யெகோவாவின் அமைப்பைப் போற்றுகிறீர்களா?
“யெகோவா சொல்வதைக் கேளுங்கள்: வானம் என் சிங்காசனம், பூமி என் காலுக்குப் பாதபடி.”—ஏசாயா 66:1, திருத்திய மொழிபெயர்ப்பு.
1, 2. (அ) யெகோவாவின் அமைப்பு உண்மையில் இருக்கிறது என்பதைக் காட்ட என்ன காணக்கூடிய அத்தாட்சியை நீங்கள் அளிப்பீர்கள்? (ஆ) யெகோவா எங்கே வாசமாயிருக்கிறார்?
யெகோவாவிற்கு ஒரு அமைப்பு இருக்கிறது என நீங்கள் நம்புகிறீர்களா? எதனால் நம்புகிறீர்கள்? ஒருவேளை நீங்கள் சொல்லலாம்: ‘நமக்கு ராஜ்ய மன்றம் ஒன்று இருக்கிறது. மூப்பர் குழுவோடு சீராக இயங்கும் சபை இருக்கிறது. முறைப்படி நியமிக்கப்பட்டு, நம்மை தவறாமல் சந்திக்கும் வட்டார கண்காணி இருக்கிறார். ஒழுங்கமைப்போடு நடைபெறும் அசெம்பிளிகளிலும் மாநாடுகளிலும் நாம் கலந்துகொள்கிறோம். நம் நாட்டில் உவாட்ச் டவர் சொஸைட்டியின் கிளை அலுவலகம் இருக்கிறது. இவை மட்டுமல்ல, இன்னும் எவ்வளவோ காரியங்கள், யெகோவாவிற்கென ஒரு அமைப்பு இயங்கிக்கொண்டிருக்கிறது என்பதற்கு நிச்சயமாகவே அத்தாட்சி அளிக்கின்றன.’
2 இந்த விஷயங்கள் ஓர் அமைப்பு இருப்பதற்கான ஆதாரமளிக்கின்றன என்பது என்னவோ உண்மைதான். ஆனால் பூமிக்குரிய ஒன்றை மாத்திரமே நாம் பார்த்து போற்றுகிறோம் என்றால், உண்மையில் யெகோவாவின் அமைப்பை சரியாக புரிந்துகொள்ளவில்லை என்றே அர்த்தம். யெகோவா ஏசாயாவிற்கு சொன்னபடி, பூமி வெறுமனே அவரது காலுக்கு பாதபடி, ஆனால் வானம் அவரது சிங்காசனம். (ஏசாயா 66:1) யெகோவா எந்த ‘வானத்தைப்’ பற்றி சொன்னார்? நமது வளிமண்டலத்தைப் பற்றியா? விண்வெளியைப் பற்றியா? அல்லது உயிர் காணப்படும் வேறேதாவது இடத்தைப் பற்றியா? யெகோவாவின் ‘பரிசுத்தமும் மகிமையுமுள்ள வாசஸ்தலத்தைப்’ பற்றி ஏசாயா பேசுகிறார்; ‘அவர் வாசமாயிருக்கிற ஸ்தானம்’ என இந்த வானத்தை சங்கீதக்காரன் விவரிக்கிறார். இவ்வாறு, ஏசாயா 66:1-ல் குறிப்பிடப்பட்டுள்ள “வானம்,” கண்ணுக்குப் புலப்படாத ஆவிப் பிரதேசமாகும்; அங்கு யெகோவா மகா உன்னதமான ஈடிணையற்ற ஸ்தானத்தில் வீற்றிருக்கிறார்.—ஏசாயா 63:15; சங்கீதம் 33:13, 14.
3. நாம் எவ்வாறு சந்தேகங்களை வெற்றிகொள்ளலாம்?
