குடும்பம்—அவசர சிகிச்சைப் பிரிவில்!
அவர்கள் அதற்கப்புறம் என்றென்றும் சந்தோஷமாக வாழ்ந்தார்கள்.” ராஜாராணி கதைகளின் முடிவில் வரும் இத்தகைய நிலை இன்று மிக மிக சொற்பமான திருமணங்களுக்கே பொருந்துகிறது. ‘வாழும் காலமெல்லாம் இன்பத்திலும் துன்பத்திலும்’ ஒருவரையொருவர் நேசிப்போம் என்கிற திருமண வாக்குறுதி வெறும் வெத்துப் பேச்சாகவே பெரும்பாலும் இருக்கிறது. மகிழ்ச்சியான குடும்பத்திற்கான சாத்தியம் பெரும்பாலும் தோல்வியையே தழுவுகிற ஒரு சூதாட்டத்தைப்போல் தோன்றுகிறது.
தொழில்ரீதியில் முன்னேற்றமடைந்துள்ள மேற்கத்திய நாடுகள் பெரும்பாலானவற்றில், 1960-க்கும் 1990-க்கும் இடையே மணவிலக்கு இரண்டு மடங்குக்கும் அதிகமானது. இன்னும் சில நாடுகளில் அது நான்கு மடங்காக அதிகரித்தது. உதாரணமாக, ஸ்வீடனில் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 35,000 திருமணங்கள் நிச்சயிக்கப்படுகின்றன; அவற்றில் கிட்டத்தட்ட பாதி முறிவடைகின்றன; இதனால் 45,000-க்கும் அதிகமான குழந்தைகள் பாதிக்கப்படுகின்றனர். திருமணம் செய்துகொள்ளாமல் சேர்ந்து வாழும் தம்பதிகள் இதைவிடவும் அதிகமான எண்ணிக்கையில் பிரிகின்றனர்; இதனால் இன்னும் பத்தாயிரக்கணக்கான பிள்ளைகள் பாதிக்கப்படுகின்றனர். இதைப் போன்ற போக்கு உலக முழுவதிலுமுள்ள நாடுகள் அனைத்திலும் இப்போது காணப்படுகிறது; இதை பக்கம் 5-ல் உள்ள பெட்டியில் காணலாம்.
உண்மைதான், பிளவுபட்ட குடும்பங்களும் திருமண முறிவுகளும் சரித்திரத்தில் புதியவையல்ல. பொ.ச.மு. 18-ம் நூற்றாண்டைச் சேர்ந்த ஹமுராபியின் சட்டத்தொகுப்பில், பாபிலோனியாவில் மணவிலக்கை அனுமதித்த சட்டங்கள் உள்ளடங்கியிருந்தன. பொ.ச.மு. 16-ம் நூற்றாண்டில் கொடுக்கப்பட்ட மோசேயின் நியாயப்பிரமாணமும்கூட, இஸ்ரவேலில் மணவிலக்கை அனுமதித்தது. (உபாகமம் 24:1) இருந்தபோதிலும், திருமண பந்தங்கள் இந்த 20-ம் நூற்றாண்டில் இருப்பதைப் போல இந்தளவுக்கு பலவீனமாக முன்னொருபோதும் இருக்கவில்லை. பத்தாண்டுகளுக்கும் முன்பு, செய்தித்தாள் ஆசிரியர் ஒருவர் இவ்வாறு எழுதினார்: “இப்போதிருந்து ஐம்பது ஆண்டுகளுக்கு பின்பு, பாரம்பரிய கருத்தில் அமைந்த குடும்பம் ஒன்றுகூட இல்லாமல் இருக்கலாம்; அவற்றிற்கு பதிலாக வேறுபட்ட தனித்தனி குழுக்கள் இருக்கலாம்.” அதுமுதற்கொண்டு இருந்துவரும் போக்கு அவருடைய கருத்தை ஊர்ஜிதப்படுத்துவதாக தோன்றுகிறது. குடும்பம் என்ற ஸ்தாபனம் அதிவிரைவாக தரம்குறைந்து ஆட்டங்காணுவதால், “அது நீடித்து நிற்குமா?” என்ற கேள்வி அதிக பொருத்தமாக உள்ளது.
