ராஜ்ய அறிவிப்பாளர் அறிக்கை
அலாஸ்காவில் கடவுள் விளையச் செய்கிறார்
மூடியுள்ள வெண்பனிக்கும் உறைபனிக்கும் கீழ், ஒரு சிறு விதை முளைவிட்டு வளருவதற்கான வாய்ப்புக்காகக் காத்திருக்கிறது, மூன்று மில்லிமீட்டர் குறுக்களவேயுடைய ஒரு முட்டைக்கோசு விதை. மூன்று மாதங்களே நீடிக்கும் அலாஸ்காவின் குறுகிய கோடைக்காலத்திற்குள், ஏறக்குறைய தொண்ணூறு பவுண்டு அதாவது 40 கிலோகிராம் எடை உள்ளதாய் அது வளரக்கூடும்! ஆம், தரிசு நிலமெனவும் உறைபனி மூடிய பாழ்நிலமெனவும் ஒருகாலத்தில் பலரால் கருதப்பட்ட இந்த நாட்டினால், அமோக விளைச்சல் தர முடியும்.
இது, முக்கியமாய் அலாஸ்காவின் ஆவிக்குரிய நிலத்தைக் குறித்ததிலும் உண்மையாக உள்ளது. நீண்ட பனிகாலத்தையுடைய அந்நாட்டில், யெகோவாவின் சாட்சிகள் ராஜ்ய விதைகளைத் தொடர்ந்து விதைக்கின்றனர். பூமியின் மற்ற பாகங்களில் நடப்பதுபோல், வளமான இருதயங்களில் அந்த விதைகளைக் கடவுள் விளையச் செய்கிறார்.—1 கொரிந்தியர் 3:6, 7.
● ஸ்கூல் பஸ்ஸில் உட்கார்ந்திருக்கையில், வனெஸா என்ற ஓர் இளம் சாட்சி எப்போதும் தனியாக உட்காரும் உடன்மாணவியாகிய ஆன்னைக் கவனித்தாள். ஆன் விசனமாக இருப்பதுபோல் தோன்றியது, ஆகையால் தன் பக்கத்தில் உட்காரும்படி வனெஸா ஆன்னை அழைத்தாள். ஆன் விசனமாக இருந்ததில் வியப்பு எதுவுமில்லை! அவளுடைய தாயார் மாரடைப்பால் இறந்துவிட்டார், சிறிது காலத்திற்குப் பின்னால், அவளுடைய தகப்பனார் புற்று நோயால் இறந்துவிட்டார். இதன் காரணமாகவே அலாஸ்காவில் உறவினருடன் ஆன் வாழ்ந்துவந்தாள்.
ஒரு சனிக்கிழமை வனெஸா வெளி ஊழியம் செய்யும்போது, தன் புதிய தோழியின் வீட்டிற்குச் சென்று, கடவுள் உண்மையில் நம்மைப்பற்றி அக்கறை உள்ளவராக இருக்கிறாரா? என்ற சிற்றேட்டை அவளுக்குக் கொடுத்தாள். அதற்குப் பின்னான திங்கட்கிழமையின்போது பள்ளியில், ஆன் இந்த இளம் சாட்சியைத் தேடிச் சென்றாள். பைபிள் சம்பந்தமான பல கேள்விகளை ஆன் கேட்டாள்; இவற்றிற்கெல்லாம் வனெஸாவால் பதில் சொல்ல முடிந்தது. “உங்கள் ஆராதனை கூட்டங்கள் எங்கே நடக்கின்றன?” என்று அவள் கேட்டுத் தெரிந்துகொண்டாள். அன்று சாயங்காலம், ராஜ்ய மன்றத்தில் நடைபெற்ற கூட்டத்திற்கு முதல்தடவையாக ஆன் வந்திருந்தாள்.
இயேசு வாக்குறுதி அளித்தபடியே, அநேக ‘தகப்பன்மாரையும்’ ‘தாய்மாரையும்’ இந்த 17 வயது அனாதை சீக்கிரத்தில் கண்டடைந்தாள். (மத்தேயு 19:29) “தேவ சமாதான தூதுவர்கள்” மாவட்ட மாநாட்டில், மகிழ்ச்சியுடன் புன்னகை பூத்த ஆன், யெகோவாவுக்குத் தன்னை ஒப்புக்கொடுத்ததைத் தண்ணீர் முழுக்காட்டுதலால் அடையாளப்படுத்துவதைக் காண்பது எத்தகைய சந்தோஷமான சந்தர்ப்பமாக இருந்தது!
