ராஷி—செல்வாக்கு மிக்க பைபிள் விளக்கவுரையாளர்
எபிரெய மொழியில் முதன்முதலாக அச்சடிக்கப்பட்ட புத்தகங்களில் பிரபலமானது எது? அதுதான் பென்டாடுக் (மோசே எழுதிய ஐந்து ஆகமங்கள்) பற்றி எழுதப்பட்ட விளக்கவுரை. இது இத்தாலியில் உள்ள ரெகியோ கெலாபிரியா என்ற இடத்தில் 1475-ல் அச்சிடப்பட்டது. இந்த புத்தகத்தை எழுதியவர் யார் என்றா யோசிக்கிறீர்கள்? அவர்தான் ராஷி.
ஒரு விளக்கவுரைக்கு ஏன் இப்படிப்பட்ட முக்கியத்துவம்? ராஷி—அந்த மனிதனும் அவரது உலகமும் என்ற ஆங்கில புத்தகத்தில் எஸ்ரா ஷெரஸவ்ஸ்கி என்பவர் இவ்வாறு குறிப்பிடுகிறார்: ராஷியின் விளக்கவுரை “யூதக் குடும்பத்திலும், யூத தொகுதிகள் கூடி வேதத்தை படிக்கும் இடங்களிலும் கற்றுக்கொடுக்கும் பாட புத்தகமாக அது பயன்படுத்தப்பட்டது. வேறு எந்த யூத புத்தகமும் இப்படிப்பட்ட புகழை சம்பாதிக்கவில்லை . . . பென்டாடுக்கிற்கு ராஷி எழுதிய விளக்கவுரைக்கு மேல்விளக்கம் தரும் கருத்துரைகள் 200-க்கும் அதிகமானவை இருக்கின்றன.”
ராஷியின் விளக்கவுரையால் இழுப்புண்டவர்கள் யூதர்கள் மட்டும்தானா? பல நூற்றாண்டுகளாக பைபிள் மொழிபெயர்ப்புகளின் மீதும்கூட ராஷியின் விளக்கவுரை தன் செல்வாக்கைக் காட்டியிருக்கிறது என்ற விஷயம் அநேகருக்கு தெரியாது. அப்படியென்றால் ராஷி என்பவர் யார், அவருக்கு ஏன் இவ்வளவு செல்வாக்கு?
ராஷி என்பவர் யார்?
பிரான்ஸ் தேசத்தில் டிரவா என்ற இடத்தில் 1040-ஆம் ஆண்டு ராஷி பிறந்தார். a வாலிபப் பிராயத்தில் ரைன்லாண்டில் உள்ள வோர்ம்ஸ், மெயின்ஸ் போன்ற இடங்களில் யூத மத கல்விக்கூடங்களுக்கு சென்று கல்வி கற்றார். அந்தக் காலத்தில் ஐரோப்பாவில் வாழ்ந்த மிகப் பிரபலமான யூத அறிஞர்களிடம் அவர் கல்வி கற்றார். அவருக்கு சுமார் 25 வயதிருக்கும்போது டிரவாவுக்கு திரும்ப வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. விளையும் பயிர் முளையில் தெரியும் என்பது போல் அவர் அப்போதே ஒரு பிரபலமான அறிஞர் என்று மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டார். சீக்கிரத்தில் அங்கிருந்த யூத மதத் தொகுதியின் மதத் தலைவரானார். அச்சமயம் அவரும் ஒரு மத கல்விக்கூடத்தை அவ்விடத்தில் நிறுவினார். காலப்போக்கில் இந்தப் புதிய யூத மத கல்விக்கூடம் ஜெர்மனியில் ராஷியின் ஆசிரியர்கள் நிறுவியவற்றைவிட அதிகமாக பேரும் புகழும் பெற்று விளங்க ஆரம்பித்தது.