ஒருவருக்கொருவர் இசைந்து வாழ்ந்து, ஒற்றுமையான குடும்பத்தை கட்டிக் காப்பது ஏன் இத்தனையநேக தம்பதிகளுக்கு மிகக் கடினமாக இருக்கிறது? நீண்ட காலங்களாக ஒருவருக்கொருவர் இசைந்து வாழ்ந்து, தங்களுடைய திருமண வாழ்க்கையின் வெள்ளி விழாவையும் பொன் விழாவையும் சந்தோஷமாக கொண்டாடி வருகிறவர்களின் இரகசியம்தான் என்ன? சொல்லப் போனால், 1983-ல் முன்னாள் சோவியத் குடியரசான அஜர்பைஜனில் முறையே 126, 116 வயதுடைய ஒரு தம்பதி தங்களுடைய 100-வது திருமண ஆண்டு விழாவை கொண்டாடினர் என்று அறிக்கை செய்யப்பட்டது.
என்ன அபாயம்?
அநேக நாடுகளில் விபச்சாரம், மனரீதியில் அல்லது உடல்ரீதியில் கொடுமை இழைத்தல், கைவிடுதல், குடிவெறி, ஆண்மை இழத்தல், பைத்தியமாகுதல், இருதார நிலை, போதைப் பொருளுக்கு அடிமையாதல் போன்றவை சட்டப்படி மணவிலக்கு செய்வதற்கான அடிப்படை காரணங்களில் சில. இருப்பினும், திருமணம் மற்றும் பாரம்பரிய குடும்ப வாழ்க்கையினிடமாக உள்ள அடிப்படை மனப்பான்மை, விசேஷமாக சமீப பத்தாண்டுகளில் தலைகீழாக மாறி வருவதே அதிக பொதுவான காரணமாக இருக்கிறது. நெடுங்காலமாய் புனிதமாக கருதப்பட்டு வந்த திருமண ஏற்பாட்டிற்கான மரியாதை படிப்படியாக குறைந்து வருகிறது. இசை, சினிமாக்கள், டிவி நாடகங்கள், பிரபல இலக்கியங்கள் போன்றவற்றின் பேராசைமிக்க தயாரிப்பாளர்கள், பாலின சுதந்திரம் என்று அழைக்கப்படுவதையும் ஒழுக்கக்கேட்டையும் கேவலமான நடத்தையையும் தன்னலம் கருதும் வாழ்க்கைப்பாணியையும் ஆகா ஓகோ என உயர்வாக காட்டுகிறார்கள். இளைஞர் மற்றும் பெரியவர்களின் மனதையும் இருதயத்தையும் ஒருபோலவே அசுத்தப்படுத்தியிருக்கிற கலாச்சாரத்தை இவர்கள் வளர்த்திருக்கிறார்கள்.
திருமணத்துக்கு புறம்பே உறவு வைத்திருப்பது சில சமயங்களில் ஒரு திருமணத்திற்கு நன்மை பயக்கலாமென 22 சதவீத அமெரிக்கர்கள் சொன்னதாக 1996-ல் நடத்தப்பட்ட ஒரு வாக்கெடுப்பு காட்டியது. ஸ்வீடனுடைய பிரபல செய்தித்தாள் ஒன்றின் விசேஷ இதழான ஆப்டான்பிலாடெட் மணவிலக்கு செய்துகொள்ளும்படி பெண்களைத் தூண்டியது. ஏனெனில், “உங்கள் நிலைமை மேம்படலாம்” என்று அது தெரிவித்தது. ஒருசில ஆண்டுகளுக்கொருதரம் மணத்துணையை மாற்றிக் கொள்ளவேண்டும் என்ற பரிணாமத்தால் மனிதன் “புரோகிராம்” செய்யப்பட்டிருக்கிறான் என்றும்கூட சில நவீன கலாச்சார மனவியல் நிபுணர்களும் மானிடவியல் நிபுணர்களும் யூகித்திருக்கிறார்கள். வேறு வார்த்தைகளில் சொல்லப்போனால், திருமணத்துக்கு புறம்பான உறவுகளும் மணவிலக்குகளும் இயற்கையானவையே என்று அவர்கள் சிபாரிசு செய்கிறார்கள். பெற்றோர் மணவிலக்கு செய்வது பிள்ளைகளுக்கு நன்மை பயக்கலாம், அதாவது என்றாவது ஒரு நாள் அவர்களே மணவிலக்கு செய்து கொள்ளும்போது அதை சமாளிக்க உதவலாம் என்றும்கூட சிலர் வாதிடுகிறார்கள்!
