“நம்மைப் போல உணர்வுகளுள்ள,” மனிதர்கள்
அவர் ஒரு ராஜா. அவர் ஒரு தீர்க்கதரிசி. ஏன் அவர் ஓர் அன்பான தகப்பனும்கூட. அவருடைய மகன்களில் ஒருவன் வளர்ந்துவருகையில், உதவாக்கரையாகவும் வீம்புக்காரனாகவும் ஆனான். அரியணையைக் கைப்பற்ற வேண்டும் என்ற திடதீர்மான முயற்சியில், இந்த மகன் உள்நாட்டுக் கலகத்தை ஏற்படுத்தி, தன் தகப்பனின் மரணத்திலும் குறியாய் இருந்தான். ஆனால், அதைத் தொடர்ந்து வந்த யுத்தத்தில் கொல்லப்பட்டதென்னவோ இந்த மகன்தான். தன் மகன் இறந்ததைக் கேள்விப்பட்ட தகப்பன், தனியாக மேல்வீட்டிற்குள் ஏறிப்போய் இவ்வாறு அழுதார்: “என் மகனாகிய அப்சலோம் என் மகனே, என் மகனாகிய அப்சலோமே, நான் உனக்குப்பதிலாகச் செத்தேனானால் நலமாயிருக்கும்; அப்சலோமே, என் மகனே, என் மகனே.” (2 சாமுவேல் 18:33) அந்தத் தகப்பன் தாவீது ராஜாவே. யெகோவாவின் மற்ற தீர்க்கதரிசிகளைப் போலவே, இவரும், ‘நம்மைப் போல உணர்வுகளுள்ள மனிதராக’ இருந்தார்.—யாக்கோபு 5:17, NW.
பைபிள் காலங்களில், யெகோவாவின் பிரதிநிதிகளாக செயல்பட்ட ஆண்களும் பெண்களும், பலதரப்பட்ட வாழ்க்கைப் பின்னணியிலிருந்து வந்தவர்களாகவும் சாதாரண ஆட்களாகவும் இருந்தனர். நம்மைப் போலவே, அவர்களுக்கும் பிரச்சினைகள் இருந்தன; அபூரணத்தன்மையின் காரணமாக கஷ்டப்பட்டனர். அந்தத் தீர்க்கதரிசிகளில் சிலர் யார், எவ்வாறு அவர்களுடைய உணர்வுகள் நம்முடையதைப் போல இருந்தன?
மோசே மட்டுக்குமீறிய தன்னம்பிக்கை உள்ளவராக இருப்பதிலிருந்து சாந்தகுணமுள்ளவராக மாறினார்
கிறிஸ்தவத்திற்கு முன்னான காலத்திய பிரபலமான தீர்க்கதரிசியாக மோசே இருந்தார். 40 வயதானவராக இருந்தபோதிலும், யெகோவாவின் சார்புப் பேச்சாளராக சேவிக்கும் நிலையில் அவர் இல்லை. ஏன்? எகிப்தின் பார்வோனால் தன் சகோதரர்கள் ஒடுக்கப்பட்டிருக்கையில், மோசேயோ பார்வோனின் வீட்டில் வளர்க்கப்பட்டு, ‘வாக்கிலும் செய்கையிலும் வல்லவனானார்.’ பதிவு இவ்வாறு சொல்கிறது: “தன்னுடைய கையினாலே தேவன் தங்களுக்கு இரட்சிப்பைத் தருவாரென்பதைத் தன்னுடைய சகோதரர் அறிந்து கொள்வார்களென்று அவன் நினைத்தான்.” மட்டுக்குமீறிய தன்னம்பிக்கையின் காரணமாக, ஓர் எபிரெய அடிமையைப் பாதுகாக்க வேண்டி, ஓர் எகிப்தியனை வலிய சென்று தாக்கிக் கொன்றார்.—அப்போஸ்தலர் 7:22-25; யாத்திராகமம் 2:11-14.