அந்தச் சமயத்தில் பிரான்ஸில் இருந்த யூதர்கள், கிறிஸ்தவர்கள் என்று தங்களை உரிமை பாராட்டியவர்களுடன் ஓரளவு சமாதானத்துடனும் நல்லிணக்கத்துடனும்தான் வாழ்ந்தனர். இதனால் ராஷி தன்னுடைய இலக்கிய பசியார்வத்தை அதிகதிகமாக தொடர சுதந்திரம் இருந்தது. இருந்தாலும் அவர் தன்னை தனிமைப் படுத்திக்கொள்ளும் அறிஞராக வாழவில்லை. ஒரு பெரிய கல்விக்கூடத்தின் முதல்வராகவும், அங்கு படித்த மாணாக்கருக்கு ஆசிரியராகவும் இருந்தாலும் தன்னுடைய அனுதின வாழ்க்கைப் படகை செலுத்துவதற்கு ஒயின் தயாரித்து விற்றார். அவர் இப்படிப்பட்ட சாதாரண வியாபாரத்தை நன்றாக அறிந்திருந்தமையால் அங்கு வசித்த யூதர்களிடம் நல்ல பரிச்சயம் இருந்தது; அத்துடன் அவர்களுடைய சூழ்நிலைகளை புரிந்து கருணையுடன் நடந்துகொள்ளவும் உதவியது. டிரவா நகரமும் ராஷி ஆழ்ந்த அறிவை வளர்த்துக்கொள்ள தோதான இடத்தில் அமைந்திருந்தது. அது முக்கிய வியாபாரப் பாதையில் அமைந்திருந்தமையால் பல நாடுகளிலிருந்து வந்த மக்கள் ஒன்றுக்குள் ஒன்றாகப் புழங்கும் இடமாகவும் இருந்தது. இதன் காரணமாக பல நாடுகளில் உள்ள ஜனங்களின் பழக்க வழக்கங்கள், நாகரிகம் ஆகியவற்றை அவரால் நன்கு அறிந்துகொள்ள முடிந்தது.
ஏன் ஒரு விரிவுரை அவசியம்?
யூதர்கள் ‘அந்தப் புத்தகத்தின்’ ஜனங்கள்தான் என்பதாக அறியப்பட்டிருந்தனர். ஆனால் ‘அந்தப் புத்தகமாகிய’ பைபிள் எபிரெய மொழியில் இருந்தது; அதன் ‘ஜனங்களோ’ இப்போது அரபிக், பிரெஞ்சு, ஜெர்மன், ஸ்பானிஷ் போன்ற கதம்ப மொழிகளை பேசினர். சிறுவயது முதல் அநேக யூதர்களுக்கு எபிரெய மொழி கற்றுக் கொடுக்கப்பட்டிருந்தாலும் அவர்களால் பல பைபிள் பதங்களை சரியாக புரிந்துகொள்ள முடியவில்லை. அதோடுகூட பல நூற்றாண்டுகளாக ரபீக்களால் வழிநடத்தப்பட்ட யூத மதத்தில், பைபிளில் சொல்லுக்கு சொல் சரியான அர்த்தத்தை பார்த்து அறிய வேண்டிய அவசியமில்லை என்ற மனப்பான்மை நிலவியது. பைபிள் வார்த்தைகள் மற்றும் வசனங்களோடு சம்பந்தப்பட்ட ஏராளமான உருவகக் கதைகளும் கட்டுக்கதைகளும் பட்டி தொட்டியெல்லாம் பெருகின. அப்படிப்பட்ட விரிவுரைகளும் கதைகளும் பெரிய பெரிய புத்தகங்களாக எழுதப்பட்டு உருட்டி திரட்டி தொகுக்கப்பட்டு மிட்ராஷ் என்பதாக அழைக்கப்பட்டன. b
ரபீ சாமுவேல் பென் மேயிர் (ராஷ்பாம்) என்பவர் ராஷியின் பேரன், இவரும் ஒரு பைபிள் கல்விமான். ஆதியாகமம் 37:2-ஐ குறித்து தன்னுடைய விளக்கவுரையில் இவர் பின்வருமாறு குறிப்பிடுகிறார்: “பழைய விளக்கவுரையாளர்கள் [ராஷிக்கு முன்பிருந்தவர்கள்] . . . பிரசங்கங்களை (டெராஷோட்) அளிக்க மனமுள்ளவர்களாக இருந்தனர்; அவ்விதம் செய்வதுதான் மிக முக்கிய இலக்கு என்பதாக நினைத்தனர். (ஆனால்) அவர்களில் யாருக்குமே பைபிள் வார்த்தைகளின் சொல்லுக்கு சொல் சரியான அர்த்தம் என்ன என்பதை தோண்டித் துருவி ஆராய்ந்து கண்டுபிடிக்கும் பழக்கம் இல்லை.” இதைப்பற்றி டாக்டர் ஏ. கோஹன் (சான்சினோ பைபிள் புத்தகங்கள் என்பதன் தலைமை பதிப்பாசிரியர்) இவ்வாறு எழுதுகிறார்: “பெஷாட் அல்லது பைபிளின் நேரடியான வார்த்தைகளுக்கு ஒத்துவராத எந்த விளக்கங்களையும் ஏற்றுக்கொள்ளக் கூடாது என்ற சட்டத்தை ரபீக்கள் வைத்திருந்தது என்னமோ உண்மைதான். ஆனால், ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாது என்பதுபோல் நடைமுறையில் இந்தச் சட்டத்திற்கு அவர்கள் எந்த முக்கியத்துவமும் கொடுக்கவில்லை.” இப்படிப்பட்ட மத சூழ்நிலையில் ஒரு சாதாரண யூதன் ஒரு பைபிள் வார்த்தையை படிக்கும்போது கரைசேர முடியாததை போல உணர்ந்தார்; ஆகவே அவற்றை யாராவது விளக்கினால் நன்றாக இருக்குமே என்ற நிலை இருந்தது.
