கவலைக் கடலில்—மூழ்கிவிடாதீர்கள்
அடுத்த நாளுக்காக ஒருபோதும் கவலைப்படாதீர்கள். ஏனெனில் அடுத்த நாள் அநேகக் கவலைகளை தன்னகத்தே வைத்திருக்கும். அந்தந்த நாளுக்கு அன்றன்றுள்ள தொல்லைகளே போதும்.” (மத்தேயு 6:34, NW) இயேசுவின் இந்த புத்திமதி ஆலாய்ப்பறக்கும் மன இறுக்கமுள்ள இந்தச் சமுதாயத்திற்கு எவ்வளவு நடைமுறையானது.
நம் பிரச்சினைகள், தீர்மானங்கள், கடமைகள், பொறுப்புகள் ஆகியவற்றைக் குறித்து உண்மையில் கவலைப்படாமல் இருக்க முடியுமா? கோடிக்கணக்கான ஜனங்கள் மன உளைச்சல், வருத்தம், பாரம் போன்றவற்றால் ஆட்டிப் படைக்கப்பட்டிருக்கிறார்கள். அதனால்தான் தூக்க மருந்துகள், மயக்க மருந்துகள் போன்றவை கோடிக்கணக்கான டாலர் வியாபாரமாக பூத உருவெடுத்திருக்கின்றன.
கவலையைக் கண்டுபிடிப்பது எப்படி?
நம் கடமைகள், வேலைகள், தீர்மானங்கள், பிரச்சினைகள் போன்றவற்றை அவசரமாகவோ அல்லது சாதாரணமாகவோ திட்டமிடத்தான் வேண்டும். ஒரு பெரிய தீர்மானத்தை எடுப்பதற்கு முன் நாம் ஆற அமர, ‘உட்கார்ந்து கட்டிமுடிக்க ஆகும் செலவைக் கணிக்க’ வேண்டும் என்று பைபிள் ஆலோசனை அளிக்கிறது. (லூக்கா 14:28-30, பொது மொழிபெயர்ப்பு) இந்தத் தீர்மானம் சம்பந்தமாக என்னவெல்லாம் வாய்ப்புகள் இருக்கின்றன என்பதை அறிந்துகொள்வதையும், இந்த முடிவால் என்னவெல்லாம் விளைவுகள் ஏற்படும் என்பதையும், அதோடு நேரம், சக்தி, பணம் போன்றவற்றை எவ்வளவு செலவிட வேண்டும் என்பதையும் ஆராய்வதை இந்தக் ‘கணித்தல்’ உட்படுத்துகிறது.
என்னவெல்லாம் நடக்கலாம் என்பதை ஒருவர் எதிர்பார்ப்பது அவசியம்தான் என்றாலும் எல்லாவற்றையும் கணித்துவிட முயலுவது முடியாத காரியம். அவ்வாறு முயலுவதால் எந்தப் பிரயோஜனமும் இல்லை. உங்கள் வீட்டில் திடீரென தீ பற்றிக்கொண்டால் குடும்பத்தைப் பாதுகாக்க என்னவெல்லாம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை நீங்கள் சிந்திக்கலாம். ஒருவேளை புகையை கண்டுபிடிக்கும் கருவி, தீயணைக்கும் கருவி ஆகியவற்றை வீட்டில் வாங்கி வைக்கலாம். அனல்கக்கும் வீட்டிலிருந்து ஆலாய் பறந்தோடுவதற்கு எந்தெந்த வழிகளை எல்லாம் உபயோகிக்கலாம் என்பதை நீங்கள் திட்டமிட்டு பயிற்சியும் செய்யலாம். ஆனால் இவ்வாறு செய்கையில், நடைமுறையான திட்டமிடுதல் எது என்றும், தேவையில்லா கவலை எது என்றும் எவ்வாறு புரிந்துகொள்வது? நீங்கள் எக்கச்சக்கமான சூழ்நிலைகளை கற்பனை செய்துகொண்டு இப்படியாகுமோ அப்படியாகுமோ என்று உங்களையே அலைக்கழிக்க ஆரம்பிக்கும்போது இப்படிப்பட்ட கவலையும் எழ ஆரம்பித்துவிடுகிறது. இவற்றில் அநேகம் உங்கள் கற்பனையின் விளைவே. உங்கள் குடும்பத்தைக் காக்க ஏதோ ஒன்றை கவனிக்க தவற விட்டிருக்கலாம் என்று கவலைப்படும்போது, உங்கள் கற்பனைகளே உங்களை அல்லோலகல்லோலப்படுத்த ஆரம்பித்துவிடும். இப்படி சுயமாய் ஏற்படுத்திக்கொண்ட மன உளைச்சலால் தூக்கமும் உங்களை விட்டு வெகுதூரம் பறந்துவிடலாம்.
