நித்திய ராஜாவை துதியுங்கள்!
“யெகோவா சதாகாலங்களுக்கும், என்றென்றும் ராஜாவாக இருக்கிறார்.” —சங்கீதம் 10:16, NW.
1. நித்தியத்தைப் பற்றி என்ன கேள்விகள் எழுகின்றன?
நித்தியம்—அதை என்னவென்று நீங்கள் சொல்வீர்கள்? காலம் உண்மையில், என்றும் நீடித்திருக்கும் என்று நீங்கள் நினைக்கிறீர்களா? பொருத்தமாகவே, காலம் கடந்தகாலங்களில் என்றும் நீடித்திருந்திருக்கிறது என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை. ஆகவே, ஏன் எதிர்காலத்திலும் என்றென்றும் நீடிக்கக்கூடாது? உண்மையில், கடவுள் “வரையறையில்லா காலத்திலிருந்து வரையறையில்லா காலத்திற்கு” துதிக்கப்படுவதாக புதிய உலக மொழிபெயர்ப்பு பைபிள் குறிப்பிடுகிறது. (சங்கீதம் 41:13, NW) இந்தச் சொற்றொடர் எதை அர்த்தப்படுத்துகிறது? இதனோடு சம்பந்தப்பட்ட பொருளாகிய விண்வெளியுடன் நாம் தொடர்புபடுத்திப் பார்த்தால் இதை நாம் புரிந்துகொள்வதற்கு அது உதவும்.
2, 3. (அ) விண்வெளியைப் பற்றி எழும் எத்தகைய கேள்விகள் நித்தியத்தை நாம் மதித்துணரும்படி செய்கின்றன? (ஆ) நித்திய ராஜாவை வணங்க நாம் ஏன் விரும்பவேண்டும்?
2 விண்வெளி எவ்வளவு விஸ்தாரமானது? அதற்கு ஏதாவது வரையறை உண்டா? சுமார் 400 ஆண்டுகளுக்கு முன்புவரை, இப்பிரபஞ்சத்தின் மையமாக நமது பூமி கருதப்பட்டது. பின்னர் கலிலியோ என்பவர் தொலைநோக்கியைக் கண்டுபிடித்து, ஆகாய மண்டலங்களை மிக விரிவாகப் பார்ப்பதற்கு வழி செய்தார். இப்போது கலிலியோவால் இன்னும் அநேக நட்சத்திரங்களைப் பார்க்க முடிந்தது, பூமியும் மற்ற கோள்களும் சூரியனைச் சுற்றிவருகின்றன என்பதையும் அவரால் காட்ட முடிந்தது. பால்வீதி மண்டலம் இனியும் வெண்ணிறப் பாதையாகவே இருந்துவிடவில்லை. அது சுமார் 10,000 கோடி எண்ணிக்கையுள்ள நட்சத்திரங்களின் மண்டலம் என நிரூபித்தது. அவ்வளவு நட்சத்திரங்களையும் நம் முழு ஆயுள்காலத்திலும் நம்மால் எண்ணவே முடியாது. அதன்பின், கோடிக்கணக்கான நட்சத்திர மண்டலங்களை விண்வெளி ஆய்வாளர்கள் கண்டுபிடித்தனர். இவை, மிகவும் ஆற்றல் வாய்ந்த தொலைநோக்கிகள் எவ்வளவு தூரம் ஊடுருவிப் பார்க்க முடியுமோ அதுவரை எல்லையே இன்றி பரந்து விரிந்திருக்கின்றன. விண்வெளிக்கு வரையறையே இல்லை என தோன்றுகிறது. நித்தியத்தைக் குறித்ததிலும் இதுவே உண்மையாயிருக்கிறது—இதற்கும் வரையறையே கிடையாது.
3 நித்தியத்தைப் பற்றிய கருத்து, நம்முடைய வரையறைக்குட்பட்ட மனித மூளையின் புரிந்துகொள்ளுதலுக்கு அப்பாற்பட்டதாகத் தோன்றுகிறது. ஆனால், அதனையும் முழுமையாகப் புரிந்துகொள்ளும் வல்லவர் ஒருவர் இருக்கிறார். ஆம், அவரால் நட்சத்திரங்களை எண்ண முடியும், கோடிக்கணக்கான நட்சத்திர மண்டலங்களில் இருக்கும் கோடானுகோடி நட்சத்திரங்களுக்கு அவரால் பெயரிடவும் முடியும்! அவர் சொல்கிறார்: “உங்கள் கண்களை ஏறெடுத்துப் பாருங்கள்; அவைகளைச் சிருஷ்டித்தவர் யார்? அவர் அவைகளின் சேனையை இலக்கத்திட்டமாகப் புறப்படப்பண்ணி, அவைகளையெல்லாம் பேர்பேராக அழைக்கிறவராமே; அவருடைய மகா பெலத்தினாலும், அவருடைய மகா வல்லமையினாலும், அவைகளில் ஒன்றும் குறையாமலிருக்கிறது. பூமியின் கடையாந்தரங்களைச் சிருஷ்டித்த கர்த்தராகிய அநாதி தேவன் சோர்ந்துபோவதுமில்லை, இளைப்படைவதுமில்லை; இதை நீ அறியாயோ? இதை நீ கேட்டதில்லையோ? அவருடைய புத்தி ஆராய்ந்துமுடியாதது.” (ஏசாயா 40:26, 28) என்னே ஒரு மகத்தான கடவுள்! நிச்சயமாகவே, அந்தக் கடவுளை வணங்கத்தானே நாம் விரும்பவேண்டும்!