இப்போது தப்பியோட வேண்டிய கட்டாயத்துக்குள்ளான மோசே, அடுத்த 40 ஆண்டுகளை வெகு தூரத்திலுள்ள மீதியான் தேசத்தில் ஒரு மேய்ப்பராக கழித்தார். (யாத்திராகமம் 2:15) அந்தக் காலப்பகுதியின் முடிவில், இப்போது 80 வயதான மோசே, யெகோவா தேவனால் தீர்க்கதரிசியாக நியமிக்கப்பட்டார். ஆனால், மோசே இனிமேலும் மட்டுக்குமீறிய தன்னம்பிக்கை உடையவராக இல்லை. அதற்கு கொஞ்சமும் தகுதியற்றவராக அவர் உணர்ந்ததால், தீர்க்கதரிசியாக தனக்கு யெகோவா பொறுப்பளித்ததைக் குறித்து பின்வரும் வார்த்தைகளில் கேள்வி கேட்டார்: “பார்வோனிடத்துக்குப் போக . . . நான் எம்மாத்திரம்”?, “நான் . . . என்ன சொல்லுவேன்”? (யாத்திராகமம் 3:11, 13) மீண்டும் யெகோவாவின் அன்பான நம்பிக்கையூட்டுதலினாலும் உதவியினாலும், மோசே வெகு வெற்றிகரமாக தொடர்ந்து தன் பொறுப்பை நிறைவேற்றி வந்தார்.
மோசேயைப் போல நீங்களும், ஞானமற்ற காரியங்களை செய்யவோ சொல்லவோ, மட்டுக்குமீறிய தன்னம்பிக்கையால் வழிநடத்தப்பட எப்போதாவது உங்களை அனுமதித்திருக்கிறீர்களா? அனுமதித்திருந்தீர்கள் என்றால், கூடுதலான பயிற்றுவிப்பை மனத்தாழ்மையுடன் ஏற்றுக்கொள்ளுங்கள். அல்லது குறிப்பிட்ட கிறிஸ்தவ பொறுப்புகளை கையாளுவதற்கு தகுதியற்றவராக உணர்ந்திருக்கிறீர்களா? ஊக்கம் தளருவதற்கு பதிலாக, யெகோவாவும் அவருடைய அமைப்பும் அளிக்கும் உதவியை ஏற்றுக்கொள்ளுங்கள். மோசேக்கு உதவியவர் உங்களுக்கும் உதவுவார்.
எலியா சிட்சையை செயல்படுத்துகையில் நம்மைப் போல உணர்வுகளுள்ளவராய் இருந்தார்
“எலியா என்பவன் நம்மைப்போலப் பாடுள்ள [“உணர்வுகளுள்ள,” NW] மனுஷனாயிருந்தும், மழைபெய்யாதபடிக்குக் கருத்தாய் ஜெபம்பண்ணினான், அப்பொழுது மூன்றுவருஷமும் ஆறுமாதமும் பூமியின்மேல் மழை பெய்யவில்லை.” (யாக்கோபு 5:17) தம்மைப் புறக்கணித்த தேசத்தை சிட்சிக்க வேண்டுமென்ற யெகோவாவுடைய சித்தத்திற்கு இசைவாகவே எலியாவின் ஜெபமும் இருந்தது. எனினும், வரவேண்டும் என்று தான் ஜெபித்த அந்தப் பஞ்சம் மனிதருக்கு துயரத்தை விளைவிக்கும் என்பதை எலியா அறிந்திருந்தார். இஸ்ரவேல் தேசம் பெருமளவு விவசாய பூமியாக இருந்தது; மக்கள் வயிற்றுப் பிழைப்புக்கு பனியையும் மழையையுமே நம்பியிருந்தனர். பஞ்சம் தொடருமானால் அது பெரும் இன்னலை விளைவிக்கும். தாவரங்கள் வாடி வதங்கும்; விளைச்சல் இருக்காது. வேலைக்காகவும் உணவுக்காகவும் பயன்படுத்தப்படும் வீட்டு