கடவுளோடு நடப்பது—நித்திய காலத்தை மனதில் வைத்து
‘நாங்கள் எங்கள் தேவனாகிய கர்த்தருடைய [“யெகோவாவுடைய,” NW] நாமத்தைப் பற்றிக்கொண்டு என்றென்றைக்குமுள்ள சதாகாலங்களிலும் நடப்போம்.’—மீகா 4:5.
1. யெகோவாவை ஏன் ‘நித்தியத்தின் ராஜா’ என அழைக்கலாம்?
யெகோவா தேவனுக்கு ஆரம்பம் இல்லை. எல்லையில்லா காலமாக அவர் இருந்துவருவதால் “நீண்ட ஆயுசுள்ளவர்” என்று அவரை அழைப்பது மிக பொருத்தம் (தானியேல் 7:9, 13) யெகோவா நித்திய எதிர்காலத்தையும்கூட அனுபவித்து மகிழுவார். எனவே அவர் மாத்திரமே ‘நித்தியத்தின் ராஜா.’ (வெளிப்படுத்துதல் 10:6; 15:3, NW) மேலுமாக அவருடைய பார்வையில் ஆயிரம் வருடங்கள் என்பது “நேற்றுக்கழிந்த நாள்போலவும் இராச்சாமம்போலவும் இருக்கிறது.”—சங்கீதம் 90:4.
2. (அ) கீழ்ப்படிதலுள்ள மனிதர்கள் சம்பந்தமாக கடவுளுடைய ஆதி நோக்கம் என்ன? (ஆ) எதைச் சுற்றி நம் விருப்பங்களும் எதிர்கால திட்டங்களும் அமைய வேண்டும்?
2 ஜீவனை அளிப்பவர் நித்தியராக இருப்பதால், முதல் மனித ஜோடியான ஆதாம் ஏவாளுக்கு பரதீஸில் முடிவில்லாத வாழ்க்கையை முன்வந்து அளித்தார். ஆனால் ஆதாமோ கீழ்ப்படியாமல் போனதால் நித்திய ஜீவனோடு வாழ்வதற்கான உரிமையை இழந்து தன்னுடைய சந்ததிக்கு பாவத்தையும் மரணத்தையும் கடத்தினான். (ரோமர் 5:12) இருந்தாலும் ஆதாம் செய்த கலகம் கடவுளுடைய ஆதி நோக்கத்தைக் குலைத்துவிடவில்லை. கீழ்ப்படிதலுள்ள மனிதர்கள் என்றுமாக வாழவேண்டும் என்பதே யெகோவாவின் சித்தம்; அவர் அந்த நோக்கத்தை நிச்சயமாக நிறைவேற்றுவார். (ஏசாயா 55:11) அப்படியானால் நித்திய காலமாக யெகோவாவை சேவிப்பதை மனதில் வைத்து, அதைச் சுற்றியே நம் விருப்பங்களையும் எதிர்கால திட்டங்களையும் அமைப்பது பொருத்தமாய் இருக்கும். நாம் எப்போதும் ‘யெகோவாவுடைய நாளை’ மனதில் வைக்க விரும்பினாலும் நம்முடைய இலக்கு கடவுளோடு நித்தியமாய் நடப்பதே என்பதை ஒருபோதும் மறந்துவிடக்கூடாது.—2 பேதுரு 3:12, NW.
யெகோவா தமக்குரிய நேரத்தில் செயல்படுகிறார்
3. தம்முடைய நோக்கங்களை நிறைவேற்றுவதற்கு யெகோவா ‘குறிக்கப்பட்ட காலத்தை’ வைத்திருக்கிறார் என்பது நமக்கு எப்படித் தெரியும்?
3 கடவுளோடு நடக்கும் நமக்கு, அவருடைய சித்தத்தை செய்துமுடிப்பதில் மிகுந்த அக்கறை உள்ளது. யெகோவா மிகப்பெரிய டைம்கீப்பர் என்பது நமக்குத் தெரியும், மேலும் தமக்குரிய நேரத்தில் தம்முடைய நோக்கங்களை நிறைவேற்றியே தீருவார் என்றும், இந்த விஷயத்தில் அவர் தவறவே மாட்டார் என்றும் நாம் நம்புகிறோம். உதாரணமாக “காலம் நிறைவேறினபோது, . . . தம்முடைய குமாரனை தேவன் அனுப்பினார்.” (கலாத்தியர் 4:5) அப்போஸ்தலனாகிய யோவானுக்குக் காட்டப்பட்ட தரிசனத்தில் தீர்க்கதரிசன காரியங்கள் நிறைவேறுவதற்கு ‘குறிக்கப்பட்ட காலம்’ இருப்பதாக சொல்லப்பட்டது. (வெளிப்படுத்துதல் 1:1-3, NW) ‘மரித்தோர் நியாயத்தீர்ப்படைகிறதற்கு குறிக்கப்பட்ட காலம்’ இருக்கிறது. (வெளிப்படுத்துதல் 11:18, NW) 1,900-க்கும் மேற்பட்ட ஆண்டுகளுக்கு முன்பாக, அப்போஸ்தலன் பவுல் ‘கடவுள் பூலோகத்தை நீதியாய் நியாயந்தீர்ப்பதற்கு ஒரு நாளைக் குறித்திருக்கிறார்’ என்று சொல்லும்படி ஆவியால் ஏவப்பட்டார்.—அப்போஸ்தலர் 17:31.