“சதாகாலங்களுக்கும் ராஜா”
4. (அ) நித்திய ராஜாவுக்கு மதித்துணருதலை தாவீது எவ்விதம் வெளிப்படுத்தினார்? (ஆ) வரலாற்று புகழ்பெற்ற விஞ்ஞானிகளுள் ஒருவர் பிரபஞ்சத்தின் தோற்றத்தைப் பற்றி என்ன முடிவுக்கு வந்தார்?
4 சங்கீதம் 10:16-ல் (NW) இந்தப் படைப்பாளராகிய கடவுளைப் பற்றி தாவீது சொல்கிறார்: “யெகோவா சதாகாலங்களுக்கும், என்றென்றும் ராஜாவாக இருக்கிறார்.” சங்கீதம் 29:10-ல் மறுபடியும் அவர் சொல்கிறார்: “கர்த்தர் என்றென்றைக்கும் ராஜாவாக வீற்றிருக்கிறார்.” ஆம், யெகோவா நித்திய ராஜாதான்! மேலும், இந்த உயர்த்தப்பட்ட அரசரே விண்வெளியில் நாம் காணக்கூடிய அனைத்திற்கும் வடிவமைப்பாளராகவும் படைப்பாளராகவும் இருக்கிறார் என்பதற்குச் சான்றளிப்பவராக, சங்கீதம் 19:1-ல் தாவீது சொல்கிறார்: “வானங்கள் தேவனுடைய மகிமையை வெளிப்படுத்துகிறது, ஆகாய விரிவு அவருடைய கரங்களின் கிரியையை அறிவிக்கிறது.” சுமார் 2,700 ஆண்டுகளுக்குப் பிறகு, பிரபல விஞ்ஞானி சர் ஐசக் நியூட்டன் தாவீது சொன்னதை ஒப்புக்கொண்டு எழுதியதாவது: “சூரியன்களின், கோள்களின், வால் நட்சத்திரங்களின் இந்த அதிநேர்த்தியான அமைப்பானது அறிவொளியுடைய, வல்லமையுடைய நபரின் நோக்கத்திலிருந்தும் உன்னத பேரரசிலிருந்தும் மாத்திரமே தோன்றக்கூடும்.”
5. ஞானத்தின் ஊற்றுமூலத்தைப் பற்றி ஏசாயாவும் பவுலும் என்ன எழுதினார்கள்?
5 பரந்த ‘வானங்களும் வானாதி வானங்களும் . . . கொள்ளாத’ கர்த்தராகிய உன்னத பேரரசர் யெகோவா நித்தியமாக வாழ்கிறார் என்பதை அறிவது நம்மை எவ்வளவு சிறுமையாக உணரவைக்கவேண்டும்! (1 இராஜாக்கள் 8:27) ஏசாயா 45:18-ல் ‘வானங்களைச் சிருஷ்டித்துப் பூமியையும் . . . செய்து படைத்து, அதை உருவேற்படுத்தினவராக’ விவரிக்கப்பட்டுள்ள யெகோவா, அழிவுள்ள மனித மூளைக்கு எட்டாத மிக விரிவான ஞானத்தின் ஊற்றுமூலமாக இருக்கிறார். 1 கொரிந்தியர் 1:19-ல் சிறப்பித்துக் காட்டியுள்ளபடி, யெகோவா சொன்னார்: “ஞானிகளுடைய ஞானத்தை நான் அழித்து, புத்திசாலிகளுடைய புத்தியை அவமாக்குவேன்.” 20-ம் வசனத்தில் அப்போஸ்தலன் பவுல் இதைச் சேர்த்து சொன்னார்: “ஞானி எங்கே? வேதபாரகன் எங்கே? இப்பிரபஞ்சத் தர்க்கசாஸ்திரி எங்கே? இவ்வுலகத்தின் ஞானத்தைத் தேவன் பைத்தியமாக்கவில்லையா?” ஆம், பவுல் 3-ம் அதிகாரம், 19-ம் வசனத்தில் தொடர்ந்து சொல்கிறபடி, “இவ்வுலகத்தின் ஞானம் தேவனுக்கு முன்பாக பைத்தியமாயிருக்கிறது.”
6. ‘நித்திய காலத்தை’ பற்றி பிரசங்கி 3:11 எதைச் சுட்டிக்காட்டுகிறது?
6 “[கடவுள்] யாவற்றையும் அதினதின் காலத்திலே அழகாகச் செய்திருக்கிறார்; நித்திய கால நினைவையும் அவர்கள் உள்ளத்திலே வைத்திருக்கிறார்; என்றாலும் கடவுள் ஆதிமுதல் அந்தம்மட்டும் செய்துவரும் கிரியையை மனுஷன் கண்டுணரான்,” என்று சாலொமோன் அரசர் குறிப்பிட்ட சிருஷ்டிப்பின் பாகமாக வானொளிக் கோளங்கள் இருக்கின்றன. (பிரசங்கி 3:11, திருத்திய மொழிபெயர்ப்பு) உண்மையில், ‘நித்திய காலத்தின்’ அதாவது, நித்தியத்தின் உட்பொருளை அறிய முயற்சிப்பது மனிதனுடைய இருதயத்தில் நாட்டப்பட்டிருக்கிறது. ஆனால் அத்தகைய அறிவை அவனால் எப்போதாவது அடைய முடியுமா?
