மிகத் தனிச்சிறப்பு வாய்ந்த திருமணம்
மொஸாம்பிக்கின் வடக்கே, அழகிய மலைகள் சூழ்ந்த செழிப்பான ஒரு பள்ளத்தாக்கு இருக்கிறது. இந்த மலைகளில் சில, கற்பாறைகள் நிறைந்தவையாகவும், மற்றவை வளமான தாவரங்கள் நிறைந்தவையாகவும் இருக்கின்றன. இங்குதான் ஃபிங்கோ கிராமம் உள்ளது. தெளிவான குளிர்கால இரவுகளின்போது, வானம் நட்சத்திரங்கள் நிறைந்து மினுமினுங்குகிறது, சந்திரன் அவ்வளவு அதிக பிரகாசமாய் இருப்பதால், கிராமவாசிகளின் வைக்கோல் கூரை வீடுகளை ஒளிபெற செய்கிறது. இந்த மிகச் சிறந்த சூழமைப்பில்தானே தனித்தன்மை வாய்ந்த ஒரு திருமணம் நடைபெற்றது.
இந்தச் சிறப்பு நிகழ்ச்சியில் கலந்துகொள்ள நூற்றுக்கணக்கான ஆட்கள், பல மணிநேரங்கள், பல நாட்களுங்கூட நடந்தனர். கரடுமுரடானவையும், கழுதைப்புலிகளும், சிங்கங்களும், யானைகளும் வாழ்பவையுமான ஆபத்தானப் பிரதேசங்களை சிலர் கடந்து வந்தனர். அங்கு வந்த பலர், தங்கள் சொந்த மூட்டைமுடிச்சுகளை மட்டுமல்லாமல், கோழிகளையும் ஆடுகளையும், காய்கறிகளையும் தங்களோடு கொண்டுவந்தனர். கிராமத்தை அடைந்ததும், கிறிஸ்தவ மாநாடுகளுக்குப் பொதுவாய்ப் பயன்படுத்தப்படும் திறந்த வெளிப் பகுதி ஒன்றுக்குச் சென்றனர். பயணத்தால் களைப்புற்றிருந்த போதிலும், அவர்கள் மகிழ்ச்சியுடன் இருந்தார்கள், அவர்களுடைய மலர்ந்த முகங்கள், நடைபெறவிருந்த நிகழ்ச்சியினை ஆர்வத்தோடு எதிர்பார்த்துக் கொண்டிருப்பதை காட்டின.
திருமணம் செய்துகொள்ளப் போகிறவர்கள் யார்? பலர் இருந்தனர்! ஆம், பெரும் எண்ணிக்கையான தம்பதிகள் இருந்தனர். இவர்கள் பரபரப்பூட்டி, கவனத்தைக் கவரும் பெரும் எண்ணிக்கையான திருமணத்தில் பங்குகொள்வோர் அல்லர். மாறாக, அவர்கள் திருமண பதிவு அலுவலகங்களிலிருந்து வெகு தொலைவில் வாழ்ந்ததனால், தங்கள் திருமணங்களைச் சட்டப்படி பதிவுசெய்ய முடியாமற்போனவர்களான, உள்ளப்பூர்வமாக நல்நோக்கமுள்ள தம்பதிகளே. இந்தத் தம்பதிகள் யாவரும், யெகோவாவின் சாட்சிகளுடன் பைபிளைப் படித்தபோது, திருமணத்தைப் பற்றிய கடவுளுடைய தராதரங்களைத் தெரிந்துகொண்டனர். திருமணத்தைத் தொடங்கிவைத்தவராகிய தங்கள் சிருஷ்டிகருக்குப் பிரியமானதைச் செய்ய, அந்த நாட்டின் சட்டதிட்டங்களுக்கேற்ப தாங்கள் மணம் செய்ய வேண்டும் என்பதை அவர்கள் கற்றனர்; இயேசு பிறக்கவிருந்த சமயத்தின்போது பெயர் பதிவுசெய்யும்படியான கட்டளைகளுக்கு யோசேப்பும் மரியாளும் உடன்பட்டதுபோல் தாங்களும் செய்யவேண்டும் என்பதைக் கற்றறிந்தனர்.—லூக்கா 2:1-5.
