள் ரிப்பேர் வேலை செய்துகொண்டிருந்தார்கள். அப்போது வீட்டு பக்கத்தில் ஒரு போலீஸ் வேன் வந்து நின்றது. அங்கு நடப்பதை பார்த்த போலீஸ்காரர்களுக்கு ஒரே குறுகுறுப்பு. “இப்படி ஒரேயடியாக துள்ளிகுதித்து வேலை பார்க்கிறார்களே, எவ்வளவு கூலி கொடுக்கிறீர்கள்?” என்று ஒரு போலீஸ்காரர் சகோதரரிடம் கேட்டேவிட்டார். அவர்கள் எல்லாரும் கூலிக்காக அல்ல, தாங்களாகவே முன் வந்து வேலைசெய்கிறார்கள் என்று அந்தச் சகோதரர் விளக்கம் கொடுத்தார். அதற்கு இன்னொரு போலீஸ் அதிகாரி, மாதம் தவறாமல், தசம பாகத்தை அவருடைய சர்ச்சில் செலுத்தியும், பூமி அதிர்ச்சிக்குப் பிறகு அவருடைய பாஸ்டர் வந்து எட்டிக்கூட பார்க்கவில்லையே! என்று ஆதங்கப்பட்டார். அடுத்த நாள் அந்தச் சகோதரிக்கு ஒரு போலீஸ் அதிகாரியிடமிருந்து போன் வந்தது. அங்கு வேலை செய்த சகோதரர்களை அவரும் பார்த்தாராம். அவர்கள் சந்தோஷமாக, எறும்புகள் போல் சுறுசுறுப்பாக வேலை செய்வதை பார்த்தபோது, அவர்களோடு சேர்ந்து வேலைசெய்ய தனக்கும் ஆசை அடித்துக்கொண்டதாக கூறினார்!
சிலியில் நிவாரப்பணிகள் மூலம் உதவிக்கரம் நீட்டிய நம் சகோதரர்களுக்கு மறக்க முடியாத மகிழ்ச்சிபொங்கும் அனுபவம் கிடைத்தது. அதையெல்லாம் பார்த்த மக்களுக்கு யெகோவாவின் சாட்சிகளைப் பற்றி நல்ல அபிப்பிராயம் ஏற்பட்டது.