உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • w99 3/15 பக். 24-25
  • சொந்தக் காலில் நிற்க தவறுதல்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • சொந்தக் காலில் நிற்க தவறுதல்
  • காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1999
  • இதே தகவல்
  • ‘தேவனுடைய ஆலயத்துக்கும்’ கிரீஸிலுள்ள விக்கிரகங்களுக்கும் சம்பந்தமேது?
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1997
  • ஆப்பிரிக்காவில் கத்தோலிக்க சர்ச்
    விழித்தெழு!—1994
  • கிறிஸ்மஸ்—அதன் தோற்றம்
    விழித்தெழு!—1995
  • 11. விசுவாசதுரோகம்—கடவுளிடம் செல்லும் வழி அடைக்கப்படுகிறது
    கடவுளைத் தேடி
மேலும் பார்க்க
காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1999
w99 3/15 பக். 24-25

சொந்தக் காலில் நிற்க தவறுதல்

இத்தாலி நாட்டின் ரோம் நகரில் சுற்றுலா பயணிகள் ஆவலுடன் சுற்றிப்பார்க்கும் நினைவுச்சின்னங்களில் பான்தியானும் ஒன்று. இது பண்டைய காலத்தில் இருந்ததைப் போலவே பொலிவுடன் இன்றும் காட்சியளிக்கிறது. ரோமர்களின் கட்டிடக்கலையை பறைசாற்றும் தலைசிறந்த படைப்பாக உள்ள சில கட்டிடங்களில் இதுவும் ஒன்று. சுமார் பொ.ச.மு. 27-ல் அகிரிப்பா என்பவர் இதைக் கட்ட ஆரம்பித்தார். சுமார் பொ.ச. 120-ல் ஹேட்ரியன் என்பவர் இதைப் புதுப்பித்தார். இந்தக் கோயிலில் உள்ள குவிமாடத்தின் விட்டம் 43 மீட்டர் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். தற்காலத்தில்தான் இந்த அளவை விட பெரிதாக கட்ட முடிந்திருக்கிறது. இந்தப் பான்தியான் ஆரம்பத்தில் ஒரு புறமதக் கோயிலாக இருந்தது. “எல்லா தெய்வங்களும் இருக்கும் இடம்” என்பதே கிரேக்க மொழியில் பான்தியான் என்பதற்கான பொருள். இன்றோ அது ஒரு ரோமன் கத்தோலிக்க சர்ச்சாகவே கருதப்படுகிறது. நம்ப முடியாத இந்த மாற்றம் எவ்வாறு ஏற்பட்டது?

வெகுகாலம் பயன்படுத்தப்படாமல் இருந்த இந்தக் கோயிலை பொ.ச. 609-ல் நான்காம் போப் போனிஃபஸ் “கிறிஸ்தவ” சர்ச்சாக மறு பிரதிஷ்டை செய்து பச்சைக்கொடி காட்டினார். அந்தச் சமயத்தில் இதற்கு சான்டா மரியா ரோடுன்டா என்ற பெயர் வழங்கப்பட்டது. இத்தாலிய ஜெஸ்யூட் பத்திரிகை லா சிவில்ட்டா காட்டாலிக்கா இதைப்பற்றி 1900-ல் ஒரு கட்டுரை வெளியிட்டது. அதில் இந்தக் கோயிலை ஒரு தனிப்பட்ட நோக்கத்துடன் போனிஃபஸ் உபயோகிக்க நினைத்ததாகக் குறிப்பிட்டது. அதைப்பற்றி பின்வருமாறு சொல்கிறது: “கிறிஸ்தவர்களில் மதத்துக்காக உயிர் துறந்த எல்லா தியாகிகளையும் அல்லது எல்லா புனிதர்களையும் கௌரவிப்பதற்காக இந்தக் கோயில் உபயோகிக்கப்படும்; இதில் முதல் முக்கியத்துவம் வாய்ந்தவர் கடவுளின் கன்னித்தாய்.” பான்தியானுக்கு தற்போது ரோமன் கத்தோலிக்க சர்ச்சால் கொடுக்கப்பட்ட பெயர்கள்—சான்டா மாரியா ஆட் மார்டிரஸ், அல்லது வேறு விதத்தில் சொல்வதென்றால் சான்டா மரியா ரோடுன்டா—இது கண்டிப்பாக வேதப்பூர்வமற்ற நோக்கத்தை வெளிப்படுத்துகிறது.—ஒப்பிடுக: அப்போஸ்தலர் 14:8-15.

