உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • w99 5/1 பக். 26-27
  • வென்டா—மிகுந்த கனிதரும் தேசம்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • வென்டா—மிகுந்த கனிதரும் தேசம்
  • காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1999
  • துணை தலைப்புகள்
  • கஷ்டமான பாஷை
  • ஆவிக்குரிய கனி
காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1999
w99 5/1 பக். 26-27

வென்டா—மிகுந்த கனிதரும் தேசம்

கடந்த பத்து வருஷமாக, நானும் என் மனைவியும் வென்டா இனத்தவர் மத்தியில் முழுநேர ஊழியர்களாக சேவை செய்துவருகிறோம். தென் ஆப்பிரிக்காவின் வடபகுதியில்தான் லிம்போபோ நதி தோரணங்கட்டி செல்கிறது. அதன் தென்பகுதியே வென்டா இனத்தவரின் குடியிருப்பு. கடந்த நூற்றாண்டுகளில் லிம்போபோவை கடந்துவந்த அநேக குலத்தவர்தான் அத்தேசத்தை உருவாக்கினர். 1,000 வருஷத்திற்கு முன்பே அவர்களுடைய முன்னோர் வாழ்ந்த பூமி என வென்டா இனத்தவர் மார்தட்டிக்கொள்கிறார்கள்.

இந்தப் பகுதி ஒருகாலத்தில் மாபுன்ஜூப்வே என்ற பழைய நாகரிகத்தின் ஓர் அங்கமாய் விளங்கியது. இதுவே தென் ஆப்பிரிக்காவின் முதல் பெரிய நகர்ப்புற குடியேற்றம் என்ற பெருமைக்குரியது. மேற்கிலுள்ள போட்ஸ்வானாவிலிருந்து கிழக்கிலுள்ள மொஸாம்பிக் வரை பரந்த லிம்போபோ நதி பள்ளத்தாக்கு அதன் கைவசம் இருந்தது. சுமார் பொ.ச. 900 முதல் பொ.ச. 1100 வரை, அரேபிய வியாபாரிகளுக்கு மாபுன்ஜூப்வே தந்தத்தையும் காண்டா மிருக கொம்பையும் மிருக தோல்களையும் செம்பையும் தங்கத்தையும் வாரிவழங்கியது. கலை நுணுக்கத்தோடு செதுக்கப்பட்ட கைவினைப் பொருட்கள் தங்கக் கவசமிடப்பட்டிருந்தன. மாபுன்ஜூப்வே என்றழைக்கப்படும் ராஜவம்ச சவ அடக்க மண்மேட்டில் இவை தோண்டி எடுக்கப்பட்டுள்ளன. “தென் ஆப்பிரிக்காவில் தங்கச் சுரங்கம் இருந்ததற்கு இவையெல்லாம் தொன்மைக்கால அடையாளங்கள்” என்று சொல்கிறது ஒரு என்ஸைக்ளோப்பீடியா.

இப்பொழுதெல்லாம் இங்கே தங்கம் வெட்டி எடுக்கப்படுவதில்லை. இன்று வென்டா தேசம் மிகுந்த கனிகளுக்கு பேர்போனது. சௌட்பான்ஸ்பெர்க் மலைகளுக்கு தெற்கே வளங்கொழிக்கும் பள்ளத்தாக்கு இருக்கிறது. அங்கே ஒருவகை பேரிக்காய்கள், வாழைப்பழங்கள், மாம்பழங்கள், கொய்யா பழங்கள் ஆகியவை அமோகமாய் விளைகின்றன. பெகன், மக்கடாமியா போன்ற கொட்டை வகைகளைத் தவிர, காய்கறிகளும் மலிந்து கிடக்கின்றன. இவற்றுள் காட்டு முராஹாவும் ஒன்று. அதன் சுவையோ பசளைக்கீரையை நினைப்பூட்டுகிறது. இதை உள்ளூர் வாசிகள் சப்புக்கொட்டி சாப்பிடுகின்றனர்.

வென்டா இனத்தவர் பழக இனிமையானவர்கள், உபசரிக்கும் பண்புள்ளவர்கள். எதிர்பாராத விருந்தாளிக்கு கோழி அடித்து குழம்பு வைக்கும்படி வீட்டுத் தலைவர் சொல்வது சர்வசாதாரணம். கோழிக் குழம்புக்கும் மக்காச்சோளத்திலிருந்து செய்யப்படும் புஸ்வா என்ற முக்கிய உணவுக்கும் ஏகப்பொருத்தம். விருந்து முடிந்து கிளம்பிச் செல்லும்போது வீட்டின் தலைவர் அந்த விருந்தாளியுடன் கொஞ்ச தூரம் வந்து வழியனுப்பி வைப்பார். இது, விருந்தாளியை கெளரவிக்கும் பாரம்பரிய முறை. விருந்தாளிகளை வரவேற்கையில் பணிவாக இரண்டு கைகளை சேர்த்து தலைவணங்கும்படி பிள்ளைகளுக்கு கற்பிக்கிறார்கள். இந்தப் பாரம்பரிய முறையில் இரண்டு வென்டா பெண்கள் ஒருவரையொருவர் வரவேற்பதை இந்தப் பக்கத்திலுள்ள படத்தில் நீங்கள் காணலாம்.