4. இந்தப் பொல்லாத உலகத்துக்கு கடவுள் முடிவைக் கொண்டுவர விரும்புகிறார் என்பது நமக்கு எப்படித் தெரியும்?
4 யெகோவா இந்தப் பொல்லாத உலகத்துக்கு ஒரு முடிவைக் கொண்டுவருவார், ஏனென்றால் யெகோவாவின் பெயர் இன்றைய உலகில் நிந்திக்கப்பட்டுவருகிறது. மேலும் கொடியவர்கள் கொடிகட்டிப் பறக்கிறார்கள். (சங்கீதம் 92:7) தங்கள் சொல்லாலும் செயலாலும் அவர்கள் கடவுளை அவமதிக்கிறார்கள். தம்முடைய ஊழியர்கள் தூஷிக்கப்பட்டு துன்புறுத்தப்படுகையில் அது யெகோவாவுக்கு வேதனையாக இருக்கிறது. (சகரியா 2:8) ஆகவே சாத்தானின் முழு அமைப்பும் சீக்கிரத்தில் முடிவுக்கு வரவேண்டும் என யெகோவா கட்டளையிட்டிருப்பது குறித்து ஆச்சரியப்படுவதற்கில்லை. இது எப்போது நடைபெற வேண்டும் என்பதை கடவுள் துல்லியமாக நிர்ணயித்துவிட்டார், அதோடு பைபிள் தீர்க்கதரிசனங்களின் நிறைவேற்றங்களும் தெளிவாக காட்டுகின்றன நாம் ‘முடிவுகாலத்தில்’ வாழ்ந்துவருகிறோம் என்பதை. (தானியேல் 12:4) தம்மை நேசிக்கும் அனைவரையும் ஆசீர்வதிப்பதற்கு சீக்கிரத்தில் அவர் நடவடிக்கை எடுப்பார்.
5. தங்களைச் சுற்றியிருந்த நிலைமைகளை குறித்து லோத்தும் ஆபகூக்கும் எப்படி உணர்ந்தனர்?
5 கடந்த காலங்களில் வாழ்ந்த யெகோவாவின் ஊழியர்கள் அக்கிரமம் முடிவுக்கு வருவதைக் காண ஆவலாக இருந்திருக்கிறார்கள். நீதிமானாக இருந்த லோத்து, ‘அக்கிரமக்காரருடைய காமவிகார நடக்கையால் மிகவும் வருத்தப்பட்டார்.’ (2 பேதுரு 2:7) தன்னைச் சுற்றியிருந்த நிலைமைகளைக் குறித்து ஆபகூக் தீர்க்கதரிசி துக்கமடைந்தார்; அவர் இவ்வாறு முறையிட்டார்: “கர்த்தாவே, [“யெகோவாவே,” NW] நான் எதுவரைக்கும் உம்மை நோக்கிக் கூப்பிடுவேன், நீர் கேளாமலிருக்கிறீரே! கொடுமையினிமித்தம் நான் எதுவரைக்கும் உம்மை நோக்கிக் கூப்பிடுவேன், நீர் இரட்சியாமலிருக்கிறீரே! நீர் எனக்கு அக்கிரமத்தைக் காண்பித்து, என்னைத் தீவினையைப் பார்க்கப்பண்ணுகிறதென்ன? கொள்ளையும் கொடுமையும் எனக்கு எதிரே நிற்கிறது; வழக்கையும் வாதையும் எழுப்புகிறவர்கள் உண்டு.”—ஆபகூக் 1:2, 3.
6. ஆபகூக்கின் ஜெபத்துக்குப் பதிலளிப்பவராக யெகோவா என்ன சொன்னார், இதிலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்?
6 யெகோவா ஆபகூக்குக்கு கொடுத்த பதிலில் அவருடைய கேள்விக்கு ஓரளவான பதில் கிடைத்தது: “குறித்தகாலத்துக்குத் தரிசனம் இன்னும் வைக்கப்பட்டிருக்கிறது; முடிவிலே அது விளங்கும், அது பொய் சொல்லாது; அது தாமதித்தாலும் அதற்குக் காத்திரு; அது நிச்சயமாய் வரும், அது தாமதிப்பதில்லை.” (ஆபகூக் 2:3) இவ்விதமாக ‘குறிக்கப்பட்ட காலத்தில்’ தாம் நடவடிக்கை எடுப்பார் என்பதைக் கடவுள் தெரிவித்தார். தாமதிப்பது போல தோன்றினாலும், யெகோவா நிச்சயமாக தம்முடைய நோக்கத்தை நிறைவேற்றிவிடுவார்—தவறவே மாட்டார்!—2 பேதுரு 3:9.