விலங்குகள் இறந்துவிடும்; சில குடும்பங்கள் பட்டினியால் அச்சுறுத்தப்படும். இதனால் யார் அதிக துன்பமனுபவிப்பர்? பொது மக்களே. ஒருபிடி மாவும் கொஞ்சம் எண்ணெய்யும் மாத்திரமே தன்னிடம் இருப்பதாக ஒரு விதவை பின்னர் எலியாவிடம் சொன்னாள். சீக்கிரத்தில் தானும் தன் மகனும் பட்டினிகிடந்தே சாகப்போவதாக அவள் நிச்சயமாக நம்பினாள். (1 இராஜாக்கள் 17:12) யெகோவா தம்முடைய ஊழியர்களை, அவர்கள் பணக்காரர்களாக இருந்தாலும் சரி, ஏழைகளாக இருந்தாலும் சரி, உண்மை வணக்கத்தை விட்டு விலகாமல் இருந்தால் நிச்சயமாகவே காப்பாற்றுவார் என்ற திடமான விசுவாசம் எலியாவுக்கு இருந்திருக்க வேண்டும். அதுவே அவ்வாறு ஜெபிக்கும்படி அவரைச் செய்தது. பதிவு காட்டும் விதமாக, எலியா ஏமாற்றமடையவில்லை.—1 இராஜாக்கள் 17:13-16; 18:3-5.
மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, சீக்கிரத்தில் தாம் மழையைக் கொண்டுவரப் போவதாக யெகோவா குறிப்பிடுகையில், பஞ்சம் முடிவடையப் போவதைக் காண எலியா வெகு ஆவலுள்ளவராக இருந்தது, “தரையிலே பணிந்து, தன் முகம் தன் முழங்காலில் பட குனிந்து” அவர் திரும்பத் திரும்ப செய்த, உருக்கமான ஜெபங்களிலிருந்து தெரிகிறது. (1 இராஜாக்கள் 18:42) “நீ போய்ச் சமுத்திரமுகமாய்ப் பார்” என்று தன் ஊழியக்காரனை அவர் திரும்பவும் திரும்பவும் துரிதப்படுத்தினது, தன் ஜெபங்களுக்கு யெகோவா செவிகொடுத்தார் என்பதற்கு ஏதோ அடையாளத்தைப் பெறுவதற்கே. (1 இராஜாக்கள் 18:43) இறுதியில் தன் ஜெபங்களுக்கு பதிலளிக்கும் விதமாக “வானம் மழையைப்பொழிந்தது, பூமி தன் பலனைத் தந்த”போது என்னே ஒரு சந்தோஷத்தை அவர் அனுபவித்திருப்பார்!—யாக்கோபு 5:18.
நீங்கள் ஒரு பெற்றோராகவோ கிறிஸ்தவ சபையில் ஒரு மூப்பராகவோ இருக்கிறீர்கள் என்றால், சிட்சை கொடுக்கும்போது கடுமையான உணர்ச்சிகளால் ஒருவேளை தத்தளிக்கலாம். என்றபோதிலும், சிட்சை சில சமயங்கள் அவசியம், அவ்வாறு அது அன்போடு கொடுக்கப்படுகையில், “நீதியாகிய சமாதான பலனைத் தரும்” என்ற மெய்ம்மையோடு இத்தகைய மனித உணர்ச்சிகளை பக்குவப்படுத்த வேண்டிய தேவையிருக்கிறது. (எபிரெயர் 12:11) யெகோவாவின் சட்டங்களுக்குக் கீழ்ப்படிவதனால் வரும் பலன்கள் எப்போதும் விரும்பத்தக்கவையே. அவ்வாறே அவை நடக்கும்படி நாமும் எலியாவைப் போலவே இருதயப்பூர்வமாய் ஜெபிப்போமாக.