3 ஆகவே யெகோவாவின் அமைப்பை நாம் உண்மையிலேயே புரிந்துகொண்டு போற்ற விரும்பினோமென்றால், வானத்தை நோக்கவேண்டும். அதில்தான் சிலருக்கு பிரச்சினையே இருக்கிறது. யெகோவாவின் பரலோக அமைப்பைப் பார்க்க முடியாதென்பதால், அது உண்மையிலேயே இருக்கிறது என நமக்கு எப்படித் தெரியும்? சிலர், ‘எதை வைத்து நம்புவது?’ என சிந்தித்துக்கொண்டே, சந்தேகமென்னும் இருண்ட சுரங்கப் பாதையிலும் செல்லலாம். விசுவாசம் எப்படி சந்தேகத்தை வெற்றிகொள்ளும்? இரண்டு முக்கிய வழிகள் இருக்கின்றன. ஒன்று, கடவுளுடைய வார்த்தையை தனிப்பட்ட விதமாய் ஆழ்ந்து படிப்பது; மற்றொன்று, கிறிஸ்தவ கூட்டங்களுக்குத் தவறாமல் சென்று அவற்றில் பங்குகொள்வது. அப்படிச் செய்தோமென்றால் சுரங்கப் பாதையின் இறுதியில் சத்தியத்தின் வெளிச்சத்தைக் காண்போம். சந்தேகங்களுக்கு இடமளித்த கடவுளது ஊழியர்கள் இருக்கத்தான் செய்தனர். சீரியாவின் ராஜா இஸ்ரவேலை தாக்கியபோது எலிசாவின் வேலைக்காரன் விஷயத்தில் என்ன நடந்தது என்பதைப் பார்க்கலாம்.—யோவான் 20:24-29-ஐ ஒப்பிடுக; யாக்கோபு 1:5-8.
பரலோக சேனையைப் பார்த்தவர்
4, 5. (அ) எலிசாவின் வேலைக்காரனிடம் இருந்த பிரச்சினை என்ன? (ஆ) எலிசாவின் ஜெபத்திற்கு யெகோவா எவ்வாறு பதிலளித்தார்?
4 சீரியாவின் ராஜா, எலிசாவைப் பிடிப்பதற்காக பலத்த ராணுவ படையை தோத்தானிற்கு இரவோடு இரவாக அனுப்பினான். எலிசாவின் வேலைக்காரன் அதிகாலையில் எழுந்து, ஒருவேளை கொஞ்சம் காற்றுவாங்க மொட்டை மாடிக்குப் போயிருக்கலாம்; ஆனால் அங்கு பார்த்த காட்சியால் அவன் திடுக்கிட்டுப் போனான்! குதிரைகளும் இரதங்களுமாய் சீரியர்களின் ஒரு முழு சேனையே பட்டணத்தைச் சூழ்ந்து, கடவுளது தீர்க்கதரிசியைப் பிடிப்பதற்காக காத்திருந்தது. “ஐயோ, என் ஆண்டவனே, என்ன செய்வோம்” என வேலைக்காரன் எலிசாவைப் பார்த்து அலறினான். அமைதலாகவும் நம்பிக்கையோடும் எலிசா சொன்னதாவது: “பயப்படாதே; அவர்களோடிருக்கிறவர்களைப் பார்க்கிலும் நம்மோடிருக்கிறவர்கள் அதிகம்.” ‘எங்கே இருக்கிறார்கள்? என் கண்ணுக்குத் தெரியவில்லையே!’ என அந்த வேலைக்காரன் நினைத்திருக்கலாம். சிலசமயங்களில் நமக்கும் அதே பிரச்சினை இருக்கலாம்; அதாவது, மனக் கண்களால் பரலோக சேனையைப் பார்க்க முடியாமல் அல்லது அறிய முடியாமல் இருக்கலாம்.—2 இராஜாக்கள் 6:8-16; எபேசியர் 1:19.
5 வேலைக்காரனது கண்களைத் திறக்குமாறு எலிசா ஜெபம் செய்தார். அடுத்ததாக என்ன நடந்தது? “உடனே கர்த்தர் அந்த வேலைக்காரன் கண்களைத் திறந்தார்; இதோ, எலிசாவைச்சுற்றிலும் அக்கினிமயமான குதிரைகளாலும் இரதங்களாலும் அந்த மலை நிறைந்திருக்கிறதை அவன் கண்டான்.” (2 இராஜாக்கள் 6:17) ஆம், கடவுளது ஊழியரை பாதுகாப்பதற்காக ஆயத்தமாயிருந்த பரலோக சேனையாகிய, தேவதூதர்களின் படையைக் கண்டான். எலிசா நம்பிக்கையோடு இருந்ததற்கான காரணத்தை இப்போது அவனால் புரிந்துகொள்ள முடிந்தது.
6. யெகோவாவின் பரலோக அமைப்பைப் பற்றிய ஆழ்ந்த அறிவை நாம் எவ்வாறு பெறலாம்?