ஓர் அற்புதமான வாழ்க்கைக்கு வருங்கால வாய்ப்பு
7, 8. (அ) மனிதவர்க்கத்திற்கு முன் என்ன அற்புதமான வாழ்க்கைக்கு வருங்கால வாய்ப்பு இருக்கிறது மற்றும் அதனை எவ்வாறு அடையலாம்? (ஆ) தெய்வீக கல்வி நித்திய நித்தியமாகத் தொடரும் என்பதில் நாம் ஏன் மகிழவேண்டும்?
7 யெகோவாவிடம் செய்த ஜெபத்தில் இயேசு கிறிஸ்து கூறினார்: “ஒன்றான மெய்த்தேவனாகிய உம்மையும் நீர் அனுப்பினவராகிய இயேசு கிறிஸ்துவையும் அறிவதே நித்திய ஜீவன்.” (யோவான் 17:3) அத்தகைய அறிவை எவ்வாறு நாம் பெறலாம்? கடவுளுடைய வார்த்தையாகிய பரிசுத்த பைபிளை நாம் படிக்க வேண்டும். அதன் மூலமாக, தம்முடைய குமாரனின் மூலம் பரதீஸிய பூமியில் நித்திய ஜீவனுக்காகச் செய்யப்பட்ட ஏற்பாடு உள்பட, கடவுளின் மகத்தான நோக்கங்களைப் பற்றிய திருத்தமான அறிவை நாம் பெற முடியும். 1 தீமோத்தேயு 6:19-ல் குறிப்பிடப்பட்ட ‘உண்மை ஜீவனாக’ அது இருக்கும். அது ‘தேவன் நம்முடைய கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவுக்குள் கொண்டிருந்த அநாதி தீர்மானம்’ என்று எபேசியர் 3:9 விவரிப்பதற்கு இணங்க இருக்கும்.
8 ஆம், பாவமுள்ள மனிதர்களாகிய நாம் தெய்வீக கல்வியாலும் இயேசுவின் மீட்கும் பலியில் விசுவாசம் வைப்பதாலும் நித்திய ஜீவனை அடையலாம். இந்தக் கல்வி எவ்வளவு காலம் தொடரும்? நம் சிருஷ்டிகரின் ஞானத்தில் மனிதவர்க்கம் படிப்படியாய்ப் போதிக்கப்படுகையில், இது எல்லா நித்தியத்திற்கும் தொடரும். யெகோவாவின் ஞானத்திற்கு எல்லையே கிடையாது. இதை உணர்ந்தவராய் அப்போஸ்தலன் பவுல் உணர்ச்சிமேலிட கூறினார்: “ஆ! தேவனுடைய ஐசுவரியம், ஞானம், அறிவு என்பவைகளின் ஆழம் எவ்வளவாயிருக்கிறது! அவருடைய நியாயத்தீர்ப்புகள் அளவிடப்படாதவைகள், அவருடைய வழிகள் ஆராயப்படாதவைகள்!” (ரோமர் 11:33) யெகோவாவை 1 தீமோத்தேயு 1:17 ‘நித்திய ராஜா’ என்று அழைப்பது உண்மையில் பொருத்தமானதே!
யெகோவாவின் சிருஷ்டிப்பின் ஞானம்
9, 10. (அ) மனிதவர்க்கத்திற்கு ஒரு பரிசாக இந்த பூமியை ஆயத்தம் செய்கையில், எத்தகைய மகத்தான கிரியைகளை யெகோவா செய்துமுடித்தார்? (ஆ) யெகோவாவினுடைய சிருஷ்டிப்புகளில் மேம்பட்ட ஞானம் எவ்வாறு வெளிக்காட்டப்படுகிறது? (பெட்டியைப் பார்க்கவும்.)
9 மனிதர்களாகிய நமக்கு நித்திய ராஜா அளித்திருக்கும், வழிவழியாக வந்துகொண்டிருக்கும் சொத்தைப் பற்றி சிந்தித்துப் பாருங்கள். சங்கீதம் 115:16 நமக்கு சொல்கிறது: “வானங்கள் கர்த்தருடையவைகள்; பூமியையோ மனுபுத்திரருக்குக் கொடுத்தார்.” ஒப்படைக்கப்பட்ட ஒரு அருமையான பொருளாக அது இருக்கிறது என்று நீங்கள் நினைக்கவில்லையா? நிச்சயமாகவே! பூமியை நமது வீடாகத் தயார் செய்த நம்முடைய சிருஷ்டிகரின் தலைசிறந்த முன்னறிவை நாம் எவ்வளவு உயர்வாய் மதித்துணருகிறோம்!—சங்கீதம் 107:8.