எரேமியா உற்சாகமின்மைக்கு மத்தியிலும் தைரியத்தை வெளிக்காட்டினார்
பைபிள் எழுத்தாளர்கள் எல்லாரிலும், தன் சொந்த உணர்வுகளைக் குறித்து அதிகமாக எழுதியவர் எரேமியாவாக இருக்கலாம். இளம் மனிதராக, அவர் தன் நியமிப்பை ஏற்றுக்கொள்ள தயங்கினார். (எரேமியா 1:6) இருந்தபோதிலும், அவர் வெகு தைரியமாக கடவுளுடைய வார்த்தையை அறிவிக்க முனைந்தார்; இது, அரசன் முதல் பாமரன் வரை, தன் உடன் இஸ்ரவேலரின் கடும் எதிர்ப்பை எதிர்த்துப் போராடும்படி செய்தது. அந்த எதிர்ப்பு சிலசமயங்களில் அவருக்கு கோபத்தையும் கண்ணீரையும் வரவழைத்தது. (எரேமியா 9:3; 18:20-23; 20:7-18) வெவ்வேறு சந்தர்ப்பங்களில், அவர் கலகக் கும்பலால் சூழப்பட்டார், தாக்கப்பட்டார், மரச் சட்டத்திற்குள் கைதியாக வைக்கப்பட்டார், சிறையிலிடப்பட்டார், கொல்லப்பட போவதாக பயமுறுத்தப்பட்டார், தண்ணீரற்ற உளையின் அடியில் சேற்றில் இறந்துபோகும்படி போடப்பட்டார். சிலசமயங்களில், பின்வரும் அவருடைய வார்த்தைகளே விவரிக்கும் விதமாக யெகோவாவின் செய்தியால் அவர் வேதனையடைந்தார்: “என் குடல்களே, என் குடல்களே, என் இருதயச் சுவரே கடும் வேதனைப்படுகிறது.”—எரேமியா 4:19, NW.
இருந்தபோதிலும், “உம்முடைய வார்த்தைகள் எனக்குச் சந்தோஷமும், என் இருதயத்துக்கு மகிழ்ச்சியுமாயிருந்தது” என்று சொல்லுமளவுக்கு அவர் யெகோவாவின் வார்த்தையை நேசித்தார். (எரேமியா 15:16) அதேசமயத்தில், ஏமாற்ற உணர்வு, “நீர் எனக்கு நம்பப்படாத ஊற்றைப்போலவும்,” வற்றிப்போகிற ஜலத்தைப்போலவும் “இருப்பீரோ?” என்று யெகோவாவிடம் சொல்லி கதறும்படி அவரைத் தூண்டியது. (எரேமியா 15:18) இருந்தபோதிலும், அவருடைய முரண்பட்ட உணர்வுகளை யெகோவா புரிந்துகொண்டு, அவர் தன் பொறுப்பை நிறைவேற்றும்படி தொடர்ந்து அவரை ஆதரித்து வந்தார்.—எரேமியா 15:20; 20:7-9-ஐயும் காண்க.
எரேமியாவைப் போலவே, நீங்களும் ஏமாற்ற உணர்வையோ உங்கள் ஊழியத்தைத் தொடருவதில் எதிர்ப்பையோ எதிர்ப்பட்டிருக்கிறீர்களா? யெகோவாவைச் சார்ந்திருங்கள். அவருடைய வழிநடத்துதலை தொடர்ந்து பின்பற்றுங்கள்; உங்களுடைய முயற்சிகளுக்கு யெகோவா பலனளிப்பார்.