தளராத வைராக்கியத்தோடு சேவித்தல்
7. யெகோவாவின் நாள் எப்போது வரும் என்பதை இயேசு துல்லியமாக அறிந்திராதபோதிலும், தம்முடைய வேலைகளை எவ்வாறு செய்தார்?
7 கடவுளோடு வைராக்கியமாக நடப்பதற்கு, சம்பவங்கள் நிகழ யெகோவா குறித்து வைத்திருக்கும் நேரத்தை நாம் கட்டாயம் அறிந்திருக்க வேண்டுமா? அது அவசியமில்லை. ஒரு சில உதாரணங்களைக் கவனியுங்கள். கடவுளுடைய சித்தம் பரலோகத்திலே செய்யப்படுவது போல பூமியிலே செய்யப்படப்போகும் அந்தக் காலத்தைக் குறித்து இயேசு மிகவும் அக்கறையுள்ளவராக இருந்தார். உண்மையிலேயே, தம்மைப் பின்பற்றுவோருக்கு இவ்வாறு ஜெபிக்கவும் கற்றுக்கொடுத்தார்: “பரமண்டலங்களிலிருக்கிற எங்கள் பிதாவே, உம்முடைய நாமம் பரிசுத்தப்படுவதாக. உம்முடைய ராஜ்யம் வருவதாக; உம்முடைய சித்தம் பரமண்டலத்திலே செய்யப்படுகிறதுபோல பூமியிலேயும் செய்யப்படுவதாக.” (மத்தேயு 6:9, 10) இந்த ஜெபத்திற்கு பதில் கிடைக்கும் என்பது இயேசுவுக்குத் தெரிந்திருந்தது; ஆனால், அவை துல்லியமாக நடந்தேறும் காலம் அவருக்கு தெரியாது. இந்த உலகத்தின் முடிவைக் குறித்த தம்முடைய முக்கியமான தீர்க்கதரிசனத்தில் அவர் இவ்வாறு சொன்னார்: “அந்த நாளையும் வேளையையும்பற்றித் தந்தை ஒருவருக்குத் தவிர வேறு எவருக்கும் தெரியாது. விண்ணகத் தூதருக்கோ மகனுக்கோகூடத்தெரியாது.” (மத்தேயு 24:36, பொ.மொ.) கடவுளுடைய நோக்கங்களை நிறைவேற்றுவதில் இயேசு கிறிஸ்து முக்கியமானவராக இருப்பதன் காரணமாக, தகப்பனின் சத்துருக்களுக்கு மரண தண்டனைத் தீர்ப்பை நிறைவேற்றுவதில் அவர் நேரடியாக உட்பட்டிருப்பார். ஆனால் இயேசு பூமியில் இருந்தபோது, கடவுள் எப்போது நடவடிக்கை எடுப்பார் என்பது அவருக்கும் தெரியாதிருந்தது. இது, யெகோவாவின் சேவையில் அவருடைய வைராக்கியத்தை குறைத்துவிட்டதா? நிச்சயமாக இல்லை! இயேசு வைராக்கியத்தோடு ஆலயத்தை சுத்திகரிப்பதைப் பார்த்தபோது “உம்முடைய வீட்டைக்குறித்து உண்டான பக்திவைராக்கியம் என்னைப் பட்சித்தது என்று எழுதுயிருக்கிறதை அவருடைய சீஷர்கள் நினைவுகூர்ந்தார்கள்.” (யோவான் 2:17; சங்கீதம் 69:9) இயேசு எந்த வேலையைச் செய்யும்படி அனுப்பப்பட்டாரோ அதைச் செய்வதில் முழுவதுமாக தம்மை ஈடுபடுத்திக்கொண்டார், அதை தளராத வைராக்கியத்தோடும் செய்தார். அவரும் நித்திய நோக்கத்தை மனதில்வைத்து கடவுளை சேவித்தார்.
8, 9. ராஜ்யம் திரும்ப கொடுக்கப்படுதலைக் குறித்து சீஷர்கள் கேட்டபோது அவர்களிடம் என்ன சொல்லப்பட்டது, அதற்கு அவர்கள் எப்படி பிரதிபலித்தார்கள்?