6 எலிசாவின் வேலைக்காரனைப் போலவே நாமும் சிலசமயங்களில் புரிந்துகொள்வதற்கு கஷ்டப்படுகிறோமா? சில நாடுகளிலுள்ள நிலைமைகள் நம்மையோ நமது கிறிஸ்தவ ஊழியத்தையோ அச்சுறுத்துகின்றபோதிலும், அவற்றை நாம் மனித நோக்குநிலையிலிருந்து மாத்திரமே பார்க்கிறோமா? அப்படியென்றால் ஒரு விசேஷ தரிசனம் நமக்கு அறிவொளியூட்டும் என எதிர்பார்க்கலாமா? எதிர்பார்க்கக்கூடாது, ஏனென்றால் எலிசாவின் வேலைக்காரனிடத்தில் இல்லாத ஒன்று நம்மிடம் இருக்கிறது; அதுதான், அநேக தரிசனங்கள் அடங்கிய முழு புத்தகமான பைபிள். அது பரலோக அமைப்பைப் பற்றிய ஆழ்ந்த அறிவை நமக்கு அளிக்கும். ஏவப்பட்டு எழுதப்பட்ட அந்த வார்த்தை, நமது சிந்தையையும் வாழ்க்கை முறையையும் சீர்படுத்த தேவைப்படும் வழிகாட்டு நியமங்களை அளிக்கிறது. என்றாலும், பகுத்தறிவைப் பெற நாம் முயற்சி எடுக்கவேண்டும்; மேலும் யெகோவாவின் ஏற்பாட்டிற்கு போற்றுதலை வளர்த்துக்கொள்ள வேண்டும். இவற்றை தனிப்பட்ட படிப்பு, ஜெபம், தியானம் ஆகியவற்றின் மூலம் நாம் செய்யலாம்.—ரோமர் 12:12; பிலிப்பியர் 4:6; 2 தீமோத்தேயு 3:15-17.
படித்துப் புரிந்துகொள்ளுதல்
7. (அ) தனிப்பட்ட பைபிள் படிப்பு சம்பந்தமாய் சிலருக்கு என்ன பிரச்சினை இருக்கலாம்? (ஆ) தனிப்பட்ட படிப்பிற்காக எடுக்கும் முயற்சி ஏன் வீண்போகாது?
7 அநேகர் தனிப்பட்ட படிப்பென்றாலே முகம் சுளிக்கலாம்; இவர்கள் ஒருவேளை பள்ளிப் படிப்பை விரும்பியிருக்க மாட்டார்கள் அல்லது பள்ளிப் பக்கமே தலைகாட்டியிருக்க மாட்டார்கள். என்றாலும் மனக் கண்களால் நாம் யெகோவாவின் அமைப்பைப் புரிந்துகொண்டு போற்ற வேண்டுமென்றால் படிப்பதற்கான ஆர்வத்தை வளர்த்துக்கொள்ள வேண்டும். சமைக்காமலேயே ருசியாக சாப்பிடவேண்டுமென்றால் முடியுமா? கைதேர்ந்த சமையல்காரர் எவரை வேண்டுமென்றாலும் கேட்டுப் பாருங்கள், ருசியான சாப்பாட்டிற்கு எக்கச்சக்கமான தயாரிப்பு தேவை என்றே சொல்வார். ஆனால் அதை அரை மணிநேரத்தில், ஏன் இன்னும் சீக்கிரமாகவும்கூட சாப்பிட்டு தீர்த்துவிடலாம். அதேசமயத்தில் தனிப்பட்ட படிப்பின் விஷயத்தைப் பொறுத்ததிலோ, அதன் நன்மைகள் நித்தியமானவை. தனிப்பட்ட படிப்பினால் நாம் அடையும் முன்னேற்றத்தைக் கவனிக்கும்போது மெதுமெதுவாய் அதை ருசித்து மகிழ ஆரம்பிப்போம். நம்மைக் குறித்தும் நம் உபதேசத்தைக் குறித்தும் எப்போதும் கவனமாயிருக்க வேண்டுமென்றும் பொது வாசிப்பில் எப்போதும் கருத்தாயிருக்க வேண்டுமென்றும் அப்போஸ்தலனாகிய பவுல் சரியாகவே சொன்னார். விடாமுயற்சி தேவை, ஆனால் அதன் நன்மைகள் நிரந்தரமானவை.—1 தீமோத்தேயு 4:13-16, NW.
8. என்ன மனப்பான்மையை நீதிமொழிகள் பரிந்துரைக்கிறது?
8 பூர்வத்தில் வாழ்ந்த ஞானி ஒருவர் சொன்னார்: “என் மகனே [அல்லது, மகளே], நீ என் வார்த்தைகளை ஏற்றுக்கொண்டு என் கட்டளைகளை உன்னிடத்தில் பத்திரப்படுத்தி, ஞானத்திற்கு செவிசாய்த்து, விவேகத்தின்பால் மனம் சாய்வாயாகில்; மேலும், நீ புரிந்துகொள்ளுதலை வா என கூப்பிட்டு விவேகத்தை சப்தமிட்டு அழைப்பாயாகில்; நீ வெள்ளியைப்போல் அதை நாடுவாயாகில்; புதையல்களைத் தேடுகிறதுபோல் அதை நீ தேடுவாயாகில், அப்பொழுது யெகோவாவிற்குப் பயப்படுதல் இன்னதென்று நீ அறிந்துகொள்ளுவாய், கடவுளை அறியும் அறிவையும் நீ கண்டடைவாய்.”—நீதிமொழிகள் 2:1-5, NW.