அந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடு
மொஸாம்பிக்கில் உள்ள யெகோவாவின் சாட்சிகளுடைய கிளை அலுவலகம் உதவிசெய்ய தீர்மானித்தது. முதலாவதாக, சட்டம் தேவைப்படுத்தும் நடைமுறைகள் யாவை என்பதைத் தெரிந்துகொள்ளும்படி, அந்நாட்டின் தலைநகராகிய மபூடோவிலுள்ள நீதி மற்றும் உள்நாட்டு அமைச்சகங்களோடு தொடர்பு கொள்ளப்பட்டது. அடுத்தபடியாக, டேட்டி மாகாணத்தின் தலைநகரில் இருந்த மிஷனரிகள், மேலும் ஒத்திசைவிக்கும் ஏற்பாடுகளுக்காக உள்நாட்டு அதிகாரிகளைக் கண்டு பேசினார்கள். மிஷனரிகளும், சான்று அலுவல் மற்றும் உள்நாட்டு அடையாள உறுதிச்சான்று துறையின் அதிகாரிகளும் ஃபிங்கோ கிராமத்துக்குப் பயணப்படுவதற்காக ஒரு தேதி குறிக்கப்பட்டது. இதற்கிடையில், சம்பந்தப்பட்ட எல்லா சபைகளுக்கும், இதைப்பற்றிய விளக்கத்தையும் வழிமுறையையும் அளிக்கும் ஒரு கடிதத்தை கிளை அலுவலகம் அனுப்பினது. இந்தப் புதுமை நிகழ்ச்சியை சாட்சிகளும் உள்ளூர் அதிகாரிகளும் ஆவலோடு எதிர்நோக்கினர்.
ஞாயிற்றுக்கிழமை, மே 18, 1997 அன்று, மூன்று மிஷனரிகள், அரசாங்க அதிகாரிகளோடுகூட ஃபிங்கோவுக்கு வந்து சேர்ந்தனர். நிர்வாகக் கட்டடத்திற்கு அருகில் நல்ல வசதியான தங்குமிடங்களை அந்த அதிகாரிகளுக்கு உள்ளூர் அதிகாரிகள் ஆயத்தம் செய்திருந்தார்கள். எனினும் அங்கு வந்த அதிகாரிகள், யெகோவாவின் சாட்சிகளுடைய உபசரிப்பில் அவ்வளவு அதிகமாய் உள்ளம் கவரப்பட்டவர்களாய், மிஷனரிகளோடு எளிய குடிசைகளில் தங்குவதையே மேலானதாகத் தெரிந்துகொண்டார்கள். சமையல் செய்தவர்களில் ஒருவர், உள்ளூர் சபையில் ஒரு மூப்பர் என்பதையும், திருமணத்திற்கு ஆயத்தம் செய்வதில் இதிலும் தாழ்வான வீட்டுவேலைகள் செய்ய முன்வந்தவர்களில் ஒருவர் ஒரு பயணக் கண்காணி என்பதையும் அறிந்து அந்த அதிகாரிகள் வியப்பில் மலைத்துவிட்டார்கள். குறைகூறாமல், எளிய குடிசைகளில் தங்கி, சிறிய குவளையைப் பயன்படுத்தி தண்ணீரை மொண்டு உடலில் ஊற்றி குளித்த மிஷனரிகளின் நல்ல மனப்பான்மையையும் அவர்கள் கவனித்தார்கள். அத்தகைய பல்வேறு வளர்ப்பு சூழ்நிலைகளையுடைய ஆட்களுக்கிடையில் அவ்வித உறுதியான அன்பிணைப்பை இதற்கு முன்னால் அவர்கள் கண்டதேயில்லை. எனினும், தேசத்தின் சட்டத்துடனும் கடவுளுடைய ஏற்பாடுடனும் ஒத்திசையும்படி, பெரும் தியாகங்களைச் செய்ததில் அவர்கள் காட்டின விசுவாசமே அவர்கள் மனதை மிக அதிகமாய்க் கவர்ந்தது.
சந்தோஷ நிகழ்ச்சிக்குரிய நேரம்
தம்பதிகள் வந்து சேருகையில், திருமணத்தின் முதற்படிக்கு, அதாவது, பிறப்பு சான்றிதழைப் பெறுதலுக்கு, அவர்கள் உடனடியாக ஆயத்தமானார்கள். தங்களைப் பற்றிய சொந்த தகவலை தெரிவிப்பதற்காக சிவில் ரெஜிஸ்ட்ரி குழுவினருக்கு முன்னால் எல்லாரும் பொறுமையுடன் வரிசையில் காத்திருந்தார்கள். பின்பு புகைப்படம் எடுக்கப்படும்படி மற்றொரு வரிசைக்குச் சென்றார்கள்; அதன் பின்பு தங்கள் ஆளடையாளச் சீட்டைப் பெறும்படி, சிவில் ஆளடையாளத் துறையிலிருந்து வந்த குழுவினரிடம் சென்றார்கள். அடுத்தபடியாக, மிகவும் ஆர்வத்தோடு எதிர்நோக்கிய திருமணச் சான்றிதழ் எழுதப்படுவதற்காக சிவில் ரெஜிஸ்ட்ரி குழுவினரிடமாகத் திரும்பவும் சென்றார்கள். இதற்குப் பின், ஒலிப்பெருக்கியில் தங்கள் பெயர்கள் கூப்பிடப்படுவதற்காக பொறுமையுடன் காத்திருந்தார்கள். திருமணச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது கிளர்ச்சியூட்டும் ஒரு காட்சியாக இருந்தது. ஒவ்வொரு தம்பதியும் தங்கள் திருமணச் சான்றிதழை மதிப்புமிகுந்த கேடயத்தைப்போல் உயர்த்திப் பிடித்தபோது மிகுந்த சந்தோஷம் உண்டாயிற்று.