8 கிறிஸ்துவின் சீஷர்களுக்கும் அதே வைராக்கியம் இருந்தது. இயேசு பரலோகத்துக்கு செல்வதற்கு சற்று முன்பாக அவர்களைச் சந்தித்துப்பேசினார். பதிவு இவ்வாறு சொல்கிறது: “அப்பொழுது கூடிவந்திருந்தவர்கள் அவரை நோக்கி: ஆண்டவரே, இக்காலத்திலா ராஜ்யத்தை இஸ்ரவேலுக்குத் திரும்பக் கொடுப்பீர் என்று கேட்டார்கள்.” தங்களுடைய எஜமானரைப் போலவே, ராஜ்யம் வர அவர்களும் ஆவலாய் காத்திருந்தார்கள். ஆனால் இயேசு இவ்விதமாக அவர்களுக்கு பதிலளித்தார்: “பிதாவானவர் தம்முடைய ஆதீனத்திலே வைத்திருக்கிற காலங்களையும் வேளைகளையும் அறிகிறது உங்களுக்கு அடுத்ததல்ல. பரிசுத்த ஆவி உங்களிடத்தில் வரும்போது நீங்கள் பெலனடைந்து, எருசலேமிலும், யூதேயா முழுவதிலும், சமாரியாவிலும், பூமியின் கடைசிபரியந்தமும், எனக்குச் சாட்சிகளாயிருப்பீர்கள்.”—அப்போஸ்தலர் 1:6-8.
9 இந்தப் பதிலைக் கேட்டு சீஷர்கள் சோர்வடைந்தார்கள் என எந்தப் பதிவும் இல்லை. அதற்குப் பதிலாக, அவர்கள் சுறுசுறுப்பாக வைராக்கியத்தோடு பிரசங்க வேலையில் ஈடுபட்டார்கள். ஒரு சில வாரங்களுக்குள்ளேயே எருசலேமை தங்களுடைய போதனையினால் நிரப்பினார்கள். (அப்போஸ்தலர் 5:28) 30 வருடங்களுக்குள்ளாகவே, தங்களுடைய பிரசங்க வேலையை அந்த அளவுக்கு விரிவாக அவர்கள் செய்து முடித்திருந்தபடியால் பவுல் நற்செய்தி “வானத்தின் கீழிருக்கிற சகல சிருஷ்டிகளுக்கும்” பிரசங்கிக்கப்பட்டு வருகிறது என்று சொன்னார். (கொலோசெயர் 1:23) சீஷர்கள் எதிர்பார்த்திருந்தபடி ராஜ்யம் அப்போது ‘இஸ்ரவேலுக்குத் திரும்பக் கொடுக்கப்படவில்லை,’ அவர்களுடைய வாழ்நாட்காலத்தில் அது பரலோகத்தில் ஸ்தாபிக்கப்படவுமில்லை; ஆனாலும் நித்திய காலத்தை மனதில்வைத்து அவர்கள் யெகோவாவைத் தொடர்ந்து வைராக்கியமாக சேவித்துவந்தார்கள்.
நம் உள்நோக்கங்களை ஆராய்ந்து பார்த்தல்
10. கடவுள் சாத்தானுடைய உலகத்தை எப்பொழுது அழிப்பார் என்பதை அறியாமலிருப்பது எதை நிரூபிக்க நமக்கு வாய்ப்பளிக்கிறது?
10 யெகோவாவின் தற்கால ஊழியர்களும்கூட இந்தப் பொல்லாத உலகின் முடிவைக் காண ஆவலாய் இருக்கிறார்கள். இருந்தாலும், வாக்குறுதி அளிக்கப்பட்ட கடவுளுடைய புதிய உலகிற்குள் செல்வது மட்டுமே நம் முக்கிய அக்கறை இல்லை. யெகோவாவின் பெயர் பரிசுத்தப்பட வேண்டும்; அவருடைய உன்னத அரசதிகாரம் நியாயநிரூபணம் செய்யப்பட வேண்டும்; இவற்றைக் கண்ணாரக் காண்பதுதான் நம் முக்கிய அக்கறை. இதன் காரணமாக, சாத்தானுடைய உலகத்தை அழிப்பதற்காக கடவுள் நிர்ணயித்திருக்கும் அந்த ‘நாளை அல்லது நாழிகையை’ அவர் நமக்கு தெரிவிக்காமல் இருப்பதற்காக நாம் சந்தோஷப்படலாம். கடவுளை நேசிப்பதால் அவரோடு நித்தியமாக நடக்க நாம் தீர்மானித்திருக்கிறோம், அதோடு குறுகிய கால, தன்னல நோக்கங்களுக்காக நாம் அவரை சேவிப்பதில்லை என்பதையும் நிரூபிக்க இது நமக்கு வாய்ப்பளிக்கிறது.
11, 12. யோபுவின் உத்தமத்தன்மை எவ்விதமாக சவால்விடப்பட்டது, மேலும் அந்தச் சவாலுக்கும் நமக்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது?