9. (அ) தங்கத்தின் மதிப்பை ‘கடவுளை அறியும் அறிவோடு’ எவ்வாறு ஒப்பிடலாம்? (ஆ) திருத்தமான அறிவைப் பெற என்ன கருவிகள் நமக்குத் தேவை?
9 பொறுப்பு யாருடையது என தெரிகிறதா? ‘நீ’ என்ற பதமே திரும்பத் திரும்ப பயன்படுத்தப்பட்டுள்ளது. ‘புதையல்களைப்போல் அதை நீ தேடுவாயாகில்’ என்ற சொற்றொடரை கவனியுங்கள். தென் ஆப்பிரிக்காவிலும் பொலிவியாவிலும் மெக்ஸிகோவிலும் மற்ற நாடுகளிலும் பல நூற்றாண்டுகளாக வெள்ளியையும் தங்கத்தையும் தேடியலைந்த சுரங்கத் தொழிலாளர்களை நினைத்துப் பாருங்கள். விலைமதிப்புள்ள உலோகங்களுக்காக அவர்கள் கடப்பாரைகளையும் மண்வெட்டிகளையும் பயன்படுத்தி பாறையைக் குடைந்து கடினமாய் பாடுபட்டார்கள். அவர்கள் தங்கத்தை அந்தளவு உயர்வாய் மதித்ததால், அ.ஐ.மா., கலிபோர்னியாவிலுள்ள ஒரு சுரங்கத்தில், தங்கத்தைக் கண்டெடுப்பதற்காகவே, 591 கிலோமீட்டர் நீளமும் சுமார் 1.5 கிலோமீட்டர் ஆழமுமுள்ள சுரங்கப் பாதைகளைத் தோண்டினார்கள். ஆனால் தங்கத்தை என்ன சாப்பிடவா முடியும்? அல்லது குடிக்கத்தான் முடியுமா? நீங்கள் பாலைவனத்தில் பசியாலும் தாகத்தாலும் சாகக்கிடக்கும்போது உங்கள் உயிரை அது காப்பாற்றத்தான் செய்யுமா? காப்பாற்றாது, அதன் மதிப்பு மனிதனால் நிர்ணயிக்கப்படுகிறது, ஆளுக்கு ஆள் வேறுபடுகிறது, சர்வதேச சந்தைக்கேற்ப தினந்தினம் மாறுகிறது. இருந்தபோதிலும் மனிதர்கள் இதற்காக தங்கள் உயிரையே கொடுத்திருக்கின்றனர். அப்படியென்றால் ஆவிக்குரிய தங்கமாகிய, “கடவுளை அறியும் அறிவை” பெறுவதற்கு எந்தளவு முயற்சி தேவை? நீங்களே சிந்தித்துப் பாருங்கள், சர்வலோக பேரரசரைப் பற்றிய, அவரது அமைப்பையும் நோக்கங்களையும் பற்றிய அறிவென்றால் சும்மாவா? இதற்காக நாம் ஆவிக்குரிய கடப்பாரைகளையும் மண்வெட்டிகளையும் பயன்படுத்தலாம். அவை, யெகோவாவின் வார்த்தையை தோண்டியெடுத்து அதன் அர்த்தத்தை பகுத்துணர உதவும் பைபிள்-அடிப்படையிலான பிரசுரங்களாகும்.—யோபு 28:12-19.
ஆழமான அறிவை தோண்டியெடுத்தல்
10. தானியேல் கண்ட தரிசனம் என்ன?