10 ஆதியாகமம் 1-ம் அதிகாரத்தில் உள்ள சிருஷ்டிப்பின் ஆறு ‘நாட்களில்’ அற்புதமான காரியங்கள் பூமியில் நடந்தேறின, ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கான ஆண்டுகள் நீடித்தன. கடவுளின் இந்தச் சிருஷ்டிப்புகள் முழு பூமியைப் பசும் புல்லென்னும் கம்பளத்தால் மூடி, கம்பீரமான காடுகளாலும் வண்ண வண்ண மலர்களாலும் இறுதியில் நிரப்பிடும். எண்ணற்ற கவர்ச்சிமிகு கடல் உயரினங்களின் மிகுதியினாலும், அழகிய சிறகுள்ள பறவைகளின் கூட்டங்களினாலும், வீட்டு விலங்கின் மற்றும் காட்டு விலங்கின் பெரும் அணியினாலும் நிறைந்திருக்கும், ஒவ்வொன்றும் “தன் தன் இனத்தின்படியே” (NW) இனவிருத்தி செய்யும். ஆண் மற்றும் பெண்ணின் சிருஷ்டிப்பைப் பற்றிய விவரிப்பை தொடர்ந்து ஆதியாகமம் 1:31 குறிப்பிடுவதாவது: “அப்பொழுது தேவன் தாம் உண்டாக்கின எல்லாவற்றையும் பார்த்தார், அது மிகவும் நன்றாயிருந்தது.” அந்த முதல் மனிதர்களை என்னே ஒரு குதூகலமான சுற்றுச்சூழல் சூழ்ந்திருந்தது! இந்த அனைத்து சிருஷ்டிப்புகளிலும் நம் அன்பான சிருஷ்டிகரின் ஞானத்தையும் முன்னறிவையும் அக்கறையையும் நம்மால் கணிக்க முடியவில்லையா?—ஏசாயா 45:11, 12, 18.
11. யெகோவாவின் சிருஷ்டிப்பின் ஞானத்தை சாலொமோன் எவ்வாறு உயர்வுபடுத்திக் காட்டுகிறார்?
11 நித்திய ராஜாவின் ஞானத்தை வியந்தவருள் ஒருவர் சாலொமோன் ஆவார். அவர் சிருஷ்டிகரின் ஞானத்தினிடமாக மறுபடியும் மறுபடியுமாக கவனத்தைத் திருப்பினார். (நீதிமொழிகள் 1:1, 2; 2:1, 6; 3:13-18) “பூமியோ என்றைக்கும் நிலைத்திருக்கிறது” என்று நமக்கு சாலொமோன் உறுதியளிக்கிறார். நம் பூமிக்குப் புத்துயிர் அளிப்பதில் மழை மேகங்கள் வகிக்கும் பங்கையும் உள்ளடக்கி, சிருஷ்டிப்பின் பல அதிசயங்களை மதித்துணர்ந்தார். எனவே, அவர் எழுதினார்: “எல்லா நதிகளும் சமுத்திரத்திலே ஓடி விழுந்தும் சமுத்திரம் நிரம்பாது; தாங்கள் உற்பத்தியான இடத்திற்கே நதிகள் மறுபடியும் திரும்பும்.” (பிரசங்கி 1:4, 7) ஆகவே என்ன நடக்கிறதென்றால் மழையும் நதிகளும் பூமிக்குப் புத்துயிரூட்டியபிறகு அவற்றின் தண்ணீர்கள் மகா சமுத்திரங்களிலிருந்து மீண்டும் மேகங்களாகச் சுழற்சிக்குட்படுகிறது. தண்ணீர் இவ்வாறு தூய்மையாகாமலும் சுழற்சிக்குட்படாமலும் இருந்தால் இந்தப் பூமி எதைப் போலிருக்கும், நாம்தான் எங்கே இருப்போம்?
12, 13. கடவுளுடைய சிருஷ்டிப்புக்காக நாம் எவ்வாறு மதித்துணருதலைக் காட்டலாம்?
12 சிருஷ்டிப்பிலுள்ள சமநிலைப்படுத்துதலுக்கான நம்முடைய போற்றுதல், செயல்களால் ஆதரிக்கப்பட வேண்டும். பிரசங்கியின் முடிவான வார்த்தைகளில் சாலொமோன் அரசர் குறிப்பிட்டதுபோல: “காரியத்தின் கடைத்தொகையைக் கேட்போமாக, தேவனுக்குப் பயந்து, அவர் கற்பனைகளைக் கைக்கொள்; எல்லா மனுஷர்மேலும் விழுந்த கடமை இதுவே. ஒவ்வொரு கிரியையையும், அந்தரங்கமான ஒவ்வொரு காரியத்தையும், நன்மையானாலும் தீமையானாலும், தேவன் நியாயத்திலே கொண்டுவருவார்.” (பிரசங்கி 12:13, 14) கடவுளுக்கு பிரியமற்ற எதையும் செய்ய நாம் பயப்பட வேண்டும். இன்னுஞ்சரியாகச் சொன்னால், பயபக்தியுடன்கூடிய அச்சத்தோடு அவருக்குக் கீழ்ப்படிவதை நாம் நாடவேண்டும்.