அந்தக் கட்டுரை தொடர்ந்து இவ்வாறு குறிப்பிட்டது: “பான்தியானை இவ்வாறு புதிய முறையில் பயன்படுத்துவதற்கு சுற்றி வளைத்து காரியங்களை செய்ய வேண்டிய அவசியமிருக்கவில்லை. போனிஃபஸ், அவருக்கு முன்பு போப்பாக பணி செய்த செயின்ட் கிரகரி த கிரேட் [முதலாம் போப் கிரகரி] ஏற்படுத்தி வைத்த எளிமையான தாராளமயமாக்கப்பட்ட சட்டங்கள் என்ற பாரம்பரியத்தை கண்ணை மூடிக்கொண்டு பின்பற்றினார். அவற்றின்படி புறமத கோயில்களை கிறிஸ்தவ வணக்கத்திற்கு மாற்றி பயன்படுத்துவதில் கிரகரி ஒரு மாஸ்டரோ (சூரப்புலி) மற்றும் முன்னோடி.” அந்தச் சட்டங்கள் யாவை?

புறமத பிரிட்டனுக்கு போவதற்கு தயாராக இருந்த ஒரு மிஷனரிக்கு பொ.ச. 601-ல் தான் எழுதிய ஒரு கடிதத்தில் கிரகரி பின்வரும் கட்டளைகளைக் கொடுத்தார்: “அந்த நாட்டில் இருக்கும் விக்கிரக கோயில்களை உடைக்க வேண்டாம். அந்த விக்கிரகங்களை மட்டும் உடைத்தால் போதும் . . . குறிப்பிட்ட கோயில்கள் நல்லவிதமாக கட்டப்பட்டிருந்தால் சூட்டோடு சூடாக அவற்றை பிசாசுகளின் வணக்கத்திலிருந்து உண்மைக் கடவுளின் வணக்கத்திற்கு மாற்றினால் போதுமானது.” தங்களுடைய கோயில்கள் உடைக்கப்படாமல் இருப்பதை புறமதத்தினர் பார்த்தால் அவர்கள் ஆவலுடன் தொடர்ந்து அந்த ஸ்தலத்திற்கு வர பிரியப்படுவார்கள் என்பதே கிரகரியின் கணிப்பு. அந்த போப் தொடர்ந்து இவ்வாறு எழுதினார், புறமதத்தினர் “ஏராளமான எருதுகளை பிசாசுக்கு பலியிட்டுவந்தார்கள்.” பின்வருபவற்றை செய்வதன் மூலம் அவர்களுடைய வணக்கத்தில் ஒரு மாற்றம் இருக்கும் என்று அவர் நம்பினார்: “அவர்கள் இனி பிசாசுக்கு மிருகங்களை பலியிடக்கூடாது. ஆனால் தேவனுடைய மகிமைக்காகவும் தாங்கள் சாப்பிடுவதற்காகவுமே அவர்கள் மிருகங்களைக் கொல்லலாம்.”

ரோமன் கத்தோலிக்க மதம், புறமதங்களுக்கு பதிலடி கொடுப்பதற்காக முந்தைய கோயில்களுக்கு அருகில் “கிறிஸ்தவ” ஆதரவாளர்களின் பெயரில் சர்ச்சுகளை பிரதிஷ்டை செய்தது. பழைய பண்டிகைக் கொண்டாட்டங்களை இழுத்துப்போட்டுக் கொண்டு அவற்றிற்கு “கிறிஸ்தவ” முலாம் பூசப்பட்டது. இந்த பழக்கங்களைப் பற்றி லா சிவில்ட்டா காட்டாலிக்கா பின்வருமாறு விவரித்தது: “பூர்வீக கிறிஸ்தவர்களின் சில பழக்க வழக்கங்களும் மத சடங்குகளும் புறமத பழக்கங்களையும் வழிமுறைகளையும்தான் ஒத்திருந்தன என்பது இப்போது இருக்கும் எல்லா அறிஞர்களுக்கும் தெரிந்த காரியமே. அப்படிப்பட்ட பழக்க வழக்கங்கள், அப்போதிருந்த பெரும்பான்மை ஜனங்களுக்கு மிகவும் அருமையானவை. அவ்வாறான மதச்சடங்குகள் அந்த ஜனங்களுடைய பொது வாழ்க்கையிலும், தனி வாழ்க்கையிலும் ஊறிப்போனவை; அவை மிக அதிக ஆழமாக பதிந்து போனவை. அன்பும் ஞானமும் நிறைந்த தாய் சபை அவற்றை வேரோடு பிடுங்க வேண்டும் என்பதாக நினைக்கவில்லை. அதற்கு பதில் அவற்றிற்கு கிறிஸ்தவ கருத்தில் ஒரு மாற்றம் கொடுத்து புதிய மதிப்பும் புதிய வாழ்வும் அளித்து அவற்றை மேற்கொண்டது. இப்படிச் செய்வதற்கு தன்னுடைய வல்லமையை காட்டிய அதே சமயம் கனிவாகவும் நடந்து கொண்டது. இதன் மூலம் பாமரர்களையும் மெத்தப் படித்தவர்களையும் தன் பக்கம் இழுத்துக்கொள்ள முடிந்தது.”