ராஷியின் இலட்சியமும் அடைவதற்கான வழிகளும்
எபிரெய வேதாகமத்தை எல்லா யூதர்களும் புரிந்துகொள்ள வேண்டும் என்பது ராஷியின் நீண்டநாள் கனவும், இலட்சியமும் ஆகும். இதை நிறைவேற்ற, வாசகர்களுக்கு கடினமாக இருக்கும் என்பதாக அவர் கருதிய, குறிப்பிட்ட வார்த்தைகளைப் பற்றியும் வசனங்களைப் பற்றியும் கொடுக்கப்பட்ட விளக்கங்களை அவர் எறும்புபோல் பல நோட்டு புத்தகங்களில் சேகரித்தார். ராஷியின் நோட்டுகளில் அவருடைய ஆசிரியர்கள் கொடுத்த விளக்கங்கள் இடம் பெற்றன; யூத ரபீக்களின் இலக்கியங்களை எல்லாம் அவர் கரைத்து குடித்திருந்தமையால் தன் சொந்த அறிவின் அடிப்படையில் அவர் அளித்த விளக்கங்களும் இருந்தன. மொழி சம்பந்தப்பட்ட ஆராய்ச்சியில், தன்னால் இயன்றவரை எல்லா ஆதாரங்களையும் அலசி ஆராய்ச்சி செய்தார். மசோரெட்டுகளின் விளக்கவுரைகளில் கொடுக்கப்பட்ட நிறுத்தக் குறிகளும் உச்சரிப்புக் குறிகளும் பைபிள் சொற்களின் அர்த்தத்தை எவ்வாறு பாதித்திருக்கின்றன என்பதையும் கவனித்தார். ஒரு வார்த்தையின் பொருளை தெள்ளத்தெளிவாக விளக்குவதற்காக, அவ்வார்த்தைக்கான அராமிக் மொழிபெயர்ப்பு (டார்கம் ஆஃப் ஆங்க்கலாஸ்) என்ன என்பதையும் ஆராய்ந்து, பென்டாடுக்கை பற்றிய தன்னுடைய விளக்கவுரையில் குறிப்பிட்டிருக்கிறார். முன்னிடைச்சொற்கள், இணையிடைச்சொற்கள், வினைச்சொற்களின் பொருள், அம்மொழியின் இலக்கணம் வாக்கிய அமைப்பின் பிற அம்சங்கள் ஆகியவற்றை நன்றாக விளக்குவதற்காக முன்பெல்லாம் ஆராய்ச்சி செய்யப்படவில்லை. ஆனால் ராஷி அவற்றையெல்லாம் தோண்டித் துருவி ஆராய்ந்தார். இதனால், அவரது விளக்கவுரையில் வளைந்து கொடுக்கும் தன்மையையும் தனித்திறமையையும் காணமுடிகிறது. அப்படிப்பட்ட விளக்கவுரையை அவர் அளித்ததால் எபிரெய மொழியின் வாக்கிய அமைப்பையும் இலக்கணத்தையும் புரிந்துகொள்ள அருமையான ஏதுவாக இருந்தது.