10 யெகோவாவின் பரலோக அமைப்பைப் பற்றிய அறிவை அடைவதன் ஆரம்பமாய், ஆவிக்குரிய கருத்தில் கொஞ்சம் தோண்டலாம். இப்படிப்பட்ட ஆழமான அறிவுக்கு ஓர் உதாரணமாய், சிங்காசனத்தில் வீற்றிருந்த நீண்ட ஆயுசுள்ளவரைப் பற்றிய தானியேலின் தரிசனத்திற்கு நம் கவனத்தைத் திருப்பலாம். தானியேல் இவ்வாறு எழுதுகிறார்: “நான் பார்த்துக்கொண்டிருக்கையில், சிங்காசனங்கள் வைக்கப்பட்டது; நீண்ட ஆயுசுள்ளவர் வீற்றிருந்தார்; அவருடைய வஸ்திரம் உறைந்த மழையைப்போலவும், அவருடைய சிரசின் மயிர் வெண்மையாகவும் பஞ்சைப்போலத் துப்புரவாகவும் இருந்தது; அவருடைய சிங்காசனம் அக்கினி ஜுவாலையும், அதின் சக்கரங்கள் எரிகிற நெருப்புமாயிருந்தது. அக்கினி நதி அவர் சந்நிதியிலிருந்து புறப்பட்டு ஓடினது; ஆயிரமாயிரம்பேர் அவரைச் சேவித்தார்கள்; கோடாகோடிபேர் அவருக்கு முன்பாக நின்றார்கள்; நியாயசங்கம் உட்கார்ந்தது; புஸ்தகங்கள் திறக்கப்பட்டது.” (தானியேல் 7:9, 10 ) யெகோவாவை சேவித்துக்கொண்டிருந்த அந்த ஆயிரமாயிரம்பேர் யார்? புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆங்கிலம்) பைபிளின் ஓரக்குறிப்புகளை, “கடப்பாரைகளாகவும்” “மண்வெட்டிகளாகவும்” பயன்படுத்துகையில் நமக்குக் கிடைப்பது, சங்கீதம் 68:17 மற்றும் எபிரெயர் 1:14. ஆம், சேவித்துக்கொண்டிருந்தவர்கள் பரலோக தேவதூதர்கள்!
11. தானியேலின் தரிசனம், எலிசாவின் வார்த்தைகளைப் புரிந்துகொள்ள நமக்கு எவ்வாறு உதவுகிறது?
11 கடவுளது ஆணைக்கு அடங்கி நடக்கும் உண்மையுள்ள தேவதூதர்கள் அனைவரையும் பார்த்ததாய் தானியேல் பதிவு செய்யவில்லை. இன்னும் கோடானகோடி தேவதூதர்கள் இருக்கலாம். ஆனால் ஒன்று, “அவர்களோடிருக்கிறவர்களைப் பார்க்கிலும் நம்மோடிருக்கிறவர்கள் அதிகம்” என்று எலிசா ஏன் சொன்னார் என்பதை இப்போது நம்மால் தெளிவாய் புரிந்துகொள்ள முடிகிறது. சீரியாவின் ராஜாவினுடைய சேனை, உண்மையற்ற தேவதூதர்களான பேய்களால் ஆதரிக்கப்பட்டிருந்தாலும், யெகோவாவின் பரலோக சேனைக்குப் பக்கத்தில் அற்பசொற்பமாகிவிட்டது!—சங்கீதம் 34:7; 91:11.
12. தேவதூதர்களைப் பற்றி இன்னுமதிக விஷயங்களை நீங்கள் எவ்வாறு தெரிந்துகொள்ளலாம்?
12 இந்தத் தேவதூதர்களைப் பற்றி இன்னுமதிக விஷயங்களை, உதாரணத்திற்கு யெகோவாவின் சேவையில் என்ன பாகம் வகிக்கிறார்கள் போன்ற விஷயங்களை தெரிந்துகொள்ள ஒருவேளை உங்களுக்கு விருப்பம் இருக்கலாம். தேவதூதர்கள் என்பதற்கான கிரேக்க வார்த்தையை ஆராய்கையில் அவர்கள் தூதுவர்கள் என்பது தெரியவருகிறது; ஏனென்றால் அவ்வார்த்தைக்கு “தூதுவர்” என்றும் அர்த்தமுண்டு. இருந்தாலும் அவர்களுடைய பணி இதோடு முடிவடைவதில்லை. வேறு என்னென்ன செய்கிறார்கள் என்பது, இன்னும் தோண்டத் தோண்டத்தான் உங்களுக்குத் தெரிய வரும். வேதாகமங்களின்பேரில் உட்பார்வை (ஆங்கிலம்) புத்தகம் உங்களிடம் இருந்தால், “தேவதூதர்கள்” என்ற தலைப்பின்கீழுள்ள கட்டுரையை படிக்கலாம், அல்லது தேவதூதர்களைப் பற்றி காவற்கோபுரத்தில் வெளிவந்துள்ள கட்டுரைகளை எடுத்துப் பார்க்கலாம். கடவுளது பரலோக ஊழியக்காரர்களைப் பற்றி கற்றுக்கொள்ள அடேயப்பா, இவ்வளவு விஷயங்களா என நீங்கள் மலைத்துப்போவீர்கள்; அவர்கள் அளிக்கும் ஆதரவையும் போற்ற ஆரம்பிப்பீர்கள். (வெளிப்படுத்துதல் 14:6, 7) என்றாலும் சில ஆவி சிருஷ்டிகள், கடவுளது பரலோக அமைப்பில் விசேஷ பணிகளைச் செய்கின்றனர்.