புறமத பண்டிகைகளை கிறிஸ்தவ பண்டிகைகளாக தத்து எடுத்துக்கொண்டதில் நன்கறியப்பட்ட உதாரணம் கிறிஸ்மஸ். அந்தக் காலத்து ரோமர்கள் டிசம்பர் மாதம் 25-ஆம் தேதியை டீயஸ் நாடாலீஸ் சோலீஸ் இன்வைக்டீ என்றழைத்து கொண்டாடினார்கள்; அதுதான் “வெல்ல முடியாத சூரியனின் பிறந்த நாள்.”

புறமதத்தவர்களை கவர்ந்திழுக்க வேண்டும் என்ற ஆர்வம்தான் மேலிட்டதே தவிர, சர்ச் சத்தியத்தை கடைப்பிடிக்கவில்லை. இதற்காக சின்கிரடிசம் (மத கதம்பம், அல்லது கதம்ப மதம்) என்ற வழக்கம் நேர்மையானது என்பதாக சர்ச் சாக்குப்போக்கு சொல்லிக்கொண்டது. அந்த வார்த்தையின் பொருள், புறமதத்திலுள்ள “பெரும்பான்மை ஜனங்களுக்கு அருமையானதாக” இருக்கும் நம்பிக்கைகளையும் சடங்குகளையும் சர்ச்சில் ஏற்றுக்கொள்வதே. ஆக இந்த இரண்டும் இணை சேர்ந்ததால் பிறந்ததுதான் உண்மை விசுவாசத்திற்கு துரோகம் இழைத்த சர்ச்; அதன் போதனைகள் உண்மை கிறிஸ்தவத்திலிருந்து காத தூரம் விலகியிருந்தன. இந்த உண்மைகளின் அடிப்படையில் நாம் பான்தியானை உற்று நோக்குவோம் என்றால், முன்பு ரோமர்களின் கோயிலாக “எல்லா தெய்வங்களுக்காகவும்” கட்டப்பட்ட பான்தியான் பின்பு ரோமன் கத்தோலிக்க சர்ச்சாக உருமாற்றமடைந்து மரியாளுக்காகவும் எல்லா “புனிதர்களுக்காகவும்” பிரதிஷ்டை செய்யப்பட்டது என்பது பெரிய ஆச்சரியமாக இருக்காதுதான்.

வெறுமனே ஒரு கோயில் பிரதிஷ்டை செய்யப்பட்டதை மாற்றுவதாலோ அல்லது ஒரு பண்டிகையின் பெயரை மாற்றுவதாலோ பெரிய மாற்றம் ஏற்பட்டுவிடாது என்பது இதிலிருந்து தெளிவாக தெரியவேண்டும். இவற்றை செய்வதால் மட்டுமே ‘பிசாசுகளின் வணக்கத்திலிருந்து உண்மை கடவுளுக்கு வணக்கம் செலுத்துவதாக’ நிலைமை மாறிவிடாது. அப்போஸ்தலன் பவுல் பின்வருமாறு குறிப்பிட்டார்: ‘கடவுளின் கோயிலுக்கும் சிலைகளுக்கும் ஒற்றுமை இருக்க முடியுமா? “அவர்கள் மத்தியிலிருந்து வெளியேறுங்கள்; அவர்களிடமிருந்து விலகிச் செல்லுங்கள்” என்று யெகோவா சொல்கிறார், “அசுத்தமானதை தொடாதிருங்கள், அப்போது நான் உங்களை சேர்த்துக்கொள்வேன். மேலும், நான் உங்களுக்கு தந்தையாக இருப்பேன், நீங்கள் எனக்கு குமாரரும் குமாரத்திகளுமாக இருப்பீர்கள்” என்று சர்வவல்லமையுள்ள யெகோவா சொல்கிறார்.’—2 கொரிந்தியர் 6:16-18, NW.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2026)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்