இவை அனைத்தும் கொளுத்தும் வெயிலில் நடைபெற்றது. எனினும், வெப்பமும் தூசியும் அந்த நிகழ்ச்சியின் சந்தோஷத்தைக் கெடுக்கவில்லை.
ஆண்கள் கச்சிதமாய் உடை உடுத்தியிருந்தனர், பலர், ஷர்ட்டும் டையும் அணிந்திருந்தனர். பெண்கள் பாரம்பரிய முறையில் உடை உடுத்தியிருந்தனர்; அது தங்கள் இடுப்பைச் சுற்றி, நீண்ட பகட்டான நிறத்தில் காப்புலானா என்று அழைக்கப்பட்ட துணியாக இருந்தது. சிலர், குழந்தைகளை அதைப்போன்ற துணியில் சுற்றி சுமந்து வந்தனர்.
காரியங்கள் நல்ல முறையில் சுமுகமாய் நிகழ்ந்துகொண்டிருந்தன, ஆனால் ஒரே நாளில் பதிவுசெய்து முடிக்க முடியாதபடி தம்பதிகள் அதிக எண்ணிக்கையானவர்களாக இருந்தார்கள். இருட்ட தொடங்கினபோது, அரசாங்க அதிகாரிகள் சென்றுவிடாமல், இருந்து தம்பதிகளுக்கு வேலையை முடித்துக் கொடுக்கும்படி தயவாய்த் தீர்மானித்தார்கள். “நம்முடைய சகோதரர்கள்” அங்கிருக்கும்படி அவ்வளவு பெரும் தியாகம் செய்த பின்பு, தாங்கள் அவர்களை புறக்கணித்துவிட்டு சென்றுவிட முடியாது என்று அவர்கள் சொன்னார்கள். அவர்களுடைய ஒத்துழைப்பும் சுய தியாகமுமுள்ள இந்த மனப்பான்மையும் எப்போதும் நினைவுகூரப்படும்.
இரவோடு கடுமையான குளிரும் சேர்ந்து வந்தது. சிலர் குடிசைகளில் தங்கியிருந்தபோதிலும், பெரும்பான்மையான தம்பதிகள் வெளியில் நெருப்பைச் சுற்றி கால்களை மடக்கிக்கொண்டு நெருங்கி உட்கார்ந்திருந்தனர். இது, அந்த நிகழ்ச்சியின் சந்தோஷத்தை எவ்விதமும் குறைக்கவில்லை. நெருப்பின் சடசடவென்ற வெடிப்பு சத்தத்திற்கு மேலாக, சிரிப்பொலியும், நான்கு பகுதிகளாய் ஒத்திசைவாய்ப் பாடின பாட்டின் தொனியும் மேலோங்கி எழும்பின. பலர், தாங்கள் புதிதாய்ப் பெற்ற சான்றிதழ்களைக் கைகளில் பிடித்துக்கொண்டு, தங்கள் பயணத்தைப் பற்றிய கதைகளைப் பகிர்ந்துகொண்டனர்.
விடியற்காலையில் சிலர், தங்கள் திருமணங்களை ரெஜிஸ்டர் செய்த செலவுகளைத் தீர்க்கும்படி, தங்கள் கோழிகளையும், ஆடுகளையும், காய்கறிகளையும் விற்பதற்கு அந்தக் கிராமத்திற்குள் சென்றனர். உண்மையில் பலர் அந்த மிருகங்களைத் “தியாகம்” செய்வோராய், அவற்றின் உண்மையான விலைமதிப்புக்கு மிகக் குறைவாய் அவற்றை விற்றனர். ஏழை மக்களுக்கு, ஓர் ஆடு மதிப்புமிகுந்ததும் விலையேறப்பெற்றதுமான ஒன்றாக உள்ளது; எனினும் அவர்கள், தங்கள் சிருஷ்டிகருக்குப் பிரியமாய் நடக்கும்படி திருமணம் செய்துகொள்வதற்கு இந்தத் தியாகத்தைச் செய்ய மனமுள்ளவர்களாக இருந்தார்கள்.