13 நிச்சயமாகவே, நித்திய ராஜாவை அவருடைய மகத்தான சிருஷ்டிப்பின் கிரியைகளுக்காகத் துதிக்க நாம் விரும்ப வேண்டும்! சங்கீதம் 104:24 அறிவிக்கிறது: “கர்த்தாவே, உமது கிரியைகள் எவ்வளவு திரளாயிருக்கிறது! அவைகளையெல்லாம் ஞானமாய்ப் படைத்தீர்; பூமி உம்முடைய பொருள்களினால் நிறைந்திருக்கிறது.” சந்தோஷகரமாக, நமக்கும் மற்றவர்களுக்கும் இந்தச் சங்கீதத்தின் கடைசி வசனத்தை சொல்லி அதற்கு ஆதரவு தெரிவிப்போமாக: “என் ஆத்துமாவே, கர்த்தரை ஸ்தோத்திரி, அல்லேலூயா [“மக்களே, யாவைத் துதியுங்கள்!” NW].”
பூமிக்குரிய சிருஷ்டிப்பை நிறைவுசெய்தல்
14. கடவுளின் மனித சிருஷ்டிப்பு, விலங்கினங்களின் சிருஷ்டிப்பைக் காட்டிலும் எவ்விதங்களில் மிக மேம்பட்டவை?
14 யெகோவாவின் படைப்பு முழுவதும் கைதேர்ந்ததாக இருக்கிறது. ஆனால் மிகவும் குறிப்பிடத்தக்க பூமிக்குரிய சிருஷ்டிப்பு நாம்தான்—மனிதவர்க்கம். யெகோவாவின் ஆறாவது சிருஷ்டிப்பு நாளின் உச்சக்கட்டமாக ஆதாமும் அடுத்ததாக ஏவாளும்—மீன்கள், பறவைகள், விலங்குகளைப் பார்க்கிலும்—மிக மேம்பட்ட சிருஷ்டிகளாகச் சிருஷ்டிக்கப்பட்டனரே! இவற்றில் பல இயல்புணர்வால் ஞானமுள்ளவையாக இருப்பினும், சிந்திக்கும் திறனும், சரியா தவறா என பகுத்தறியும் மனசாட்சியும், எதிர்காலத்திற்குத் திட்டமிடும் திறனும், தொழுவதற்கு உள்ளார்ந்த ஆவலும் மனிதவர்க்கத்திற்கே அளிக்கப்பட்டிருக்கின்றன. இவை எல்லாம் எப்படி நடந்தன? மனிதத்தன்மையே அற்ற விலங்கினங்களிலிருந்து பரிணமிப்பதற்கு மாறாக, மனிதன் கடவுளுடைய சாயலில் சிருஷ்டிக்கப்பட்டான். அதன்படி மனிதனால் மாத்திரம் யெகோவாவின் குணங்களைப் பிரதிபலிக்க முடியும்; அவர் தம்மை இவ்வாறாக அடையாளம் காட்டினார்: ‘யெகோவா, யெகோவா . . . உருக்கமும் இரக்கமும் நீடிய சாந்தமும் மிகுந்த கிருபையும் சத்தியமுமுள்ள கடவுள்.’—யாத்திராகமம் 34:6, தி.மொ.
15. ஏன் நாம் யெகோவாவை தாழ்மையோடு போற்ற வேண்டும்?
15 நம் உடல்களின் வியக்கத்தக்க வடிவமைப்புக்காக யெகோவாவைத் துதித்து, நன்றி சொல்வோமாக. உயிர் வாழ மிக முக்கியமாக இருக்கும் நம்முடைய இரத்த ஓட்டம் ஒவ்வொரு 60 நொடிக்கும் நம் உடலினூடே சுற்றி வருகிறது. உபாகமம் 12:23 சொல்கிற பிரகாரம், “இரத்தமே உயிர்”—நமது உயிர்—கடவுளுடைய பார்வையில் அருமையானது. உறுதியான எலும்புகளுக்கும் வளைந்துகொடுக்கும் தசைகளுக்கும் உணர்ச்சியுள்ள நரம்பு மண்டலத்திற்கும் சிகரமாக அமைந்துள்ளது மூளை, இது எந்தவொரு மிருகத்தின் மூளையைக் காட்டிலும் மிக மேம்பட்டதாகவும், வானளாவிய கட்டடத்திற்கு சமமான கம்ப்யூட்டரும் இடங்கொள்ளாத அளவுக்குத் திறன்களை உடையதாயுமிருக்கிறது. இது உங்களைத் தாழ்மையாக உணரச்செய்யவில்லையா? அவ்வாறே உணரச்செய்ய வேண்டும். (நீதிமொழிகள் 22:4) இதையும் சிந்தித்துப் பாருங்கள்: நம்முடைய நுரையீரல்கள், குரல்வளை, நாக்கு, பற்கள், வாய் ஆகியவை ஒருங்கிணைந்து, ஆயிரக்கணக்கான மொழிகளில் எந்த மொழியை வேண்டுமானாலும் மனிதனைப் பேச வைக்கின்றன. “நான் பிரமிக்கத்தக்க அதிசயமாய் உண்டாக்கப்பட்டபடியால், உம்மைத் துதிப்பேன்; உமது கிரியைகள் அதிசயமானவைகள், அது என் ஆத்துமாவுக்கு நன்றாய்த் தெரியும்,” என்று கூறி, யெகோவாவுக்குப் பொருத்தமான சங்கீதத்தை தாவீது இயற்றினார். (சங்கீதம் 139:14) நம்முடைய மகத்தான வடிவமைப்பாளரும் கடவுளுமான யெகோவாவை நன்றியறிதலோடு துதிப்பதில் தாவீதோடு சேர்ந்துகொள்வோமாக!