ரபீக்களின் யூத மதத்தில் இருந்த ஆதிக்கப் போக்கிற்கு முற்றிலும் எதிராக, பைபிளின் எளிமையான, நேரிடையான அர்த்தத்தை எடுத்துக்காட்டவே ராஷி முற்பட்டார். அதே சமயத்தில் யூதர்களால் நன்கு அறியப்பட்ட மிட்ராஷிக் இலக்கியங்களையும் ஏனோதானோ என்று விட்டுவிடமுடியாது. ரபீக்கள் அந்த மிட்ராஷிக் இலக்கியங்களில் எவ்வாறு பைபிளின் நேரடியான எளிமையான கருத்தை இருளடைய செய்யுமாறு விளக்கங்கள் கொடுத்திருக்கின்றனர் என்பதை அவர் குறிப்பிட்டார். இவ்வாறு ராஷி தன் விளக்கவுரையில் ஊதுகிற சங்கை தன்னால் ஊத முடிந்தவரை ஊதியிருக்கிறார் என்பது பளிச்சென்று குறிப்பிடத்தக்க அம்சம்.
ஆதியாகமம் 3:8-ஐப்பற்றி ராஷி இவ்விதம் விளக்குகிறார்: “ஏராளமான அகாடிக் c மிட்ராஷிம்களை நம்முடைய ஞானிகள் ஏற்கெனவே தகுந்த முறையில் பெரஷிட் ராபா, மிட்ராஷிக் இலக்கியங்களில் தொகுத்து வைத்திருக்கின்றனர். இதற்கு முற்றிலும் மாறாக இந்த வசனத்தின் (பெஷாட்) நேரடியான அர்த்தம் என்ன என்பதிலும் அதை எந்த அகாடாட் வசனத்தின் சூழமைவிற்கு ஏற்ப விளக்குகிறது என்பதிலும்தான் நான் அக்கறையாக இருக்கிறேன்.” தன்னுடைய அறிவுக்கு எட்டியவரை எந்த மிட்ராஷிம் சரியான அர்த்தத்தை விளக்குகிறதோ, எது வசனத்தின் சூழமைவுக்கு பொருத்தமாக இருக்கிறதோ அதை தேர்ந்தெடுத்தார். அதே சமயத்தில், குழப்பம் ஏற்படுத்திய அல்லது முரண்பாடான தகவலை அளித்த மிட்ராஷிம்களை திருத்தியமைத்தார், அல்லது நிராகரித்தார். இதன் விளைவாக, பிற்காலத்தில் வழிவழியாய் வந்த யூதர்கள், ராஷி மிட்ராஷில் எவற்றை சிறந்ததென தேர்ந்தெடுத்தாரோ அவற்றை நல்லமுறையில் அறிந்திருந்தனர்.
ராஷி, சில வசனங்களை விளக்கும்போது அவருடைய ஆசிரியர்கள் அளித்த விளக்கங்களை ஆகா ஓகோ என்று புகழ்ந்தார் என்பது உண்மைதான் என்றாலும் வேறு சில வசனங்களில், அவர்கள் அளித்த விளக்கங்கள் வசனத்தின் தெளிவான அர்த்தத்திற்கு முரண்படுகின்றன என்பதை எடுத்துக்காட்டவும் அவர் தயங்கவில்லை. அவருக்கு ஒரு பகுதி புரியவில்லை என்றாலோ அல்லது அந்தப் பகுதிக்கு அவர் தவறான அர்த்தத்தை முன்பு அளித்து விட்டதாக உணர்ந்தாலோ அதை ஒப்புக்கொள்ளவும் தயங்கவில்லை. இதற்கு ஒரு படி மேலே செல்பவராக, சில சந்தர்ப்பங்களில் அந்தப் பகுதியின் சரியான அர்த்தத்தை புரிந்து கொள்ள அவருடைய மாணக்கர்களே அவருக்கு உதவினர் என்பதைக்கூட அவர் குறிப்பிடத் தவறவில்லை என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.