பார்வோனின் முன்னிலையில் மோசே
யெகோவா தேவன் தம்முடைய தீர்க்கதரிசியாகிய மோசேக்கு ஒரு கடினமான வேலையைக் கொடுத்தார். முதலாவதாக, எகிப்திலிருந்து இஸ்ரவேலரை விடுவிப்பதற்காக யெகோவாதான் தன்னை அனுப்பினார் என்பதை இஸ்ரவேலருக்கு அவர் நிரூபிக்க வேண்டும். அடுத்ததாக, அவர் பார்வோனிடம் சென்று இஸ்ரவேலரை விடுவிக்குமாறு கேட்க வேண்டும். கடைசியாக, லட்சக்கணக்கான இஸ்ரவேலரை வனாந்தரத்தின் வழியாக எதிரிகள் வாழ்ந்துகொண்டிருந்த தேசத்திற்கு வழிநடத்திச் செல்ல வேண்டும். (யாத்திராகமம் 3:1-10) இவை அனைத்துமே விழிபிதுங்க வைக்கும் பொறுப்புகள்தான்; அதற்கென்று, இல்லாததையும் பொல்லாததையும் நினைத்து அவர் கவலைப்பட்டாரா?
மோசே அநேக விஷயங்களைப் பற்றி தெரிந்துகொள்ள வேண்டும் என்பதில் அக்கறையாக இருந்தார் என்பது உண்மைதான். அவர் யெகோவாவிடம் இவ்வாறு கேட்டார்: “இதோ! இஸ்ரயேல் மக்களிடம் சென்று உங்கள் மூதாதையரின் கடவுள் என்னை உங்களிடம் அனுப்பியுள்ளார் என்று நான் சொல்ல, ‘அவர் பெயர் என்ன’ என்று அவர்கள் என்னை வினவினால், அவர்களுக்கு என்ன சொல்வேன்?” யெகோவா அதற்கு பதிலளித்தார். (யாத்திராகமம் [விடுதலைப் பயணம்] 3:13, 14, பொ.மொ.) ஒருவேளை பார்வோன் தான் சொல்வதை நம்பவில்லையென்றால் அப்போது என்ன செய்வது என்பதைப் பற்றியும் மோசே கவலை கொண்டார். இதற்கும் யெகோவா பதிலளித்தார். கடைசியாக ஒரு பெரிய பிரச்சினை—தான் ஒரு ‘திக்குவாயன்’ என்பதை குறிப்பிட்டார். இதை எவ்விதம் தீர்ப்பது? ஜனங்களிடம் பேசுவதற்காக மோசேக்கு உதவியாக ஆரோனை யெகோவா ஏற்பாடு செய்தார்.—யாத்திராகமம் 4:1-5, 10-16.
அவர் கேட்ட கேள்விகளுக்கெல்லாம் இப்போது பதில் கிடைத்துவிட்டது; கடவுள் மேல் அவருக்கு விசுவாசம் இருந்தது, எனவே யெகோவா சொன்னபடியெல்லாம் செய்ய புறப்பட்டார். இல்லாததையும் பொல்லாததையும் நினைத்து, பார்வோனிடம் போகும்போது என்ன நடக்குமோ ஏது நடக்குமோ என்று நிலைகுலைந்து போவதற்கு பதில் மோசே, கடவுள் ‘கட்டளையிட்டபடியே செய்தார்.’ (யாத்திராகமம் 7:6) இந்த வேலையை செய்ய அவருக்கு விசுவாசமும் தைரியமும் தேவை. கவலை தன்னையே விழுங்குவதற்கு அவர் அனுமதித்திருந்தால் அந்த குணங்கள் பலமிழந்து போயிருக்கும்.