தந்தை, தாய், பிள்ளைகள் என்ற பாரம்பரிய குடும்பத்தில் வாழ அநேக இளைஞர்களுக்கு இனிமேலும் விருப்பமில்லை. “ஒரே நபரோடு வாழ்நாள் முழுவதும் வாழ்வதை என்னால் கற்பனை செய்துகூட பார்க்கமுடியவில்லை” என்பது பிரபலமான கருத்தாக இருக்கிறது. “திருமணமும் கிறிஸ்மஸும் ஒன்றுதான், அது வெறுமனே கட்டுக்கதைதான். அதிலெல்லாம் எனக்கு கொஞ்சம்கூட நம்பிக்கையில்லை” என்று டென்மார்க்கை சேர்ந்த 18 வயது இளைஞர் சொல்கிறார். “நினைப்பே இதுதான், கல்யாணம் கட்டிகிட்டு சமைச்சு கொட்டிகிட்டு ஏன் வீணா கஷ்டப்படனும்; எந்த வேலியும் போட்டுக்காம ஆண்களோடு ஜாலியாக இருங்க. . . . அநேக பெண்கள் வாழ்ந்து காட்ட தங்களுக்கு ஒரு ஆண் தேவையில்லை என்று முடிவு செய்கிறார்கள்” என்று அயர்லாந்திலுள்ள தேசிய பெண்கள் அமைப்பைச் சேர்ந்த நாரின் பெர்ன் அறிவிக்கிறார்.
ஒற்றைப் பெற்றோர் குடும்பங்களின் அதிகரிப்பு
ஐரோப்பா முழுவதிலும் இத்தகைய மனநிலை ஒண்டியாய் வாழுகிற தாய்மார்களின் எண்ணிக்கையில் கிடுகிடு அதிகரிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இத்தகைய ஒற்றைப் பெற்றோரில் சிலர் திட்டமிடப்படாத கருத்தரிப்பு தவறல்ல என்று எண்ணுகிற பருவ வயதினரே. கொஞ்சம்பேர் தங்களுடைய பிள்ளைகளை தனியாக வளர்க்கவேண்டுமென்று விரும்புகிற பெண்கள். இதில் அதிகமான பேர் திருமணம் செய்துகொள்ளும் எண்ணமின்றி அந்தத் தகப்பனோடு சிலகாலம் சேர்ந்து வாழுகிற தாய்மார்களே. நியூஸ்வீக் பத்திரிகை “திருமணம் மறைந்து வருகிறதா?” என்ற கேள்வியின்பேரில் ஒரு அட்டைப் படக்கட்டுரையை கடந்த வருடம் எழுதியது. முறைகேடாக பிறக்கும் பிள்ளைகளின் சதவீதம் ஐரோப்பாவில் விரைவாக அதிகரித்து வருகிறதென்றும் அதைக் குறித்து எவரும் கவலைப்படுவதாக தெரியவில்லை என்றும் அது குறிப்பிட்டது. ஸ்வீடனில் பிறக்கிற 50 சதவீத பிள்ளைகள் மணமாகாத பெற்றோருக்கு பிறப்பதால், அது இந்தப் பட்டியலில் முதலிடம் பெறலாம். டென்மார்க்கிலும் நார்வேயிலும் அந்த எண்ணிக்கை கிட்டத்தட்ட 50 சதவீதமாக இருக்கிறது. பிரான்ஸிலும் இங்கிலாந்திலும் மூன்றில் ஒரு பிறப்பு முறைகேடானதாக இருக்கிறது.