சூழ்நிலைகளுக்கேற்ற மாற்றம்
ராஷி, காலத்துக்கேற்றபடி தன்னை மாற்றிக்கொள்ளும் நபர். அவரைப் பற்றி ஒரு நூலாசிரியர் பின்வருமாறு தொகுத்துள்ளார்: “சில வேதப்பகுதிகளை அந்நாட்டு மொழியில் மறு விளக்கம் அளித்ததே யூதர்களுக்கு அவர் [ராஷி] செய்த பெரும் தொண்டு. அவை தெளிவான, புரிந்துகொள்ளும் மொழிநடையில் எழுதப்பட்டிருந்தன. அவை கனிவுடனும் மனிதாபிமானத்துடனும் எழுதப்பட்டிருந்தன; அதே சமயம் அதில் தனிப்பட்ட திறமையும் புலமையும் தெளிவாக மிளிர்ந்தன. இதன் காரணமாக அவருடைய விளக்கவுரைகள் பரிசுத்த எழுத்துக்களுக்கு சமமாக மதிக்கப்பட்டன, அருமையான இலக்கியங்களாக சுவாரஸ்யத்துடனும் விரும்பி வாசிக்கப்பட்டன. சொல் நயத்துடனும், நேர்த்தியாகவும் சாதாரண பிரெஞ்சு மொழியில் எழுதுவதுபோல் ராஷி எபிரெய மொழியில் விளக்கங்களை எழுதினார். சரியான அர்த்தத்தை விளக்குவதற்கு ஒரு எபிரெய வார்த்தை அவருக்கு கிடைக்கவில்லை என்றால் அதற்கு பதில் அவர் ஒரு பிரெஞ்சு வார்த்தையை எபிரெய எழுத்துக்களில் பயன்படுத்தினார்.” இவ்விதம் எபிரெய மொழியில் எழுதப்பட்ட 3,500-க்கும் அதிகமான பிரெஞ்சு வார்த்தைகளை ராஷி பயன்படுத்தினார். அவை பழைய பிரெஞ்சு மொழியின் எழுத்திலக்கணம் அவற்றின் உச்சரிப்பைப் படிக்கும் மாணவர்களுக்கு மிகப்பெரிய பொக்கிஷமாகவே விளங்குகின்றன.
ராஷியின் ஆரம்பகால வாழ்க்கை ஓரளவிற்கு அமைதியான சூழ்நிலையில்தான் ஆரம்பித்தது என்பது உண்மையாக இருந்தாலும் அவரது பிற்கால வாழ்க்கையின்போது யூதர்களுக்கும் கிறிஸ்தவர்களுக்கும் மத்தியில் ஏராளமான பிரச்சினைகள் ஏற்பட்டன. 1096-ல் முதல் சிலுவைப்போரின்போது, ரைன்லாண்டில் ராஷி படித்த பகுதியில் வாழ்ந்த யூதத் தொகுதியினர் பெரிய அழிவை சந்தித்தனர். ஆயிரக்கணக்கான யூதர்கள் கொன்று குவிக்கப்பட்டனர். இந்த படுகொலையைப் பற்றி கேள்விப்பட்டதால்தான் அவரது உடல் நிலை பாதிக்கப்பட்டது என்பதாக சொல்லப்படுகிறது. (1105-ல் அவர் இறக்கும் வரை அவரது ஆரோக்கியம் தொடர்ந்து படிப்படியாக குன்றியது.) அதற்கு பிறகு அவர் பைபிள் பகுதிகளைப் பற்றி அளித்த விளக்கவுரைகளிலும் மிகப்பெரிய மாற்றங்கள் காணப்பட்டன. அவற்றில் குறிப்பிட வேண்டிய ஒரு உதாரணம் யெகோவாவின் ஊழியனின் வேதனைகளைக் குறிப்பிடும் ஏசாயா 53-ஐக் குறித்து அவர் அளித்த விளக்கங்கள். இந்தப் போருக்கு முன்பாக ராஷி இந்த வசனங்களை டால்மூட் விளக்குவது போலவே மேசியாவிற்கு பொருத்தி விளக்கினார். ஆனால் இதன் பின்னர் அநியாயமாக வேதனைகளை அனுபவித்த யூதர்களுக்கு இந்த வசனங்கள் பொருந்தும் என்பதாகக் கருதினார் என்று தோன்றுகிறது. இந்த வசனங்களுக்கு யூதர்கள் அளிக்கும் விளக்கத்திற்கு இதுதான் ஒரு திருப்புமுனையாக அமைந்தது. d ஆகவே கிறிஸ்தவமண்டலம் கிறிஸ்தவத்திற்கு விரோதமான நடவடிக்கைகளில் ஈடுபட்டதால், அநேகர், யூதர்கள் உட்பட இயேசுவைப் பற்றிய சத்தியத்தை புறக்கணித்தனர்.—மத்தேயு 7:16-20; 2 பேதுரு 2:1, 2.