● அலாஸ்காவின் மிகப் பரந்த வடதுருவ தொலைதூர நிலப்பகுதிகளில், கிராமங்கள் ஒன்றுக்கொன்று மிகத் தொலைவில் தனித்திருக்கின்றன. இவ்விடங்களில் 150-க்கும் மேற்பட்ட சமுதாயங்களில் ராஜ்ய விதைகளை விதைப்பதற்கு, உவாட்ச் டவர் சொஸைட்டியின் இரட்டை என்ஜின் பொருத்தப்பட்ட ஆகாயவிமானம் பயன்படுத்தப்படுகிறது. ஆனால் தவறாத பைபிள் படிப்பு மூலமாய் ஆவிக்குரிய வளர்ச்சியடைய செய்வது கடிதப் போக்குவரத்தின் பேரிலேயே சார்ந்திருக்கிறது. கடிதம் எழுதுவது பலருக்குக் கடினமானக் காரியமாக இருப்பதால், மாணாக்கரின் அக்கறையைத் தொடர்ந்து உயிர்ப்புள்ளதாக வைப்பதற்கு, பைபிள் கற்பிப்பவர் பல முறைகளில் உற்சாகத்தைத் தூண்டுபவராக இருக்க வேண்டும். இதை எப்படி நிறைவேற்றலாம்?
காத்தியும் எட்னாவும் ஒருவருக்கொருவர் 600 கிலோமீட்டருக்கு மேற்பட்ட தூரத்தில் இருந்தபோதிலும், எட்னாவுடன், படிப்படியாய் முன்னேறும் பைபிள் படிப்பு ஒன்றை காத்தி நடத்திவந்தாள்! படிப்பு நடத்தப்படும் புத்தகத்திலுள்ள கேள்விகளை வெறுமனே கடிதத்தில் எழுதாமல், கேள்வியையும், அதை தொடர்ந்து விடை எழுதுவதற்கு காலி இடமும் இருக்குமாறு ஒரு வினா-விடை தாளை காத்தி தயாரித்து அனுப்பினாள். அந்தக் காலி இடங்களில் எட்னா பதில்களை எழுதி அனுப்பின பின்பு, தெளிவாக்கப்படத் தேவைப்பட்ட குறிப்புகளுக்கு காத்தி பதில் எழுதி, விளக்கத்தைக் கொடுத்தாள். காத்தி இவ்வாறு சொல்கிறாள்: “புதன்கிழமை சாயங்காலத்தை எங்கள் ‘படிப்புக்காக’ நான் ஒதுக்கி வைக்கிறேன். மற்ற பைபிள் படிப்புகளை நடத்துவதுபோல் குறிப்பிட்ட நேரத்தை அதற்காக ஒதுக்க முயற்சி செய்தேன். சுயவிலாசம் எழுதப்பட்டு ஸ்டாம்ப் ஒட்டப்பட்ட ஒரு கடித உரையையும் அத்துடன் வைத்து எட்னாவுக்கு அனுப்பினேன். கடிதப் போக்குவரத்துக்கு இரண்டு வாரங்கள் எடுத்ததனால், அதன் மூலமாகப் படிப்பு நடத்துவது ஒருவாறு தாமதமானதாகத் தோன்றினது.”
கடிதப் போக்குவரத்தின்மூலம் பத்து மாதங்கள் படித்த பின்பு, ஆங்கரேஜில் நடந்த மாவட்ட மாநாட்டின்போது காத்தியும் எட்னாவும் நேருக்குநேர் சந்தித்தபோது ஏற்பட்டிருக்கும் கிளர்ச்சியை கற்பனை செய்து பாருங்கள்! அலாஸ்காவில், ஒன்றுக்கொன்று மிகத் தொலைவில் தனித்துள்ள கிராமங்களிலிருந்து பைபிள் படிப்போரும் அக்கறை காட்டும் மற்றவர்களும் வந்து இதில் கலந்துகொண்டதிலும் சாட்சிகள் மிகுந்த மகிழ்ச்சியடைந்தனர்.
வளர்ச்சி தாமதிப்பதைப் போல சில சமயங்களில் தோன்றினாலும், ‘முளைகிளம்பும் விதைகள்’ சில, சத்தியத்தின் ஒளி படும்படி செய்யப்படுகையில், விரைவில் துளிர்த்து வளருகின்றன. அலாஸ்காவில் ஒவ்வொரு வருடமும் சராசரியாக, யெகோவாவைத் துதிக்கத் தொடங்கும் நூற்றுக்கு மேற்பட்ட புதியவர்கள் முழுக்காட்டப்படுகிறார்கள்! வளர செய்வதற்காக, “யெகோவாவே, உமக்கு நன்றி” என சொல்லுகிறோம்!