ஏசாயா பார்த்தவை
13, 14. ஏசாயா, தரிசனத்தில் எதைப் பார்த்தார், அது அவரை எவ்வாறு பாதித்தது?
13 இப்போது ஏசாயாவின் தரிசனத்தை கொஞ்சம் தோண்ட ஆரம்பிக்கலாம். 6-ம் அதிகாரத்தில் 1-லிருந்து 7 வசனங்களை வாசிக்கும்போது நீங்கள் பூரித்துப் போகலாம். ‘ஆண்டவர் சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கக் கண்டேன்’ என்றும், “சேராபீன்கள் அவருக்கு மேலாக நின்றார்கள்” என்றும் ஏசாயா சொல்கிறார். யெகோவாவின் மகிமையை அவர்கள் அறிவித்து, அவரது பரிசுத்தத்தைப் புகழ்ந்துகொண்டிருந்தனர். இந்தப் பதிவை வாசிக்கும்போதே நீங்கள் மெய்சிலிர்த்துப்போகலாம். அப்படியென்றால் ஏசாயா எப்படி பிரதிபலித்தார்? “அப்பொழுது நான்: ஐயோ! அதமானேன், நான் அசுத்த உதடுகளுள்ள மனுஷன், அசுத்த உதடுகளுள்ள ஜனங்களின் நடுவில் வாசமாயிருக்கிறவன்; சேனைகளின் கர்த்தராகிய ராஜாவை என் கண்கள் கண்டதே என்றேன்.” அந்தத் தரிசனத்தைக் கண்டு அவர் எந்தளவு பக்திப் பரவசமடைந்தார்! உங்களைப் பற்றியென்ன?
14 இந்த அற்புதக் காட்சியை ஏசாயாவால் எவ்வாறு தாங்கிக்கொள்ள முடிந்தது? ஒரு சேராபீன் அவரது உதவிக்கு வந்து, “உன் அக்கிரமம் நீங்கி, உன் பாவம் நிவிர்த்தியானது” என்று சொன்னதாய் அவர் விளக்குகிறார். (ஏசாயா 6:7) ஏசாயா யெகோவாவின் இரக்க குணத்தின்மேல் நம்பிக்கைவைத்து, அவரது வார்த்தைகளுக்கு செவிசாய்த்தார். இப்போது, உயர்ந்த ஸ்தானத்திலுள்ள இந்த ஆவி சிருஷ்டிகளைப் பற்றி இன்னுமதிகத்தைத் தெரிந்துகொள்ள வேண்டுமென்ற ஆவல் வருகிறதல்லவா? அப்படியென்றால் நீங்கள் என்ன செய்ய வேண்டும்? இன்னுமதிக தகவலைத் தோண்டி எடுக்கவேண்டும். இதற்கான ஒரு கருவி, உவாட்ச் டவர் பிரசுர இண்டெக்ஸ் (ஆங்கிலம்) ஆகும். தெளிவான தகவலளிக்கும் அநேக பிரசுரங்கள் அதில் குறிப்பிடப்பட்டுள்ளன; அவற்றை நாம் எடுத்துப் பார்க்க வேண்டும்.
எசேக்கியேல் பார்த்தது என்ன?
15. எசேக்கியேலின் தரிசனம் நம்பத்தகுந்ததென்பதை காட்டுவது எது?
15 இப்போது வேறொரு விதமான ஆவி சிருஷ்டிக்கு கவனத்தைத் திருப்பலாம். எசேக்கியேல் பாபிலோனில் சிறைக்கைதியாய் இருக்கும்போது கடவுளால் ஏவப்பட்ட தரிசனத்தைக் காணும் சிலாக்கியத்தைப் பெற்றார். உங்கள் பைபிளை எசேக்கியேல் முதலாம் அதிகாரம், முதல் மூன்று வசனங்களுக்குத் திருப்புங்கள். பதிவு என்ன சொல்கிறது? ‘வெகு காலத்துக்கு முன், ஒரு தொலைதூர ஊரில் . . . ’ என்றா ஆரம்பிக்கிறது? இல்லை, இது ஒன்றும் ராஜா ராணிக் கதை அல்ல. முதல் வசனம் சொல்கிறது: “முப்பதாம் வருஷம் நாலாம் மாசம் ஐந்தாந்தேதியிலே, நான் கேபார் நதியண்டையிலே சிறைப்பட்டவர்கள் நடுவில் இருக்கும்போது, சம்பவித்தது என்னவென்றால், வானங்கள் திறக்கப்பட, நான் தேவதரிசனங்களைக் கண்டேன்.” இந்த வசனத்தில் எதைக் கவனிக்கிறீர்கள்? அது திட்டவட்டமான தேதியையும் இடத்தையும் குறிப்பிடுகிறதல்லவா? இந்த விவரங்கள், யோயாக்கீன் ராஜாவினுடைய சிறையிருப்பின் ஐந்தாம் ஆண்டாகிய பொ.ச.மு. 613-ஐ சுட்டிக்காட்டுகின்றன.