ஐக்கிய மாகாணங்களில், கடந்த சில பத்தாண்டுகளில், தகப்பனும் தாயுமுள்ள குடும்பங்களின் எண்ணிக்கையில் திடீர் சரிவு ஏற்பட்டுள்ளது. ஒரு அறிக்கை இவ்வாறு சொல்கிறது: “1960-ல் . . . 9 சதவீத பிள்ளைகள் ஒற்றைப் பெற்றோர் வீடுகளில் வாழ்ந்தனர். 1990-க்குள்ளாக அந்த எண்ணிக்கை 25 சதவீதமாக அதிகரித்தது. இன்று எல்லா அமெரிக்க பிள்ளைகளிலும் 27.1 சதவீதத்தினர் ஒற்றைப் பெற்றோர் வீடுகளில் பிறக்கின்றனர்; இந்த எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்தும் வருகிறது . . . 1970 முதற்கொண்டு, ஒற்றைப் பெற்றோர் குடும்பங்களின் எண்ணிக்கை இரண்டு மடங்குக்கும் அதிகமாக உயர்ந்துள்ளது. இன்று பாரம்பரிய குடும்பங்கள் இந்தளவு அச்சுறுத்தப்படுவதால் அது இல்லாமல் போகும் நிலைமையை எட்டிவிடக்கூடும் என்று சில ஆராய்ச்சியாளர்கள் சொல்கிறார்கள்.”
ரோமன் கத்தோலிக்க சர்ச், தன்னுடைய தார்மீக அதிகாரத்தை அதிகமாக இழந்துவிட்டிருக்கும் நாடுகளில், ஒற்றைப் பெற்றோர் குடும்பங்கள் அதிகரித்து வருகின்றன. இத்தாலிய வீடுகளில் பாதிக்கும் குறைவானவையே தாய், தகப்பன், பிள்ளைகள் ஆகியோரை உடைய குடும்பங்களாக இருக்கின்றன; அதோடு பாரம்பரிய குடும்பங்களுக்கு பதிலாக பிள்ளைகளில்லாத தம்பதிகள், ஒற்றைப் பெற்றோர் குடும்பங்கள் ஆகியவையே இருக்கின்றன.
சில நாடுகளில் உள்ள சமூகநல அமைப்புகள் மக்கள் திருமணம் செய்யாதிருப்பதை உண்மையில் உற்சாகப்படுத்துகின்றன. அரசாங்க உதவித் தொகையை பெறும் ஒற்றைத் தாய்மார்கள் திருமணம் செய்வார்களேயென்றால் அதை இழந்துவிடுவர். டென்மார்க்கிலுள்ள ஒற்றைத் தாய்மார்கள் கூடுதலாக குழந்தை பராமரிப்பு உதவித் தொகையை பெறுகின்றனர்; இன்னும்சில சமுதாயங்களில், 18 வயதுக்கும் குறைவான தாய்மார்கள் கூடுதல் பணத்தை பெறுவதோடு தங்கள் வீட்டுவாடகையையும்கூட பெறுகின்றனர். இவ்விதமாக, இதில் பணம் உட்பட்டிருக்கிறது. ஸ்வீடனில் ஒருவர் மணவிலக்கு செய்கையில், வரி செலுத்துபவர்கள், அரசாங்க உதவித் தொகைக்காகவும், வீட்டு வாடகைக்காகவும், சமூக உதவிக்காகவும் 2.5 லட்சம் டாலரிலிருந்து 3.75 லட்சம் டாலர் வரை செலுத்த வேண்டியிருக்கிறது என்று ஆல்ஃப் பி. ஸ்வென்சான் குறிப்பிடுகிறார்.