பைபிள் மொழிபெயர்ப்புகளில் அவருடைய செல்வாக்கு
ராஷியின் செல்வாக்கு வெகு சீக்கிரத்திலேயே யூத மதத்தைத் தாண்டியது. பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த பிரான்ஸிஸ்கன் பைபிள் விரிவுரையாளர் நிக்கொலஸ் ஆஃப் லைரா (1270-1349) என்பவர் “ரபீ சாலொமோனின் [ராஷியின்] ” வார்த்தைகளை அடிக்கடி மேற்கோள் காட்டினார். இதன் காரணமாக “சாலொமோனின் (காப்பியடிக்கும்) குரங்கு” என்ற செல்லப் பெயரால் அழைக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து அநேக விரிவுரையாளர்கள், மொழிபெயர்ப்பாளர்கள் மீது லைராவின் விரிவுரைகள் செல்வாக்கு செலுத்தின. ஆங்கில கிங் ஜேம்ஸ் பைபிளை மொழிபெயர்த்தவர்கள், சீர்திருத்தவாதி மார்டின் லூத்தர் போன்றவர்கள் மீதும் இவை செல்வாக்கு செலுத்தின. இவர்தான் ஜெர்மனியில் பைபிள் மொழிபெயர்ப்புகளில் பெரிய புரட்சியையே ஏற்படுத்தினவர். லூத்தர் இதன் காரணமாக லைராவின் விளக்கவுரைகளை உள்ளங்கையில் வைத்து தாங்குவதுபோல் சார்ந்திருந்தார்; ஆகவே அங்கு பின்வரும் பிரபலமான பாடல் இயற்றப்பட்டது: “லைரா மட்டும் இந்த வீணையை வாசிக்கவில்லையென்றால் லூத்தர் அதற்கேற்றவாறு நடனமாடியிருக்கமாட்டார்.”
கிறிஸ்தவ சத்தியத்திற்கு முற்றிலும் விரோதமாக இருந்த ரபீக்களின் போதனைகள்தான் ராஷி மீது அதிக செல்வாக்கு செலுத்தின. ஆனாலும், அவருக்கு எபிரெய பதங்கள், அதன் வாக்கிய அமைப்பு, அதன் இலக்கணம் பற்றிய உட்பார்வை இருந்தது. ராஷி எப்போதுமே பைபிள் வார்த்தைகளின் அப்பட்டமான அர்த்தத்தை நூல்பிடித்தாற்போல் புரிந்துகொள்ள முயற்சி செய்தார். ஆகவே பைபிள் ஆராய்ச்சியாளர்களுக்கும் மொழிபெயர்ப்பாளர்களுக்கும் நல்ல முறையில் வார்த்தைகளை ஒப்பிடுவதற்கு ராஷியின் விளக்கவுரை ஓர் அர்த்தமுள்ள இலக்கியமாக விளங்குகிறது.
[அடிக்குறிப்புகள்]
a “ராஷி” என்ற வார்த்தை ராபி ஷ்லோமோ இட்ஸாகி [ரபீ சாலோமோன் பென் ஐசக்] என்ற சொற்களின் முதல் எழுத்துக்களைக் கொண்டு தோன்றியது.
b “மிட்ராஷ்” என்ற வார்த்தை எபிரெய மூலவார்த்தையிலிருந்து வந்திருக்கிறது. அதற்கு அர்த்தம், “விவரம்கோரு, படி, துருவித் தேடு.” இந்த வார்த்தைக்கு “பிரசங்கி” என்பதாகவும் கூடுதல் அர்த்தம் கொடுக்கலாம்.
c அகாடா (பன்மையில் அகாடாட்) என்பதற்கு நேரிடையான அர்த்தம் “விவரித்தல்.” இவை ரபீக்களின் எழுத்துக்களில் உள்ள சட்டத்திற்கு அப்பாற்பட்ட காரியங்களை விளக்குகிறது. இவற்றில், பைபிளில் வரும் ஆட்களைப் பற்றிய பைபிளில் இல்லாத கதைகள் அல்லது ரபீக்களை பற்றிய கட்டுக்கதைகள் அடங்கும்.
d போரில்லா உலகம் சாத்தியமா? என்ற ஆங்கில சிற்றேட்டில் பக்கம் 28-ல் காணப்படும் “என் ஊழியன்”—யார் அவர்? என்ற பெட்டியில் மேலே குறிப்பிட்ட பைபிள் வசனங்களுக்கு கூடுதல் விளக்கங்கள் அளிக்கப்பட்டுள்ளது. இது உவாட்ச்டவர் பைபிள் அண்ட் டிராக்ட் சொஸைட்டியால் பிரசுரிக்கப்பட்டது.
[பக்கம் 26-ன் படத்திற்கான நன்றி]
Text: Per gentile concessione del Ministero dei Beni Culturali e Ambientali