11 நீதிமானாய் இருந்த யோபுவைப்போலவே, கடவுளிடமாக உத்தமத்தைக் காத்துக்கொள்ளும்போது, நாமும் மற்றவர்களும் சுயநல அக்கறையின் காரணமாகவே கடவுளைச் சேவிக்கிறோம் என்ற பிசாசின் சவாலை தவறென நிரூபிக்க முடியும். யெகோவா தம்முடைய ஊழியக்காரன் யோபு, குற்றமற்றவன், நீதிமான், கடவுளுக்கு பயந்தவன் என்பதாக விவரித்தபோது, சாத்தான் பொல்லாத எண்ணத்தோடு இப்படிச் சொன்னான்: “யோபு விருதாவாகவா தேவனுக்குப் பயந்து நடக்கிறான்? நீர் அவனையும் அவன் வீட்டையும் அவனுக்கு உண்டான எல்லாவற்றையும் சுற்றி வேலியடைக்கவில்லையோ? அவன் கைகளின் கிரியையை ஆசீர்வதித்தீர்; அவனுடைய சம்பத்து தேசத்தில் பெருகிற்று. ஆனாலும் உம்முடைய கையை நீட்டி அவனுக்கு உண்டானவையெல்லாம் தொடுவீரானால், அப்பொழுது அவன் உமது முகத்துக்கு எதிரே உம்மைத் தூஷிக்கானோ பாரும்.” (யோபு 1:8-11) யோபு சோதிக்கப்பட்டபோது தன்னுடைய உத்தமத்தைக் காத்துக்கொள்வதன் மூலம் இவை கெட்ட நோக்கத்தோடு கூறப்பட்ட பொய் என்பதை நிரூபித்தார்.
12 தொடர்ந்து உத்தமத்தைக் காத்துக்கொள்வதன்மூலம், சீக்கிரத்தில் கிடைக்கவிருக்கும் வெகுமதிக்காகவே நாம் கடவுளைச் சேவிக்கிறோம் என்ற சாத்தானின் சவாலை தவறு என்று நிரூபிக்கமுடியும். பொல்லாதவர்களை கடவுள் பழிவாங்கும் நாளை அறியாதிருப்பது, நாம் யெகோவாவை உண்மையில் நேசிப்பதையும் அவருடைய வழிகளில் என்றுமாக நடக்க விரும்புவதையும் நிரூபிப்பதற்கு நமக்கு வாய்ப்பளிக்கிறது. நாம் கடவுளிடம் பற்றுமாறாதவர்களாக இருப்பதையும் காரியங்களை அவர் கையாளும் முறையில் நமக்கு முழு நம்பிக்கை இருப்பதையும் இது காட்டுகிறது. இரவில் திருடன் வருகிறவிதமாக முடிவு வரவிருப்பதை நாம் உணர்ந்திருப்பதால் அந்த நாளையும் நாழிகையையும் அறியாதிருப்பது நம்மை எச்சரிக்கையாகவும் ஆவிக்குரிய விதமாக விழிப்பாகவும் வைத்துக்கொள்ள உதவிசெய்கிறது. (மத்தேயு 24:42-44) தினந்தோறும் யெகோவாவோடு நடப்பதன் மூலம், நாம் அவருடைய இருதயத்தைச் சந்தோஷப்படுத்துகிறோம், அவரை நிந்திக்கிற பிசாசுக்கு பதிலடி கொடுக்கிறோம்.—நீதிமொழிகள் 27:11.
நித்தியத்துக்காக திட்டமிடுங்கள்!
13. எதிர்காலத்துக்காக திட்டமிடுவதைக் குறித்து பைபிள் என்ன சொல்கிறது?
13 எதிர்காலத்துக்காக நியாயமாக திட்டமிடுவது ஞானமானதே என்பது, கடவுளோடு நடப்பவர்களுக்குத் தெரிந்ததுதான். வயதாகிவிட்டால் அதன் கூடவே சொந்தம் கொண்டாடி வரும் பிரச்சினைகளும் வரைமுறைகளும் என்னென்ன என்பது அநேகருக்குத் தெரியும்; அதனால், தங்களுடைய பிற்கால வாழ்க்கைக்குப் பொருளாதார பாதுகாப்பு வேண்டுமே என நினைத்து தங்கள் இளமையையும் பலத்தையும் தங்களால் முடிந்தளவுக்கு பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என எண்ணி மாடாய் உழைக்கிறார்கள். அதோடு நம்முடைய அதிமுக்கியமான ஆவிக்குரிய எதிர்காலத்தைப்பற்றி சிந்திக்கிறோமா? நீதிமொழிகள் 21:5 இவ்வாறு சொல்கிறது: “ஜாக்கிரதையுள்ளவனுடைய நினைவுகள் செல்வத்திற்கும், பதறுகிறவனுடைய நினைவுகள் தரித்திரத்துக்கும் ஏதுவாகும்.” நித்தியத்தை மனதில் வைத்து முன்கூட்டியே ஜாக்கிரதையாய் திட்டமிட்டால் ‘நன்மை கோடி’ கிடைக்கும். இந்த உலகத்தின் முடிவு எப்போது வரும் என்பது திட்டவட்டமாக நமக்குத் தெரியாததால் எதிர்கால தேவைகளைக் குறித்து சற்று சிந்திப்பது அவசியம். ஆனால் வாழ்க்கையில் சமநிலையுடன் தெய்வீக அக்கறைகளுக்கு முதலிடத்தைக் கொடுப்போமாக. கடவுளுடைய சித்தத்தைச் செய்வதன்பேரில் நம்முடைய அக்கறைகளை ஒருமுகப்படுத்துவது எதிர்காலத்தைப் பற்றிய எந்தக் கவலையும் இல்லாத குறுகிய நோக்குடையது என்பதாக விசுவாசமில்லாதவர்கள் முடிவுகட்டலாம். ஆனால் அது உண்மையா?