குடும்பங்களில் இருந்துவரும் இத்தகைய சீரழிக்கும் போக்கை மாற்றுவதற்கு கிறிஸ்தவ மண்டல சர்ச்சுகள் ஏதோ கொஞ்சம் செய்வது போல அல்லது ஒன்றுமே செய்யாததுபோல தோன்றுகிறது. அநேக பாஸ்டர்களும் பாதிரிமார்களும் தங்களுடைய சொந்த குடும்ப பிரச்சினைகளோடு போராடிக் கொண்டிருக்கின்றனர். இதனால் மற்றவர்களுக்கு உதவி செய்வதற்கு திராணியற்றவர்களாக உணருகிறார்கள். சிலர் மணவிலக்கை ஆதரிப்பதாகவும் தோன்றுகிறது. இங்கிலாந்தின் பிரட்பர்ட்டிலுள்ள பாஸ்டர் ஸ்டீவன் ஏலன் மணவிலக்குக்கென்றே ஒரு பிரத்தியேக சடங்கை இயற்றியிருக்கிறாரென்றும் அதை இங்கிலாந்தின் எல்லா சர்ச்சுகளிலும் அதிகாரப்பூர்வமானதாக ஆக்கவேண்டுமென்று சிபாரிசு செய்கிறாரென்றும் ஏப்ரல் 15, 1996 தேதியிட்ட ஆப்டான்பிலாடெட் குறிப்பிட்டது. “தங்களுக்கு நடந்தவற்றை ஏற்றுக் கொண்டு அதை சரிசெய்ய ஒருவருக்கு உதவும் குணப்படுத்துகிற சேவையாக இது இருக்கிறது. கடவுள் இன்னும் தங்களை நேசிக்கிறாரென்றும் வேதனையிலிருந்து விடுவிக்கிறாரென்றும் அவர்கள் புரிந்து கொள்வதற்கு இது உதவும்” என்று அவர் சொன்னதாக அது குறிப்பிட்டது.
எனவே, குடும்ப அமைப்பு எந்தத் திக்கில் செல்லுகிறது? அது நீடித்து நிற்கும் என்பதற்கு ஏதேனும் நம்பிக்கை உண்டா? இத்தகைய மிகப்பெரும் அபாயத்தில் தனிப்பட்ட குடும்பங்கள் தங்களுடைய ஒற்றுமையைப் பாதுகாத்துக் கொள்ள முடியுமா? தயவுசெய்து அடுத்த கட்டுரையைப் பாருங்கள்.
[பக்கம் 5-ன் படம்]
சில நாடுகளில் வருடாந்தர திருமண எண்ணிக்கை மணவிலக்கோடு ஒப்பிடப்பட்டிருக்கிறது
நாடு ஆண்டு திருமணங்கள் மணவிலக்குகள்
ஆஸ்திரேலியா 1993 1,13,255 48,324
எஸ்டோனியா 1993 7,745 5,757
ஐக்கிய அரசு 1992 3,56,013 1,74,717
ஐக்கிய மாகாணங்கள் 1993 23,34,000 11,87,000
கனடா 1992 1,64,573 77,031
கியூபா 1992 1,91,837 63,432
செக் குடியரசு 1993 66,033 30,227
டென்மார்க் 1993 31,507 12,991
நார்வே 1993 19,464 10,943
பிரான்ஸ் 1991 2,80,175 1,08,086
பியூர்டோ ரிகோ 1992 34,222 14,227
மால்தீவ்ஸ் 1991 4,065 2,659
ரஷ்யன் ஃபெடரேஷன்1993 11,06,723 6,63,282
ஜப்பான் 1993 7,92,658 1,88,297
ஜெர்மனி 1993 4,42,605 1,56,425
ஸ்வீடன் 1993 34,005 21,673
(1994 டெமோகிராஃபிக் இயர்புக், ஐக்கிய நாடுகள், நியூ யார்க் 1996-ன் அடிப்படையில்)