16. ஒரு பிரபல இசைக்கலைஞன் யெகோவாவைத் துதிக்க என்ன பாடலை இயற்றினார், எந்த வலியுறுத்தும் அழைப்புக்கு நாம் பிரதிபலிக்க வேண்டும்?
16 யோசஃப் ஹெடினின் 18-ம் நூற்றாண்டு இசை நாடகத்தின் ஒரு வாசகம் யெகோவாவைத் துதித்து இவ்வாறு குறிப்பிடுகிறது: “அவருடைய அதிசயமான கிரியைகளே, நீங்கள் அவருக்கு நன்றி சொல்லுங்கள்! அவருடைய கனத்தைப் பாடுங்கள், அவருடைய மகிமையைப் பாடுங்கள், அவருடைய நாமத்தை ஸ்தோத்திரித்து, மேம்படுத்திக் கூறுங்கள்! யெகோவாவின் துதி என்றும் நிலைத்திருக்கிறது, ஆமென், ஆமென்!” 107-ம் சங்கீதத்தில் நான்கு முறை விடுக்கப்பட்டிருக்கிற அழைப்பை போன்று சங்கீதங்களில் பெரும்பாலும் திரும்பத்திரும்ப வரும் ஏவப்பட்ட வாசகங்கள் இன்னும் அழகானவை: “அவருடைய கிருபையினிமித்தமும், மனுபுத்திரருக்கு அவர் செய்கிற அதிசயங்களினிமித்தமும் அவரைத் துதிப்பார்களாக.” அந்தத் துதித்தலில் நீங்கள் சேர்ந்துகொள்கிறீர்களா? நீங்கள் சேர்ந்துகொள்ள வேண்டும், ஏனென்றால், உண்மையில் அருமையாக இருக்கும் அனைத்தும் நித்திய ராஜாவாகிய யெகோவாவை அவற்றின் ஊற்றுமூலமாகக் கொண்டிருக்கின்றன.
இன்னும் அதிக வல்லமைமிக்க கிரியைகள்
17. ‘மோசேயின் பாட்டும், ஆட்டுக்குட்டியானவருடைய பாட்டும்’ எவ்வாறு யெகோவாவை மிக உயர்வாகப் புகழ்கின்றன?
17 கடந்த ஆறாயிரம் ஆண்டுகளாக, நித்திய ராஜா இன்னும் அதிக வல்லமைமிக்க கிரியைகளைத் தொடங்கியிருக்கிறார். பைபிளின் கடைசி புத்தகத்தில், வெளிப்படுத்துதல் 15:3, 4-ல், எதிரிகளாகிய பேய்களின் மீது வெற்றிபெற்று பரலோகத்திலிருப்பவர்களைப் பற்றி வாசிக்கிறோம்: “அவர்கள் தேவனுடைய ஊழியக்காரனாகிய மோசேயின் பாட்டையும் ஆட்டுக்குட்டியானவருடைய பாட்டையும் பாடி சர்வவல்லமையுள்ள தேவனாகிய கர்த்தாவே, தேவரீருடைய கிரியைகள் மகத்துவமும் ஆச்சரியமுமானவைகள், பரிசுத்தவான்களின் ராஜாவே, தேவரீருடைய வழிகள் நீதியும் சத்தியமுமானவைகள். கர்த்தாவே, யார் உமக்குப் பயப்படாமலும், உமது நாமத்தை மகிமைப்படுத்தாமலும் இருக்கலாம்? தேவரீர் ஒருவரே பரிசுத்தர், எல்லா ஜாதிகளும் வந்து உமக்கு முன்பாகத் தொழுதுகொள்வார்கள்.” ஏன் இது ‘மோசேயின் பாட்டு, ஆட்டுக்குட்டியானவருடைய பாட்டு’ என்று அழைக்கப்படுகிறது? நாம் பார்க்கலாம்.
18. யாத்திராகமம் 15-ம் அதிகாரத்தின் பாடல், என்ன வல்லமைமிக்க கிரியையை எழுத்துருவில் நிலைநிறுத்துகிறது?
18 சுமார் 3,500 ஆண்டுகளுக்கு முன், சிவந்த சமுத்திரத்திலே பார்வோனின் பலத்த சேனை அழிந்தபோது, இஸ்ரவேலர்கள் யெகோவாவைப் பாடலில் நன்றியறிதலோடு துதித்தார்கள். நாம் யாத்திராகமம் 15:1, 18-ல் வாசிக்கிறோம்: “அப்பொழுது மோசேயும் இஸ்ரவேல் புத்திரரும் கர்த்தரைப் புகழ்ந்துபாடின பாட்டு: கர்த்தரைப் பாடுவேன்; அவர் மகிமையாய் வெற்றிசிறந்தார்; குதிரையையும் குதிரைவீரனையும் கடலிலே தள்ளினார். கர்த்தர் சதாகாலங்களாகிய என்றென்றைக்கும் ராஜரிகம் பண்ணுவார்.” இந்த நித்திய ராஜாவின் நீதியான ஆணைகள் அவருடைய உன்னத பேரரசை எதிர்த்த எதிரிகளை அவர் நியாயந்தீர்த்ததிலும் அழித்ததிலும் வெளிப்படுத்தப்பட்டன.