இயேசுவிற்கும் நம்மைப் போலவே உணர்வுகள் இருந்தன
கடவுளுடைய சொந்தக் குமாரனாகிய இயேசு கிறிஸ்து, எக்காலத்திலும் வாழ்ந்த மிகப் பெரிய தீர்க்கதரிசியாக இருந்தார். அவர் பரிபூரண மனிதராக இருந்தபோதிலும், அவர் தம்முடைய உணர்ச்சிகளை வெளிக்காட்டாமல் அடக்கிக் கொள்ளவில்லை. அவருடைய முகத்திலும், மற்றவர்களிடத்தில் அவர் நடந்துகொண்ட விதத்திலும் தெளிவாக தெரிந்த அவருடைய உள்ளான உணர்ச்சிகளைப் பற்றி நாம் அடிக்கடி வாசிக்கிறோம். இயேசு அடிக்கடி, ‘மனதுருகினார்’; தம்முடைய உவமைகளில் வந்த ஆட்களைப் பற்றி விவரிக்கையிலும் அதே வார்த்தையை அவர் உபயோகித்தார்.—மாற்கு 1:41; 6:34; லூக்கா 10:33.
“இவைகளை இவ்விடத்திலிருந்து எடுத்துக் கொண்டுபோங்கள்” என்று சொல்லி காசுக்காரர்களையும் ஆடுமாடுகளையும் ஆலயத்திலிருந்து துரத்திவிடுகையில், அவர் சத்தம்போட்டிருப்பார். (யோவான் 2:14-16) “ஆண்டவரே, இது உமக்கு நேரிடக் கூடாதே” என்று பேதுரு கருத்துத் தெரிவித்தது, “எனக்குப் பின்னாகப்போ, சாத்தானே” என்ற கடுமையான பதிலை வரவழைத்தது.—மத்தேயு 16:22, 23.
சிலரிடம், குறிப்பாக தம்மிடம் நெருக்கமாக இருந்தவர்களிடம் இயேசுவிற்கு பிரத்தியேக அன்பிருந்தது. அப்போஸ்தலனாகிய யோவான், “இயேசுவுக்கு அன்பாயிருந்த சீஷன்” என விவரிக்கப்படுகிறார். (யோவான் 21:7, 20) “இயேசு மார்த்தாளிடத்திலும் அவளுடைய சகோதரியினிடத்திலும் லாசருவினிடத்திலும் அன்பாயிருந்தார்” என்று நாம் வாசிக்கிறோம்.—யோவான் 11:5.
இயேசுவும்கூட மனவேதனைப்பட்டார். லாசருவினுடைய இறப்பின் துன்ப வேதனையால், “இயேசு கண்ணீர் விட்டார்.” (யோவான் 11:32-36) யூதாஸ்காரியோத்து தம்மைக் காட்டிக்கொடுத்ததால் விளைந்த இதய வேதனையை வெளிக்காட்டுபவராக, இயேசு, இருதயத்தை ஊடுருவும் பின்வரும் குறிப்பை சங்கீதத்திலிருந்து மேற்கோள் காட்டினார்: “என்னுடனே அப்பம் புசிக்கிறவன் என்மேல் தன் குதிகாலைத் தூக்கினான்.”—யோவான் 13:18; சங்கீதம் 41:9.
கழுமரத்தில் கடும்வேதனையை அனுபவிக்கையிலும்கூட, இயேசு தம்முடைய உணர்வின் ஆழத்தை வெளிக்காட்டினார். ‘தமக்கு அன்பாயிருந்த சீஷனிடம்’ தம் தாயை கனிவன்போடு ஒப்படைத்தார். (யோவான் 19:26, 27) தம்மோடுகூட கழுமரத்தில் அறையப்பட்ட கள்வர்களில் ஒருவனிடம் மனந்திரும்புதலுக்கான அடையாளத்தை இயேசு கண்டபோது இரக்கத்தோடு, “நீ என்னுடனேகூடப் பரதீசிலிருப்பாய்” என்று சொன்னார். (லூக்கா 23:43) “என் தேவனே! என் தேவனே! ஏன் என்னைக் கைவிட்டீர்” என்று கதறியதில் அவர் திடீரென்று உணர்ச்சிப் பிழம்பானதை நம்மால் புரிந்துகொள்ள முடிகிறது. (மத்தேயு 27:46) “பிதாவே, உம்முடைய கைகளில் என் ஆவியை ஒப்புவிக்கிறேன்” என்று இறந்துபோகையில் அவர் சொன்ன வார்த்தைகள் அவருடைய இருதயப்பூர்வ அன்புக்கும் நம்பிக்கைக்கும் ஆதாரத்தை அளிக்கின்றன.—லூக்கா 23:46.