மோசே தன்னுடைய வேலையை சமநிலை இழக்காமல் நிறைவேற்றியதை அப்போஸ்தலன் பவுல் சொன்ன ‘தெளிந்த புத்திக்கு’ ஓர் உதாரணமாக குறிப்பிடலாம். (2 தீமோத்தேயு 1:7; தீத்து 2:2-6) மோசேக்கு இப்படிப்பட்ட அறிவுத்தெளிவு ஒருவேளை இல்லாமல் போயிருந்தால் அவர் இவ்வளவு பெரிய வேலையை நினைத்து நிலைகுலைந்துபோய் ஒருவேளை அதை ஒப்புக்கொண்டிருக்கமாட்டார்.
உங்கள் எண்ணங்களை இழுத்துப்பிடித்தல்
உங்களுடைய அனுதின வாழ்க்கையில், விசுவாசத்திற்கான சோதனை ஏற்படும்போது அல்லது பிரச்சினைகள் ஏற்படும்போது எவ்வாறு செயல்படுகிறீர்கள்? என்ன நடக்குமோ ஏது நடக்குமோ என்று வரவிருக்கும் பிரச்சினைகளையும் சவால்களையும் மட்டும் நினைத்து பயந்து நடுங்குகிறீர்களா? அல்லது அவற்றை சமநிலையோடு எடைபோடுகிறீர்களா? சிலர் பின்வருமாறு சொல்வதை நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம், “அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்.” நீங்கள் செல்லும் பாதையில் நீங்கள் கற்பனை செய்த அந்தப் பேய் இருக்காது! ஆகவே நடக்காமல் போகும் ஒரு விஷயத்தைப் பற்றி ஏன் அலட்டிக்கொள்ள வேண்டும்? பைபிள் பின்வருமாறு குறிப்பிடுகிறது: “மனக்கவலை மனிதரின் இதயத்தை வாட்டும்.” (நீதிமொழிகள் 12:25, பொ.மொ.) இதன் விளைவோ ஒருவர் தான் எடுக்க நினைக்கும் தீர்மானத்தைத் தள்ளிப் போட்டுக்கொண்டே போவார்; கடைசியில் அவரால் ஒன்றுமே செய்ய முடியாமல் போய்விடும்.
தேவையில்லாத கவலை ஜனிப்பதால் ஆவிக்குரிய கப்பலுக்கு ஏற்படும் சேதம் இதைவிட ஆபத்தானது. இயேசு கிறிஸ்து இதைப்பற்றி சொல்லும்போது, ‘ராஜ்யத்தின் வசனம், உலக கவலையாலும்’ செல்வத்தின் மாயையாலும் முற்றிலும் நெருக்கிவிடக்கூடும் என்று குறிப்பிட்டார். (மத்தேயு 13:19, 22) ஒரு செடி வளர்ந்து முதிர்ச்சி அடைந்து கனி தருவதை முட்செடிகள் தடுத்து விடுகின்றன. அதைப்போல் கட்டுப்பாடில்லாமல் நம்மை ஆட்டிப்படைக்கும் கவலை, தேவனுடைய புகழுக்காக நாம் செய்யும் ஆவிக்குரிய முன்னேற்றம், ஆவிக்குரிய கனி ஆகியவற்றை பிறப்பிப்பதை இரும்புக்கரம் கொண்டு தடுத்து விடலாம். இப்படிப்பட்ட கவலையால் தங்களையே அலைக்கழித்துக்கொள்ளும் சிலர் யெகோவாவிற்கு ஒப்புக்கொடுப்பதைக்கூட தள்ளிப்போடுகின்றனர். அவர்களுடைய கவலையெல்லாம், ‘ஒருவேளை ஒப்புக்கொடுத்ததற்கு ஏற்றபடி என்னால் நடந்துகொள்ள முடியவில்லை என்றால் என்ன செய்வது?’ என்பதே.