19, 20. (அ) யெகோவா ஏன் இஸ்ரவேல் தேசத்தை உருவாக்கினார்? (ஆ) ஆட்டுக்குட்டியானவரும் மற்றவர்களும் சாத்தானின் சவாலுக்கு எவ்வாறு பதிலை அளித்தனர்?
19 இது ஏன் அவசியமானது? ஏதேன் தோட்டத்தில் நம்முடைய முதல் பெற்றோரைப் பாவம் செய்ய அந்தத் தந்திரமிக்க சர்ப்பம் வழிநடத்தியது. இது சகல மனிதவர்க்கத்திற்கும் பாவமுள்ள அபூரணம் கடத்தப்படுவதில் விளைவடைந்தது. இருப்பினும், நித்திய ராஜா தம்முடைய ஆதி நோக்கத்திற்கு இணங்க உடனடியாக நடவடிக்கைகளை எடுத்தார், இவை அவருடைய எல்லா எதிரிகளும் பூமியின் எல்லையிலிருந்து வெளியே தள்ளப்படுவதற்கும் பரதீஸிய நிலைமைகளைத் திரும்ப நிலைநாட்டப்படுவதற்கும் வழிநடத்தும். அதை தாம் எவ்வாறு செய்துமுடிப்பார் என்பதற்கு முன்நிழலாக நித்திய ராஜா, இஸ்ரவேல் தேசத்தை உருவாக்கி, நியாயப்பிரமாணத்தைக் கொடுத்தார்.—கலாத்தியர் 3:24.
20 இருப்பினும், காலப்போக்கில் இஸ்ரவேல்தாமே விசுவாசமற்ற போக்கில் மூழ்கியது; இந்த வருந்தத்தக்க நிலை, அதன் தலைவர்கள் கடவுளுடைய ஒரே பேறான குமாரனைக் கொடூரமாகச் சித்திரவதைசெய்து கொல்லப்படுவதற்காக ரோமர்களிடம் ஒப்படைக்கையில் உச்சக்கட்டத்தை அடைந்தது. (அப்போஸ்தலர் 10:39; பிலிப்பியர் 2:8) ஆனால், பூமியிலுள்ள எந்த மனிதனும் கடுமையான சோதனையின்போது கடவுளுக்கு உண்மையுள்ளவனாக இருக்க முடியாது என்று கடவுளின் பண்டைய எதிரி சாத்தான் விட்ட சவாலுக்கு, ஒரு பலியிடப்படும் “தேவ ஆட்டுக்குட்டி”யாக மரணம் வரை இருந்த இயேசுவின் உத்தமத்தன்மை பதிலை அளித்தது. (யோவான் 1:29, 36; யோபு 1:9-12; 27:5) ஆதாமிடமிருந்து அபூரணத்தைச் சுதந்தரித்தபோதிலும் கடவுளுக்குப் பயந்த இலட்சக்கணக்கான மற்ற மனிதர்கள் சாத்தானிய தாக்குதல்களின் மத்தியிலும் உத்தமத்தைக் காத்துக்கொள்வதன்மூலம் இயேசுவின் அடிச்சுவடுகளைப் பின்பற்றியிருக்கிறார்கள்.—1 பேதுரு 1:18, 19; 2:19, 21.
21. அப்போஸ்தலர் 17:29-31-க்கு இசைவாக, அடுத்ததாக என்ன கலந்தாலோசிக்கப்படும்?
21 யெகோவா, அந்த உண்மையுள்ள ஆட்களுக்குப் பலனளிப்பதற்கும் சத்தியம் மற்றும் நீதியின் எதிரிகள் யாவரையும் நியாயந்தீர்ப்பதற்கும் அந்த நாள் இப்போது வந்திருக்கிறது. (அப்போஸ்தலர் 17:29-31) இது எவ்வாறு நடந்தேறும்? எமது அடுத்த கட்டுரை சொல்லும்.
மறுபார்வைக்கான பெட்டி
◻ யெகோவாவை ‘நித்திய ராஜா’ என பொருத்தமாகவே அழைப்பதேன்?
◻ யெகோவாவின் ஞானம் அவருடைய சிருஷ்டிப்புகளில் எவ்வாறு வெளிக்காட்டப்படுகிறது?
◻ எவ்விதங்களில் சிருஷ்டிப்பிலேயே தலைசிறந்த படைப்பாக மனிதவர்க்கம் இருக்கிறது?
◻ ‘மோசேயின் பாட்டும் ஆட்டுக்குட்டியானவருடைய பாட்டும்’ தேவைப்படுத்தும் கிரியைகள் யாவை?