கஷ்டமான பாஷை

வென்டா மொழியை ஐரோப்பியரால் அவ்வளவு சுலபமாக கற்றுக்கொள்ள முடியாது. ஒரு கஷ்டம் என்னவென்றால், பெரும்பாலான வார்த்தைகளுக்கு ஸ்பெல்லிங் ஒரே மாதிரிதான், ஆனால் உச்சரிப்பு பலவிதமாய் இருக்கும். ஒருநாள் யெகோவாவின் சாட்சிகளுடைய வென்டா சபையில் பைபிள் பேச்சு கொடுத்துக்கொண்டிருந்தபோது, ஒவ்வொரு நபரிடமும் பேசும்படி சபையாரை நான் உற்சாகப்படுத்த முயன்றேன். “ஆளுக்கு ஆள்” என்று சொல்வதற்குப் பதிலாக “விரலுக்கு விரல்” என்று நான் சொன்னதுதான் தாமதம், சபையிலிருந்த ஒருவருக்கு சிரிப்பை ‘கன்ட்ரோல்’ பண்ண முடியவில்லை.

வெளி ஊழியத்தில் முதன்முதலாக வென்டா மொழியில் பேசுவதற்கு நான் முயன்றபோது, ஒரு வென்டா பெண்மணி சொன்னாள்: “எனக்கு இங்லீஷ் தெரியாது.” வென்டா மொழியில் நன்றாகத்தான் பேசியதாக நான் நினைத்தேன், ஆனால் அது இங்லீஷ் என்று அவள் நினைத்தாள்! மற்றொரு சமயத்தில் ஒரு வீட்டுக்குச் சென்றபோது, குடும்பத் தலைவரை கூப்பிடும்படி ஒரு சிறுவனிடம் சொன்னேன். வென்டா மொழியில் குடும்பத் தலைவருக்கு சொல்லப்படும் வார்த்தை டோʹஹோ. ஆனால் தவறுதலாக டோஹோʹ என்று சொல்லிவிட்டேன். அதனால், வீட்டிலுள்ள குரங்குகிட்ட பேச வேண்டும் என்ற அர்த்தமாகிவிட்டது! இதுபோன்ற தவறுகள் என்னை ஊக்கமிழக்கச் செய்தது, ஆனால் நானும் என் மனைவியும் தளராமல் முயற்சி செய்தோம், அதனால் இப்பொழுது வென்டாவில் ஓரளவு நன்றாக பேச முடிகிறது.

ஆவிக்குரிய கனி

ஆவிக்குரிய விதத்திலும் வென்டா தேசம் கனிதரும் ஒன்றாக மாறிவருகிறது. 1950-களில், மஸினா என்ற பட்டணத்திலுள்ள செம்பு சுரங்கத்தில் வேலை செய்வதற்கு அண்டை நாடுகளிலிருந்து வந்து குடியேறியவர்கள் அடங்கிய யெகோவாவின் சாட்சிகளுடைய சபை ஒன்று இருந்தது. அவர்களுடைய வைராக்கியமான ஊழியம் அநேக வென்டா இனத்தவர் பைபிள் சத்தியங்களைக் கற்றுக்கொள்ள உதவியது. பத்தாண்டுகளுக்குப் பிறகு வென்டா யெகோவாவின் சாட்சிகளுடைய தொகுதி ஒன்று சிபாசா பட்டணத்தில் ஒரு தனி வீட்டில் கூட்டங்களை நடத்திக்கொண்டிருந்தது.

வளர்ச்சியை அதிகரிப்பதற்கு, தென் ஆப்பிரிக்க உவாட்ச்டவர் சொஸைட்டி கிளை அலுவலகம் கனிதரும் இந்த இடத்திற்கு முழுநேர ஊழியர்களை அனுப்பி வைத்தது. சீக்கிரத்தில், சிபாசா தொகுதி ஒரு பெரிய சபையாக வளர்ந்துவிட்டது. அந்தச் சமயத்தில் கிறிஸ்தவ கூட்டங்கள் ஒரு வகுப்பறையில் நடத்தப்பட்டன. தெற்கே சுமார் 160 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் பீட்டர்ஸ்பர்கிலுள்ள யெகோவாவின் சாட்சிகளுடைய உதவியால், அருகிலுள்ள ஒரு பட்டணமாகிய டாஹாயான்டூயூவில் ஒரு ராஜ்ய மன்றம் கட்டப்பட்டது.