14, 15. (அ) எதிர்காலத்துக்காக திட்டமிடுவதைக் குறித்து இயேசு என்ன உதாரணத்தைச் சொன்னார்? (ஆ) இயேசுவின் உதாரணத்திலிருந்த ஐசுவரியவான் ஏன் குறுகிய நோக்குடையவனாக இருந்தான்?
14 இந்த விஷயத்தைத் தெளிவாக புரிந்துகொள்ள உதவும் ஒரு உதாரணத்தை இயேசு சொன்னார். அவர் சொன்னதாவது: “ஐசுவரியமுள்ள ஒருவனுடைய நிலம் நன்றாய் விளைந்தது. அப்பொழுது அவன்: நான் என்ன செய்வேன்? என் தானியங்களைச் சேர்த்து வைக்கிறதற்கு இடமில்லையே; நான் ஒன்று செய்வேன், என் களஞ்சியங்களை இடித்து, பெரிதாகக் கட்டி, எனக்கு விளைந்த தானியத்தையும் என் பொருள்களையும் அங்கே சேர்த்துவைத்து, பின்பு: ஆத்துமாவே, உனக்காக அநேக வருஷங்களுக்கு அநேகம் பொருள்கள் சேர்த்துவைக்கப்பட்டிருக்கிறது; நீ இளைப்பாறி, புசித்துக் குடித்து, பூரிப்பாயிரு என்று என் ஆத்துமாவோடே சொல்லுவேன் என்று தனக்குள்ளே சிந்தித்துச் சொல்லிக்கொண்டான். தேவனோ அவனை நோக்கி: மதிகேடனே, உன் ஆத்துமா உன்னிடத்திலிருந்து இந்த இராத்திரியிலே எடுத்துக்கொள்ளப்படும், அப்பொழுது நீ சேகரித்தவைகள் யாருடையதாகும் என்றார். தேவனிடத்தில் ஐசுவரியவானாயிராமல், தனக்காகவே பொக்கிஷங்களைச் சேர்த்துவைக்கிறவன் இப்படியே இருக்கிறான்.”—லூக்கா 12:16-21.
15 ஐசுவரியவான் எதிர்காலத்தின் பொருளாதார பாதுகாப்புக்காக கடினமாக வேலை செய்திருக்கக்கூடாது என்று இயேசு சொன்னாரா? இல்லை, அப்படிச் சொல்லவில்லை. ஏனென்றால் கடினமாக வேலை செய்வதை பைபிள் வரவேற்கிறது. (2 தெசலோனிக்கேயர் 3:10) ஐசுவரியவான் ‘தேவனிடத்தில் ஐசுவரியவானாயிருப்பதற்கு’ செய்ய வேண்டியதை செய்யாமல் போனதே அவன் செய்த தவறாகும். ஒருவேளை அநேக வருடங்களுக்கு அவனுடைய பொருள் செல்வத்தை அவனால் அனுபவிக்க முடிந்திருந்தால்கூட கடைசியாக அவன் மரித்துத்தான்போயிருப்பான். அவன் குறுகிய நோக்குடையவனாக இருந்தான், நித்தியத்தைப்பற்றி அவன் சிந்திக்கவில்லை.
16. பாதுகாப்பான எதிர்காலத்துக்காக நாம் ஏன் யெகோவாவின்மீது நம்பிக்கையோடு சார்ந்திருக்கலாம்?