பயணத்தின் கஷ்டங்கள்
தம்பதிகளில் சிலர், அங்கிருக்கும்படி நெடுந்தூரம் நடந்து வந்திருந்தார்கள். ஷாம்போக்கோவும் அவருடைய மனைவி ஹாக்குலீரா ஆகியோரின் காரியத்தில் இவ்வாறு இருந்தது. அந்த நிகழ்ச்சியின் இரண்டாவது இரவின்போது குளிர்காய்கையில் அவர்கள் தங்கள் பாதங்களை சூடாக்கிக்கொண்டே தங்கள் கதையைச் சொன்னார்கள். ஷாம்போக்கோவிற்கு 77 வயதானவராகவும், ஒரு கண் குருடாகவும், மற்றொன்று பார்வை மங்கியதாகவும் இருந்தபோதிலும், தன் 52 ஆண்டு திருமண இணைப்பைச் சட்டப்பூர்வமாக்க தீர்மானித்தவராய் அவர், தன் சபையிலுள்ள மற்றவர்களோடுகூட மூன்று நாட்கள் வெறுங்காலில் நடந்து வந்திருந்தார்.
அன்ஸெல்மு கெம்போ, 72 வயதானவர், நேரியுடன் ஏற்கெனவே ஏறக்குறைய 50 ஆண்டுகள் வாழ்ந்திருந்தார். அந்தப் பயணத்திற்கு சில நாட்களுக்கு முன்பாக, அவர் தன் பண்ணையைப் பயிர்செய்கையில் ஒரு பெரிய முள் அவருடைய காலில் கடுமையாய்க் குத்தி காயப்படுத்திவிட்டது. சிகிச்சைக்காக அவர், அருகிலிருந்த மருத்துவமனைக்கு விரைவாய்க் கொண்டுசெல்லப்பட்டார். இருந்தபோதிலும், அவர் கால்நடையாய் அந்தப் பயணத்தை மேற்கொள்ளும்படி தீர்மானித்து, வேதனையுடன் நொண்டி நொண்டி ஃபிங்கோவுக்கு வந்து சேர்ந்தார். இதற்கு மூன்று நாட்கள் எடுத்தன. அன்ஸெல்மு தன் திருமணச் சான்றிதழை கையில் பிடித்திருந்தபோது அவருடைய சந்தோஷம் அவரால் அடக்கமுடியாததாக இருந்தது.
ஈவான்ஸ் சினோயியா, புதிதாய் மணம் செய்தவர்களில் குறிப்பிடத்தக்க மற்றொருவராக இருந்தார்; இவர் முன்பு பல மனைவியரை உடையவராய் இருந்தவர். கடவுளுடைய வார்த்தையின் சத்தியத்தை அவர் கற்றறிந்தபோது, தன் முதல் மனைவியோடு தன் இணைப்பை சட்டப்பூர்வமாக்கும்படி தீர்மானித்தார். ஆனால், அவளோ மறுத்து, அவரை ஒதுக்கிவிட்டு மற்றொரு மனிதனிடம் சென்றுவிட்டாள். பைபிள் படித்துவந்த அவருடைய இரண்டாவது மனைவி அவரை மணம் செய்துகொள்வதற்கு ஒப்புக்கொண்டாள். இவர்கள் இருவரும், சிங்கங்களும் மற்ற கொடிய மிருகங்களும் வாழும் ஆபத்தான பிரதேசத்தின் வழியாக நடந்துவந்தனர். மூன்றுநாள் பயணத்திற்குப் பின்பு, இவர்களும் சட்டப்படி மணம் செய்தவர்களானார்கள்.
மிஷனரிகளும் அதிகாரிகளும் வந்துசேர்ந்ததிலிருந்து ஐந்து நாட்களுக்குப் பின் வெள்ளிக்கிழமை அன்று, எல்லா வேலைகளும் பூர்த்தியாயின. 468 அடையாள அட்டைகளும் 374 பிறப்புச் சான்றிதழ்களும் வழங்கப்பட்டதானது இதன் நற்பலனாக இருந்தது. வழங்கப்பட்ட திருமணச் சான்றிதழ்களின் எண்ணிக்கை 233! அந்தச் சூழமைவு மிகவும் ரம்மியமாக இருந்தது. களைப்படைந்தபோதிலும், நிச்சயமாகவே அது, மிக பயனுடையதாக இருந்ததென எல்லாரும் ஒப்புக்கொண்டார்கள். சந்தேகமில்லாமல், அந்த நிகழ்ச்சி அதில் உட்பட்ட அனைவரின் மனங்களிலும் இருதயங்களிலும் அழியாமல் நிரந்தரமாகப் பதிந்திருக்கும். மெய்யாகவே அது மிகவும் தனிச்சிறப்பு வாய்ந்த திருமணம்!