16. எசேக்கியேல் பார்த்தது என்ன?
16 யெகோவாவின் கரம் எசேக்கியேலின்மீது அமர்ந்தது, அவர் பிரமிக்கத்தக்க ஒரு தரிசனத்தைக் காண ஆரம்பித்தார். அந்தத் தரிசனத்தில் ஒரு மாபெரும் பரலோக இரதத்தில் யெகோவா சிங்காசனத்தில் வீற்றிருந்தார்; இரதத்திற்கு பெரிய சக்கரங்கள் இருந்தன; அவற்றின் வட்டங்கள் முழுவதும் கண்களால் நிறைந்திருந்தன. ஆர்வத்தைத் தூண்டும் விஷயம் என்னவென்றால், அங்கு நான்கு ஜீவன்கள் இருந்தன; அவை ஒவ்வொன்றும் ஒவ்வொரு சக்கரத்திற்கு பக்கத்தில் நின்றுகொண்டிருந்தன. “அவைகளின் சாயல் மனுஷ சாயலாயிருந்தது. அவைகளில் ஒவ்வொன்றுக்கும் நந்நான்கு முகங்களும், ஒவ்வொன்றுக்கும் நந்நான்கு செட்டைகளும் இருந்தன. . . . அவைகளுடைய முகங்களின் சாயலாவது, வலதுபக்கத்தில் நாலும் மனுஷ முகமும் சிங்க முகமும், இடதுபக்கத்தில் நாலும் எருது முகமும் கழுகு முகமுமாயிருந்தன.”—எசேக்கியேல் 1:5, 6, 10.
17. கேருபீன்களின் நான்கு முகங்கள் எதை அடையாளப்படுத்துகின்றன?
17 இந்த நான்கு ஜீவன்கள் யாவர்? அவர்கள் கேருபீன்கள் என எசேக்கியேலே சொல்கிறார். (எசேக்கியேல் 10:1-3, 14) அவர்களுக்கு ஏன் நான்கு முகங்கள்? சர்வலோக பேரரசராகிய யெகோவாவின் நான்கு தலைசிறந்த குணாதிசயங்களை சித்தரிப்பதற்காகவே ஆகும். கழுகு முகம், முன்னரே அறியும் ஞானத்தின் அடையாளம். (யோபு 39:27-29) எருது முகம் எதை அடையாளப்படுத்தியது? குதிரையின் மீதமர்ந்து காளையை அடக்கும் ஜல்லிக்கட்டில், அக்காளை அதன் கழுத்து மற்றும் தோள்களின் பெரும் பலத்தைக்கொண்டு, குதிரையையும் குதிரைவீரரையும் சேர்த்து அலக்காக தூக்கியெறிந்து பந்தாடிவிடும். ஆகவே எருது, யெகோவாவின் அளவற்ற வல்லமையை அடையாளப்படுத்துகிறது என்பதில் சந்தேகமேயில்லை. சிங்கம், நீதியைக் கடைப்பிடிப்பதில் தைரியத்தைக் குறிக்கிறது. இறுதியாக, மனித முகம் கடவுளது அன்பை பொருத்தமாகவே சித்தரிக்கிறது; ஏனென்றால் பூமிக்குரிய சிருஷ்டிகள் எல்லாவற்றிலும், மனிதனால் மாத்திரமே இந்தக் குணாதிசயத்தை அறிவுத்திறனோடு வெளிக்காட்ட முடியும்.—மத்தேயு 22:37, 39; 1 யோவான் 4:8.
18. பரலோக அமைப்பைப் பற்றிய நமது புரிந்துகொள்ளுதலை அப்போஸ்தலனாகிய யோவான் எவ்வாறு தெளிவுபடுத்துகிறார்?