16 நித்தியத்தை மனதில் வைத்து யெகோவாவோடு நடப்பது நடைமுறைக்கு ஒத்து வருவதும், நீண்டகால பயனை நினைவில் வைத்து செயல்படும் தொலைநோக்குடையதுமாய் இருக்கிறது. எதிர்காலத்துக்காக திட்டமிடுவதற்கு அதுவே மிகச் சிறந்த வழியாகும். கல்வி, வேலைவாய்ப்பு, குடும்ப பொறுப்புகள் ஆகியவற்றைக் குறித்து நடைமுறைக்கு ஒத்துவரும் திட்டங்களைப்போடுவது ஞானமுள்ளதாக இருக்கிறபோதிலும், யெகோவா தம்முடைய பற்றுமாறாத ஊழியர்களை ஒருபோதும் கைவிடமாட்டார் என்பதை நாம் எப்போதும் மறந்துவிடக்கூடாது. தாவீது ராஜா இவ்வாறு பாடினார்: “நான் இளைஞனாயிருந்தேன், முதிர்வயதுள்ளவனுமானேன்; ஆனாலும் நீதிமான் கைவிடப்பட்டதையும், அவன் சந்ததி அப்பத்துக்கு இரந்துதிரிகிறதையும் நான் காணவில்லை.” (சங்கீதம் 37:25) அதேவிதமாக ராஜ்யத்தை முதலாவதாக தேடி, யெகோவாவின் நீதியுள்ள வழிகளில் நடக்கும் அனைவருக்கும் தேவையானவற்றை கடவுள் கொடுப்பார் என்பதாக இயேசு உறுதியளித்திருக்கிறார்.—மத்தேயு 6:33.
17. முடிவு அருகில் இருப்பது நமக்கு எப்படித் தெரியும்?
17 நித்திய காலத்தை மனதில் வைத்து நாம் கடவுளைச் சேவிக்கிற போதிலும், யெகோவாவின் நாளை எப்போதும் மனதில் வைத்தவர்களாகவே இருக்கிறோம். அந்த நாள் அருகில் இருப்பதை பைபிள் தீர்க்கதரிசனம் மிகத் தெளிவாக உறுதிசெய்கிறது. போர்கள், கொள்ளைநோய்கள், நிலநடுக்கங்கள், உணவு தட்டுப்பாடுகள் ஆகியவற்றோடுகூட உண்மைக் கிறிஸ்தவர்கள் துன்புறுத்தப்படுவதும் கடவுளுடைய ராஜ்ய நற்செய்தி உலகெங்கிலும் பிரசங்கிக்கப்படுவதும் இந்த நூற்றாண்டுக்கு தனித்தன்மை அளித்திருக்கின்றன. இவை அனைத்துமே இந்தப் பொல்லாத உலகின், முடிவு காலத்துக்குரிய அம்சங்களாகும். (மத்தேயு 24:7-14; லூக்கா 21:11) இந்த உலகம், “தற்பிரியராயும், பணப்பிரியராயும், வீம்புக்காரராயும், அகந்தையுள்ளவர்களாயும், தூஷிக்கிறவர்களாயும், தாய்தகப்பன்மாருக்குக் கீழ்ப்படியாதவர்களாயும், நன்றியறியாதவர்களாயும், பரிசுத்தமில்லாதவர்களாயும், சுபாவ அன்பில்லாதவர்களாயும், இணங்காதவர்களாயும், அவதூறு செய்கிறவர்களாயும், இச்சையடக்கமில்லாதவர்களாயும், கொடுமையுள்ளவர்களாயும், நல்லோரைப் பகைக்கிறவர்களாயும், துரோகிகளாயும், துணிகரமுள்ளவர்களாயும், இறுமாப்புள்ளவர்களாயும், தேவப்பிரியராயிராமல் சுகபோகப்பிரியராயும், தேவபக்தியின் வேஷத்தைத் தரித்து அதின் பெலனை மறுதலிக்கிறவர்களாயும்” இருக்கும் ஆட்களால் நிறைந்திருக்கிறது. (2 தீமோத்தேயு 3:1-5) கொடிதாக இருக்கும் இந்தக் கடைசி நாட்களில், யெகோவாவின் ஊழியர்களாக நாம் வாழ்க்கை நடத்துவது சிரமம்தான். யெகோவாவின் ராஜ்யம் எல்லா பொல்லாப்பையும் துடைத்தழிக்கப்போகும் அந்தக் காலத்துக்காக நாம் எத்தனை ஆவலாக காத்திருக்கிறோம்! இதற்கிடைப்பட்ட காலத்தில் நித்தியத்தை மனதில் வைத்தவர்களாக கடவுளோடு நடப்பதற்கு நாம் தீர்மானமாயிருப்போமாக.
நித்திய வாழ்க்கையை மனதில் வைத்து சேவித்தல்
18, 19. பண்டைய காலத்தில் வாழ்ந்த விசுவாசிகள் நித்தியத்தை மனதில் வைத்து சேவித்தார்கள் என்பதை எது காட்டுகிறது?