தென் ஆப்பிரிக்காவின் வடக்கே வென்டா மொழி பேசுவோர் 5,00,000-க்கும் அதிகமானோர் இருக்கிறார்கள். 1950-களில் ராஜ்ய பிரசங்க வேலை தொடங்கிய சமயத்தில் அங்கே வென்டா சாட்சிகள் ஒருவர்கூட இல்லை. இப்போது அங்கே 150-க்கும் மேற்பட்டவர்கள் இருக்கிறார்கள். ஆனால் இன்னும் ஊழியம் செய்யப்படாத அநேக பிராந்தியங்கள் இருக்கின்றன, நிறைய வேலை செய்ய வேண்டியுள்ளது. 1989-ல், ஹாமூட்ஷா என்ற வென்டா கிராமத்திற்குச் செல்ல ஆரம்பித்தோம். அந்தச் சமயத்தில் ஒரேவொரு சாட்சிதான் அங்கு வசித்துக்கொண்டிருந்தார். இப்போது அந்தக் கிராமத்தில் 40-க்கும் மேற்பட்ட ராஜ்ய பிரஸ்தாபிகள் இருக்கிறார்கள். எங்களுடைய ராஜ்ய மன்றத்தைக் கட்டி முடிப்பதில் இப்போது நாங்கள் பிஸியாக இருக்கிறோம். பீட்டர்ஸ்பர்க் சபையிலிருந்து வந்து மீண்டும் உதவிசெய்த சாட்சிகளாலும் அதிக செல்வச்செழிப்பான நாடுகளிலுள்ள சகோதரர்களுடைய பண உதவியாலும் இதை எங்களால் செய்ய முடிந்திருக்கிறது.

ஒரு பண்ணையில் நாங்கள் ஒரு சிறிய டிரெய்லரில் வசிக்கிறோம். எங்களுடைய வாழ்க்கையை எளிமையாக வைத்துக்கொள்வதால், உள்ளூர் மக்களுக்கு நற்செய்தியை அறிவிக்க நிறைய நேரம் கிடைக்கிறது. (மாற்கு 13:10) இதனால், தங்களுடைய வாழ்க்கையை யெகோவா தேவனுக்கு ஒப்புக்கொடுக்கும்படி அநேகருக்கு உதவும் சிலாக்கியத்தால் அபரிமிதமாக ஆசீர்வதிக்கப்பட்டுள்ளோம். அதற்கு ஒரு உதாரணம் மைக்கேல். நீங்கள் பூமியில் பரதீஸில் என்றும் வாழலாம் என்ற புத்தகத்தை நண்பனுடைய வீட்டில் அவர் பார்த்தார். a அதை வாசிக்க ஆரம்பித்தவுடனே இதுதான் சத்தியம் என்பதைக் கண்டுகொள்ள ஆரம்பித்தார். ஆகவே, இன்னும் நிறைய பைபிள் புத்தகங்களைக் கேட்டு உவாட்ச் டவர் சொஸைட்டிக்கு எழுதினார். சமீபத்தில் உள்ளூர் அப்போஸ்டலிக் சர்ச்சில் ஒரு அங்கத்தினராக முழுக்காட்டுதல் பெற்றிருந்ததை தன்னுடைய கடிதத்தில் மைக்கேல் குறிப்பிட்டிருந்தார். “கடவுளுடைய ராஜ்யத்திற்கு தவறான பாதையில் போய்க்கொண்டிருக்கிறேன் என்பதை நான் கண்டுபிடித்தேன். நான் உங்களுடைய உறுப்பினர்களில் ஒருவனாக ஆக விரும்புகிறேன். ஆனால் அதற்கு என்ன செய்ய வேண்டும் என்று எனக்குத் தெரியவில்லை.” அதில் தன்னுடைய விலாசத்தை எழுதி, தனக்கு உதவிசெய்ய யெகோவாவின் சாட்சிகளில் ஒருவரை அனுப்பும்படி கேட்டுக்கொண்டிருந்தார். நான் ஒருவழியாக மைக்கேலுடைய வீட்டைக் கண்டுபிடித்து அவருக்கு பைபிள் படிப்பு நடத்த ஆரம்பித்தேன். இன்று, அவர் முழுக்காட்டப்பட்ட ஒரு சாட்சி, யெகோவாவை உண்மை பற்றுறுதியோடு சேவித்துக்கொண்டிருக்கிறார்.

டிசம்பர் 1997-ல், யெகோவாவின் சாட்சிகளுடைய “கடவுளுடைய வார்த்தையில் விசுவாசம்” என்ற மாவட்ட மாநாட்டில் கலந்துகொண்டோம். அது டாஹாயான்டூயூ ஸ்போர்ட்ஸ் ஸ்டேடியத்தில் நடந்தது. 634 பேர் கூடியிருந்தார்கள். புதியவர்கள் 12 பேர் முழுக்காட்டப்பட்டார்கள். வென்டா மொழியில் இரண்டு பேச்சுக்கள் கொடுக்கும் சிலாக்கியம் எனக்கு கிடைத்தது. பலன்தரும் இத்தேசத்தில் நாங்கள் செலவழித்த சந்தோஷமான பத்தாண்டுகளில் இது உண்மையிலேயே ஒரு மைல்கல்!—அளிக்கப்பட்டது.

[அடிக்குறிப்புகள்]

a உவாட்ச் டவர் பைபிள் அண்ட் டிராக்ட் சொஸைட்டி ஆஃப் இண்டியாவால் பிரசுரிக்கப்பட்டது.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2026)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்