18 இந்தப் புரிந்துகொள்ளுதலை முழுமையாக்க, வேறு சில தரிசனங்களும் நமக்கு உதவுகின்றன. பைபிளின் வெளிப்படுத்துதல் புத்தகத்தில் விவரிக்கப்பட்டுள்ளபடி, யோவான் கண்ட தரிசனங்களும் இவற்றில் அடங்கும். எசேக்கியேலைப் போலவே அவர், மகிமையான சிங்காசனத்தில் யெகோவா கேருபீன்களுடன் வீற்றிருப்பதைப் பார்க்கிறார். கேருபீன்கள் என்ன செய்துகொண்டிருக்கின்றனர்? ஏசாயா 6-ஆம் அதிகாரத்தில் சேராபீன்கள் அறிவித்தவற்றைப் போன்றே அவர்களும் சொல்கின்றனர்: “இருந்தவரும் இருக்கிறவரும் வருகிறவருமாகிய சர்வவல்லமையுள்ள தேவனாகிய கர்த்தர் பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தர்.” (வெளிப்படுத்துதல் 4:6-8) சிங்காசனத்திற்கு அருகே ஓர் ஆட்டுக்குட்டி நிற்கிறதையும் யோவான் பார்க்கிறார். அது யாரை பிரதிநிதித்துவம் செய்கிறது? கடவுளின் ஆட்டுக்குட்டியானவரான இயேசு கிறிஸ்துவையே.—வெளிப்படுத்துதல் 5:13, 14, NW.
19. இந்தப் படிப்பின் மூலம், யெகோவாவின் அமைப்பைப் பற்றி என்ன புரிந்துகொண்டிருக்கிறீர்கள்?
19 ஆகவே இந்தத் தரிசனங்களின் மூலம் நாம் புரிந்துகொண்டிருப்பது என்ன? பரலோக அமைப்பில் யெகோவா தேவன் தமது சிங்காசனத்தில் உன்னதராய் வீற்றிருக்கிறார்; அவரோடு, வார்த்தை அல்லது லோகாஸ் என அழைக்கப்படும் ஆட்டுக்குட்டியானவராகிய இயேசு கிறிஸ்துவும் இருக்கிறார். அதன்பின் சேராபீன்களும் கேருபீன்களும் உட்பட, தேவதூதர்களின் ஒரு பரலோக சேனையைப் பற்றி பார்த்தோம். அவர்கள் ஒன்றுபட்ட ஒரே பெரும் அமைப்பின் பாகமாய் யெகோவாவின் நோக்கங்களை சேவித்துவருகின்றனர். அந்த நோக்கங்களில் ஒன்று, இந்த முடிவின் காலத்தில் உலகெங்கும் நற்செய்தியைப் பிரசங்கிப்பதாகும்.—மாற்கு 13:10; யோவான் 1:1-3; வெளிப்படுத்துதல் 14:6, 7.
20. பின்வரும் கட்டுரையில் என்ன கேள்வி பதிலளிக்கப்படும்?
20 இறுதியாக, யெகோவாவின் சாட்சிகள் இருக்கிறார்கள்; அவர்கள் பேரரசராகிய கடவுளின் சித்தத்தை செய்ய கற்றுக்கொள்வதற்காக பூமியில் ராஜ்ய மன்றங்களில் கூடுகிறார்கள். நிச்சயமாகவே, சாத்தானோடும் சத்தியத்தை எதிர்க்கிறவர்களோடும் இருப்பவர்களைக் காட்டிலும் நம்மோடிருக்கிறவர்கள் அதிகம் என்பதை இப்போது நம்மால் புரிந்துகொள்ள முடிகிறதல்லவா? இப்போது கேள்வி என்னவென்றால், பரலோக அமைப்பிற்கும் ராஜ்ய நற்செய்தி பிரசங்கிக்கப்படுவதற்கும் என்ன சம்பந்தம்? இதையும் மற்ற விஷயங்களையும் பின்வரும் கட்டுரை அலசி ஆராயும்.
மறுபார்வைக்கான கேள்விகள்
◻ யெகோவாவின் அமைப்பைப் போற்ற நாம் எதைப் புரிந்துகொள்ள வேண்டும்?
◻ எலிசாவின் வேலைக்காரனுக்கு என்ன அனுபவம் ஏற்பட்டது, எலிசா அவனை எவ்வாறு உற்சாகப்படுத்தினார்?
◻ தனிப்பட்ட படிப்பை நாம் எவ்வாறு கருத வேண்டும்?
◻ தானியேலும் ஏசாயாவும் எசேக்கியேலும் பரலோக அமைப்பைப் பற்றி என்ன விவரங்களை அளிக்கின்றனர்?
[பக்கம் 13-ன் படம்]
ருசியான சாப்பாட்டினால் வரும் நன்மைகளைவிட தனிப்பட்ட படிப்பினால் வரும் நன்மைகள் ஏராளம்
[பக்கம் 15-ன் படம்]
பரலோக சேனைகளின் தரிசனமே, எலிசாவின் ஜெபத்திற்கு யெகோவா அளித்த பதில்