நம் ஆவிக்குரிய போராட்டத்தில் என்ன செய்ய முயல்கிறோம் என்பதை அப்போஸ்தலன் பவுல் பின்வருமாறு குறிப்பிட்டார்: “எந்த எண்ணத்தையும் கிறிஸ்துவுக்குக் கீழ்ப்படிய சிறைப்படுத்துகிறவர்களாயிருக்கிறோம்.” (2 கொரிந்தியர் 10:5, பொ.மொ.) நாம் உடலளவிலும், மனதளவிலும், ஆவிக்குரிய முறையிலும் தளர்ச்சி அடைய வேண்டும் என்று நம் எதிரியாகிய சாத்தான் விரும்புகிறான். அதற்கு வகைசெய்வது போல் நாம் கவலைப்பட்டு இடிந்து போவோம் என்றால், இடத்தைக் கொடுத்தால் மடத்தை பிடித்த கதையாய், இதுதான் சாக்கு என்று அதிக சந்தோஷத்துடன் அந்த சூழ்நிலையை பயன்படுத்திக்கொள்வான். ஜாக்கிரதையாக இல்லாதவர்களை சிக்க வைப்பதற்கு சந்தேகங்களை உபயோகிப்பதில் அவன் பெரிய கில்லாடி. அதற்காகத்தான் பவுல் ‘பிசாசுக்கு இடம்கொடுக்கக் கூடாது’ என்று கிறிஸ்தவர்களை எச்சரித்தார். (எபேசியர் 4:27) ‘இவ்வுலகின் தெய்வமாகிய’ சாத்தான் ‘நம்பிக்கை கொண்டிராதோரின் அறிவுக்கண்களை’ வெற்றிகரமாக குருடாக்கி விட்டான். (2 கொரிந்தியர் 4:4, பொ.மொ.) அவன் தன் இஷ்டம்போல் நம் எண்ணங்களை இழுத்த இழுப்புக்கு விட்டுவிட நாம் ஒருபோதும் அனுமதிக்காதிருப்போமாக!
உதவி காத்திருக்கிறது
பிரச்சினைகளை எதிர்ப்படும்போது ஒரு குழந்தை தன் அன்பான தகப்பனிடம் வழிநடத்துதலுக்காகவும் ஆறுதலுக்காகவும் ஓடுகிறது. இதைப்போல நாம்கூட நம் பரலோக தகப்பனாகிய யெகோவா தேவனிடம் நம் பிரச்சினைகளை எடுத்துக்கொண்டு ஓடலாம். உண்மையில் நம் பாரங்களையும் கவலைகளையும் தம்மிடம் போட்டுவிடும்படி யெகோவா கேட்கிறார். (சங்கீதம் 55:22, NW) தன் பிரச்சினைகளை தகப்பனிடம் சொன்னபின் அவர் ‘நான் பார்த்துக்கொள்கிறேன்’ என்று வாக்குறுதி கொடுத்தால் அதன் பிறகு அவற்றை பற்றி கவலைப்படாமல் இருக்கும் பிள்ளையைப்போல் நாம் நடந்துகொள்ள வேண்டும். நாம் யெகோவா தேவனிடம் நம் பிரச்சினைகளை போட்டுவிடுவது மட்டுமல்ல அதோடு அவர் பார்த்துக்கொள்வார் என்று அவரிடம் விட்டுவிடவும் வேண்டும்.—யாக்கோபு 1:6.
நாம் எவ்வாறு கவலைகளையெல்லாம் யெகோவாவிடம் போட முடியும்? பிலிப்பியர் 4:6, 7 (பொ.மொ.) இவ்வாறு பதிலளிக்கிறது: “எதைப் பற்றியும் கவலைப்பட வேண்டாம். ஆனால் நன்றியோடு கூடிய இறை வேண்டல், மன்றாட்டு ஆகிய அனைத்தின் வழியாகவும் கடவுளிடம் உங்கள் விண்ணப்பங்களைத் தெரிவியுங்கள். அப்பொழுது, அறிவெல்லாம் கடந்த இறை அமைதி கிறிஸ்து இயேசுவோடு இணைந்துள்ள உங்கள் உள்ளத்தையும் மனதையும் பாதுகாக்கும்.” ஆம், நாம் தொடர்ந்து விடாப்பிடியாக கேட்கும் வேண்டுதல்களுக்கும் மன்றாட்டுகளுக்கும் பதிலளிப்பவராக யெகோவா நமக்கு உள்ளப்பூர்வ அமைதியைக் கொடுத்து நமது உள்ளத்தை தேவையற்ற கவலைகள் ஆட்டிப்படைக்க அனுமதிக்க மாட்டார்.—எரேமியா 17:7, 8; மத்தேயு 6:25-34.
