உங்கள் பிள்ளைகளோடு சேர்ந்து வாசியுங்கள்
வீட்டில் அதிகமாய் வாசிக்கும் பழக்கமில்லாதவர்களுடைய பிள்ளைகளைவிட ஊக்கமாய் வாசிக்கும் பழக்கமுடையவர்களுடைய பிள்ளைகள் புத்தகங்கள்மீது ஆசையை வளர்த்துக்கொள்ளும் வாய்ப்பு அதிகம் என பிரேஸிலிய பத்திரிகை வேஷா கூறுகிறது. “ஒன்றுசேர்ந்து வாசிப்பது பெற்றோர்களுக்கும் பிள்ளைகளுக்கும் இடையே உள்ள உறவை பலப்படுத்துகிறது; புத்தகங்களில் உள்ள விஷயத்தை அந்தப் பிள்ளை நன்கு கிரகித்துக்கொள்ளவும் உதவுகிறது” என்று குறிப்பிடுகிறார் பிள்ளை வளர்ப்பு நிபுணர் மார்தா ஹாப்.
பிள்ளைச் செல்வங்களுக்கு சப்தமாக வாசித்துக் காட்டுவது, கேள்விகளுக்கு பதிலளிக்கவும் உங்களுக்கு வாய்ப்பளிக்கிறது. புத்தகங்களிலுள்ள விஷயத்தோடு அதிலுள்ள படங்களைப் பற்றியும் நீங்கள் பேசலாம். “ஒரு பிள்ளை எந்தளவுக்கு புத்தகங்களிலுள்ள விஷயங்களை புரிந்துகொள்கிறதோ, இன்னும் நிறைய விஷயங்களை தெரிந்துகொள்ள வேண்டுமென்ற ஆர்வம் ஏற்படும்போது அவன் அந்தளவுக்கு புத்தகங்களைத் தேடுவான்” என்று குறிப்பிடுகிறார் ஹாப்.
யெகோவாவின் சாட்சிகளாக இருக்கும் பெற்றோர்களில் அநேகர் தங்களுடைய பிள்ளைகளோடு சேர்ந்து வாசிப்பதை அனுபவித்து மகிழ்கிறார்கள். என்னுடைய பைபிள் கதை புத்தகம், பெரிய போதகருக்குச் செவிகொடுத்தல், எக்காலத்திலும் வாழ்ந்தவருள் மிகப் பெரிய மனிதர்a போன்ற பிரசுரங்களை அவர்கள் வாசிக்கலாம். பிள்ளைகள் வாசிப்பதில் கெட்டிக்காரர்களாக ஆவதற்கு இப்படிப்பட்ட புத்தகங்கள் உதவிசெய்வது மட்டுமல்லாமல், உலகிலேயே விற்பனையில் முதலிடத்தைப் பிடித்த புத்தகமாகிய பைபிளின்மீதும் அவர்களுடைய ஆர்வத்தை அதிகப்படுத்துகிறது. நீங்கள் ஒரு பெற்றோரா? அப்படியானால், கடவுளுடைய வார்த்தையை ஆவலாய் வாசிப்பதன் மூலம் உங்களுடைய பிள்ளைகளுக்கு முன்மாதிரியாக இருங்கள். (யோசுவா 1:7, 8) அவர்களுக்கு வாசித்துக்காட்ட எப்படியாவது நேரத்தை ஒதுக்குங்கள்!
[அடிக்குறிப்பு]
a உவாட்ச் டவர் பைபிள் அண்ட் டிராக்ட் சொஸைட்டி ஆஃப் இண்டியாவால் பிரசுரிக்கப்பட்டது