[பக்கம் 12-ன் பெட்டி]
யெகோவாவின் மேம்பட்ட ஞானம்
நித்திய ராஜாவின் ஞானம் அவருடைய பூமியின் படைப்புகளில் பல்வேறு விதங்களில் பிரதிபலிக்கப்படுகிறது. ஆகூரின் வார்த்தைகளைக் கவனியுங்கள்: “தேவனுடைய வசனமெல்லாம் புடமிடப்பட்டவைகள்; தம்மை அண்டிக்கொள்ளுகிறவர்களுக்கு அவர் கேடயமானவர்.” (நீதிமொழிகள் 30:5) பின்னர் ஆகூர் கடவுள் சிருஷ்டித்த உயிருள்ள சிருஷ்டிகளில் பெரியவை சிறியவை என பலவற்றை குறிப்பிடுகிறார். உதாரணமாக, வசனங்கள் 24 முதல் 28 வரை “பூமியில் மிகவும் சிறியவையாய் இருப்பன நான்கு, ஆனால் அவை இயல்புணர்வால் ஞானமுள்ளவை” (NW) என்று விவரிக்கிறார். அவை எறும்பு, குழிமுயல், வெட்டுக்கிளி மற்றும் பல்லி.
“இயல்புணர்வால் ஞானமுள்ளவை”—ஆம், விலங்கினங்கள் அவ்விதமாகவே படைக்கப்பட்டிருக்கின்றன. மனிதர்களைப் போல் அவை காரியங்களைப் பகுத்தறிவதில்லை, ஆனால் உள்ளியல்பான ஞானத்தின்மீது சார்ந்திருக்கின்றன. இதைக் குறித்து நீங்கள் எப்போதாவது ஆச்சரியப்பட்டிருக்கிறீர்களா? என்னே ஒழுங்கமைக்கப்பட்ட படைப்பு அவை! உதாரணமாக, எறும்புகள் கூட்டுவாழ்க்கைக்கு ஒழுங்கமைக்கப்பட்டிருக்கின்றன, அதில் ராணி, வேலைக்காரர்கள், ஆண்கள் போன்றோர் அடங்குவர். சில இனங்களில், வேலைக்கார எறும்புகள் தாங்கள் கட்டியிருக்கும் பண்ணை அடைப்புகளில் செடிப்பேன்களை வைத்து பண்ணையைப் பராமரிக்கின்றன. அங்குச் செடிப்பேன்களிலிருந்து அவை பாலைக் கறக்கும்போது, போர்வீரன் எறும்புகள் அத்துமீறி நுழையும் எதிரிகளைத் தாக்குகின்றன. நீதிமொழிகள் 6:6-ல் புத்திமதி கொடுக்கப்பட்டிருக்கிறது: “சோம்பேறியே, நீ எறும்பினிடத்தில் போய், அதின் வழிகளைப் பார்த்து, ஞானத்தைக் கற்றுக்கொள்.” இத்தகைய உதாரணங்கள் ‘கர்த்தரின் வேலையில் அதிகத்தை செய்ய’ நம்மை தூண்ட வேண்டாமா?—1 கொரிந்தியர் 15:58, NW.
மனிதன் பெரிய விமானங்களை உருவாக்கி இருக்கிறான். ஆனால் அவற்றைக் காட்டிலும் பறவைகள், 30 கிராமுக்கும் குறைவாக இருக்கும் தேன் சிட்டு உட்பட பல்திசை இயக்கத்தில் எவ்வளவோ அதிக திறம்பட்டவையாக இருக்கின்றன! போயிங் 747 விமானம் பெருங்கடலை கடப்பதற்கு, 1,80,000 லிட்டர் எரிபொருளை எடுத்துச்செல்ல வேண்டும், பயிற்றுவிக்கப்பட்ட விமான பணியாளர்களால் இயக்கப்பட வேண்டும், மேலும் சிக்கலான வான்வழிப் போக்குவரத்து முறைகளைப் பயன்படுத்த வேண்டும். ஆனால், ஒரு சின்னஞ்சிறிய தேன் சிட்டு, வட அமெரிக்காவிலிருந்து மெக்ஸிகோ வளைகுடாவுக்குக் குறுக்கே சென்று தென் அமெரிக்காவுக்குச் செல்லும் முழு பயணத்திற்கும் ஒரு கிராம் கொழுப்புச் சத்தாகிய எரிபொருளின்மீதே சார்ந்திருக்கிறது. அதிக பளுவான எரிபொருள், வான்வழி கட்டுப்பாட்டு பயிற்சி, சிக்கல் நிறைந்த சார்ட்டுகள், கம்ப்யூட்டர்கள் என எதுவும் கிடையாது! இந்தத் திறமை பரிணாம வளர்ச்சியில் தற்செயலாக நிகழ்ந்ததா? கிடையவே கிடையாது! இந்தச் சின்னஞ்சிறிய பறவை இயல்புணர்வால் ஞானமுள்ளதாக இருக்கிறது, இவ்வாறு இருக்க அதன் சிருஷ்டிகராகிய யெகோவா தேவனால் திட்டமிடப்பட்டிருக்கிறது.
[பக்கம் 10-ன் படம்]
‘நித்திய ராஜாவின்’ பல்வேறு சிருஷ்டிகள் அவரின் மகிமையைப் புகழுகின்றன
[பக்கம் 15-ன் படம்]
சிவந்த சமுத்திரத்தில் யெகோவா அடைந்த வெற்றியை மோசேயும் இஸ்ரவேலரும் கொண்டாடியதைப்போலவே, அர்மகெதோனுக்குப் பிறகு பெரும் மகிழ்ச்சி ஆரவாரம் இருக்கும்