நாம் மற்றவர்களிடமிருந்து சொல்லர்த்தமாக அல்லது மனதளவில்கூட தனிமைப்படுத்திக் கொள்ளாமல் இருந்தால்தான் நம் ஜெபத்தோடு ஒருங்கிணைந்து செயல்படுகிறவர்களாக இருப்போம். (நீதிமொழிகள் 18:1) நம் பிரச்சினைகளோடு தொடர்புடைய பைபிள் நியமங்களையும் வழிநடத்துதல்களையும் கவனித்து பொருத்துவதன் மூலம் நம் சுயபுத்தியின் மேல் சார்ந்திருக்காமல் செயல்பட முடியும். (நீதிமொழிகள் 3:5, 6) அநேக பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கு இளைஞர்களும் வயதானவர்களும் உவாட்ச் டவர் பிரசுரங்களை படித்துப் பார்க்கலாம். அவற்றில் ஏராளமான தகவல்கள் இருக்கின்றன. இதற்கும் மேலாக கிறிஸ்தவ சபைகளில் ஞானமும் அனுபவமும் வாய்ந்த அநேக மூப்பர்களையும் முதிர்ந்த கிறிஸ்தவர்களையும் பெற்றிருப்பது பெரிய ஆசீர்வாதமே. அவர்கள் எந்த சமயத்திலும் நம்மோடு பேசுவதற்கு தயாராக இருக்கிறார்கள். (நீதிமொழிகள் 11:14; 15:22) ஒரு பிரச்சினையில் உணர்ச்சிப்பூர்வமாக பாதிக்கப்படாத ஒருவரால், அதே சமயம் அந்த விஷயத்தில் கடவுளின் நோக்கத்தை உணர்ந்த ஒருவரால் நம் பிரச்சினையை வேறு ஒரு கோணத்திலிருந்து நாம் பார்ப்பதற்கு உதவி செய்ய முடியும். அவர்கள் நமக்காக முடிவெடுக்க மாட்டார்கள் என்பது உண்மைதான் என்றாலும் அதிக உற்சாகமளிக்கவும் ஆதரவளிக்கவும் அவர்களால் முடியும்.
“தேவனுக்கு காத்திருங்கள்”
ஒவ்வொரு நாளும் நம்மை வாட்டிவதைக்கும் உண்மையான பிரச்சினைகளின் நிமித்தம் எக்கச்சக்கமான மன இறுக்கம் இருப்பதென்னவோ உண்மைதான். இந்த நிலையில் இல்லாததையும் பொல்லாததையும் கற்பனை செய்து கவலைப்பட்டால் அது பெரிய கொடுமைதான். என்ன நடக்கும் என்பதைப் பற்றி அச்சமோ அல்லது சஞ்சலமோ நமக்கு ஏற்படுமென்றால் நாம் உடனடியாக யெகோவாவிடம் மன்றாடலாம். வழிநடத்துதலுக்காவும் அறிவுத்தெளிவிற்காகவும் அவருடைய வார்த்தையையும், அமைப்பையும் நாடலாம். இதன் மூலம் எந்தச் சூழ்நிலை வந்தாலும் அதை சமாளிப்பதற்கு உதவி காத்திருக்கிறது என்பதை நம்மால் உணர முடியும்.
தாங்க முடியாத சுமையை உள்ளத்தில் சுமப்பவராகவும் கலங்கியவராகவும் சங்கீதக்காரர் பின்வருமாறு பாடினார்: “என் நெஞ்சே! நீ நம்பிக்கை இழப்பது ஏன்? கலக்கமுறுவது ஏன்? கடவுளையே நம்பியிரு. என் மீட்பராம் கடவுளை நான் இன்னும் போற்றுவேன். என் கடவுளின் மீட்பு செயல்களை முன்னிட்டு இன்னும் நான் நன்றி செலுத்துவேன்.” (சங்கீதம் [திருப்பாடல்கள்] 42:11, பொ.மொ.) இந்த வார்த்தைகளே நம் மனோபாவங்களாகட்டும்.
ஆம், எதையெல்லாம் எதிர்பார்க்க முடியுமோ அதை மட்டும் திட்டமிடுங்கள்; எதிர்பாராததை யெகோவாவிடம் விட்டுவிடுங்கள். “உங்கள் கவலைகளையெல்லாம் அவரிடம் விட்டு விடுங்கள். ஏனென்றால் அவர் உங்கள் மேல் கவலை கொண்டுள்ளார்.”—1 பேதுரு 5:7, பொ.மொ.
[பக்கம் 23-ன் படம்]
தாவீதைப்போல உங்கள் பாரங்களையும் கவலைகளையும் யெகோவாவிடம் போட்டுவிடுகிறீர்களா?