18 யெகோவாவோடு நடக்கையில், ஆபேல், ஏனோக்கு, நோவா, ஆபிரகாம், சாராள் ஆகியோரின் விசுவாசத்தை மனதில் கொள்வோமாக. அவர்களைப்பற்றி குறிப்பிட்ட பின்னர் பவுல் இவ்வாறு எழுதினார்: “இவர்களெல்லாரும், வாக்குத்தத்தம் பண்ணப்பட்டவைகளை அடையாமல், தூரத்திலே அவைகளைக் கண்டு, நம்பி அணைத்துக்கொண்டு, பூமியின்மேல் தங்களை அந்நியரும் பரதேசிகளும் என்று அறிக்கையிட்டு, விசுவாசத்தோடே மரித்தார்கள்.” (எபிரெயர் 11:13) அந்த விசுவாசிகள் “மேன்மையான பரமதேசத்தையே விரும்பினார்கள்.” (எபிரெயர் 11:16) விசுவாசத்தோடு கடவுளுடைய மேசியானிய ராஜ்யத்தில் மேன்மையான ஒரு இடத்தைக் காணவே அவர்கள் ஆவலாக எதிர்பார்த்துக்கொண்டிருந்தார்கள். கடவுள் அவர்களுக்கு மேன்மையான ஒரு இடத்தில்—ராஜ்ய ஆட்சியில் பூமிக்குரிய பரதீஸில்—நித்திய ஜீவனைக் கொடுத்து அவர்களுக்கு பலனளிப்பார் என்று நாம் நிச்சயமாய் இருக்கலாம்.—எபிரெயர் 11:39, 40.
19 கடவுளை நித்தியமாக வணங்குவதற்கு யெகோவாவின் ஜனங்கள் தீர்மானமாயிருப்பதை மீகா தீர்க்கதரிசி வெளிப்படையாக கூறினார். அவர் எழுதினதாவது: “சகல ஜனங்களும் தங்கள் தங்கள் தேவனுடைய நாமத்தைப் பற்றிக்கொண்டு நடப்பார்கள்; நாங்களும் எங்கள் தேவனாகிய கர்த்தருடைய [“யெகோவாவுடைய,” NW] நாமத்தைப் பற்றிக்கொண்டு என்றென்றைக்குமுள்ள சதாகாலங்களிலும் நடப்போம்.” (மீகா 4:5) மீகா தன்னுடைய மரணம் வரையாக யெகோவாவை உண்மையுடன் சேவித்தார். புதிய உலகில் உயிர்த்தெழுப்பப்படுகையில் அந்தத் தீர்க்கதரிசி கடவுளோடு நித்திய காலமுமாக தொடர்ந்து நடப்பார் என்பதில் சந்தேகமில்லை. முடிவு காலத்தின் கடைசி கட்டத்தில் வாழ்ந்துவரும் நம் அனைவருக்கும் என்னே ஒரு சிறந்த முன்மாதிரி!
20. நாம் எடுக்க வேண்டிய தீர்மானம் என்ன?
20 யெகோவாவின் நாமத்துக்காக நாம் காட்டும் அன்பை அவர் போற்றுகிறார். (எபிரெயர் 6:10) பிசாசின் பிடியிலிருக்கும் இந்த உலகில் அவரிடமாக உத்தமத்தைக் காத்துக்கொள்வது நமக்கு கடினம்தான் என்பது அவருக்குத் தெரியும். ‘உலகம் ஒழிந்துபோகும்,’ ஆனால் “தேவனுடைய சித்தத்தின்படிசெய்கிறவனோ என்றென்றைக்கும் நிலைத்திருப்பான்.” (1 யோவான் 2:17; 5:19) அப்படியென்றால் யெகோவாவின் உதவியோடு, தினந்தோறும் நாம் எதிர்ப்படும் சோதனைகளைச் சகித்திருக்க தீர்மானம் எடுப்போமாக. நம்முடைய சிந்தனையும் வாழ்க்கை முறையும் நம்முடைய அன்புள்ள பரலோக தகப்பன் வாக்கு கொடுத்திருக்கும் அதிசயமான ஆசீர்வாதங்களின்மீது ஒருமுகப்படுத்தப்பட்டிருக்கட்டும். நித்தியத்தை மனதில் வைத்து கடவுளோடு நடந்தால் இந்த ஆசீர்வாதங்கள் நமக்கே சொந்தமாகும்.—யூதா 20, 21.
நீங்கள் எவ்வாறு பதிலளிப்பீர்கள்?
◻ கீழ்ப்படிதலுள்ள மனிதர்களுக்கான கடவுளுடைய நோக்கம் என்ன?
◻ தேவபக்தியற்ற உலகை யெகோவா ஏன் இன்னும் ஒழித்துக்கட்டாமல் இருக்கிறார்?
◻ கடவுள் எப்போது அழிப்பார் என்பதை திட்டவட்டமாக அறியாதிருப்பது ஏன் நம்முடைய வைராக்கியத்தைக் குறைத்துவிடக்கூடாது?
◻ நித்திய காலத்தை மனதில் வைத்து கடவுளோடு நடப்பதால் கிடைக்கும் சில நன்மைகள் யாவை?
[பக்கம் 17-ன் படங்கள்]
கடவுளோடு நடப்பதற்கு கிறிஸ்துவின் ஆரம்பகால சீஷர்களைப்போல வைராக்கியமாக அவரை சேவிக்க வேண்டும்