இவை எல்லாம் என்னே நம்பிக்கையூட்டுதலை நமக்குக் கொடுக்கின்றன! “நம்முடைய பலவீனங்களைக்குறித்துப் பரிதபிக்கக்கூடாத பிரதான ஆசாரியர் நமக்கிராமல், எல்லாவிதத்திலும் நம்மைப்போல் சோதிக்கப்பட்டும், பாவமில்லாதவராயிருக்கிற [இயேசுவே] பிரதான ஆசாரியரே நமக்கிருக்கிறார்.”—எபிரெயர் 4:15.
யெகோவாவின் நம்பிக்கை
தாம் தெரிந்தெடுத்த சார்புப் பேச்சாளர்களைக் குறித்து யெகோவா ஒருபோதும் வருத்தப்பட்டதில்லை. தம்மிடமாக அவர்களுக்கிருந்த பற்றுறுதியை அவர் அறிந்திருந்தார்; இரக்கத்தோடு, அபூரணர்களாகிய அவர்களுடைய பலவீனங்களுக்கு அவர் அதிக கவனம் செலுத்தவில்லை. இருந்தபோதிலும், அவர்கள் தங்கள் பொறுப்பை நிறைவேற்றும்படி அவர் எதிர்பார்த்தார். கடவுளுடைய உதவியோடு அவர்களால் அதைச் செய்ய முடிந்தது.
நாம் பொறுமையோடு, நம்முடைய பற்றுமாற சகோதர சகோதரிகளிடம் நம்பிக்கையைக் காட்டுவோமாக. நாம் அபூரணர்களாக இருப்பதுபோலவே அவர்களும் இந்தக் காரிய ஒழுங்குமுறையில் அபூரணர்களாகவே இருப்பார்கள். இருந்தாலும், நம்முடைய அன்புக்கும் கவனத்திற்கும் தகுதியற்றவர்களாக நம்முடைய சகோதரர்களை நாம் ஒருபோதும் தீர்க்காதிருப்போமாக. பவுல் பின்வருமாறு எழுதினார்: “அன்றியும், பலமுள்ளவர்களாகிய நாம் நமக்கே பிரியமாய் நடவாமல், பலவீனருடைய பலவீனங்களைத் தாங்கவேண்டும்.”—ரோமர் 15:1; கொலோசெயர் 3:13, 14.
நாம் அனுபவிக்கும் எல்லா விதமான உணர்ச்சிகளையும் யெகோவாவின் தீர்க்கதரிசிகள் அனுபவித்தனர். எனினும், அவர்கள் யெகோவாவை நம்பியிருந்தனர், யெகோவா அவர்களை ஆதரித்து வந்தார். அதற்கும் மேலாக, அவர்கள் களிகூருவதற்கான காரணங்களையும்—நல்மனசாட்சி, அவருடைய தயவை உணருதல், அவர்களை ஆதரித்த பற்றுறுதிமிக்க தோழர்கள், சந்தோஷமான எதிர்காலத்திற்கான வாக்குறுதி .ஆகியவற்றை—யெகோவா அளித்தார். (எபிரெயர் 12:1-3) ‘நம்மைப் போலவே உணர்வுகளுள்ள’ மனிதர்களாகிய பூர்வ தீர்க்கதரிசிகளின் விசுவாசத்தைப் பின்பற்றும்போது நாமும் முழு நம்பிக்கையோடு யெகோவாவில் சார்ந்திருப்போமாக.